இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதைச் சித்தரித்து அவுஸ்திரேலியாவில் ஓவிய கண்காட்சி


இன்று டிசம்பர் மாதம் 10ஆம் நாள். ஐக்கிய நாடுகள் சபை 60 வருடங்களுக்கு முன் மனித உரிமைகள் பற்றி பிரகடனம் செய்த நினைவு நாள். உலகமே இத்தினத்தை நினைவுகூரும் இவவேளையில் இலங்கை அரசோ மனித உரிமைகளை மீறும் செயல்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருவதைப் பார்க்கிறோம்.

அவுஸ்திரேலிய தமிழ் இளையோர் அமைப்பு இன்றைய தினம் சிட்னியிலே ஒர் ஓவியக் காட்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். 15 மீட்டர் அகன்ற திரைச்சேலையில் 'நினைத்துப் பாருங்கள். மீட்டுத்தாருங்கள். மதிப்பு அளியுங்கள்." என்ற கருத்தை விளக்கும் ஓவியங்களை வரையும் பணியிலே இவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

'இந்த ஓவியங்கள் பேசுகின்றன. தமிழ் மக்கள் படும் இன்னல்களை நினைத்துப்பாருங்கள். அவர்களின் உரிமைகளை மீட்டுத்தாருங்கள். அவர்களின் சுதந்திர தாகத்திற்கு மதிப்பு அளியுங்கள் என்று உலகத்தை பார்த்து கேட்கின்றன இந்த ஓவியங்கள்." என்கிறார் லக்ஷ்மி ராஐன் என்னும் தமிழ் இளையோர் ஒருவர்.






தமிழ் மக்கள் மூவர் தமிழ் ஈழக் கொடியை ஏற்றுவதுபோல ஓவியம் வரைந்துள்ளார் நிஷா தில்லை. 'ஒரு மாபெரும் கருத்தை இந்த ஓவியம் கூறுவதை பாருங்கள். தமிழ் மக்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பது இந்த ஓவியத்தை பார்க்கும் எவருக்குமே விளங்கிவிடும்," என்று இவர் விளக்கம் தருகிறார்.

இந்த ஓவியப் பணி அவுஸ்திரேலிய பொதுமக்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது என்பதை பார்க்க முடிந்தது. பலர் இந்த ஓவியங்களைப் பார்த்து வியப்படைந்தனர். 'ஊடகங்கள் இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்," என்றார் பார்வையாளராக வந்திருந்த சேரா லுயிஸ்.

2008 ஆண்டு இலங்கை அரசு போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகியது முதல் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை தீவிரப்படுத்தியதோடமையாது, மனிதாபிமானப் பணியிலீடுபட்டுவந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் தமிழ் பிரதேசங்களிருந்து வெளியேற்றியதோடு ஊடக சுதந்திரத்திற்கும் தடை விதித்தது. அன்று முதல் இன்று வரை இலங்கையில் தொடரும் மனிதப் படுகொலைகளும் கடத்தல்களும் நீதி விசாரணையற்ற தணடனைகளும் மனித உரிமைக்காக பாடுபடும் உலக நிறுவனங்களால் பலமாக கண்டிக்கப்பட்டாலும் இலங்கை அரசின் செயல்கள் தொடரவே செய்கின்றன. இவற்றிக்கு எதிராகக் குரல்கொடு;ப்பவர்களும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.

இந்த கொடுமைகளைக்காட்டும் இவ் ஓவியங்கள் அவுஸ்திரேலியாவில் பல இடங்களிலும் காட்சிக்கு வைக்கப்படு;ம். ஈற்றில் தமிழ் ஈழத்திலும் காண்பிக்கப்படும்.


Comments