புலம்பெயர் தேசத்தில் நம்பிக்கை தரும் இளைய தலைமுறையினர்

புலம்பெயர் தேசத்தில் வாழும் எமது இளைய சமுதாயம் பற்றி ஒரு அச்சத்துடனான பார்வையே நம்மிடமுள்ளது. அவர்கள் இந்த அன்னிய சூழலில் எமது பண்பாட்டு விழுமியங்களை மீறி சமுதாயக் கட்டமைப்பிலிருந்து விலகி தற்குறியாகத் தனித்துவிடுவார்களோ என்பதுதான் அந்த அச்சம். அதனை நியாயப்படுத்தும் வகையில் பல்வேறு விடயங்கள் நடந்தேறி வருகின்றன. ஆனால் அப்படியன்றும் குடி முழுகவில்லை. எங்களைப் பாருங்கள் எனத் துணிவோடு கூறும் ஒரு இளையோரின் அமைப்புத்தான் பிரித்தானிய தமிழ் மாணவர் ஒன்றியம் (UKTSU)

‘கற்கக் கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்ற வள்ளுவனின் வாசகத்தை வரைவிலக்கணமாகக் கொண்டு கற்கும் காலத்திலேயே கருத்தாழம் மிக்க கண்ணியமான சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற கடமை உணர்வுடன் தாயக உறவுகளுக்கு ஊக்கமளித்து அவர்களுக்குக் கல்வி மற்றும் ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தி அவர்களையும் தம்மைப்போல கல்வி மற்றும் தன்னம்பிக்கை உடையவர்களாக வளர்த்தெடுப்பதையே இலட்சியமாக் கொண்டு அவர்கள் செயற்பட்டு வருகிறார்கள்.

சாதித்தவை

பிரித்தானியாவில் உள்ள தமிழ் மாணவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்திருக்கும் இந்த ஒன்றியம், பதிவு செய்யப்பட்ட கலாநிதியம் என்றவகையில் மட்டுமல்லாது மக்களால் அங்கீகரிக்கப்பட்ட மாணவ சமூகம் என்றவகையிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களின் திறமைகளை மெருகூட்டும் அறிவுசார் போட்டி நிகழ்ச்சிகளையும், நகைச்சுவை ததும்பும் தரமான நிகழ்ச்சிகளையும், எமது பாரம்பரிய பண்பாட்டைக் குழம்பவிடாது தாங்கி நிற்கும் மேடை நிகழ்ச்சிகளையும் நடத்துவதோடு விளையாட்டுப் பாசறைகளையும் ஒழுங்கு செய்து சமூகத்திற்கு பெரும்பாலான பங்கினை வழங்கியுள்ளனர். இந்தவகையில் சிறுவர்களின் மதிநுட்பத்திற்கு விருந்தாக அமைந்த ‘பிரித்தானியாவின் பிறேனியஸ் பிள்ளை’ ((Britain’s Brainiest Pillai)) என்ற போட்டித் தொடர் நிகழ்ச்சி சென்ற வருடத்தைப் போல இந்த வருடமும் மாணவ மாணவிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது மட்டுமன்றி பெற்றோரின் பலத்த வரவேற்பையும் பெற்றுச் சிறப்பாக அரங்கேறியது.

பல பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களின் ஒன்றியங்களுடன் சேர்ந்து அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் மேடைநிகழ்ச்சிகளுக்கு வழிநடத்தி இதுவரை ‘கலக்கல்’, ‘பீனிக்ஸ்’ கொக்குவில் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ‘வசந்தம்’ சவுத்பாங் மற்றும் மெற்றோபொலிற்றன் பல்கலைக்கழகத்தின் ‘கலசம்’ பல்கலைக்கழகச் சவால் போட்டி நிகழ்ச்சி உட்பட பல நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக வழிநடத்தினர். இந்த நிகழ்வுகளின் போது சேகரிக்கப்பட்ட நிதி ஈழத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கத்தின் ஒரு கட்டமாக வழங்கப்பட்டது.

விளையாட்டுப் பாசறை

கல்வி, கலைநிகழ்ச்சிகளுடன் மட்டும் நின்றுவிடாது மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொண்டுவந்து அவர்களைப் பரிபூரணமாக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட கால்ப்பந்து மற்றும் துடுப்பாட்டப் பாசறைகள் இவர்களது ஒன்றியத்தின் வேறுபட்ட பரிணாமங்களைத் தொட்டிருக்கிறது. அப்பாசறைகளில் ஒன்றியத்தின் விளையாட்டு நிபுணர்களின் யுக்தியாலும், பயிற்றுவிப்பாளர்களின் கடுமையான பயிற்சியாலும் தகுதியும் திறமையும் உடைய மாணவர்கள் பல்வேறு பிராந்தியப் போட்டிகளில் வெற்றிக் கேடயங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

வெஸ்ரேன் தாளம்

இவர்களது அடுத்த முயற்சியாக பல்கலைக்கழக மாணவர்களின் கலைத்திறனை ஒரே மேடையில் கண்டுகளிக்கும் வகையில் ‘வெஸ்ரேன் தாளம்’ என்ற மாபெரும் கலைநிகழ்ச்சியை நவம்பர் மாதம் 15ஆம் திகதி மாலை ஆறு மணிக்கு ஹரோ Leisure Centre அரங்கத்தில் அரங்கேற்றவுள்ளனர். இதன்போது இசை, நடனம், நாடகம், நகைச்சுவை, என மேலைத்தேய கீழைத்தேய கலைநிகழ்ச்சிகளுடன் பாரம்பரிய கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வின் மூலம் சேகரிக்கப்படும் நிதியானது இடம்பெயர்ந்த மக்களின் தேவையை நிவர்த்தி செய்ய தாயகத்திற்கு அனுப்பவிருக்கிறார்கள். எனவே அவர்களது நிகழ்ச்சியில் பங்கேற்று அவர்களது இந்த முயற்சிக்கு உதவுங்கள் என கேட்டுக் கொள்கிறேன். -

பா. பரந்தாமன்.

Comments