இந்திய மத்திய அரசின் கண்துடைப்பு



நாட்டின் இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கு இலங்கைக் கடற்படை கடந்த 58 வருடங்களாக அளப்பரிய சேவை ஆற்றியுள்ளதாகவும் குறிப்பாக 2005 முதல் தற்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிறல் வசந்த கரணகொட தலைமையில் மிகச் சிறப்பாகச் செயற்பட்டுள்ளதாக பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கடற்படை போலவே காலாற்படையும் விமானப்படையும் குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்து அழித்துவிடும் பணியினை வெகு சாணக்கியமாக நிறைவேற்றி வருவதாக ஆளும் வர்க்கத்தினர் பாராட்டி வருவது ஒன்றும் புதிய விடயமல்ல.

இங்கே நாட்டின் இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாடும் என்பது உண்மையில் சிங்களப் பேரினவாதத்தையும் ஒற்றையாட்சி முறைமையுமே அரசியலமைப்பு முறையிலான வார்த்தைகளில் கூறப்படுகிறது எனலாம். பிற்கூறிய இரண்டு விடயங்களையும் கிஞ்சித்தும் விட்டுக்கொடுப்பதற்கு ஆளும் வர்க்கத்தினர் மத்தியில் அரசியல் ஞானமோ துணிச்சலோ இல்லாததன் காரணமாகவே 25 வருடங்களுக்கு மேலாக கொடிய யுத்தமே நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. குறைந்தது 80,000 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். மேலும், பல்லாயிரக்கணக்கானோர் ஊனமுற்றுள்ளனர்.

சில அமைச்சர்கள் ஏன் சில அதிகாரிகள் கூட சிங்கள பௌத்த பெரும்பான்மை மேலாதிக்கத்தினை முன்னிலைப்படுத்தியும் சிறுபான்மை இனங்கள் மீது அவதூறான கருத்துகளை வெளிப்படுத்தியும் செல்லும் அளவுக்கு மதியிழந்து நடந்து கொள்கின்றனர். முஸ்லிம் மாணவிகள் தமது கலாசார விழுமியங்களுக்கு ஏற்றவாறு பாடசாலைகளுக்கு ஆடை அணியும் பாரம்பரியத்தையே அவர்கள் சீண்டுகின்றனர். அது அவர்களின் தனிப்பட்ட குரோத விரோதம் அல்லது இன மத அகங்காரம் என்பதற்கப்பால் இந்த நாட்டினை ஆண்டுவந்த எல்லா அரசாங்கங்களும் காலங்காலமாகக் கடைப்பிடித்து வந்துள்ள ஒட்டு மொத்தமான படு பிற்போக்கான நிலைப்பாட்டின் வெளிப்பாடாகவே கருத வேண்டியுள்ளது. எனவே, நாட்டின் பல்லினத்தன்மையைப் புறந்தள்ளி விட்டு சிங்கள பேரினவாதமே நாட்டின் பாதை என்பதை ஆழ வேரூன்றச் செய்வதற்கே கொடியதொரு யுத்தம் நடத்தப்பட்டு வருகின்றது.

விடுதலைப் புலிகள்தான் பிரச்சினை. அவர்களை அழித்துவிட்டால் போதும் என்ற சிந்தனையிலேயே ஆட்சியாளர் செயற்பட்டு வருகின்றனர். இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) மட்டுமல்லாமல் இந்திய அரசாங்கமும் ஆதரவளித்து வருவது கண்கூடு. இலங்கையில் உடனடி யுத்தநிறுத்தம் தேவையென குறிப்பாகத் தமிழக மக்கள் ஒருமித்துக் குரல் கொடுத்து மன்மோகன் சிங் அரசாங்கம் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென வலியுறுத்திக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா இந்தியாவின் உதவியை நாடியுள்ளமை முக்கியமானதொரு செய்தியை வெளிப்படுத்தியுள்ளது.

ஏலவே நாம் அறிந்து வைத்திருந்ததாகிய இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை சரத் பொன்சேகா வெகுவாக வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளார். அதாவது இந்தியா ஆதரவு வழங்கினால் தற்போதை விட விரைவில் விடுதலைப் புலிகளை அழித்துவிட முடியும். கிழக்கை மீட்பதற்குக் கையாண்ட தந்திரோபாயமே வன்னியை மீட்பதற்கும் பின்பற்றப்படுகிறது. இதையே இந்தியா எம்மிடம் எதிர்பார்க்கிறது என்றெல்லாம் சரத் பொன்சேகா ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார். கிழக்கை மீட்பதற்காக இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது குறிப்பாக வாகரைப் பிரதேசத்தில் ஏறத்தாழ 200 பேர் கொல்லப்பட்டதாக அன்று மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி பகிரங்கப்படுத்தியிருந்தார். அவர் மட்டுமல்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரும், திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன் கொல்லப்பட்டவர்கள் பட்டியல் ஒன்றினைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றியிருந்தார்.

