"நாடு பிரிவினைக்கு உள்ளாக வேண்டுமென்று வாதிடுமுன்னர் சிங்களத் தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பளித்து அவர்களின் உண்மைச் சொரூபத்தை வெளிக்கொண்டுவருவது சிறந்தது'
கலாநிதி ஆ.க.மனோகரன் எழுதிய "இலங்கை தேசிய இன முரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும்; ஒருவரலாற்றுப் பார்வை 1948 2007' நூல் வெளியீட்டு வைபவம் கடந்த ஞாயிறு மாலை கொழும்பு இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்றபோது முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய வெளியீட்டுரை
1926 ஆம் ஆண்டில் ""ஒக்ஸ்ஃபொட்' சர்வகலாசாலையில் பயின்று வெளிவந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்கள் இலங்கைக்கு சமஷ்டி முறையே சிறந்தது என்று கூறிய போது
அவ்வாறு அவர் கூறுவதற்குப் பத்து வருடங்களுக்கு முன் சிங்களத் தலைவர்கள் கொண்டிருந்த அதே மனோநிலையில் இருந்து தான் அவர் அவ்வாறு கூறினார் என்று யூகிக்கலாம். அதாவது வடக்குக் கிழக்கே தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்கள்;
மாகாணங்களோ சிங்களவர் பெரும்பான்மையாக வாழும் இடங்கள்; எனவே இரு தரப்பாருக்குந் தன்னாட்சி கொடுத்து சமஷ்டி முறையில் நாடு ஆளப்பட வேண்டும் என்றே அவர் கூறினார். அதாவது வடக்குக் கிழக்கிற்கு வெளியே வாழுந் தமிழ் மக்களுக்கு எந்த வித சலுகையுந் தேவையில்லை ஆனால் வடக்குக் கிழக்கு மக்கள் தம்மைத் தாமே ஆள்வது சரியானது என்பதே அவர்களின் அப்போதைய கருத்தாக இருந்தது.
அன்று இலங்கை முழுவதும் பரந்து வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் வடக்கு கிழக்கினுள் தாங்கள் அடங்கி, ஒடுங்கி வாழ நேரிடுமோ, தமது பொருளாதார விருத்தி தடைப்படுமோ என்ற பயத்தில் சமஷ்டியைத் தமிழ் மக்கள் பொதுவாக அக்காலகட்டத்தில் எதிர்த்தார்கள். அப்பொழுதெல்லாம் கொழும்பை விட பல நகரங்களில் அதுவும் எனக்குத்தெரிந்த வரையில் அநுராதபுரம், கெக்கிராவை, திஸ்ஸமகராம, கதிர்காமம் போன்ற இடங்களில் தமிழ்ப்பேசும் மக்கள் செறிந்து வாழ்ந்து வந்து கொண்டிருந்தனர்.
அவ்விடங்களில் பெருமளவிலான நிலபுலன்களுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தனர். பாரிய வர்த்தக நிலையங்களை நாட்டில் பல இடங்களில் நடாத்தி வந்தனர். வடகிழக்கிற்குத் தமிழ், மற்றைய மாகாணங்களுக்குச் சிங்களம் என்று 1956 இல் சட்டம் இயற்றப்பட்டிருப்பின் இன்று கூடத் தமிழர்கள் நாடு பூராவும் செறிந்து வாழ்ந்து வந்து கொண்டிருப்பர்.
தெற்கில் சிங்கள மொழியைப் பயின்று சிங்களவருடன் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்குக் கூடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பர். கிழக்கு மாகாணச் சிங்களவர் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்று தமிழ்ப் பிரதேசங்களில் அவர்களின் பிரதிநிதிகளாகவும் வந்திருப்பர்.
