வஞ்சகமாகப் பறிக்கப்பட்ட பாரம்பரிய உரிமைகளையே கோருகிறார்கள் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள்


செவ்விந்தியர், மஓரி போன்ற பண்டைய இனங்கள் போல சர்வதேசத்தவரால் பாதுகாக்கப்பட வேண்டிய இனத்தவர்கள் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள். அவர்களின் பாரம்பரியங்களும் அதேபோல் பாதுகாக்கப்பட வேண்டியவைகள்.

வெள்ளைக்காரர்கள் வன்முறையால் கொள்ளை அடித்துக் கையேற்ற அவர்களின் உரித்துக்களை வஞ்சகமாக அபகரித்துக் கொண்ட எம் நாட்டு சிங்கள மக்கள் தலைவர்கள்,

காலத்திற்கு ஒரு கருத்தை வெளிப்படுத்தித் தொடர்ந்து பறித்துக் கொண்டிருக்கும் அவ்வுரித்துகளை திரும்பக் கொடாது ஏமாற்றி வருகின்றனர்.

**கலாநிதி ஆ.க.மனோகரன் எழுதிய "இலங்கை தேசிய இன முரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும், ஒருவரலாற்றுப் பார்வை 1948 2007' நூல் வெளியீட்டு வைபவம் கடந்த ஞாயிறன்று மாலை கொழும்பு இராமகிருஷ்ணமிசன் மண்டபத்தில் நடைபெற்றபோது முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய வெளியீட்டுரை

இன்றைய வெளியீடு கிட்டத்தட்ட என்னைப் போன்ற மூவிருபதும் பத்துங் கண்ட மூத்தவர்கள் சிலர் வாழ்ந்து வந்துள்ள அறியும் பருவத்து நிகழ்கால இலங்கை அரசியல் களத்தில் காணப்பட்டு வரும் சமூக முரண்பாடுகளையும் அவற்றின் பல்வேறு பரிமாணங்களையும் ஆராயும் ஒரு நூலாக அமைந்துள்ளது.

ஆங்கிலத்தில் முதலில் எழுதப்பட்ட இந் நூல் தற்போது தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டு கொழும்பில் வெளியிடப்படுகிறது. உண்மையில் ஆங்கில நூலின் பிரதி கைக்குக் கிடைத்திருந்தால் நூலடக்கம் சம்பந்தமான எனது வாசிப்பும் கூடிய முழுமை பெற்றிருக்கும். மொழி பெயர்ப்புகளுக்கும் மூல நூல்களுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உண்டு. மூல நூலின் ஆசிரியருடன் ஆத்மார்த்தமாக இணைந்தால்த் தான் மொழிபெயர்ப்புகள் இலகு வாசிப்புக்கு வழி வகுப்பன. அன்றேல் புறமானது அழகு காட்ட அகம் மறைந்திருக்கச் சந்தர்ப்பம் உண்டு. எனினும், இந்நூல் ஒரு முழுமையான நூல் என்று கூறலாம்.

அதாவது 1948 ஆம் ஆண்டில் நாடு சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து சென்ற ஆண்டுவரையிலான எமது அண்மைய கால வரலாற்றையே ஆராய்வதாக இந் நூல் அமைந்திருப்பினும் அத்தியாயம் 2 இல் சரித்திர காலத்திற்கு முன் தொடங்கி இலங்கையின் வரலாற்றுப் பின்னணி ஆராயப்பட்டுள்ளது. ஏதாவதொன்றின் பின்னணி புரிந்தால்த்தான் நடைமுறை நடப்புகள் புரிவன.