வன்னியில் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லையென யாரும் கூறமுடியாது

இன்று வன்னியில் சரமாரியாக விமானக் குண்டுவீச்சுக்களும் எறிகணைத் தாக்குதல்களும் நடத்தப்பட்டு வரும் நிலைமைகளில் சிறார்கள் முதியோர்கள் அடங்கலாக பல பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். எனவே, வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லையென இராணுவத் தளபதியோ வேறு எவரோ கூறுவது தவறாகும். மேலும் 2 1/2 இலட்சம் மக்கள் குறுகிய காலப்பகுதியில் ஒன்றுக்குப் பலதடவைகள் இடம் பெயர்ந்து அவல வாழ்க்கை நடத்தி வருவதை யாரும் மறந்தோ மறைத்தோ விட முடியுமா?

இதனிடையில் தமிழ் நாட்டிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கு இந்திய அரசாங்கம் இணங்கமாட்டாதென சரத் பொன் சேகா தனது முழு நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார். அதுதான் உண்மை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் அல்லது வெளிநாட்டமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கை அரசாங்கம் யுத்த நிறுத்தம் வேண்டுமென தமிழ்நாட்டிலிருந்து வெளிக் கொணரப்பட்ட ஆதங்கத்திற்கு உண்மையில் எதுவித ஆதரவும் தெரிவிக்கவில்லை. தமது இறைமை இந்திய எல்லையோடு முடிவடைவதாகவும் யுத்த நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தைக் கோருவதற்கு தமக்கு அதிகாரம் கிடையாது எனவும் இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஏற்கனவே அறிவித்து விட்டார். அதுபோலவே ஜனாதிபதி ராஜபக்ஷவின் விஷேட ஆலோசகரும் அவருடைய சகோதரருமாகிய பசில் ராஜபக்ஷ அண்மையில் டில்லி சென்று முகர்ஜியைச் சந்தித்தவேளை சென்னை விரைந்து தமிழக முதல்வரைச் சந்தித்தவராகிய முகர்ஜி யுத்தநிறுத்தம் பற்றி எதுவும் பேசவில்லை. மாறாக பசில் ராஜபக்ஷவின் டில்லி விஜயம் தொடர்பாக விடுத்த கூட்டறிக்கையில் "பயங்கரவாதம் திடசங்கற்பத்துடன் அல்லது உறுதியுடன் எதிர்கொள்ளப்படும்' எனும் வாசகம் உள்ளடக்கப்பட்டிருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

மன்மோகன் சிங் அரசாங்கம் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்கு தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதியின் தலைமையிலான தி.மு.க.மாநில அரசாங்கத்தைப் பெரிதும் தங்கியிருக்கும் நிலையில் கருணாநிதியைச் சாந்தப்படுத்துவதில் சிங் வெகு பொறுமையாகவும் சாமர்த்தியமாகவும் செயற்பட்டு வருகிறார். ஆகையில் சிங் மும்பைக் குண்டுவெடிப்பு ஏற்படுத்திய மன உளைச்சலையும் பொருட்படுத்தாது 4.12.2008 ஆம் திகதி கருணாநிதி தலைமையில் டில்லி சென்ற தமிழ்நாட்டுக் கட்சித் தலைவர்கள் அடங்கிய தூதுக்குழுவினரைச் சந்தித்தார். கருணாநிதி ஏமாறுவதற்கும் தயாரானால் சிங் ஏமாற்றுவதற்கு ஏன் தயங்கவேண்டும் என்றவாறாகவே காரியங்கள் நடந்தேறியுள்ளன. சிங்குடனான சந்திப்பின் போது, யுத்த நிறுத்தம் தொடர்பாக ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் பேசுவதற்கு தான் அமைச்சர் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்பிவைக்கப்போவதாக கருணாநிதிக்கு உறுதியளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராஜபக்ஷ ஏலவே டில்லியில் நடைபெற்ற BIMSTEC மாநாட்டின் போது இலங்கையில் யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கு இடமில்லையென்று கூறிவிட்டபோதும், சிங் அளித்த உறுதிமொழியோடு திருப்தியடைந்து கருணாநிதி சென்னை திரும்பிவிட்டார். தூதுக் குழுவில் அங்கம் வகித்துச் சென்றவராகிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தமிழ் நாட்டு மாநிலத் தலைவர் தா.பாண்டியன் மட்டும், இதுதான் சிங்குடனான கடைசிச் சந்திப்பு என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். முகர்ஜி கொழும்புக்கு வருகைதருவராயின் இலங்கையில் யுத்த நிறுத்தம் தொடர்பாக அன்றிவேறு இரு தரப்பு விடயங்களைப் பற்றிப் பேசுவதற்கு வாய்ப்பு பயன்படுத்தப்படலாம். உண்மையில், முகர்ஜியை கொழும்பு வருமாறு தான் ஒரு மாதத்திற்கு முன்னதாக அழைப்பு விடுத்திருந்ததாக இலங்கை வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நேற்று முன்தினம் கூறியுள்ளதைக் காணலாம்.

