கள இழப்புக்களுக்கு காரணம் தேடும் ஆட்சியாளரும் இராணுவத்தலைமையும்.


சிறிலங்காவின் சனாதிபதியில் இருந்து இராணுவப் பேச்சாளர் வரையில் கிளிநொச்சி நோக்கியதான படைத்தரப்பினரின் முன்னேற்றம் தடைப்பட்டிருப்பதற்குக் காரணம் தேடத் தலைப்பட்டுள்ளனர்.

இந்த வகை யில் கடந்த வாரத்தில், சிறி லங்கா சனாதிபதி, இராணுவத் தளபதி, இராணுவப் பேச்சாளர் என ஒவ்வொருவரும் தம்மால் கண்டுபிடிக் கத்தக்கதான காரணங்களைக் கூறியுள்ளனர்.

இவர்கள் மூவரும் தெரிவித் துள்ள காரணங்களையும் தொகுத்து நோக்கின் பின்வரும் அம்சங்கள் முதன் மைப்படுத்தப்பட்டுள்ளன.

01.கிளிநொச்சியை கைப்பற்று வதற்காகப் படைத்தரப்பினர் அவசரப் படவில்லை.

02.அனுபவம் வாய்ந்த போராளி களை விடுதலைப் புலிகள் களத்தில் நிறுத்தியுள்ளனர்.

03.விடுதலைப் புலிகள் கனரக மற்றும் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றனர்.

04. காலநிலை- அதாவது பருவகால மழை.

சிறிலங்கா அரச தரப்பால் தெரி விக்கப்படும் இத்தகைய காரணிகள், களமுனையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடி கிளிநொச்சி நோக்கியதான படை நகர்வு சவால்களைச் சந்தித்துள்ளன. படைத்தரப்பிற்கு ஏற்பட்டுள்ள அதிகளவு உயிரிழப்புக்கள் மற்றும் காயங்கள் என்பனவற்றின் அடிப்படையில் ஏற்பட்டவையாகும். கிளிநொச்சிக்கான சமர் என்பது செப்ரெம்பர் மாதம் 01 ஆம் திகதியில் வன்னேரிப் பகுதியில் ஏற்பட்ட மோதலுடன் ஆரம்பித்தது.

இதன் பின்னர், கிளிநொச்சிக்கான மோதல்கள் வன்னேரி, அக்கராயன், முறிகண்டி - ஜெயபுரம் வீதியில் 02 ஆம் கட்டை தொடக்கம் 04 ஆம் கட்டை வரையிலான பகுதி, அறிவியல் நகர், கோணாவில், புதுமுறிப்பு, குஞ்சுப் பரந்தன் எனப் பல முனைகளில் இடம்பெற்றன. இதேசமயம், ஒக்ரோபர் மாதம் முதல் வாரத்தில் சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா, கிளிநொச்சி சில தினங்களுக்குள் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் ஆக்கிர மிப்பிற்குள் வரும் என்றார். ஆனால், கிளிநொச் சிக்கான யுத்தத்தில், நகரின் எல்லையை இன்னமும் சிறிலங்காப் படைத்தரப்பு தொடவில்லை என்றே கொள்ளமுடியும். இதேவேளை சிறிலங்கா அரச தரப்பால் கடந்த 26 ஆம் திகதி அதாவது தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் அன்றோ, அதற்கு முன்பதாகவோ கிளிநொச்சி கைப்பற்றப்படுதல் வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுப் பெரும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது.


இதற்கான பாரிய முயற்சி ஒன்று நவம்பர் 24 ஆம் திகதி குஞ்சுப்பரந்தன் ஊடாக மேற்கொள்ள ப்பட்டது. ஆனால், அம்முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதோடு படைத்தரப் பிற்குப் பாரிய இழப்பும் ஏற்படுத்தப்பட்டது. புலிகளின் இம்முறியடிப்புத் தாக்குதலானது 26 ஆம் திகதி கிளிநொச்சியில் சிங்கக் கொடி ஏற்றும் சிறிலங்கா ஆட்சியாளரின் ஆசையை இல்லாது ஒழித்ததோடு மாவீரர் நாள் அன்று தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் உரைக்கு முன்பதாக அதாவது ஒரு மணித்தியாலம் முன்பதாக உரையாற்றும் மகிந்தவின் திட்டத்தையும் தோல்வியுறச் செய்தது.

