கனடிய தமிழ் இளையோர் அமைப்பு சர்வதேச சமூகத்திற்கு விடுக்கும் வேண்டுகோள்!

இலங்கை அரசாங்கம் கொத்தணிக் குண்டுகள் பாவிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த நேரத்தில் அனைத்துலக சமூகத்திடம் இந்த கொடூர குண்டுகளை தடை செய்யுமாறும், கனடா அரசாங்கத்தை அனைத்துலக சமூகத்துடன் இணைந்து, இலங்கைக்கும் அதற்கு இக்குண்டுகளை வழங்கும் நாடுகளுக்கும் அழுத்தம் கொடுத்து இக்குண்டுத் தயாரிப்பை முடிவுக்கு கொண்டுவருமாறும் கனடா தமிழ் இளையோர் அமைப்பினர் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றனர். இதுகுறித்து அவர்கள் விடுத்த அறிக்கை வருமாறு:-

கனடிய தமிழ் இளையோர் அமைப்பு சர்வதேச சமூகத்திற்கு விடுக்கும் வேண்டுகோள்!

டிசம்பர் 03, 2008

மனித உரிமைகள் நெருக்கடி மிகவும் மோசமடைந்து உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. 240,000 மக்களின் இடப்பெயர்வு, வெளிநாட்டு உதவி நிறுவனங்களின் வெளியேற்றம், பாரிய வெள்ளப்பெருக்கு ஆகியவை தமிழ் மக்களை அடிப்படைவசதிகளற்ற ஒரு வாழ்க்கைக்கு தள்ளியுள்ளது.

இவற்றோடு இலங்கை அரசாங்கம் தமிழ்மக்கள் மீது கொத்தணி குண்டுகளை வீச ஆரம்பித்துள்ளது. கொத்தணி குண்டுகள் மிகவும் கொடிய ஆயுதமாகும். இதனுள்ளே பல சிறிய குண்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை அதி உயரத்திலிருந்து துல்லியமாக குறிபார்த்து வீசக்கூடியவை.

இக்குண்டுகள் விழும்போது அதனுள்ளேயுள்ள சிறு குண்டுகள் தெறித்து குறிப்பிட்ட பிரதேசத்தில் பரவலாக சேதங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடியவை. அச்சிறுகுண்டுகளில் பல வெடிக்காமலிருந்து சிறிது காலத்தின் பின் வெடித்து அப்பாவி மக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தவல்லவை.

சனிக்கிழமை நவம்பர் 29, 2008 அன்று இலங்கையின் வடக்கேயுள்ள வன்னிப் பிரதேசத்தில் 100 குடும்பங்களுக்குமேல் இடம்பெயர்ந்து தங்கியிருந்த குடியிருப்புகளின்மீது இலங்கை வான்படைக்குச் சொந்தமான ஜெட் விமானத்திலிருந்து 16 கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டன.

இத்தாக்குதலில் 5 வயதுக் குழந்தையும் 91 வயது முதியவரும் கொல்லப்பட்டதுடன் மேலும் 7 குழந்தைகள் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 8 பேர் மோசமான நிலையிலுள்ளனர். மனித உரிமை அடிப்படையில், இக்கொத்தணிக் குண்டுகள் அனுமதிக்கப்பட முடியாதவை. கொத்தணிக்குண்டுகள் பொதுமக்களையோ போராளிகளையோ வேறுபடுத்திப் பார்ப்பவை அல்ல.

அவை தாங்கமுடியாத அளவு தீங்கினை அப்பாவிப் பொதுமக்களுக்கு எற்படுத்தக்கூடியவை. கடந்த மே மாதத்தில் டுப்ளின் நகரில் இடம்பெற்ற மாநாட்டின்போது 110 நாடுகள் கொத்தணிக்குண்டுகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் தடை விதிக்கச் சம்மதித்தன.

இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான அனைத்துலக நாடுகளின் கூட்டம் நவம்பர் 3, 2008 அன்று நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் நடைபெற்றது. இந்த ஒப்பந்தத்தில் ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கைச்சாத்திட்டன. இன்னமும் இலங்கை இதில் கைச்சாத்திடுவதற்கு சம்மதிக்கவில்லை.

கனடா தமிழ் இளையோர் அமைப்பு இலங்கை அரசாங்கம் இக்குண்டுகள் பாவிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த நேரத்தில் அனைத்துலக சமூகத்திடம் இந்த கொடூர குண்டுகளை தடை செய்யுமாறும், கனடா அரசாங்கத்தை அனைத்துலக சமூகத்துடன் இணைந்து, இலங்கைக்கும் அதற்கு இக்குண்டுகளை வழங்கும் நாடுகளுக்கும் அழுத்தம் கொடுத்து இக்குண்டுத் தயாரிப்பை முடிவுக்கு கொண்டுவருமாறும் கனடா தமிழ் இளையோர் அமைப்பினர் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றனர்.


Comments