என்னைப் பேசவிடாமல் தங்கபாலு தடுத்தபோது, அங்கிருந்த தமிழகத் தலைவர்கள் யாரும் என் கருத்துக்கு ஆதரவாகப் பேச முன்வரவில்லை.''



ஒருபக்கம் மழைநீரும், மறுபக்கம் கண்ணீருமாக ரணமாகிக் கிடக் கிறார்கள், ஈழத் தமிழர்கள். அப்பாவி ஈழத் தமிழர்கள் மீதான அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகத்தில் தினம் ஒரு போராட்டம் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இதற்கிடையே, தமிழக அனைத்துக் கட்சிக் குழு, முதல்வர் கருணாநிதி தலைமையில் பிரதமர் மன்மோகன் சிங்கை கடந்த நான்காம் தேதி சந்தித்தது.

அனைத்துக் கட்சிக் குழுவின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசுடன் பேச மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அந்நாட்டுக்கு அனுப்ப பிரதமர் உறுதி அளித்தார். அந்தச் சந்திப்பின் போது பிரதமருடன் பேச, அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் தலா ஒரு நிமிடம் ஒதுக்கப்பட்டதாம். தன்னுடைய முறை வந்ததும், பிரதமருடன் பேசத் தொடங்கிய இலட்சியத் தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தரை, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேசவிடாமல் தடுக்க, இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுபற்றி விஜய டி.ஆரிடமே நேரில் கேட்டோம். மனிதர் பொரிந்து தள்ளிவிட்டார்.

``பிரதமர் சந்திப்பின்போது முதல்வர் கலைஞர், தான் எழுதி வைத்திருந்த குறிப்பை பிரதமர் முன்னிலையில் படித்தார். அடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும், பா.ம.க. நிறுவனர் ராமதாஸும் பேசினார்கள். இருபதுக்கு மேற்பட்ட தலைவர்கள் இருந்தபோதும் சிலர் மட்டுமே பேசினோம். அதில் நானும் ஒருவன். திருமாவளவன் பேசிமுடித்ததும் நான் பேசினேன்.

அப்போது, `நான் புதிதாக ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஏற்கெனவே இப்பிரச்னை தொடர்பாக, தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், சட்டசபையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அந்தக் கருத்தின் அடிப்படையில் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைத் தவிர வேறு கருத்துக்கே இங்கு இடமில்லை. ஈழத்தில் இன்னும் குண்டுமழை பொழிந்து கொண்டுதான் இருக்கிறது. பள்ளிக் குழந்தைகள் கூட இரக்கமின்றிக் கொல்லப்படுகிறார்கள். ஈழத் தமிழர்கள் மீதான அத்துமீறல்களை தமிழக மக்கள் இரக்கத்துடனும், கவலையுடனும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதால், தமிழகத்தில் உருவான தாக்கம் இப்போது மாறிவிட்டது. அன்றைக்கு இருந்த சூழ்நிலை வேறு. ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கும் வேளையில், தமிழகத்தில் இன்றைக்கு இருக்கும் சூழ்நிலை வேறு. இந்த நேரத்தில், இலங்கை அரசுக்கு எதிராக தமிழர்களின் நலன் காக்க உங்களுடைய (காங்கிரஸ்) அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏனென்றால், கடந்த காலக் கசப்பை மனதில் வைத்துக் கொண்டு விடுதலைப்புலிகளைப் பழிவாங்குவதாக நினைத்து, ஈழத் தமிழர்கள் நலன் காக்க நீங்கள் விரும்பவில்லை என்று, தமிழக மக்கள் நினைக்கிறார்கள். இதற்கு மாறாக, ஒட்டுமொத்த தமிழகமும் விடுதலைப் புலிகளை எதிர்ப்பது போன்ற ஒரு மாயையை சிலர் உங்களிடம் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்' என்று பிரதமரிடம் சொன்னேன். அப்போதுதான் என் பேச்சை இடைமறித்த தங்கபாலு, `விடுதலைப் புலிகளுக்கு எதிரான எண்ணம் தமிழக மக்களிடம் இன்னும் இருக்கு' என்றார்.

