நாம் ஒன்றிணைந்து ஒரு மரண அடியை சிங்களப் படைகளுக்கு கொடுக்கும் போது இழந்த நிலங்கள் மீட்கப்படும் - பா.நடேசன்



நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு மரண அடி சிங்கள இராணுவத்திற்குக் கொடுக்கும்போது கட்டாயம் இழந்த நிலங்களை மீட்பது மட்டுமல்ல, இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் இருந்து சொல்லணாத்துயரத்தை அனுபவித்துவரும் எமது மக்களையம் மீட்கலாம் என தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். நேற்று வட்டக்கச்சிக் கோட்டத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளினதும், இடம்பெயர்ந்த பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போது அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:-

கடந்த இரண்டு வருடமாக மன்னாரில் ஆரம்பித்த இராணுவ நடவடிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அக்கராயனில் வந்து நிற்கின்றது. இந்த இராணுவ நடவடிக்கை மூலம் மக்களை பெரும் அவலங்களுக்கும், துன்பங்களுக்கும் உட்படுத்தி போராட்டத்திலிருந்து அந்நியப்படுத்தும் ஒரு தந்திரோபாயத்தை சிங்களப் பேரினவாத அரசு செய்துகொண்டுவருகின்றது. அவர்களுடைய திட்டம் எங்களுடைய மக்களால் ஏற்கனவே முறியடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் நினைப்பதுபோல மக்கள்வேறு புலிகள்வேறல்ல, நாம் எல்லோரும் தமிழர்கள் என்பதை ஒரே சக்தியாக நின்று இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தி நிற்கின்றோம். இதனால், சிங்களப் பேரினவாதம் பெரிய தோல்வியை இன்றைக்கு சந்திப்பதற்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றது. எங்களுடைய மக்கள் இவ்வாறு பின்னுக்கு நகர்ந்து. எங்களுடைய இராணுவ வியூகம், எங்களுடைய தந்திரோபாயம். எங்களுடைய போராட்ட வரலாற்றில் நாம் நிறைய அனுபவங்களை, நிறைப்பாடங்களைக் கற்றிருக்கின்றோம்.

நிறைய சம்பவங்களுக்கு நாங்கள் முகம்கொடுத்திருக்கின்றோம். ஜெயசிக்குறு காலத்தில் கூட இதேமாதிரியான நிலைமைதான் இருந்தது. ஆனையிறவில் இராணுவம் நின்றது. 18 மாதங்களாக சிங்கள அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கை ஓரிருநாட்களுக்குள் சிங்கள அரசபடைகள் இருந்த இடம்தெரியாமல் விரட்டப்பட்டன. சிங்கள அரச பயங்கரவாத வரலாற்றில் என்றுமே இல்லாத பெரிய தோல்வியை சிங்கள அரசம், படைகளும் சந்தித்தன. இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலையை நாங்கள் வெற்றிகரமாக, எங்களுக்குச் சாதகமாக மாற்றவேண்டும்.

அதற்காகத்தான் கரும்புலிகள் இவ்வாறான தாக்குதல்களை நடாத்துகின்றார்கள் இவர்களுடன் இணைந்து எமது மக்கள் களத்தில் நிற்கின்றார்கள். ஆயிரத்திற்கும் அதிகமான எமது மக்கள் போராளிகளோடு போராளிகளாக களமுனைகளில் நிற்கின்றார்கள். இன்றைக்கு எமது விடுதலைப் போராட்டம் மக்கள் போராட்டமாக மலர்ந்திருக்கின்றது. இதில் ஒன்றை எம்மால் எதிர்வு கூறமுடியும். சிங்கள அரச பயங்கரவாதம் ஓயாத அலைகள்-03 இல் அடிவாங்கியதைவிட எதிர்காலத்தில் படுதோல்வியைச் சந்திக்கப்போகின்றது.

இதனை எங்களுடைய கடந்தகாலப் போராட்டச் சம்பவங்களி;னூடாக எதிர்வுகூறக்கூடியவாறு இருக்கின்றது. உலக இராணுவ வல்லுநர்கள், ஆய்வாளர்கள் அண்மைய நாட்களாக தங்களுடைய கருத்துக்களை வெளியிடத் தொடங்கியுள்ளார்கள். புலிகள் பலமிழக்கவில்லை, புலிகள் மிகவும் மதிநுட்பமாக, தந்திரோபாயமாக பலமான நிலையில் இருந்துகொண்டுதான் வவுனியா இராணுவ முகாம் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர் என்று அவர்கள் கூறுகின்றனர். இதை நீங்கள் ஊடகங்களினூடாக நன்றாக அறிந்திருகக்கூடும்.