ஆனால் அதற்கு இடங் கொடுக்காத வகையிலேயே சிங்கள மக்கட் தலைவர்கள் 1915 ஆம் ஆண்டளவில் இருந்து நடந்து வந்துள்ளனர். கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரத்தைத் தம் வசப்படுத்திப் பின்னர் முழுமையாகத் தம் கட்டுப்பாட்டுக்குள் நாட்டின் அதிகாரத்தைக் கொண்டு வந்து, தமிழர்களைச் சட்டத்தின் மூலமும், பலாத்காரத்தின் மூலமும் பக்கச் சார்பான நடவடிக்கைகள் மூலமும், ஒதுக்கி, நாட்டை விட்டுத் துரத்தி இன்று ""இந் நாடு முழுவதும் நமதே; எங்கள் அனுமதியுடன் வேண்டுமானால் இருங்கள்: அதிகம் கேட்க உங்களுக்கு உரித்தில்லை; நீங்கள் வந்தேறு குடிகள்' என்ற பாணியில் பேசவுந் தலைப்பட்டுள்ளனர். அண்மையில் "ஐலண்ட்' பத்திரிகையில் முன்னர் யாழ். அரச அதிபராகக் கடமையாற்றிய கிறிஸ்தவரான நெவில் ஜயவீர சிங்கள அரசாங்கங்களிடையே அப்போது இருந்த இந்த அடக்கல் ஒடுக்கல் எண்ணங்கள் பற்றி எழுதி வருவது 1915 ஆம் ஆண்டில் இருந்து அத் தலைவர்கள் மத்தியிலிருந்து வந்துள்ள இனத்துவேஷ எண்ணங்களை வலியுறுத்துவது போல் அமைந்துள்ளது. அத்துடன், முன்னைய நிகழ்வுகள் தற்செயலாக நடைபெற்றவை அல்ல என்பதை ருசுப்படுத்துகின்றது. இது காறும் இன்றைய நூலில் விடுபட்ட ஒரு விடயத்தை உங்களுக்குக் கூறினேன். இவற்றுள் முக்கியமான நிகழ்வுகள் இன்றைய நூல் ஆராயும் காலத்திற்கு முன் நடந்தவை. ஆனால், காத்திரமான அரசியல் பின்னணியைக் கொண்டிருந்தவை. தொடர்ந்து வந்த சிங்களச் சிந்தனைகளை எடுத்தியம்பும் தன்மையன. அடுத்து ஆசிரியரின் சில முடிவுகளை இன்றைய சூழலில் பரிசீலிக்க விளைகின்றேன்.
முக்கியமாக நூலின் ஈற்றில் தீர்வுக்கான வழிமுறைகள் என்ற தலையங்கத்தின் கீழ் அவர் அதிகாரப் பகிர்வுகள், கூட்டாட்சி, சமஷ்டி,. பிரிந்து செல்லுதல் என்று தமிழ் மக்கள் முன்னிருக்கும் பலவிதமான தீர்வுக்கான வழிமுறைகளை ஆராய்ந்திருப்பது எனது கவனத்திற்கு வந்தது. ஆசிரியரின் கருத்துப்படி தமிழ்ப் பேசும் அலகாக தமிழ் ஈழத்தை உருவாக்குதல் தான் மிகச் சிறந்த தீர்வு. அதற்கான காரணங்களை அவர் கூறியுள்ளார்.
ஆசிரியர் உண்மையில் அறிவு பூர்வமாகவே ஒரு ஆராய்ச்சியாளர் என்ற விதத்திலேயே தமது கருத்துகளை வெளியிட்டுள்ளார். நாளை வெள்ளை வான் அவரையோ எம்மில் எவரையேனுமோ கடத்திச் சென்றாலும் அவரின் அந்த அறிவு பூர்வமான தகுந்த காரணங்களோடு தரப்பட்டுள்ள கருத்துகள் எம்மால் புறக்கணிக்கப்பாலன அல்ல
அவ்வாறு புறக்கணிக்ககாது அவரின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பது ஜனநாயக பாரம்பரியத்தின் ஒரு சிறப்பம்சம். ஆனால், அப்பேர்ப்பட்ட ஒரு கருத்தை ஒரு ஆராய்ச்சியாளர் கூட வெளியிடுவது தற்போதைய எங்கள் சட்டத்திற்குப் புறம்பானது என்று சிலர் கருத்துத் தெரிவிக்கலாம். இருப்பினும் அறிவு, ஆராய்ச்சி, கருத்து வெளியிடல் என்பன வேறு. நடைமுறைச் செயல் நடப்புகள், அவற்றை ஆதரிப்பது என்பன வேறு.
