அண்மையில் இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா இலங்கை பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் செம சூடு.
``இலங்கை ராணுவத் தாக்குதலில் தமிழர்கள் யாரும் இறப்பதில்லை என்பது தமிழ்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களுக்கு நன்றாகத் தெரியும். விடுதலைப் புலிகள் இயக்கம் அழிந்துவிட்டால் அதன் மூலம் நெடுமாறன், வைகோ போன்ற அரசியல் கோமாளிகளுக்கு அந்த இயக்கம் மூலமாக வரும் `வருமானம்' நின்றுபோய்விடும். அதனால்தான் புலிகள் இயக்கத்தை இவர்கள் காப்பாற்ற முயல்கிறார்கள்'' என்று அதில் பொரிந்து தள்ளியிருந்தார் பொன்சேகா.
இலங்கைத் தளபதியின் இந்தப் பேச்சு குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ என்ன கருதுகிறார்? லண்டனில் ஈழத்தமிழர்கள் நடத்திய `மாவீரர் நாள்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு சென்னை திரும்பியிருந்த அவரைச் சந்தித்துக் கேட்டோம்.
``சரத் பொன்சேகாவின் இந்தக் கொழுப்பெடுத்த திமிர்ப் பேச்சுக்கு, மத்திய அரசு கொடுத்த இடமே காரணம். இலங்கையில் உடனடி போர்நிறுத்தம் வேண்டும் என்ற ஆறரைக் கோடி தமிழ் மக்களின் உணர்வுக் கொந்தளிப்பிற்கேற்ப தமிழக சட்டமன்றத்தில் அதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மானமிக்க நமது சட்டமன்ற நடவடிக்கையை பொன்சேகா கேலியும், கிண்டலும் செய்துள்ளார். கேவலப்படுத்தியிருக்கிறார்.
ஒரு வல்லரசு நாடான இந்தியாவின் பிரஜைகளை - தமிழக அரசியல் தலைவர்களை சுண்டைக்காய் நாடான இலங்கையின் ராணுவத்தளபதி இப்படி இழிவுபடுத்திப் பேசியிருப்பது மண்டைக் கொழுப்பு. இதற்காக இலங்கை அதிபர் ராஜபக்ஷே, ராணுவ மந்திரி ஆகியோரை இந்தியாவிற்கு வரவழைத்து பொது மன்னிப்பு கேட்கச் சொல்ல வேண்டும். அல்லது அவர்களின் தூதரகத்தை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும்.
பொன்சேகாவின் வாய்க்கொழுப்பு பேச்சைக் கண்டித்து வரும் 10-ம்தேதி சென்னையில் உள்ள இலங்கை துணைத்தூதரகத்தின் முன்பு இனமான உணர்வுள்ள தமிழர்களை ஒன்றுதிரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்'' என்று கொதித்த வைகோவிடம் மேலும் சில கேள்விகளை முன் வைத்தோம்.
உங்கள் லண்டன் பயணத்தை இலங்கை துணைத் தூதரகம் தடுக்க முயற்சித்ததாக செய்தி பரவியதே?
``ஏற்கெனவே எனது நார்வே பயணத்தைத் தடுக்க முயன்று தோற்றவர்கள்தான் அவர்கள். இந்தமுறை நான் லண்டன் செல்வது இலங்கை அரசுக்குத் துளியும் பிடிக்கவில்லை. அந்த அடிப்படையில் எனது லண்டன் பயணத்தைத் தடுக்க வேண்டும் என அவர்கள் முயன்றார்கள்.''
லண்டன் பயணத்திற்காக உங்களுக்கு `விசா' மறுக்கப்பட்டதாகவும், பயணம் ரத்து என்றும் கூட செய்திகள் உலா வந்ததே?
``இதில் உண்மையில்லை. இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் சார்பில் அவர்களது லெட்டா்பேடு மூலமாக எனக்கு அழைப்பு வந்தது. பொதுவாக, பன்னிரண்டு வேலை நாட்களுக்கு முன் விண்ணப்பித்தால்தான் விசா கொடுப்பார்கள். எனக்கோ விண்ணப்பித்த நான்காவது நாளே விசா கொடுத்து விட்டார்கள். பொடா கோர்ட்டிலும் எனக்கு அனுமதி கிடைத்து விட்டது. அப்படியிருந்தும் எனக்கு விசா மறுக்கப்பட்டதாக பிரபல ஏடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் முதன்மைச் செய்தி வெளியிட்டு விட்டார்கள். இதில் ஃபிளாஷ் நியூஸ் வேறு. உண்மைகளைத் தெரிந்து கொள்ளாமல் இப்படி செய்தி போட்டவர்கள், லண்டனில் அறுபதாயிரம் தமிழர்கள் முன் பேசிய செய்தியை நான் அனுப்பிவைத்தும் போடவில்லை. இது புரியாத புதிராக இருக்கிறது.''