உலக விடுதலைப்போராட்ட வரலாற்றில் தமிழிழ விடுதலைப்போராட்ட வரலாற்றில்தான் மக்கள் அரசியல் ஞானமுடையவர்களாக இராணுவ ஞானமுள்ளவர்களாக மற்றும் சகலவிதத்திலும் ஞானமுள்ள மக்களாக இருந்து எமதுபோராட்டத்திற்குப் பக்கபலமாக இருந்துவருகின்றார்கள். உலக விடுதலைப்போராட்ட வரலாற்றில் எங்களுடைய தலைவரது காலத்தில்தான் சமகாலத்திலேயே எங்களுடைய தேசத்திற்கான கடற்படை, தரைப்படை, ஆகாயப்படை என முப்படைகள் கொண்ட விடுதலை இயக்கம் மட்டுமல்ல, ஒரு அரச கட்டுமானத்திற்கான தளங்களைக்கொண்ட விடுதலை இயக்கமாகவும் திகழ்ந்துகொண்டிருக்கின்றது.

இதற்கு பின்புலம் என்னவென்றால் எங்களுடைய மக்கள். இங்கிருக்கின்ற மக்கள் மட்டுமல்ல, புலம்பெயர்ந்திருக்கின்ற மக்கள் எல்லோரும் எங்களுக்குப் பின்பலமாக இருக்கின்றார்கள். நாங்கள் பிரதேசங்களைவிட்டு பின்னுக்கு நகர்ந்துகொண்டிருக்கின்றோம் என்று உலகத்திலுள்ள எமது மக்கள் எண்ணுகின்றனர். ஏன் இன்னும் தாக்கவில்லை என்று கேட்கின்றனர். ஆனால், எங்களுடைய எதிர்கால இராணுவ வெற்றிகள் கரும்புலி மாவீரர்களடைய, வீரமறவர்களுடைய வீரசாதனைகளுடாக மீளவும் நிகழும்.

மாவீரர்களுடைய தியாகம் ஒருபோதும் வீண்போகாது. எங்களுடைய மக்களுடைய எதிர்கால சுதந்திரத்தை, சபீட்சத்தை உறுதிப்படுத்துகின்ற தியாகத்தினூடாக ஆயிரம் தியாகிகள் உருவாகின்றார்கள். நாங்கள் சாதாரண போராளிகள் மட்டுமல்ல இங்குள்ள மக்களும் போராளிகள்தான். போராளிகள் வேறு, மக்கள்வேறு என்று இல்லாமல் போராளிகளுக்கு சமனாக களமுனைகளுக்குச் செல்வதிலிருந்து எல்லைப்படையாக, போர் உதவிப்படையாக பின் தளத்தில் நின்று எங்களுடைய இராணுவ, அரசியல் வெற்றிகளுக்கும், எங்களுடைய சுதந்திரத்தை விரைவாக வென்றெடுப்பதற்கும் தங்களாலான முழுப்பங்களிப்பையும் செய்துவருகின்றார்கள்.

இது சிங்கள அரசபயங்கரவாத்திற்கு நன்றாகத் தெரியும். ஆகையினால் தான், அண்மைக்காலத்தில் இராணுவரீதியில் விடுதலைப் புலிகளையோ அல்லது தமிழ்மக்களையோ வெற்றிகொள்ள முடியாதென்று. ஆகையினால் தான் இந்த இடப்பெயர்வு நேரத்தில் இந்த மக்களுக்கு உதவிசெய்த சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களை எல்லாம் வன்னியிலிருந்துஉடனடியாக கொழும்பிற்கு வருமாறு சொல்லியிருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் இங்கு இராணுவ உதவிகள் எதனையும்செய்யவில்லை. எங்களுடைய மக்களுக்கான மனிதாபிமான உதவிகளையே செய்துவந்ததார்கள்.

சிங்கள அரசினுடைய இராணுவ நடவடிக்கையை சாதாரண இராணுவ நடவடிக்கையாகப் பார்க்கக்கூடாது தமிழின ஒழிப்பு, தமிழர்விரோத, பயங்கரவாத நடவடிக்கையாகவே பார்க்கவேண்டும். ஏனெனில் இவ்வாறான சர்வதேச மனிதாபிமான நிறுவனங்களை வெளியேற்றிவிட்டு, மக்கள் மீது ஒரு கெடுபிடிப்பொருளாதார உணவு நெருக்கடியைக் கொடுத்து எமது போராட்டத்தை தோற்கடிக்க நினைக்கின்றார்கள் ஆனால் எங்களுடைய மக்கள் கடந்த 30 வருடகாலமாக எங்களோடு இருக்கின்றார்கள்.