இரண்டையும் நாங்கள் குழப்பிக் கொள்ளக் கூடாது. நாட்டைக் கூறுபோடும் விதத்தில் ஆயுதம் தாங்கி பிரிவினைக்காகப் போராடுவது ஒரு நிலை. நாட்டின் சரித்திரம் பிரிவினையையே நோக்கிச் செல்கின்றது என்று காரணம் காட்டி அறிவு பூர்வமாகத் தமது கருத்துகளை எடுத்தியம்புவது இன்னொரு நில
முன்னையதைத்தான் சட்டம் தடுக்கின்றது என்று நம்புகிறேன். ஆகவே ஆசிரியர் கூறியிருக்கும் கருத்தை அவர் அவ்வாறு வெளிப்படுத்த அவருக்குப் பூரண உரித்துள்ளது என்பதை ஆணித்தரமாக முதற் கண் கூறிவிட்டு நாடு பிரிவினைக்குள்ளாக வேண்டுமென்று வாதாடுவதற்கு முன் சிங்கள மக்கள் தலைவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்து அவர்களின் உண்மைச் சொரூபத்தை வெளிக் கொண்டுவருவது சாலச் சிறந்தது என்பது எனது கருத்து.
சரித்திரம் பலதையும் எமக்கு எடுத்தியம்பியுள்ளது. மனித உறவுகள் பலதையும் எமக்கு எடுத்தியம்புகின்றன. இவை எல்லாவற்றையும் ஊடறுத்துச் செல்வது மனித நேயம். பிரிந்து விட்டால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்று எண்ணுவது சிறுபிள்ளைத்தனம். ஒருவேளை கொழும்பில் பிறந்து வளர்ந்த நான் கொழும்பில் உயர் கல்வி பெற்ற நான் கொழும்பில் தொழில் புரிந்த நான், உயர் பதவி வகித்த நான், தமிழர் பிரச்சினைகள் பற்றி அறிவுபூர்வமாகச் சிந்திக்கத் தவறி விட்டேன் என்று உங்களுள் சிலர் எண்ணலாம்.போர்கள் திணிக்கப்பட்ட கோபங்கள் என்பதை நான் முழுமையாக உணரவில்லை என்று நீங்கள் எண்ணலாம்.
ஆனால், போரின் நடுவில் இனப் படுகொலையின் மத்தியிலும் பிரிக்கப்படாத ஒரு இலங்கையை நாங்கள் காப்பாற்றி விடலாகாதா என்ற கருத்தையே எமது மனம் நாடுகிறது. காரணம் சிங்கள, தமிழ் மக்கள் அடிப்படையில் ஒரே இனத்தவர்களே இருதரப்பாரும் உணர்ச்சிமிக்கவர்கள். அதுவே அவர்களின் சிறுமையும் பெருமையும் ஆவன.
சிங்கள மொழி பாளிமொழியிலிருந்து பல சொற்களைத் தனதாக்கிக் கொண்டிருந்தாலும் 1956 ஆம் ஆண்டின் பின்னர் ஹிந்தி மொழியில் இருந்த பல சொற்களை அரசாங்கத் திணைக்களங்கள் சிங்கள மொழிக்குள் வரவேற்றிருந்தாலும் அடிப்படையில் சிங்களமும் ஒரு திராவிட மொழியே. மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகள் எவ்வாறு தமிழ் மொழியிலிருந்து பிரிந்து சென்றனவோ அது போலத்தான் பௌத்தத்தின் வருகையின் பின்னர் சிங்கள மொழி முன்னைய திராவிட மொழி மூலத்திலிருந்து பிறந்தது எனலாம்.
மேலும், சிங்கள மக்கள் வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதற்கு எந்தவித சரித்திரச் சான்றுகளும் இல்லை. ஆனால், திராவிடப் பின்னணி கொண்ட சிங்கள இனமானது பல மக்கள் கூட்டங்களின் சேர்க்கை என்பது வெள்ளிடை மலை. பௌத்தத்தை பரப்ப ஒரு புத்த பிக்கு மகாவம்சம் என்ற கற்பனைகளையும் நடைமுறைச் சம்பவங்களையும் சேர்த்து ஒரு நூலை எழுதப் போக அது புத்த பிக்குகளின் பாரம்பரிய நூல் பாதுகாப்பு முறைகளின் நிமித்தம் எமக்குக் கிடைக்கப்போக ஒரு திரிபுபட்ட சரித்திர மனோநிலையும், நோக்கும் இன்று எமது சிங்களச் சகோதரர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளன.