இதுபோன்ற சம்பவங்களுக்கு இலங்கை துணைத் தூதர்தான் காரணம் என்கிறார்களே? அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
``இங்குள்ள இலங்கை துணைத் தூதர், நாம் சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டால் கருத்துச் சொல்கிறார். எதற்கெடுத்தாலும் அறிக்கை வெளியிடுகிறார். இது மிகவும் தவறான போக்கு. அதிகப் பிரசங்கித்தனம். அதிகார வரம்பை மீறும் செயல். சிங்கள வெறியர்களின் பிரதிநிதி ஒருவர் இங்கே இருந்து கொண்டே இவ்வளவு வேலைகளைச் செய்கிறார் என்றால் அங்கே தமிழர்களை என்ன பாடுபடுத்துவார்கள்?
அதிகாரத்தில் இருப்பவர்கள் இதைப் புரிந்து கொண்டு, வைக்க வேண்டிய இடத்தில் அவர்களை வைக்க வேண்டும். வைத்தால் அப்படிப் பேச மாட்டார்கள். இப்போது இந்திய அரசே சிங்களவர்களுக்கு உடந்தையாக இருக்கும் தைரியத்தில், திமிரில்தான் இப்படிச் செயல்படுகிறார்கள்.''
`இலங்கையின் இனச்சிக்கலுக்குக் காரணம் பிரிட்டிஷ் அரசுதான். இப்போதும் நீங்களே தலையிட்டு இனப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்' என லண்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசியிருக்கிறீர்களே? அதை அவர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள்?
``இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்குள் நுழைய எனக்கு அனுமதியில்லை என்பதால் அந்தக் கட்டடத்தின் உள்ளே ஒரு தனியரங்கில் கூட்டம் நடந்தது. பிரிட்டிஷ் எம்.பி.க்கள் அறுபது பேர், தமிழ் மக்கள் பார்வையாளர்கள் இருநூறு பேர் என நடந்த கூட்டம் அது. நான் உள்ளே நுழைந்து இருக்கையில் உட்காரும்வரை அனைவரும் எழுந்து நின்று கை தட்டியபடியே இருந்தது சிலிர்ப்பாக இருந்தது.
நான் பேசும்போது. `1948-ல் பிரிட்டிஷ் அரசு இலங்கையில் ஒரு சுமுகமான சூழ்நிலை, சமமான சட்டதிட்டத்தை உருவாக்கிக் கொடுத்துவிட்டு வந்திருந்தால் இனப்பிரச்னை வந்திருக்காது' என்று அவர்களை குற்றம் சுமத்தாத வகையில் பேசினேன். `இங்கிலாந்துக்கு மட்டுமல்ல, இலங்கைக்கும் தேசிய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதித் தந்த மாபெரும் ஆங்கில அரசியல் மேதை ஐவர்ஜென், `சிங்களவர்கள் தமிழர்களுக்கு இப்படி துரோகம் செய்வீர்கள் என்று தெரிந்திருந்தால் நான் இப்படியொரு அரசியலமைப்புச் சட்டத்தையே எழுதிக் கொடுத்திருக்க மாட்டேன்' என்று கூறியிருந்ததை நான் எனது பேச்சில் குறிப்பிட்டது பிரிட்டிஷ் எம்.பி.க்களின் மனதைத் தொட்டது.
`நீங்கள் தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும். விடுதலைப்புலிகள் மீது விதித்த தடையை நீக்க வேண்டும். இலங்கைப் பிரச்னையில் நீங்கள் தலையிடுவதில் சிக்கல் இல்லை. பிரச்னையைத் தீர்க்க முன் நில்லுங்கள். சர்வதேச நாடுகளுக்கும் இதை எடுத்துச் சொல்லுங்கள்' என்று பேசினேன்.''