நாங்கள் எந்த நிறுவனத்தையோ, அமைப்பையோ, எந்த வெளிநாட்டு அரசார்பற்ற அமைப்புக்களையோ நம்பிப் போராட்டம் நடத்தவில்லை. எங்களுடைய மக்களுடைய பலத்திலேயே தான் இந்த விடுதலைப் போராட்டமாக வளர்ந்திருக்கின்றது. வெளிநாட்டு நிறுவனங்களை அகற்றிவிட்டு பெரியதொரு பொருளாதாரத் தடையை ஏற்படுத்த சிங்கள அரசு முயற்சிக்கின்றது. ஆனால் எங்களுடைய மக்கள் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றார்கள். அற்புதமான தலைவர் எங்களுடைய காலத்தில் கிடைத்திருக்கின்றார் அவரரோடு சிறந்த தளபதிகள், போராளிகள்அனுபவமுள்ள மக்கள் இருக்கின்றார்கள் சிங்கள அரச பயங்கரவாதத்தைத் தோற்கடித்து பெரிய வெற்றிகளை ஈட்டுவதற்கு சர்வதேச அரசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் என்னைச் சந்தித்தனர்.

இதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டார். நான் கூறினேன். நீங்கள் ஒவ்வொரு நாட்டுப் பிரதிநிதிகள், உங்கள் நாட்டில் கூட எங்களுடைய அமைப்பு தடைசெய்யப்பட்டிருக்கின்றது. நீங்கள் உங்களுடைய அரசினூடாக சிங்கள அரசிற்கு அழுத்தம் கொடுப்பதுமட்டுமல்ல, எங்களுடைய மனிதாபிமான அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் தடையையும் நீக்குவதன்மூலம் சிங்கள அரசிற்கு முறையான ஒரு பாடத்தைப்புகட்டலாம் என்று கூறினேன். இந்த நேரத்தில்தான் சர்வதே சமூகத்திடம் ஒன்றைக் கேட்கின்றோம்.

எங்களுடைய தடையை நீக்கி, எங்களை அங்கீகரிக்க வேண்டுமென்று பல உலக நிறுவனங்கள் எங்களையும் அங்கீகரிக்க வேண்டும். ஐ.நா.சபையின் உப அமைப்புக்கள் இங்கு இருக்கின்றன. இவை சூடான், கோசோவா விடுதலை இயக்கங்களை அங்கீகரித்ததுபோன்று எங்களுடைய விடுதலை இயக்கத்தினுடைய தடையையும் எடுப்பதற்கு அந்தந்த நாடுகளுக்கு இவை அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். இங்குநடக்கின்ற எந்தவொரு தாக்குதலாக இருப்பினும் அது மக்கள் மீதுதான் நடாத்தப்படுவது என்பது இவர்களுக்குத் தெரியும்.

ஆனால்தான் அந்தந்த நாடுகளில் சென்று அவர்களுடாக சிங்கள அரசிற்கு பெரிய அழுத்தத்தைக் கொடுப்பதன்மூலம்தான் இவர்கள் இங்கே மனிதாபிமானப் பணிகளைத் தொடர்ந்து செய்யலாம். எங்களுடைய விடுதலைப்போராட்டம் பலமான விடுதலைப்போராட்டமாக மட்டுமல்ல, பலமான தேசியத் தலைமையின் ஆளுமையின் கீழ் வளர்ந்திருப்பதன் பின்னால் கரும்புலிமாவீரர்களுடைய துடிப்பான தியாகம், வீரசாதனைகள் ஒவ்வொன்றும் மூலகர்த்தாகவாக இருந்து வருகின்றன. இங்குள்ள மக்கள் மனதைத் தளரவிடக்கூடாது.

சிங்கள அரசபடைகள் என்றுமில்லாதவாறு பலவீனமான நிலையில்தான் இங்கு வருகின்றன. இந்த வன்னிக்களமுனை அவர்களுக்கு மரணப்பொறியாக இருக்கவேண்டும். உலக இராணுவ ஆய்வாளர்கள் ஒன்றைக் கூறுகின்றார்கள். சிங்கள இராணுவம் அகலக்கால் வைத்துள்ளது. சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு மரணப்பொறியாக இருப்பது மட்டுமல்ல, சிங்கள அரசபடைகளின் புதைகுழியாகவும் வன்னிப்பெருநிலப்பரப்பு மாறும் என்று கூறுகின்றனர். இது உண்மை ஏனென்றால், இன்றைக்கு எங்களுடைய வீரர்களுடைய வீரசாதனைகள் அவ்வாறுதான் நிகழ்கின்றன.