இன்று பிரச்சினை என்று கூறப்படுவதெதுவும் நேற்று நடந்த அல்லது நேற்று நடந்ததாகக் கருதப்பட்ட ஏதோ ஒரு நிகழ்வின் அல்லது பல நிகழ்வுகளின் தொடர்ச்சியாகவோ தொடர் நடவடிக்கையாகவோ அல்லது எதிர் விளைவாகவோ தான் பொதுவாக அமைகின்றது. அந்த விதத்தில் இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களின் நீண்ட வரலாற்றுப் பின்னணி, நிலம், மொழி வாழ்க்கைமுறை தழுவிய தனித்துவம், இந் நாட்டின் பூர்வீகக் குடிகளின் ஒரு அம்சமே. தாங்கள் என்ற அவர்களின் உறுதியான நிலைப்பாடு ஆகிய எல்லாமே இலங்கையின் இன முரண்பாடுகள் இலேசாகத் தீர்த்து வைக்கப்படுவதைத் தடை செய்து வந்துள்ளன என்று கூடக் கூறலாம். அதாவது எங்கள் சரித்திரோபாயமான எண்ணங்களே எம்மை ஒரு வித்தியாசமான இன அலகாகப் பிரதிபலித்து வந்துள்ளன என்று நாங்கள் கருத இடமளிக்கின்றது.

உதாரணத்திற்கு எமது மலையகச் சகோதர சகோதரிகளையும் முஸ்லீம் சகோதர சகோதரிகளையும் அதுவும் முக்கியமாகக் கிழக்கிலங்கைத் தமிழ் பேசும் முஸ்லீம் சகோதர சகோதரிகளையும் அவர்களின் அண்மைக் கால வரலாற்றுப் பின்னணிகளையும் எடுத்துப் பார்த்தோமானால், வடகிழக்கு இலங்கைத் தமிழ் மக்களின் மனதில் நெட்டுயிர்த்து நிற்கும் அவர்களின் பழமை, தனித்துவம், நாட்டின் ஒரு பகுதி மீது கொண்டிருக்கும் உரிமை, எண்ணங்கள் ஆகியன எவையுமே மேற்குறிப்பிட்டவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கவில்லை என்று உணரக் கூடியதாய் இருக்கிறது. இங்கு எனது அவதானத்தைத் தான் கூறுகிறேன். எவரையுங் குறைகூறவேண்டிய அவசியம் எனக்கில்லை.

""இலங்கையின் மலையகத்திற்கு நாங்கள் ஒரு சில தலைமுறைகளுக்கு முன்னர் தானே வந்தோம், நாங்கள் இந் நாட்டின் வேலைதேடி வந்தேறு குடிகள் தானே' என்ற எண்ணம் மலையக மக்களின் அடி மனதில் இதுகாறும் இருந்து வந்துள்ளதால் இந்த நாட்டின் அரசாங்கங்களுடன் அரசியல், பொருளாதாரப் பேரம் பேச அவர்கள் பின்னிற்கவில்லை. ""நான் உன்னைச் சொறிந்தால் நீ எனக்குத் திரும்பச் சொறிவாயா?' என்ற அடிப்படையில் கடந்த 60 ஆண்டுகளையும் அவர்கள் கடத்தி வந்துள்ளார்கள். அந்த மனோபாவத்தின் நிமித்தம் அவர்களால் சிங்கள மொழியைச் சரளமாகப் பேசவும் சிங்கள மக்களிடம் இருந்து பேரம் பேசி பல சலுகைகளைப் பெறவும் முடிந்துள்ளது.