அவர்களது ரியாக்ஷன் எப்படி இருந்தது?
``இலங்கையில் சிங்களப்படை நடத்திய செஞ்சோலை படுகொலை முதல் அனைத்தையும் புள்ளிவிவரத்தோடு பட்டியலிட்டேன். போர் நிறுத்தத்தை ஏற்க இலங்கை அதிபர் ராஜபக்ஷே மறுப்பது, ஐ.நா. சபையின் அலுவலகத்தை அவர் திறக்க மறுப்பது, சர்வதேச மனித உரிமை கமிஷன் தலைவர் செயிஸ் அம்மையாரை உள்ளே விட மறுப்பது, இலங்கையில் திட்டமிட்டு ஓர் இனப்படுகொலை நடப்பது, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் வன்னிப்பகுதிக் காடுகள், கழனிகள் மற்றும் மரத்தடிகளில் அகதிகளாக இருப்பதையும் பட்டியலிட்டேன்.
அவர்கள் அதை ஆமோதித்து, ஈழத்தமிழர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்தார்கள். லேபர் கட்சி எம்.பி.யான ஸ்டீபன் பவுன் என்பவர், என் பேச்சைப் பாராட்டி, `இது வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய பேச்சு' என்றபோது சங்கோஜப்பட்டேன்.''
மாவீரர் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றி.....?
``ஆம்! லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் உள்ள எக்செல் என்ற பிரமாண்ட அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சி அது. அறுபதாயிரம் தமிழர்கள் அதில் கலந்து கொண்டதாக ஸ்காட்லாண்டு யார்டு போலீஸ் கூறியிருக்கிறது. பிரமாண்டமான மேடை. மாவீரர்களுக்கு மரியாதை செலுத்த தனியிடம் என மிக நேர்த்தியாக, என் வாழ்நாளில் இதுவரை பார்க்காத வண்ணம் அந்த நிகழ்ச்சி நடந்தது, சீருடை தரித்த தன்னார்வத் தொண்டர்களே ஆயிரம் பேர் வரை இருந்தார்கள்.
நிசப்தத்துக்கு நடுவே ஒலிபெருக்கியில், `அனைவரும் எழுந்து நில்லுங்கள். நம் தாயக விடுதலைக்காக உயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீர அகவணக்கம் செய்வோம். உங்கள் கைகளில் உள்ள கார்த்திகைப் பூக்களை மேல் நோக்கித் தூவுங்கள். உங்கள் கரங்களில் ஏற்றப்பட்டிருக்கும் அகல் விளக்குகளை மேலே உயர்த்துங்கள்' என சன்னமான குரல் ஒலித்தபோது, கூடியிருந்த மக்கள்கடல் உணர்ச்சிப் பெருவெள்ளமாகச் சிலிர்த்தது. ஊனை உருக்கி, உள்ளத்தை ஊடுருவுகின்ற ஒரு சோகமான பாடல் செவிகளுக்குள் பாய்ந்து தாக்கியது.
பல்லாயிரக்கணக்கில் கைகள் மேலே உயர்ந்து கார்த்திகைப் பூக்களை மேல்நோக்கித் தூவின. அமாவாசை இரவில் மேகங்கள் உலவாத வானில் ஒளிரும் விண்மீன்களைப் போல தீபச்சுடர்கள் பளிச்சிட்டன. மூச்சுவிடும் ஒலிகூட துல்லியமாகக் காதில் விழும் பேரமைதி திடீரெனச் சூழ்ந்தது. மாவீரர்களுக்கான மௌன அஞ்சலியில் மணித்துளிகள் கரைந்தன. பெரும்பாலானோரின் முகங்களில் தாரை தாரையாகக் கண்ணீர்.
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஆண்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் முதல் மலர்க்கொத்தை வைத்தார். அடுத்து நான் வைத்தேன். ஏறத்தாழ மூன்று மணிநேரம் நடந்த அந்த நிகழ்ச்சியை இப்போது நினைத்தால்கூட நெஞ்சம் விம்முகிறது. பதறுகிறது.''
லண்டன் பயணத்தின்போது புலிகளைப் பற்றி நீங்கள் எதுவும் பேசக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில்தான் விசா கிடைத்ததாமே?