ஆனால், ஆணவச்சிந்தனைகள் சிங்களவருக்குந் தமிழர்களுக்கும் பொதுவான ஒன்றுதான். விட்டுக் கொடுத்து வாழ்வதிலும் பார்க்கத் ""தான் வாழ வேண்டும் மற்றவர்கள் தமக்கு அனுசரணையாக வாழ வேண்டும். இல்லையென்றால் அவர்கள் நமது எதிரிகள்' என்ற ஒரு நிலைப்பாடு இரு மொழி பேசுவோர் இடையேயும் உறைந்திருக்கும் ஒரு தளர்வு நிலை.
அப்படியானால் உங்கள் நிலைப்பாடு என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சிவனே என்றிருந்து விட்டு நூல் வெளியீட்டுக்கு வந்த என்னை அரசியல் பேச வைத்து விடுவீர்கள் உங்கள் இப்பேர்ப்பட்ட கேள்விகளால் எண்ணங்களால்! என்றாலும் எனது மனதுக்குட்பட்டதைக் கூறுகின்றேன். நான் அரசியல் வாதியல்ல. அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டுகிறேன்.
இலங்கையில் 1956 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் எல்லா அரசாங்கங்களும் வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் வடகிழக்குத் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் என்ற கருத்தை ஏற்க மறுக்கின்றன. ஆனால், கிட்டத்தட்ட அவ்விரு மாகாணங்களிலும் பாரம்பரியமாகத் தமிழ் மொழியே காலம் காலமாக பேசப்பட்டு வந்துள்ளது என்பதை அவர்கள் ஏற்றே ஆக வேண்டும்.
அதாவது, இனம் வேறு, மொழி வேறு, இனத்தை மறுத்தாலும் மொழியை மறுக்க முடியாது. மொழிபற்றிய உண்மையை அவர்கள் மறுத்தால் சர்வதேச நாடுகள் யதார்த்தமான அக்கருத்தை அவர்கள் ஏற்க வைக்கலாம். அதாவது தாய்மொழி பெரும்பான்மையாக அவ்விரு மாகாணங்களிலும் தொன்றுதொட்டு பேசப்பட்டு வந்துள்ளதை அவர்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
ஏனென்றால், அது சரித்திர உண்மை. கிழக்கு மாகாணம் கண்டிய மன்னர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தமையால் அது சிங்களவருக்கே சொந்தம் என்பது ஹெல உறுமய போன்ற இயக்கங்களின் வாதம். அப்படித்தான் இருக்கட்டுமே. அங்கு காலம் காலமாகத் தமிழ்மொழி பேசப்பட்டு வந்ததை நீங்கள் ஏற்பீர்களா இல்லையா என்றால் முன்னர் சிங்களம் பேசப்பட்ட இடங்களில் வந்தேறு குடிகள் வந்து தமிழ் பேசினார்கள் என்பார்கள். அதைக்கூட தர்க்கத்திற்காக ஏற்றுக்கொள்வோம்.
வெளிநாட்டார் இலங்கைக்கு வந்த காலத்தில் வடக்குக், கிழக்கில் தமிழ் மொழியே பேசப்பட்டு வந்தது என்பதையாவது அவர்கள் ஏற்க வேண்டிய அவசியம் ஏற்படும். அப்படியானால், வெளிநாட்டார் எம் நாட்டை விட்டு ஏகியதன் பின்னர் வடக்கு, கிழக்கு தமிழ் மொழியால்தான் ஆளப்பட வேண்டும் அல்லவா? மற்றைய ஏழு மாகாணங்களும் சிங்கள மொழியால் ஆளப்படலாம். அதற்கு அவர்கள் இன்று தான் எமது அரசியல் யாப்பு இரு மொழிகளுக்குஞ் சம அந்தஸ்தைக் கொடுத்துள்ளதே என்பார்கள்.
அதிகாரம் உங்கள் வசம் இருக்கும்போது அப்பேர்ப்பட்ட ஏற்பாடுகளால் எந்தப் பயனும் இல்லை என்பதே அதற்கு எங்கள் மறுமொழி. வெளிநாட்டு அனுசரணையுடன் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் தமிழ்ப்பேசும் பிராந்தியங்களாக அரசியல் யாப்பில் அறிவிக்கப்பட வேண்டும்.மற்றைய ஏழு மாகாணங்களும் சிங்கள மொழி பேசும் பிராந்தியங்களாகப் பிரகடனப்படுத்தப்படலாம். இடைமொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடலாம்.
தொடரும்
Comments