இதன் பின்னரே படிப்படியாக கிளிநொச்சி ஆக்கிரமிப்புத் தாமதமடைந்து ள்ளமை தொடர்பாகக் கார ணங்கள் தேடவேண்டியதான நிலை சிறிலங்காப் படைத்தரப்பிற்கு ஏற்பட்டது. அதாவது படைநட வடிக்கை தாமதம் அடைவதற்கும், அதிகரித்த இழப்பு ஏற்படுவதற்கும் காரணம் தேடவேண்டியதாயிற்று. சிறிலங்காப் படைத்தரப்பு பல முனைகளில் இராணுவ நகர்வு முயற்சிகளை மேற்கொண்டிருப்பினும் கிளிநொச்சியை ஏன் எட்டவில்லை என்பதற்கான காரணங்களை வெளிப்படுத்தல் வேண்டும் என்ற நிலை தவிர்க்கப்பட முடியாததாகி யது. ஏனெனில், கிளிநொச்சியைக் கைப்பற்றுவது தொடர்பான நாட்களைச் சிறிலங்காப் படைத்தரப்பும், ஆட்சியாளரும் ஏற்கெனவே குறித்து விட்டிருந்தனர். இத்தகைய நிலையிலேயே மேலே கூறப்பட்டது போன்ற காரணங்கள் கற்பிக்கப்பட்டன.

ஆனால், அரசாங்கத் தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ள காரணிகளில் ஒன்று அவர்களின் நடவடிக்கைக்கு மாறானதாக உள்ளது. அல்லது அவர்களின் முன்னைய மதிப்பீடுகள் அபிப்பிராயங்களுக்கு மாறானதாகவுள்ளது. இந்தவகையில், முதலாவதாக கிளிநொச்சியை நோக்கி முன்னேறுவதற்கு இராணுவம் அவசரப்படவில்லை என்ற காரணி அமைகிறது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவின் இப்பேச்சு நகைப்பிற்கிடமானது. ஏனெனில், கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான நாட்கள் ஒரு தடவையல்ல ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகள் இராணுவத் தரப்பாலும் அரச தரப்பாலும் குறிக்கப்பட்டிருந்தன. எடுத்துக்காட்டாக ஒக்ரோபர் முதல் வாரத்தில் கிளிநொச்சி பிடிக்கப்பட்டுவிடும் என்பதற்கான கால எல்லையை இராணுவத் தளபதி சரத்பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.

இதன் பின்னரும் கிளிநொச்சிக் குள் பிரவேசிப்பது பற்றி சரத்பொன் சேகாவால் பேசப்பட்டே வந்தது. இதில் இறுதியாகப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளரும், அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெலவினால் தேசியத்தலைவரின் பிறந்த நாளன்று கிளிநொச்சிக்குள் இராணுவம் புகுந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அது சாத்தியமாகவில்லை. அந்நகர்வில் ஈடுபட்ட படையினர் பலத்த இழப்புக்களைச் சந்திக்கவேண்டியதாக இருந்தது. இதன் பின்னரும் இற்றைவரை - (16.12.2008) வரை கிளிநொச்சியை ஆக்கிரமிப்பதற்கான பாரிய வலிந்து தாக்குதல்கள் மேற்கொள்ளவே பட்டன. இதில், 10 ஆம் திகதி இரு முனைகளில் மேற்கொண்ட தாக்குதலும் 17 ஆம் திகதி கிளிநொச்சியைச் சூழவுள்ள பகுதிகளில் இருந்து ஐந்து முனையாலும் அதேசமயம் கிளாலியூடாக அழுத்தம் கொடுக்கும் வகைகளிலும் மேற்கொள்ளப்பட்ட பாரிய வலிந்து தாக்குதல்களும் முக்கியமானவையாகும்.

இதில் 10 ஆம் திகதி புதுமுறிப்புப் பகுதியிலும், முறிகண்டியிலுமாக மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது 65 படையினர் வரையில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியபோதும் அதில் குறைந்த பட்சம் 100 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக பின்னர் வெளி யான தகவல்கள் வெளிப்படுத்தி யிருந்தன.இதற்குப் பின்னதாக 16 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது மிகப்பெரியளவிலான முன்னேற்பாட்டுடன் மேற்கொள்ளப்பட்டது. இதன் நடவடிக்கைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே சிறி லங்கா வான்படைகள் இப்பகுதிகள் மீது தொடர்ச்சியான பாரிய குண்டுத் தாக்குதலை மேற்கொண்டன. 15 ஆம் திகதி மட்டும் சிறிலங்கா வான்படை விமானங்கள் ஒன்பது தடவைகள் குண்டு வீச்சுத்தாக்குதலை நடாத்தியிருந்தன. இதன் பின்னர் பலமான பின்புறச் சூட்டாதரவுடன் ஐந்து முனைகளில் கிளிநொச்சி நோக்கியதான படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. பெரும் முன்னேற்பாட்டுடனும், மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையானது இது வரையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் மிகப்பெரிதாகும். ஆயினும் இத் தாக்குதலுக் கெதிராக விடுதலைப் புலிகள் உக்கிரமான முறியடிப்புத்தாக்குதலை நடத்தி இராணுவத்தின் முயற் சியைத் தடுத்ததோடு, பெருமளவு இழப்புக்களையும் ஏற்படுத்தினர்.

