தெற்கைக் கவர்ந்திழுக்கும் போர் வெ(ற்)றிப் பொறி!


ஈழத் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு அடக்குமுறையாலும், ஆயுதப் பலத்தாலும் முடிவு கட்டத் தீர்மானித்துவிட்ட கொழும்பு அரசு, அதனால் போர் முனைப்பில் தீவிரமாக நிற்கின்றது என்பது இன்று வெளிப்படையானது.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, அவர்களை நிரந்தரமாக அடிமைகளாக்கும் நோக்குக் கொண்ட இந்த இன அழிப்புப் போர், தமிழரின் நிம்மதியான வாழ்வைக் கெடுத்து, அவர்களை நிரந்தர அகதிகளாக்கி, அவர்களின் சமூக, பொருளாதார வாழ்வையும், அடிப்படைக் கட்டுமானங்களையும் அடியோடு சீரழித்து, தமிழர்களுக்கு முன்னெப்போதும் இல்லாதவாறான பேரவலத்தைக் கொடுத்து நிற்கின்றது.

தமிழர் தாயகப் பகுதிகள் மீது கொடூர யுத்தத்தைத் தொடுத்து, அப்பிரதேசங்களைக் கைப்பற்றி, சிங்கக் கொடிகளை ஏற்றி, சித்தார்த்தன் சிலைகளை நட்டு, ஆரவாரம் செய்து, பௌத்த - சிங்களப் பேரினவாதமே தேசத்தின் சித்தாந்தமாக - தேசியக் கொள்கையாக - கருதி, அதை விரிவுபடுத்தி, விஸ்தரிக்கும் கைங்கரியத்தை கொழும்பு கனகச்சிதமாக முன்னெடுத்து வருகின்றது.

தமிழரின் இனப்பிரச்சினைக்கு ஆயுத முனையில் அடக்கியாளும் தீர்வை எட்டியே தீருவது என்பது ‘மஹிந்த சிந்தனை’ திட்டம் என்று அடையாளப்படுத்தப்பட்டாலும், அது இந்த அரசுடனும், அதை வழிநடத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல.

அதுவே, ‘சிங்களத்தின் சிந்தனைச் சித்தாந்தம்’ என அர்த்தப்படுத்தப்படும் விதத்தில் இவ்விடயத்தில் ஒரேவிதமான எண்ணப் போக்கு சிங்கள இனம் மத்தியில் தீவிரம் பெற்று விரிந்து வருவதை உறுதியாக அவதானிக்க முடிகின்றது.

யுத்த நிறுத்தம், அமைதிப் பேச்சு, இணக்கத் தீர்வு என்ற கோஷங்களுடன் தென்னிலங்கையில் உலா வந்த - ஐ.தே.கட்சியின் தலைவரும், எதிரக்கட்சித் தலைவருமான - ரணில் விக்கிரமசிங்க, அண்மைக்காலம் வரை ‘யுத்தத்தை நிறுத்தி, அமைதித் தீர்வைக் காணுங்கள்!’ என்றே அரசை வற்புறுத்தி வந்தார்.

தனது அரசியல் நோக்கங்களை எட்டுவதற்காக இந்த அரசு, யுத்தத்தைத் தீவிரப்படுத்தி, அப்பாவி சிங்கள இராணுவத்தினரைப் பலி கொடுத்து வருகின்றது என்று காட்டமாக விமர்சிக்கும் நிலையில் அவரது கருத்து நிலைப்பாடு அப்போது இருந்தது. இதுவே, அவரது கட்சியின் கருத்தாகவும் அச்சமயத்தில் தொடர்ந்தது.

ஆனால், நிலைமை இப்போது தலைகீழாக மாறிவிட்டது. சமாதானத் தீர்வு, அமைதி முயற்சி பற்றிய சிந்தனை எல்லாம் அடிபட்டுப் போய்விட்டன.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, சிங்கள இராணுவத்திடமிருந்து தினசரி கிட்டிவரும் வெற்றிச் செய்திகள், முழு சிங்களத்தின் மூளையத்தையுமே பற்றிப் பீடித்து, ஆக்கிரமிப்பு வெற்றி உறுதி என்ற நம்பிக்கையைத் தந்து நிற்பதால், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது கட்சியினரும் கூட இந்த பௌத்த - சிங்கள தேசிய கருத்தாதிக்குள் முற்றாகச் சிக்குப்பட்டு விட்டனர்.

அதனால், அவர்களும் வெளிப்படையாகவே அந்தக் கருத்தாதிக்கத்தின் கொள்கைப் போக்கை சிலாகித்துப் பேசும் நிலைமைக்கு வந்துவிட்டனர்.

ஐ.தே.கட்சியின் சிரேஷ்ட பிரமுகரான லக்ஷ்மன் செனிவிரத்ன, நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், புலிகளுடன் யுத்த நிறுத்தம் செய்யுமாறு அரசுக்குத் தமது கட்சி அழுத்தம் கொடுக்காது என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டதோடு, புலிகளை அழித்து, போர் முடிவுறுவதை பார்ப்பதற்கு தமது கட்சி சிரத்தையுடன் காத்திருக்கிறது - பார்த்திருக்கிறது - என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்த அரசின் வரவு-செலவுத் திட்டத்தை முற்றாக எதிர்ப்பதாக ஏற்கனவே ஐ.தே.கட்சி அறிவித்துள்ள போதிலும், பாதுகாப்புச் செலவினம் மீதான அரசின் ஒதுக்கீட்டைத் தமது கட்சி ஆதரிக்கும் என்றும் லக்ஷ்மன் செனவிரத்ன நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிட்டிருக்கின்றார்.

இதுவரை, இந்த அரசின் வரவு-செலவுத் திட்டங்களை ‘யுத்த பட்ஜெட்’ என்று காட்டமாக விமர்சித்துக் கண்டித்து வந்த ஐ.தே.கட்சி, யுத்தத்தில் சிங்களத் தரப்புக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற நிலை தோன்றியதும், யுத்தத்துக்கான ஒதுக்கீட்டை ஆதரிக்கும் நிலைமைக்கு குத்துக்கரணம் அடித்துவிட்டது.

இதுவரை காலமும், ஆளும் கட்சித் தரப்பில் நிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் எதிரணியில் நிற்கும் ஜே.வி.பி., விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணி போன்றவையே தமிழர் தரப்பை யுத்தத்தில் அடக்கி வெல்லும் போர் வெறிப்போக்கு நிலைப்பாடுடையவையாக பகிரங்கமாகச் செயற்பட்டு வந்தன.

இப்போது அந்த அணியில் ஐ.தே.கட்சியும் இணைந்திருப்பது போர் வெ(ற்)றிப் பொறிக்குள் முழு சிங்கள இனத்துவமுமே வீழ்ந்து விட்டமையையே காட்டுகின்றது.


Comments