``அத்தனையும் கட்டுக்கதை. கட்டவிழ்த்து விடப்பட்ட வதந்தி. என்னிடம் யாரும் அப்படிக் கோரவில்லை. நானும் புலிகளைப் பற்றி பேச மாட்டேன் என்று கூறவும் இல்லை. இமிக்ரேஷன் அலுவலகத்தில் எந்தக் கேள்வியும் கேட்காமல் என் பாஸ்போர்ட்டில் சீல் அடித்துக் கொடுத்து விட்டார்கள்.''
இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் நீங்கள், அதே நிலைப்பாட்டில் உள்ள தமிழக முதல்வருடன் இணைந்து செயல்படாமல் அவரை விமர்சனம் செய்கிறீர்களே?
``இந்தக் கேள்வி கலைஞர் கருணாநிதி ஏதோ நியாயவாதி போலவும், இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையில் அவர் உருகுவது போலவும் நினைக்கத் தூண்டுகிறது. உண்மையில் அவர் ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்கிறார். அப்படியிருக்கும் போது, அவருடன் நான் சேர்ந்து கொண்டால் என் குற்றச்சாட்டு முனை மழுங்கி அல்லவா போய்விடும்?
கடந்த நான்காண்டுகளாகவே மத்திய அரசு இலங்கை ராணுவத்திற்கு ராணுவ உதவி செய்வது முதல்வருக்கு நன்றாகவே தெரியும். அதை எதிர்த்து ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? குரல் கொடுத்தாரா? பலாலி விமானதளத்தை இந்தியா புதுப்பித்துக் கொடுத்ததாக இலங்கை ராணுவத் தளபதியே கூறியபோது முதல்வர் அதைத் தவறு என்றாரா? இலங்கையுடன் இந்தியா தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் என செய்தி வந்தபோது இவர் என்ன பேசினார்? தமிழினத் தலைவர் என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்ளும் இவர் ஈழத்தமிழர்களைக் காக்க ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? புலிகள் ஒழிக்கப்படட்டுமே என்ற எண்ணத்தில்தான் இருந்து வருகிறார். அதுதான் அவரின் நினைப்பு. ஆசை.
கம்யூனிஸ்டுகள் உண்ணாவிரதம் நடத்தியபோது கூட மௌனமாக இருந்தவர், ம.தி.மு.க. பத்தாம் தேதி மறியல் போராட்டம் என அறிவித்த பிறகுதான் மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் என அறிவித்தார். `எல்லோரும் மொத்தமாக செத்துப் போவோம்' என்றார். அது என்ன ஒப்பாரி? அவர் செய்ய வேண்டிய கடமையைச் செய்தாரா? எல்லாம் கதை, வசனம் எழுதி நடிக்கும் நாடகம்தான்.
தமிழ் மக்களிடம் இருந்து `இனத்துரோகி' பட்டம் வந்து விடுமே என்ற பயத்தில், நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகும் அச்சத்தில் `அனைத்துக் கட்சிக் கூட்டம்' என்றார். அது ஒரு நாடகம் என்று தெரிந்துதான் நாங்கள் கலந்து கொள்ளவில்லை.
அடுத்து மொத்தமாக ராஜினாமா என்றார். நடந்ததா அது? ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இவர் புறப்பட்டு விட்டதைப்போல ஏற்படுத்தப்படும் மாயத்தோற்றத்திற்கு நாங்களும் துணைபோக முடியுமா?''
`ராஜினாமா செய்து காங்கிரஸ் அரசு கவிழ்ந்தால் வேறு யாரிடம் போய் போர் நிறுத்தக் கோரிக்கையை வலியுறுத்த முடியும்' என்கிறார்களே? நியாயம்தானே?
``என்ன நியாயம்? வீடு பற்றி எரியும் போது அணைப்பதற்கான வேலையைப் பார்ப்பாரா? அல்லது வண்டி எப்போது வரும் என்று கடிதம் எழுதிப் போட்டுவிட்டுக் காத்திருப்பாரா? எம்.பி.க்கள் ராஜினாமாவால் சர்க்கார் கவிழ்ந்து விடும் என்ற பயத்தாலாவது `போரை நிறுத்து' என்று ராஜபக்ஷேவுக்கு பிரதமர் அறிவித்திருப்பாரே? அந்த வாய்ப்பை இவர் ஏன் நழுவ விட்டார்? ராஜினாமா நாடகத்தில் இரண்டு வார தவணை எதற்கு? பத்திரிகைகளில் தினம் ஒரு செய்தி போடுவதற்கா? கனிமொழியிடம் இவர் ராஜினாமா கடிதம் வாங்குகிறார். இவர் என்ன ஸ்பீக்கரா, ராஜினாமா கடிதம் வாங்குவதற்கு? எல்லாம் ஏமாற்று நாடகம்.
சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேறியது. 48 மணிநேரத்திற்குள் அந்தத் தீர்மானத்தின் ஈரம் காய்வதற்குள்ளேயே இலங்கை அதிபர் ராஜபக்ஷே டெல்லியில் பிரதமரைச் சந்தித்து அங்கிருந்தபடியே `போரை நிறுத்த முடியாது. புலிகளை ஒழித்து விட்டுத்தான் மறு வேலை' என்று கன்னத்தில் அறைந்தது போல சொல்கிறான். அது ஆறரைக் கோடி தமிழர்களுக்கு ஏற்பட்ட தலைகுனிவு என்று கலைஞர் கருணாநிதி நினைத்திருக்க வேண்டாமா? நூறு கோடி இந்தியர்களுக்கும் நேர்ந்த தலைகுனிவு என பிரதமர் நினைத்திருக்க வேண்டாமா? இந்தத் திமிர் ராஜபக்ஷேவுக்கு எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தது? பிரதமரும், முதல்வரும் கொடுத்தது.
அடுத்து பிரதமரைச் சந்திக்க எம்.பி.க்களை அனுப்பினார். அதன்பின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளோடு போய் பிரதமரைச் சந்தித்தார். அதில் பிரதமர் ஏதாவது பேசினாரா? இடிச்சபுளியாட்டம் அல்லவா உட்கார்ந்திருந்தார்? ``போரை நிறுத்தச் சொல்லி இலங்கையை வற்புறுத்துவோம்' என பிரதமர் என்னிடம் கூறினார்' என முதல்வர் கூறவில்லையே. அது ஏன்? மக்கள் இதைக் கவனிக்க வேண்டும். ஆக, போரை நிறுத்தச் சொல்வோம் என்று சொல்வதற்கே மன்மோகன்சிங் தயாராக இல்லை.''
இவர்கள் கேட்டதால் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பிவைக்க ஏற்பாடாகி இருக்கிறதே? இது முன்னேற்றம்தானே?
``இல்லை! கருணாநிதியின் வார்த்தையைக் கவனமாகக் கவனிக்க வேண்டும். `போரை நிறுத்தச் சொல்லி நாங்கள் எழுதிக் கொடுத்திருக்கிறோம்' என்றுதான் கூறியிருக்கிறார். பிரதமர் அப்படிச் சொன்னார் என்று இவர் சொல்லவில்லை. இப்படிப் பட்ட நிலையில் பிரணாப் முகர்ஜி அங்கே போய் என்ன செய்துவிடப் போகிறார்? சென்னைக்கு முதல்வர் வீட்டுக்கு வந்து காபி குடித்து விட்டுச் சென்ற அவர், கொழும்புக்குப் போய் டீ குடித்து விட்டு வருவார். அவ்வளவுதான். கலைஞர் கருணாநிதி உண்மையில் கவலையோடும், மனக் கொந்தளிப்போடும் வரவில்லை என்பது பிரதமருக்குத் தெரியும். இலங்கை ராணுவத்திற்கான ஆயுதத் தளவாட உதவிகளை பிரதமர் நிறுத்துமாறு முதல்வர் சொல்வாரா? மாட்டார். மக்களை ஏமாற்ற தினம் தினம் கதை, கவிதை, வசனம் என எழுதி நாடகத்தை நடத்தி மக்களின் கொந்தளிப்பில் இருந்து அவர் தப்பப் பார்க்கிறார் என்பதுதான் நிஜம்.''
முதல்வர் எடுத்த முயற்சியால்தான் இன்று இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண உதவி கிடைத்திருப்பதை மறுப்பதற்கில்லையே?
``அனுப்பிய நிவாரணப் பொருட்களில் பத்து சதவிகிதம் மட்டுமே தமிழ் மக்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. 90 சதவிகிதம் சிங்களவர்களுக்கும், ராணுவத்திற்கும் போயிருக்கிறது. முதல்வரின் நிவாரண உதவி கூட சிங்களவனுக்குத்தான் பயன்படுகிறது.''
