அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகளை தீவிரப்படுத்தவிருக்கும் வன்னிக் களமுனை சமர்


கிளிநொச்சி நகரை நோக்கி முன்னேறும் இராணுவம் அதனை எட்டிப்பிடிக்கும் அளவுக்கு நெருங்கியிருப்பதாகவும், எந்த வேளையிலும் படையினர் அந்த நகருக்குள் பிரவேசித்து விடுவார்கள் என கடந்த மாதம் இராணுவம் தெரிவித்திருந்தது. விடுதலைப் புலிகளின் அரசியல் நிர்வாகத் தலைநகராகிய கிளிநொச்சி நகரைக் கைப்பற்றுவதன் மூலம் விடுதலைப் புலிகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடலாம் என்பது அரசாங்கத்தின் நம்பிக்கை.

இந்த நம்பிக்கையைச் செயல்வடிவமாக்குவதற்காக பல முனைகளிலும் இராணுவத்தினர் தமது தாக்குதல்களைத் தொடுத்த வண்ணம் ஒரு பாரிய நகர்வினை திங்கட்கிழமை மேற்கொண்டிருந்தார்கள். கிளிநொச்சிக்குள் எப்படியும் பிரவேசித்துவிட வேண்டும் என்ற தீர்மானத்தோடு இராணுவம் மேற்கொண்ட இரண்டாவது பாரிய நகர்வு இதுவாகும். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இத்தகைய பாரிய பலமுனை நகர்வொன்றினை இராணுவம் மேற்கொண்ட போது, விடுதலைப் புலிகள் சற்றும் எதிர்பாராதவாறு அகோரமாக எதிர்த்தாக்குதலை படையினர் மீது நடத்தினார்கள்.

இந்தத் தாக்குதலின்போது விடுதலைப் புலிகள், படையினர் மீது எறிகணை மழைபொழிந்ததாக ஏனைய மொழி ஊடக விமர்சகர்கள் வர்ணித்திருந்தார்கள். வன்னிக் களமுனைகளில் உக்கிர சண்டைகள் வெடித்திருந்த அதேவேளை, யாழ்ப்பாணம் கிளாலி களமுனையிலும் கடுமையான மோதல்கள் இடம்பெற்றிருந்தன. விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் முன்னேறுவதற்காக படையினர் மேற்கொண்ட தீவிரமான அந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகள் எப்படியோ மோப்பம் பிடித்து. அவர்கள் நகர ஆரம்பித்த உடனேயே ஆக்ரோஷத்துடன் விடுதலைப் புலிகள் நடத்திய பெரும் தாக்குதலில் படையினர் நிலைகுலைந்து போனார்கள்.

இந்த செவ்வாய்க்கிழமை தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையான படையினரும் விடுதலைப் புலிகளும் உயிரிழந்தார்கள் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். ஆயினும், இராணுவமும் விடுதலைப் புலிகளும் வழமைபோலவே எதிர்த் தரப்பாரின் இழப்புக்களை அதிகமாகக் காட்டி தகவல்களை வெளியிட்டிருந்தார்கள். எனினும் விடுதலைப் புலிகள் தமது தரப்பில் எத்தனைபேர் கொல்லப்பட்டார்கள் என்ற விபரத்தை வெளியிடவில்லை. இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானவர்கள் இந்த மோதல்களில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பது மாத்திரம் உண்மை.

மாவிலாறு தொடக்கம் கிளிநொச்சி நகர எல்லைப் புறங்கள் வரையிலான களமுனைகளில் இராணுவம் பாரிய முன்னேற்றத்தை மேற்கொண்டு பல பிரதேசங்களை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றியுள்ளது. இந்த முன்னேற்றமானது விடுதலைப் புலிகளின் தந்திரோபாய ரீதியிலான பின்வாங்கலைத் தொடர்ந்து ஏற்பட்டது என்பது பலரது கணிப்பாகும். ஆயினும், இராணுவமோ விடுதலைப் புலிகள் பலவீனமடைந்து விட்டாரர்கள். அவர்கள் மரபுவழி சண்டை வலிமையை இழந்துவிட்டார்கள். ஆட்பற்றாக்குறை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆயுதத் தட்டுப்பாடும் அவர்களுக்கு இருக்கின்றது. பெரும் உயிரிழப்புகளையே அவர்கள் சந்தித்து வருகின்றார்கள். அதேவேளை படையினர் வெற்றிவாகை சூடி ஒன்றன் பின் ஒன்றாக மாங்குளம், முறிகண்டி, பூநகரி, நெடுங்கேணி என்று பல முக்கிய தளங்களை விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றி முன்னேறிச் செல்கின்றார்கள் அரசாங்கம் பெருமையாக போர்க்கள நிலைமைகள் குறித்து மக்கள் மத்தியிலும் சர்வதேச மட்டத்திலும் பெரும் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றது.