முஸ்லீம் சகோதர சகோதரிகளைப் பொறுத்தவரையில் அவர்களில் பெரும்பாலானோர் பாரம்பரியமாகத் தமிழ்பேசும் மக்கள்தான் என்றாலும் மதத்தினால் வேறுபாடுடையவர்கள் என்ற காரணத்தினாலும் அவர்களின் மதவழிதான் அவர்களுக்கு அடையாளச் சான்றாக அமைந்திருந்து வந்ததாலும், சுதந்திரத்தின் பின் வந்த ஆரம்பகால வரலாற்றின் போது பழமையின் சுவடுபடாமல், தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்களுடன் ஒருவித பண்டமாற்றுக் கைங்கரியத்தில் இறங்க அவர்கள் பின்னிற்கவில்லை. இதன் காரணத்தினால் தமிழ்பேசும் மக்களின் கட்சிகளின் ஊடாகப் பாராளுமன்றத்திற்குப் பிரதிநிதித்துவம் பெற்ற பல கிழக்கிலங்கை முஸ்லீம் அரசியல்வாதிகள் கட்சி மாறிப் பெரும்பான்மை மக்களின் கட்டுப்பாட்டில் இருந்த அப்போதைக்கப்போதைய அரசாங்கக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஏதோ கிடைத்ததை வாங்கிவைத்துத் திருப்தி அடைந்து வந்துள்ளார்கள்.

இப்பேர்ப்பட்ட ஒரு வழிமுறையைக் கடைப்பிடிப்பதில் என்ன தவறு என்று கேட்டு காலத்திற்குக் காலஞ் சில வடகீழ் மாகாணத் தமிழ் மக்கள் கூட அப்போதைக்கப்போதைய அரசாங்கங்களிடம் இருந்து அனுசரணை பெற்று, முக்கியமாகத் தமக்கென்று தனித்துவமான சலுகைகள் பெற்று, பண்டமாற்று அரசியலுக்குள் தம்மை உட்படுத்தி வந்துள்ளனர்.

இன்று கூடத் தமது வழிநடத்தல்களை வசப்படுத்தி வைக்கப் பெருவாரியான பணம் வேண்டுமென்று கூறி மிகப்பெரிய பண முடிச்சுகளை மாதாமாதம் பொதுமக்களின் நிதியில் இருந்து அரசாங்கங்கள் ஊடாகப் பெற்று பெருவாரியான இலங்கைத் தமிழ் மக்களின் மனோநிலைக்கு மாறான ஒரு அரசியலில் அவர்கள் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. நான் எந்தக் கட்சியினதும் ஆதரவாளன் அல்ல. ஆனால் கூட்டிக் கழித்தால் அது தான் உண்மை. சென்ற வாரம் ""மின்னல்' நிகழ்ச்சியில் கூட தொடர்ந்து வரும் அரசாங்கங்களிடம் இருந்து பணம்பெறும் பல கட்சிகள் பற்றிக் கூறியிருந்தார்கள்.

அண்மையில், இதனை மனதில் வைத்தே என்னவோ தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர், சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையில் வடக்கு, கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தி அங்குள்ள பெரும்பான்மை மக்களிடம் அவர்களுக்குத் தேவையானதை அவர்களிடமே கேளுங்கள் என்று பாராளுமன்றத்தில் கூறினார். அதுமட்டுமல்ல; அவ்வாறு செய்தால் மக்கள் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று கூட ஆணித்தரமாகக் கூறினார். அதன் அர்த்தமென்ன? பெருவாரியான வடகிழக்குத் தமிழ் மக்களின் சிந்தனை வேறு; சுயநலத்திற்காக அரசியல் நடத்தும் வடகிழக்குத் தமிழ் மக்கட் தலைவர்கள் என்று தம்மைக்கூறிக் கொள்ளும் அரசியல்வாதிகள் ஒரு சிலரின் சிந்தனை வேறு என்பது ஒரு கருத்து.

அதேபோல் தமிழ்ப்பேசும் மலையக அல்லது தமிழ்ப்பேசும் முஸ்லீம் மக்களின் மனோபாவம் வடகிழக்குத் தமிழ் மக்களின் மனோபாவத்தினின்றும் வேறுபட்டது என்பது இன்னொரு கருத்து. ஆகவே அம்மக்களின் உள்ளக் கிடக்கையை நியாயமாக, வஞ்சகமின்றிக் கேட்டறிந்து அதற்கு மதிப்புக் கொடுக்குமாறு திரு.சம்பந்தன் அவர்கள் கூறியிருந்தார். அம் மக்களின் உண்மை மனோநிலையைக் கண்டறிந்த பின்னர் தாம் அதற்குக் கட்டுப்படுவதாகவும் அவர் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார். யதார்த்தத்தைத் திரிபுபடுத்த விழையும் அரசாங்கங்கள் இந்த உத்தமக் கூற்றை நடைமுறைப்படுத்த முன்வருவார்களா?