அதுமட்டுமல்ல சிங்கள இளம் சமூகம் இராணுவத்தில் சேரமறுக்கின்றது. இராணுவத்தில்சேர அங்கு ஆட்கள் இல்லை. வன்னிக்களமுனையில் அகலக்கால் வைத்து பின்னுக்குப் போகவும் முடியாமல், முன்னுக்கும்வரமுடியாமல் இக்கட்டான நிலைக்குள்தான் சிங்கள இராணுவம் சிக்கிக்கொண்டுள்ளது. சிங்கள இளைஞர்களை ஏமாற்றி காவல்துறையில் இணைத்து அவர்களை பலாலி இராணுவத்தளத்திற்குக் கொண்டுவந்து அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு இராணுவத்தில் உள்ளவர்கள் பயந்தநிலையிலும், ஏமாந்த நிலையிலும்தான் உள்ளனர். போன மாதம் மட்டும் 900ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும், 155 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பலியாகியிருப்பதாகவும் பாராளுமன்றத்தில் nரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு மாதத்தில் மட்டும் ஆயிரத்திற்கும்மேற்பட்ட படைகள் வன்னிக் களமுனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இது அவர்களுடைய உண்மையான நேர்த்தியான கணக்கல்ல. அவர்கள் ஒருபோதும் உண்மையும் சொல்லமாட்டார்கள்.

நாம் வன்னித் தலைமையகத்தைத் தாக்கியபோதுகூட அவர்கள் சரியான தகவல் எதனையும் வெளியிடவில்லை. ஆனால், உண்மை பின்னர் வெட்டவெளிச்சத்திற்கு வந்தது. சிங்களப்படைக்கு ஆட்சேர்க்க பிக்குமார் முதல் அமைச்சர்கள்வரை கிராமம் கிராமமாக ஓடித்திரிகின்றனர். வன்னக் களமுனைகளில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை இழக்கின்றனர். காயமடைபவர்களை மருத்துவமனைகளில் வைத்திருக்க இடமில்லாமல் திண்டாடுகின்றனர். இவை ஊடகங்களில் வெளிவராதவை. இன்றைக்கு சிங்கள இராணுவம் பெரியதொரு இழப்புகளைச் சந்தித்து வருகின்றது.

இராணுவ வைத்தியசாலைகளில் இடமில்லை. அரச வைத்தியசாலைகளில் இடமில்லை. பாடசாலைகளை வைத்தியசாலைகளாக மாற்றி பாரிய நெருக்கடியான சூழலுக்குள் சிங்கள அரசிற்கு வழங்கும் உதவிகளை நிறுத்தப்போவதாகவும் அறிவித்தல்களைவிட்டுக் கொண்டிருக்கின்றன. மேற்கத்தைய நாடுகள் சிங்கள அரசிற்கு செய்த உதவிகளை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி வருகின்றன. இன்று பலவீனமான நிலையில்தான் அகலக்கால் வைத்துள்ளது. ஜெயசிக்குறு காலத்தைவிட மிகவும் பலவீனமான நிலையில் படையினர் உள்ளனர்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு மரண அடி சிங்கள இராணுவத்திற்குக் கொடுக்கும்போது கட்டாயம் இழந்த நிலங்களை மீட்பது மட்டுமல்ல, இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் இருந்து சொல்லணாத்துயரத்தை அனுபவித்துவரும் எமது மக்களையம் மீட்கலாம். மன்னாரில். வவுனியாவில், யாழ்ப்பாணத்தில், மட்டகக்ளப்பில் அம்பாறையில் இவ்வாறு இராணுவக்கட்டுப்பாட்டில் இருக்கின்ற எம்மக்கள் அரசபயங்கரவாதத்திற்கு முகம்கொடுத்து வருகின்றார்கள்.

இப்பகுதிகளெல்லாம் எமது தமிழ் இளம் சமூகத்தினர் கடத்தப்பட்டுவருகின்றனர். இளம் சமூகத்தினரைக் கடத்தி எங்களுடைய எதிர்காலத்தை இல்லாது அழிப்பதற்கு, சிங்கள அரசு தனது படைகளையும், கோடாரிக்காம்புகளான ஒட்டுக்குழுக்களையும் ஆயுதமாகப் பயன்படுத்திவருகின்றது. இதைநாங்கள் முறியடிப்பதற்கு வெகுவிரைவாக இப்பகுதிகளை மீட்டெடுக்கவேண்டும். எமது அழைப்பை ஏற்று முன்னாள் போராளிகள் நூற்றுக்கணக்கில் இணைந்துவருகின்றனர். எங்களுடைய விடுதலை எமதுஅற்புதமான தலைவருடைய காலத்தில் விரைவாகக் கிடைக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் மனதில் நிறுத்திக்கொள்ளவேண்டும்.

இந்த நேரத்தில் நாம் எல்லோரும் சபதமெடுக்கவேண்டும். ஒருமித்த, ஒரே சக்தியாக வீரமறவர்களுடைய பாதையில் ஒரே உணர்வெழுச்சியுடன் விடுதலைப் போராட்டத்தில் இணைந்துநின்று பங்களித்து விரைவாக எமது தேசத்தினதும் மக்களினதும் விடுதலையை வென்றெடுப்போம் என்றார்.

Comments