இந்த விஷயத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் மீது விமர்சனம் பாய்கிறதே? அவரை மாற்ற வேண்டும் என்கிறார்களே?
``இங்கே தென் கரையோரத்தில் அரை லிட்டர் பெட்ரோல், டீசல் இலங்கைக்குப் போய்விடக் கூடாது என்பதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்த நாராயணன், மற்ற பகுதிகளில் கப்பல் ரோந்தையே விட்டுவிட்டார். கடல்வழியே தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பிருப்பதாக ஒரு வருடத்திற்கு முன்பு மட்டுமல்ல; பதினைந்து நாட்களுக்கு முன் உளவுப்பிரிவு தகவல் கொடுத்தும் கோட்டை விட்டு விட்டார். பாகிஸ்தானில் இருந்து கடல்வழியே மும்பை வந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு முழுப்பொறுப்பும் அவர்தான்.''
புலிகளை ஆதரிப்போம் என்கிறீர்கள். ஆனால் நீங்கள் கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க. தலைவி இதற்கு நேர்மாறாக அல்லவா இருக்கிறார்? முதல்வர் கூட அடிக்கடி இதை `பஞ்ச்' வைத்து தாக்குகிறாரே?
``அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தனிமைப் படுத்த வேண்டும் என்ற ஆசைக்கனவுக்காக முதல்வர் அப்படிப் பேசுகிறார். புலிகளுக்கு ஆதரவில்லை என்றாலும் தமிழ்ஈழ மக்களுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் அ.தி.மு.க. உறுதியாக இருக்கிறது.
சரி! இவ்வளவு பேசும் கலைஞருக்கு என்ன நிலைப்பாடு? அ.தி.மு.க. `புலிகளை ஆதரிக்க மாட்டோம்' என்கிறது. இவர் ஆதரிப்போம் என்கிறாரா? அப்படிச் சொல்லட்டுமே. சரி. ஈழத் தமிழர்களுக்காவது ஆதரவாக இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லையே? ஒருபக்கம் ஈழ மக்களை ஆதரிப்போம் என்கிறார், மறுபக்கம் ஆதரவுக் குரல் கொடுத்தால் `ராஜ துரோகம்' என்கிறார்.
ஒரே இயக்கத்திற்குள் பலரை ஒழிக்க முயன்று, அரசியல் லாபத்திற்காக பல கட்சிகளை இரண்டாக உடைத்த, உடைக்க முயன்ற இவர் சகோதர யுத்தம் பற்றிப் பேசுகிறார். ஆயுதம் கொடுத்து இலங்கைத் தமிழர்களை அழிக்க நினைக்கும் மத்திய அரசோடு இவர் கூட்டணி வைத்திருப்பதைவிட நான் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்திருப்பது ஒன்றும் குற்றமில்லையே?''
கடைசியாக ஒரு கேள்வி. அண்மையில் மாறன் சகோதரர்கள் கலைஞர் குடும்பத்துடன் இணைந்தது பற்றி....?
``அது அவர்களின் குடும்ப உறவு விவகாரம். அதுபற்றிச் சொல்வதற்கு எதுவுமில்லை. ஆனால் கருத்துக் கணிப்பு, மதுரை பத்திரிகை அலுவலக எரிப்பு, மூன்று ஊழியர்கள் கொலை, அழகிரிதான் குற்றவாளி என்ற சண்டையை வைத்து, சூரியன் தொலைக்காட்சி தி.மு.க.விற்கு விரோதமாகப் போய் விட்டது என்று பேசி பெரும் பணக்காரர்களிடம் பணம் வாங்கி, கட்சிக்காரர்களை விளம்பரம் செய்ய வைத்து, முப்பது நாட்களுக்குள் அனுமதி வாங்கி தனது குடும்பத்திற்காக இன்னொரு தொலைக்காட்சியைத் தொடங்கி கூடவே நான்கு சேனல்களையும் கொண்டுவந்த இந்த சாமர்த்தியம் இருக்கிறதே? கலைஞர் தவிர உலகத்தில் வேறு யாருக்கும் இந்த சாமர்த்தியம் வராது. சுயநலத்தின் அடிப்படையில் ஏற்படும் சாமர்த்தியம் இது.''
Comments