அன்றைய மோதலில் கிளி நொச்சியைச் சூழ 150 இற்கும் மேற்பட்ட படையினரும் கிளாலியில் 40 இற்கும் மேற்பட்ட படையினரும் கொல்லப்பட்டனர். 450 இற்கும் அதிகமான படையினர் காயமடைந் தனர். ஒருவகையில் பார்க்கப்போனால், கிளிநொச்சிக் களமுனையில் அண்மையில் கிட்டியுள்ள அனுபவம், பருவகால மழை என்பனவற்றைக்கூடக் கருத்திற் கொள்ளாது கிளிநொச்சிக்குள் புகுந்துவிட வேண்டும் என இராணுவம் மேற்கொண்ட பாரிய முயற்சிக்குக் கிடைத்த பயனே இவையாகும். இத்தகையதொரு நிலையில், இராணுவப் பேச்சாளர் கிளிநொச்சிக்குள் பிரவேசிப்பதற்கு இராணுவம் அவசரப்படவில்லை எனக் கூறுவது எவ்வாறு பொருந்தும்? இது ஒரு நகைப்பிற்கிடமான பேச்சாக இருக்கமாட்டாதா? இதேசமயம் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா இராணுவத்திற்கு ஏற்படும் இழப்புக் குறித்து வேறொரு விளக்கத்தை அளிக்க முற்பட்டுள்ளார். அதாவது களமுனைகளில் விடுதலைப்புலிகள் அனுபவம் வாய்ந்த போராளிகளை நிறுத்தியுள்ளமையால் படைத்தரப்பு அதிகளவான இழப்புக்களைச் சந்திக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.

சரத்பொன்சேகாவின் - இக் கூற்றுக்கள் இரு வகையில் முரண் பாடு கொண்டவையாகவுள்ளன. ஒரு புறத்தில் சரத்பொன்சேகா தெரிவித்து வரும் விடுதலைப்புலிகள் தொடர்பான இழப்புக்களும் எஞ்சியுள்ளவிடுதலைப் புலிகளின் உயிரிழப்புத் தொடர்பாக அவர் தெரிவிக்கும் எண்ணிக்கை யானது புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்கள் எவரும் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்ற அளவை எட்டியுள்ளது. இத்தகையதொரு நிலையில் விடுதலைப் புலிகள் அனுபவம் வாய்ந்த படையணிகளை நிறுத்தியுள்ளனர் எனின், புலிகளின் தற்போதைய எண்ணிக்கை என்ன? பலம் என்ன? என்ற கேள்வி தவிர்க்கப்படமுடியாதவையாகின்றது.

இதனைத் தொடர்ந்து புலிகள் பலம் இழந்து விட்டார்களா என்ற கேள்வியும் தவிர்க்கபட முடியாததாகிறது.அத்தோடு விடுதலைப் புலிகளில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் இதனால் படைத்தரப்பிற்கு அதிகளவான இழப்புக்கள் ஏற்படுவதான கருத்துக்களும் முன்வைக்க ப்படுபவையாகவுள்ளன. இத்தகைய அறிவிப்பு அரச தரப்பும், படைத் தரப்பும் இதுவரை செய்து வந்த பிரச்சாரங்களுக்கு மாறானதேயாகும். அதாவது, புலிகளின் விநியோக மார்க்கங்கள் யாவும் துண்டிக்கப்பட்டதாகக் கூறும் அரச தரப்பு புலிகள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றனர் எனக் கூறுவது தாம் கூறியதையே ஏதோ ஒரு வகையில் பொய்யாக்குவதாகவே உள்ளது. அதாவது புலிகளின் விநியோகங்கள் துண்டிக்கப்பட்டிருப்பின் புலிகள் கனரக ஆயுதங்களைப் பாவிப்பது அதிகரித்துள்ளது என்பது பொய்யாகும். அன்றி புலிகள் பாவித்திருப்பது உண்மையாயின் புலிகளின் விநியோகங்கள் தடைப்பட்டதான தகவல் பொய்யாகும்.

இதில் எது பொய், எது உண்மையாயினும் சரி, களமுனை சிறிலங்காப் படைத் தரப்பிற்குச் சாதகமாக அமையவில்லை என்பதே நிதர்சனமாகும். இதன் காரணமாகவே சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பாவிப்பதால் இராணுவத்தின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூற வேண்டியதாயிற்று. அடுத்ததாக, கிளிநொச்சியை நோக்கியதான படை நகர்வு தாமதமடைவதற்குத் தெரிவிக்கப்படும் காரணிகளில் ஒன்று பருவமழை என்பதாகும். மரபுவழி படைநடவடிக்கைக்கு மழை ஒருபாதகமான அம்சம் என்பது உண்மையே. ஆனால், இது தனியாகச் சிறிலங்காத் தரப்பிற்கு மாத்திரமானதல்ல... இது விடுதலைப் புலிகளுக்கும் பொருத்தப்பாடானதே. ஏனெனில், விடுதலைப் புலிகளும் தற்பொழுது மரபுவழிச் சமர்களிலேயே ஈடுபட்டுள்ளனர். கனரகப் போர் ஆயுதங்களையும் பயன்படுத்து கின்றனர். ஆகையினால், இராணுவம் எதிர்நோக்கும் சிரமங்களை விடுதலைப் புலிகளும் எதிர்நோக்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கவே செய்கின்றன.