திங்கட்கிழமை திருமுறிகண்டி என குறிப்பிடப்படுகின்ற முறிகண்டி மற்றும் பரந்தன் பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளிலும் பல களமுனைகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுடன் கடுமையான சண்டைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், இதில் 46 விடுதலைப் புலிகளும் 10 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தகவல் வெளியிட்ட அதேவேகத்தில், குறைந்தது 100 இராணுவத்தினர் இந்தச் சண்டைகளில் கொல்லப்பட்டதாகவும் மேலும் 200 படையினர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளார்கள்.

தங்கள் தரப்பிலான சேத விபரம் பற்றி அவர்கள் எதுவும் குறிப்பிடவில்லை. முறிகண்டி, பரந்தன் பிரதேசங்களில் கிளிநொச்சி நகரை இலக்கு வைத்து இராணுவத்தினர் 5 முனைகளில் முன்னேறியதாகவும், அவர்களை எதிர்த்து விடுதலைப் புலிகள் நடத்திய உக்கிர தாக்குதல்களில் 2 முனைகளில் படையினர் சேதங்களுடன் பின்வாங்கிவிட்டதாகவும், அன்று மாலைவரையில் மூன்று முனைகளில் உக்கிர சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தார்கள்.

நான்காவது ஈழப்போர் என வர்ணிக்கப்படுகின்ற தற்போதைய சண்டைகளில் அரச படையினர் புதிய போர்க்கள உத்திகளைப் பெருமளவில் கையாண்டு வருகின்றார்கள். குறிப்பாக முன்னைய ஜெயசிக்குறு உட்பட பெரிய எடுப்பில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரச படைகள் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளும்சரி, இந்திய அமைதிப்படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது, விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளும்சரி, முக்கியமான ஒரு பெரும் வீதியை குவி மையமாக வைத்து, அதன் இரு பக்கங்களிலும் பெரும் ஆளணி ஆயுதத் தளபாடங்களுடன் நகர்ந்து சென்றார்கள்.

விடுதலைப் புலிகள் அவர்களை எதிர்த்து, கரந்தடி தாக்குதல்களையும் ஆங்காங்கே திடீர் திடீர் என பெரும் தாக்குதல்களையும் மேற்கொண்டு படையினரை திக்குமுக்காட வைத்தார்கள். அதேவேளை, சந்தர்ப்பத்திற்கு ஏற்றவகையிலும் தேவைக்கேற்ற முறையிலும் மரபுவழி படையெடுப்புத் தாக்குதல்களையும் பலமுனைகளில் தொடுத்து அரச தரப்புப் படைகளுக்குப் பேரழிவை ஏற்படுத்தி அவர்களின் முயற்சிகளை முறியடித்தார்கள். ஆனால், அரசாங்கத்தினால் இன்னும் பெயர் சூட்டப்படாத தற்போதைய பாரிய இராணுவ நடவடிக்கையில் இராணுவத்தினர் பெருமளவில் கெரில்லா பாணியிலான தாக்குதல்களையே மேற்கொண்டு வந்துள்ளார்கள்.

சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து எதிரியின் பிரதேசத்தினுள் பிரவேசித்து தாக்குதல்களை நடத்துவது, இவர்களுக்கு ஆதரவாகப் பின் தளத்தில் இருந்து எறிகணை மற்றும் டாங்கிகளின் பீரங்கிகளைக் கொண்டு தாக்குதல்களை மேற்கொள்வது, விமானப்படையின் ஆதரவோடு வான்வழி தக்குதல்களை நடத்துவது போன்ற ஒரு வித்தியாசமான தாக்குதல் முறையைப் பின்பற்றிச் செயற்பட்டு வந்துள்ளார்கள். இதனால், வீதியொன்றை முக்கியமாகக் கொண்டு அதன் இருபக்கங்களிலும் முன்னேறிய பாணி மாற்றப்பட்டு படையினர் காடுகளின் ஊடாக பிரதான வீதிக்கு அப்பால் தமது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.

இதனால் விடுதலைப் புலிகள் ஒருவகையில் மரபுவழி படையெடுப்பிலான எதிர்த்தாக்குதல்களை நடத்தவேண்டியவர்களாகவும், அதேவேளை, தேவைக்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்ற வகையில் கெரில்லா பாணியிலான தாக்குதல்களையும் நடத்தவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார்கள். காடுமேடுகளைக் கடந்து படையினர் முன்னேறினார்கள். இடைக்கிடையே, விடுதலைப் புலிகளிடமிருந்து பெரும் முறியடிப்புத் தாக்குதல்களை அவர்கள் சந்திக்க நேர்ந்தது. இருப்பினும், விடுதலைப் புலிகளின் பின்வாங்கல் தந்திரமானது அவர்கள் போரிடும் வலுவை இழந்துவிட்டார்கள் என்ற அரசாங்கத்தின் பல்முனை பிரசாரங்களை இராணுவமும் பெருமளவில் கணக்கில் கொண்டு தமது நகர்வுகளை மேற்கொண்ட ஒரு தீவிரமான போக்கினையே அண்மைக்காலமாகக் காணக் கூடியதாக உள்ளது.

விடுதலைப் புலிகளிடமிருந்து பூநகரி தளத்தை இராணுவத்தினர் கைப்பற்றியதையடுத்து, அவர்கள் மேற்கு நோக்கியும் மாங்குளத்திலிருந்து வடக்கு நோக்கியும் கிளிநொச்சி நகரை இலக்கு வைத்து முன்னேறத் தொடங்கியதன் மூலம் இதனை உறுதிசெய்யக் கூடியதாக இருக்கின்றது. விடுதலைப் புலிகள் பலவீனமடைந்து விட்டார்கள் என்ற போர்ப்பிரசார மாயைக்குள் அநேகமாக அனைவரும் ஆழ்ந்திருந்த வேளையில்தான் கிளிநொச்சி நகரை இலகுவில் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்ற பெரும் உறுதியோடு விடுதலைப் புலிகள் தொடுத்த எதிர்த்தாக்குதல்கள் வெளிப்பட்டிருக்கின்றன.

ஆளணி, அபரிமிதமான ஆயுதத் தளபாட வசதிகளோடும் வான்வழி பின்தள தாக்குதல் உதவியோடும் முன்னேற முயன்ற இராணுவத்தினரை எதிர்த்து கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக விடுதலைப் புலிகள் தமது மரபுவழி எதிர்ச்சமரை ஆரம்பித்திருக்கின்றார்கள். இதன் மூலம் விடுதலைப் புலிகளின் உண்மையான முகத்தின் ஒருபகுதி உலகத்திற்கு இப்போது காட்சி தரத்தொடங்கியிருக்கின்றது. அவர்களின் ஆற்றல் மிக்க இந்த மரபுவழி எதிர்ச்சமரானது இராணுவத்தினரை இப்போது பல இடங்களில் நிலைகுலைந்து தடுமாறச் செய்துள்ளது. அதற்கு கடும் மழையுடன் கூடிய கால நிலையும் சதுப்பு நிலப்பாங்கான போர்க்களமும், தீர்க்கமான திட்டத்தோடு அமைக்கப்பட்ட எல் வடிவிலான அவர்களின் நீண்ட தடுப்பு மண் அரணும் அதோடு இணைந்து செல்கின்ற அகழியை ஒத்த நீண்ட அமைப்பும் இராணுவத்தினருக்குப் பாதகமாக அமைந்திருக்கின்றது.