""பெரும்பான்மை வடகிழக்கு மக்களின் மனோநிலைக்கு மாறான கருத்தையே இன்றைய வடகிழக்குப் பாராளுமன்ற அங்கத்தினர் கொண்டுள்ளனர்; துப்பாக்கியின் வலுக்கட்டாயத்திற்கு அடிபணிந்தே அவர்கள் தமது தொகுதி மக்களின் உண்மையான உள்ளக்கிடக்கையைத் திரிபுபடுத்தி வருகின்றனர்' என்று கூறி வந்த அரச தரப்பாருக்கும் பெரும்பான்மையின சிங்கள மக்கட் பிரதிநிதிகளுக்கும் பெரும்பாலான தமிழ்மக்களின் உண்மையான உள்ளக்கிடக்கையை உள்ளங்கை நெல்லிக்கனி போல் உணர்த்துமாப் போல் இந்தப்பேச்சு அமைந்துள்ளது. அதாவது வடகிழக்குத் தமிழ் மக்களின் பாரம்பரியம், பார்வை, பான்மை என்பன யாவும் வேறுபாடுடையது என்பதைத் திரு.சம்பந்தன் அவர்கள் மறைமுகமாக இப் பேச்சின் மூலம் எடுத்துக்கூறியுள்ளார்.

வடக்குக்கிழக்குத் தமிழ்பேசும் மக்களின் இதுகாறும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மைப் பிரதிநிதிகளின் பார்வையையும் வடகிழக்கு மக்களிடையேயிருந்து வந்த மகிந்த சிந்தனைகளைப் பரப்பும் மதியூகிகளின் பார்வையையும் அதே நேரத்தில் மலையக மற்றும் முஸ்லீம் மக்கட் பிரதிநிதிகளின் சிந்தனையையும் ஒப்பிட்டுப் பார்த்தோமானால் இலங்கையில் எழுந்துள்ள தேசிய இன முரண்பாடுகளின் தாற்பரியத்தையும் இம்முரண்பாடுகளை நீக்க எடுக்கப்பட்ட சமாதான முன்னெடுப்புகள் தோல்வியில் முடியக்காரணமாயிருந்தவற்றையும் முழுமையாக அறிந்து கொள்ள வசதி அளிப்பதாக அவை இருப்பதைக் காணலாம்.

தமிழ்ப் பேசும் முஸ்லிம் மக்கள் மதரீதியில் தம்மைப் பார்க்கிறார்கள்; மலையக மக்கள் பொருளாதார ரீதியில் தம்மைப் பார்க்கிறார்கள்: மகிந்த சிந்தனை மதியூகிகள் சுயநல ரீதியாகப் பார்க்கிறார்கள். சுயநலம் என்று கூறும்போது தாமுந் தம்மைச் சார்ந்தவர்களும் என்று அர்த்தமாகும். ஆகவே அவர்களின் குறிக்கோள் முறையே மதம், பொருளாதாரம், சுயநலம் என்பவையே.