முக்கியமான இராணுவ வெற்றிக்கு முயற்சி

இதனிடையில் முகர்ஜியின் கொழும்பு வருகைக்கு முன்னதாக முக்கியமான இராணுவ வெற்றியைப் பெற்றுவிட வேண்டுமெனவும் தீவிரமான முயற்சி மேற்கொள்ளவிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. என்ன விலைகொடுத்தாலும் வெற்றி நமதாக வேண்டுமென்றே ராஜபக்ஷ அரசாங்கம் முனைந்து வரும் நிலையில் வெற்றிகளை விரைந்து குவிக்கவேண்டுமென்று மென்மேலும் வேகப்படுவதைக் காணலாம். உண்மையில் அரசாங்கத்தின் அரசியல் வங்குறோத்துத் தனமே பாரிய இராணுவ முனைப்பாகக் காணப்படுகிறது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பலத்த பின்னடைவை நோக்கிச் செல்வது கணக்கில் எடுக்கப்படவில்லை.

"ஹெட்ஜிங்' உடன்படிக்கை

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் திடீரென என்றுமில்லாத மட்டத்திற்கு உயர்ந்து சென்ற கட்டத்தில், 2006 செப்டெம்பரில் மத்திய வங்கி ஆளுநர் நிவாட்காப்றால் சமர்ப்பித்த ஆலோசனையின் பேரிலே, மந்திரி சபையின் அனுமதியுடனேயே "ஹெட்ஜிங்' ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதாவது, அதற்கான பொறுப்பு முழு அரசாங்கத்தையும் சார்ந்ததாகும்.

ஆனால், உலக சந்தையில் எரிபொருள் பீப்பாய் ஒன்றின் விலை 147 டொலரிலிருந்து 47 டொலராக படிப்படியாக வீழ்ச்சியடைந்து வந்துள்ள நிலையில் அரசாங்கம் 400 மில்லியன் டொலர் பணத்தொகையை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் அசந்த டி மெல் பதவி நீக்கம் செய்யப்பட்டதோடு, பெற்றோலிய வளங்கள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் பதவியும் பறிபோகும் நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. அதாவது இது தொடர்பான முறைப்பாடொன்றின் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் அமைச்சர் பௌசி அகற்றப்பட வேண்டுமெனவும் தீர்ப்பு வழங்கிவிட்டது! தான் பலிக்கடாவாக ஆக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்து பௌசி பாராளுமன்றத்தில் அறிக்கை விடுத்திருந்தார்.

எவ்வாறாயினும் அவரை வெளியேற்றுவதற்கான சில சதி முயற்சிகள் கட்சிக்குள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சில அறிக்கைகள் கூறுகின்றன. ஒரு கட்சிக்குள்ளேயே கழுத்தறுப்புக்கள் கட்டுப்பாடின்றி நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தால் இன்று பல அரசியல்வாதிகள், அதிகப் பெரும்பான்மையான அரசியல் வாதிகள், தாம் நாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை முற்றிலும் மறந்து எரிந்த வீட்டில் பிடுங்கியது மிச்சம் எனும் மனோபாவத்திலேயே செயற்படுகின்றனர். நடைபெற்றுக்கொண்டிருக்கும் யுத்தமும் இதற்கு வாய்ப்பாகவே அமைந்துள்ளது.

யுத்தத்தில் அரசாங்கம் வெற்றிமேல் வெற்றியீட்டிவருவதாகவும், கிளிநொச்சி "கொஞ்சும்' தூரத்தில் தான் உள்ளது எனவும் பிரசாரம் செய்து வருகிறதாயினும், யுத்தம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்பதற்கில்லை. எனவே, மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் விடுதலைப் புலிகளை விரட்டிய பின்னரே அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என்ற நிலைப்பாட்டினை விடுத்து தமிழ் பேசும் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டத்தினை உடனடியாக முன்வைக்க வேண்டும். அதுவே நாட்டுக்கு நல்ல நடவடிக்கையாகும்.

வ.திருநாவுக்கரசு

Comments