ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து திருநங்கைகள் உண்ணாவிரத போராட்டம்



இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் ஈழத்தில் நிரந்தர போர் நிறுத்தம் வேண்டி வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கத்தில் இன்று அரவாணிகள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்கள்.

தமிழகமெங்கிலும் இருந்து 800 திருநங்கைகள் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் அத்துனை பேரும் தங்களது ஒரு நாள் வருமானத்தை ஈழத்தமிழர்களுக்கு நிவாரணநிதியாக வழங்கினார்கள்.

கவிஞர் கனிமொழி எம்.பி. இந்த உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்தார். அப்போது அவர், ‘’திருநங்கைகள் இதுவரை தங்களது பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். முதன் முதலாக இப்போதுதான் பொதுப்பிரச்சனைக்காக போராட்டம் நடத்துகிறார்கள்.






இலங்கை பிரச்சனையில் அவர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள்’’ என்று தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் தொல்.திருமாவளவன் இந்த உண்ணாவிரத்தை பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார்.

உண்ணாவிரதத்தை முடித்து வைத்து திருமாவளவன் உரையாற்றுகையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசி வரும் தமிழக அரசியல்வாதிளை அரசியல் கோமாளிகள் என்று இழிவு படுத்தி பேசிய இலங்கை இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு கண்டனம் தெரிவித்தார். என் கட்சிக்காரர்கள் அவரின் உருவ பொம்மையை கொடும்பாவி எரிப்பார்கள் என்றார்.

அவர் சொல்லி முடித்ததும் அவரது ஆதரவாளர்கள் கொடும்பாவியை எரித்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அரவாணிகள் அமைதியாக நடந்து கொண்டிருந்த இந்த உண்ணாவிரதத்தை இப்படி ஆர்ப்பாட்டப்படுத்தி விட்டீர்களே! என்று பேசினார்கள்.


Comments