எனவே, நான்காவது ஈழப்போரின் உக்கிரமான கட்டம் தற்போது வன்னிக்கள முனைகளில் முகிழ்விட்டிருக்கின்றது என்று துணிந்து கூறலாம். இந்த உக்கிர சண்டை நிலைமையானது, நாட்டில் தொடரும் இந்த யுத்த நெருக்கடி நிலைமையை மேலும் மோசமதாக்கி பல்வேறு அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகளைத் தீவிரமாக்கப் போகின்றது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. போர் முனைப்பிரதேசங்களில் சிக்கியுள்ள பொதுமக்கள் இந்த தீவிரமான மோதல் நிலைமைகளினால் பெரும் சிரமங்களையும் கஷ்டங்களையும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு எதிர் நோக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

அண்மைய வாரங்களாக விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதாகத் தெரிவித்து விமானப்படையினர் நாளாந்தம் குறைந்தது இரண்டு தடவையும், கூடியது ஆறு ஏழு தடவையென்றும் நடத்தி வருகின்ற விமானக்குண்டு வீச்சினால் அவர்கள் பெரும் அச்சத்திற்கும் பீதிக்கும் உயிரிழப்புக்களுக்கும் ஆளாகி வருகின்றார்கள். இந்தத் தாக்குதல்களில் வட்டக்கச்சி பகுதி மீதான தாக்குதல்கள் மிகமிக மோசமானவையாகக் கருதப்படுகின்றது. குழந்தைகள், சிறுவர்கள் பெண்கள் என இதுவரையில் 5 பேர் வரையில் உயிரிழக்கவும் பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடையவும் நேரிட்டுள்ளது. இந்த விமானத் தாக்குதல்களும், வன்னிப்பகுதியில் நிலவுகின்ற பற்றாக்குறைகள், வாழ்விட வசதிகளற்ற நிலைமை, அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கும் பாவனைப் பொருட்களுக்கும் ஏற்பட்டுள்ள பற்றாக்குறைகள் போன்ற காரணங்களினால் அங்கிருந்து வெளியேறுவோரின் எண்ணிக்கை அண்மைய வாரங்களாக அதிகரித்துச்செல்வதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறு ஓமந்தை சோதனைச்சாவடி உட்பட நெடுங்கேணியில் உள்ள பழம்பாசி இராணுவ முகாம் இப்போது நெடுங்கேணியில் தண்டுவான் என்னுமிடத்தில் அமைந்துள்ள இராணுவ நிலை என்பவற்றில் பலர் இராணுவத்தினரிடம் அடைக்கலம் தேடியுள்ளார்கள். இவ்வாறு வருபவர்களை இராணுவம் பொறுப்பேற்று பின்னர் வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பி வருகின்றார்கள். கடந்த இரண்டு வார காலப்பகுதியில் நெடுங்கேணி பகுதியில் இராணுவத்தினரிடம் தஞ்சம் புகுந்த சிலர் மீது இராணுவம் தற்காப்பு நிலையில் இருந்து அவர்கள் உண்மையான சிவிலியன்கள்தான் என்பதை உறுதிசெய்ய முடியாத நிலையில் துப்பாக்கிப்பிரயோகம் செய்துள்ளதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

இந்தத் துப்பாக்கிப்பிரயோகத்தினால் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், 5 பேர் வரையில் காயமடைந்திருக்கலாம் என்று தெரிகின்றது. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்து வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்த தகவல்களின் மூலமாகவும், அவ்வாறு காயமடைந்தவர்களில் இரு பெண்கள் அவர்களில் ஒருவர் கர்ப்பிணிப் பெண் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததன் மூலமாகவும் இந்தத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

எனினும் இந்த முகாம்களுக்கு அதிகாரபூர்வமாக தொண்டு நிறுவனங்களோ வேறு பொது அமைப்புக்களோ ஊடகவியலாளர்களோ அனுமதிக்கப்படாததன் காரணமாக இநதத் தகவல்களை சரியான முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை. இடம்பெயர்ந்த மக்களுக்கான இந்த இடைத்தங்கல் முகாம்களுக்கான முழு பராமரிப்பு பொறுப்புக்களையும் ஏற்றுள்ள சிவில் அதிகாரிகளும் இந்த விடயம் தொடர்பாக எந்தவிதமான தகவல்களையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- தனோஜன்

தமிழ்க்கதிர்



Comments