நாளைக்கு சிங்கள பௌத்த அரசாங்கங்கள் இஸ்லாமிய மதத்திற்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் நடந்து கொண்டார்கள் என்றால் உடனே ஜீஹாடில் தமது உயிரையும் பணயம் வைக்க முஸ்லீம் சகோதரர்கள் பின்நிற்கமாட்டார்கள். மலையக மக்களின் வயிற்றில் அடித்தால் தொழிற்சங்க நடவடிக்கைகள், சத்தியாக்கிரகம், அடிதடிப்போராட்டம் என்று கிளர்ந்தெழுந்து விடுவார்கள் எமது மலையகச் சகோதரர்கள். தமக்குத் தரப்பட்டுக் கொண்டிருக்கும் ரொக்கமும் பாதுகாப்பும் கப்பம் பெறத் தரப்பட்டிருக்கும் வசதிகளும் வாபஸ் பெறப்பட்டால் உடனே மகிந்த சிந்தனையைக் காற்றில் பறக்க விட்டு விடுவார்கள் அடிபணிந்தால் அடிவாங்கத் தேவையில்லை என்ற சித்தாந்தங் கொண்ட எமது காருண்யம் மிக்க ஆனந்த தேவாதிதேவப் பிள்ளைகள்.

அவரவர்கள் நிலையில் இருந்து பார்க்கும் போது ஒவ்வொருவரும் கூறுவது சரியெனத் தோன்றும். ஆனால் இந்த மூன்று நோக்குகளையும் புறக்கணிப்பது போல் அமைந்துள்ளது பெரும்பான்மை வடகிழக்குத் தமிழ் மக்களின் பார்வை. அவர்கள் முக்கியமாக வேண்டுவது தமது பாரம்பரிய உரிமைகளை; சலுகைகளை அல்ல.

அண்மையில் ஒரு வயதான தமிழ் அன்னையார் வெள்ளவத்தையில் காய்கறி வாங்கிக் கொண்டிருந்தார். விலையைக் குறைக்கச் சொல்லி அடம்பிடித்தார். கடைக்காரர் ""அம்மா! நீங்கள் சும்மாவே எடுத்துக் கொண்டு போங்கள். பணம் வேண்டாம்' என்றார். உடனே அந்த அம்மையார் வெகுண்டெழுந்து ""ஏன்! நீ எனக்கு மச்சானா மாமனா? எனக்கு சும்மா வேண்டாம். நியாயமான விலைக்குக் கொடு' என்றார்.

அதுபோல் வடகிழக்குத் தமிழர்கள் கேட்பது நியாயமாகத் தமக்குக் கிடைக்க வேண்டியவற்றையே; சலுகைகளை அல்ல. அதாவது உரிமைகள் கொண்ட, தனித்துவமான வடகிழக்குத் தமிழ் மக்களின், பறிக்கப்பட்ட அவர்களின் உள்ளார்ந்த பாரம்பரிய உரிமைகளையே, அவர்கள் கோருகின்றார்கள்.

பூர்வீக காலந்தொட்டு, சரித்திர காலத்திற்கு முன்பிருந்த இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்த தமிழ்ப்பேசும் மக்களின் பறிக்கப்படக்கூடாத ஆனால் வஞ்சகமாகப் பறிக்கப்பட்ட பாரம்பரிய உரிமைகளையே அவர்கள் கோருகின்றனர்.

அந்த விதத்தில் செவ்விந்தியர், மஓரி போன்ற பண்டைய இனங்கள் போல சர்வதேசத்தவரால் பாதுகாக்கப்பட வேண்டிய இனத்தவர்கள் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள். அவர்களின் பாரம்பரியங்களும் அதே போல் பாதுகாக்கப்பட வேண்டியவைகள்.

வெள்ளைக்காரர்கள் வன்முறையால் கொள்ளை அடித்துக் கையேற்ற அவர்களின் உரித்துக்களை வஞ்சகமாக அபகரித்துக் கொண்ட எம் நாட்டு சிங்கள மக்கட் தலைவர்கள், காலத்திற்கு ஒரு கருத்தை வெளிப்படுத்தித் தொடந்து பறித்துக் கொண்டிருக்கும் அவ்வுரித்துகளை திரும்பக் கொடாது ஏமாற்றி வருகின்றனர்.

தொடரும்

Comments