உடனே அதை நான் மறுக்க, எனக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த டி.ஆர்.பாலு எங்களை சமாதானம் செய்ய முயன்றார். அப்போது, தங்கபாலுவை இடைமறித்த பிரதமர், `அவரைப் பேச விடுங்கள்' என்று என் பேச்சை கவனமாகக் கேட்கத் தொடங்கினார். `இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்த அரசு முயற்சி எடுக்கவில்லை என்றால், வரும் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய சரிவைச் சந்திக்கும்' என்று சொல்லி, என் பேச்சை முடித்துக் கொண்டேன். என்னைப் பேசவிடாமல் தங்கபாலு தடுத்தபோது, அங்கிருந்த தமிழகத் தலைவர்கள் யாரும் என் கருத்துக்கு ஆதரவாகப் பேச முன்வரவில்லை.''

`அப்படியென்றால் ராஜீவ் கொலையை நியாயப்படுத்துகிறீர்களா?' என்றோம் நாம் டி.ஆரிடம்.

``ராஜீவ் படுகொலை நாட்டிற்குப் பேரிழப்பு என்பதை மறுக்கவில்லை. ஆனால், ராஜீவ் இறந்துவிட்டார் என்ற பழைய ஒப்பாரியை தங்கபாலு போன்றவர்கள் பாடிக்கொண்டிருந்தால், தமிழகத்தில் அது பலனளிக்காது. பிரதமரிடம் பேசவிடாமல் என் குரல்வளையை நசுக்குவது என்ன ஜனநாயகம்? இதற்கு எதற்கு அனைத்துக் கட்சிக் குழு? தங்கபாலு மட்டுமே சென்று பிரதமரிடம் தன் கருத்தைச் சொல்லியிருக்கலாமே?

ராஜீவ் குடும்பத்துக்கு தமிழக காங்கிரஸார் விசுவாசமாக இருக்கும்போது, தமிழினத்துக்கு நாங்கள் விசுவாசமாக இருக்கக் கூடாதா? ஈழத் தமிழர்கள் மீதான அடக்குமுறையை எதிர்த்து மாநில சிறுசேமிப்புத்துறை துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன். அன்றைக்கு நான் ஏற்றி வைத்த சிறு விளக்குதான் இன்றைக்கு திருவண்ணாமலை தீபம் போல் பற்றி எரிகிறது. இதை கலைஞர் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்!

ஈழத் தமிழர்களுக்காக தா.பாண்டியன் கூட்டம் கூட்டினாலும் போகிறேன். முதல்வர் கூட்டம் கூட்டினாலும் போகிறேன். காரணம், நான் தமிழன். நேற்றுப் பெய்த மழையில் இன்றைக்கு முளைத்த விஜயகாந்த், ஈழத் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. `அம்மா' கோபித்துக் கொள்வார் என்று தான் அந்தக் கூட்டங்களை விஜயகாந்த் புறக்கணித்தார். அதுமட்டுமா காரணம்? என் தமிழினம் உன் `மனவாடு' இல்லை என்பதால்தானே நீ (விஜயகாந்த்) கூட்டத்துக்கு வரவில்லை.

கன்னட மக்களின் நலனுக்காக நடத்தப்படும் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஒரு கட்சியாவது கர்நாடகத்தில் இருக்க முடியுமா? கன்னட மக்களின் இந்த மொழி உணர்வு, தமிழனுக்கு இல்லையே? ராஜ்தாக்கரேவை எதிர்த்து, வட இந்திய அரசியல்வாதிகள் ஒரே நிலைப்பாட்டை எடுத்தார்கள். அந்த ஒற்றுமையும் இங்கு இல்லையே?'' என்ற அவரிடம், `வெளியுறவுத் துறை அமைச்சரை அங்கு அனுப்புவதன் மூலம் இப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?' என்றோம்.

``பிரணாப் முகர்ஜியை அங்கு அனுப்பிவிட்டு, குச்சி ஐஸ் சூப்பிக்கிட்டு சும்மா (!) இருந்துவிடுவேனா? இந்தப் பிரச்னையில் என்னுடைய குரல் தொடர்ந்து ஒலிக்கும். இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். தாய்த் தமிழர்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்களில் பெரும் பகுதியை சிங்களச் சிறுநரிகள் அபகரித்துக் கொள்வதாக எனக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ஷே, தமிழர்களைக் கொன்று `மகிழ்ந்த' ராஜபக்ஷே என்பதை பலமாகப் பதிவு செய்யுங்கள்'' என்று முடித்துக் கொண்டார்.


Comments