இதேசமயம், இப்பருவகால மழை என்பது எதிர்பாராது ஏற்பட்டதொன்றல்ல. ஆயினும் இவ்வருடத்தில் இப்பருவமழை சிறிது காலம் தாமதமாகவே பெய்துமுள்ளது. ஒக்ரோபர் மாதத்தில் கிடைக்கக் கூடியதான மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறவில்லை என்றே கூறலாம். அத்தகையதொரு நிலையிலும், அதாவது ஒக்ரோபரில் வானிலை சீராக இருந்த போதும் கிளிநொச்சியைக் கைப்பற்ற முடியாமல் போனமை ஒருபுறம் இருக்க-மழை பெய்யத் தொடங்கிவிட்டதன் பின்னரும் படை நடவடிக்கையை மேற்கொண்டது ஏன்? பருவமழை தமது செயற்றினைப் பாதிக்க முடியாது என்ற நம்பிக்கையா? அன்றி விடுதலைப் புலிகளால் தாக்குப்பிடிக்க முடியாது என்ற எதிர்பார்ப்பா? அன்றி இதற்கும் அப்பால் வேறு காரணிகள் ஏதும் உண்டா? இன்றைய அரசியற் சூழ்நிலையில் சில ஆரூடங்களும், எதிர்பார்க்கையும் பலதரப்பிடமும் உண்டு. குறிப்பாக இனப்பிரச்சினை விடயத்தில், இந்திய மத்திய அரசு தனது விருப்பத்திற்கு மீறியதான வகையில் ஆயினும் சிறு நகர்வுகளைத் தானும் மேற்கொள்ள வேண்டியதான நிர்ப்பந்தத்தில் இருப்பதாக விமர்சகர்களால் கருதப்படுகின்றது.

குறிப்பிட்டுச் சொல்லப் போனால் யுத்தம் குறித்து இந்தியா ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டியதான சூழல் இருப்பதாகப் பலராலும் கருதப்படுகின்றது.இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கம் அதற்கு முன்னதாக குறிப்பிடத்தக்கதான சில வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள முனைப்புக்காட்டுவதாகவும், இதன் மூலம் தமது நிலையைப் பலப்படுத்திக்கொள்ள முடியும் என அது கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலை காரணமாகவே மோசமான வானிலை நிலவுகின்ற போதும் இது படைத்தரப்பிற்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தும் என்பதை உணர்த்துகின்ற போதும் அது பாரிய படைநடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இதனை உறுதி செய்யுமாப் போல் சிறிலங்கா சனாதிபதி டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னதாகக் கிளிநொச்சி கைப்பற்றப்படுதல் வேண்டும் என அறிவுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுருங்கக் கூறின் கிளிநொச்சியைப் பிடித்தல் என்பது இன்று மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அரசியல் தேவைகளுக்கு முக்கியமானதொன்றாகிவிட்டது. இராணுவத்தைப் பொறுத்து கிளிநொச்சியைப் பிடித்தல் விரைவில் சாத்தியமாகாது போனால் அது ஒரு கனவு நகரமாக மாறிவிடுமோ என்ற அச்சம் உள்ளது.

இத்தகையதொரு நிலையில், சிங்கள இளைஞர்களின் உயிர்களைப் பணயம் வைத்து கிளிநொச்சி மீதான படை நடவடிக்கையும் சிறிலங்கா அரசியற் தலைமையும், இராணுவத் தலைமையும் முடுக்கிவிட்டுள்ளது. இதில் ஏற்பட்டுவரும், ஏற்படத்தக்கதான எத்தகைய இழப்புக்கள் குறித்தும் அக்கறையோ கவனமோ கொள்ளக் கூடிய நிலையில் சிறிலங்கா ஆட்சியாளரும் இல்லை, இராணுவத் தலைமையும் இல்லை. அவ்வாறு இல்லாதுவிடில், பின்னடைவுகளுக்குக் காரணங்களைத் தேடிக்கொண்டு மோசமான பருவகாலம் உட்பட சாதகமற்ற சூழ்நிலையில் படை நடவடிக்கைகளை எவ்வாறு முனைப்புப்படுத்த முடியும்.

-தமிழ்க்கதிர்-

Comments