புலம்பிக் கிடப்பது புயல்களுக்கு அழகல்ல!

யூதர்களுக்கு எதிரான வாதத்தைக் குறிக்கும் 19ம் நூற்றாண்டில் உருவாகிய அன்ரி - செமெற்றிசம் (Anti-Semitism) என்ற சொல் ஹிட்லரின் யூத இன அழிப்புடனே பிரபல்ய மடைந்ததெனினும், பலஸ்தீனத்திற்கு வெளியே யூதர்கள் வாழத் தொடங்கியதிலிருந்தே அதுவும் வேர்விடத்தொடங்கிவிட்டது. அக்காலத்திலேயே யூதர்கள் கொல்லப்பட்டும் விரட்டப்பட்டும் வந்த காரணத்தினாலேயே அவ்வினம் உலகெங்கும் சிதறி வாழவேண்டிய நிர்ப்பந்தமான சூழல் ஏற்பட்டது.

அதிலும் குறிப்பாக கி.பி. 70 காலப்பகுதியில் ரோம ஆட்சி நிலவிய பலஸ்தீனத்தில் யூத கலாச்சார, பண்பாட்டு, மத விழுமியங்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டிருந்தன. இதேபோல கி.பி. 637 இல் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின்படி யூதர்கள் அடிமைகள் என வரைவு செய்யப்பட்டது. இதன் பிரகாரம் புதிய வழி பாட்டுத்தலங்களை எழுப்புவது மட்டுமன்றி ஆயுதம் ஏந்துதல், குதிரையில் சவாரிசெய்தல் என்பவையும் தடைசெய்யப்பட்டன. பிற்காலத்தில் 6 வயதுக்கு மேற்பட்ட யூதர்கள் சகலரும் மஞ்சள் நிறத்திலான நட்சத்திரத்தைத் தம் ஆடையின் தோள்பகுதியில் நன்கு வெளித் தெரியுமாறு அணிந்துகொள்ளவேண்டுமென நாசிகளால் அறிவிக்கப்பட்டதைப்போன்று, 7ம் நூற்றாண்டிலேயே யூதர்களுக்கு அப்படியான கட்டாயம் இருந்தது.

யேசு கிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்தவர்கள், கடவுளின் எதிரிகள் என ஒவ்வொரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டு வௌவ்;வேறு காலகட்டங்களில் இந்த அடையாளத்தைக்கொண்டே மிக இலகுவில் யூதர்கள் இனங்காணப்பட்டார்கள். ஐரோப்பா தழுவிய ரீதியிலே 1096இல் யூதர்களுக்கெதிரான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. தொடர்ந்து 1147 - 1249 காலப்பகுதியிலும் சிலுவைப் போரின்போது யூதர்கள் பெரும் எண்ணிக்கையில் பழிதீர்க்கப்பட்டார்கள்.

இதன் மிகமோசமானதொரு கட்டமாக 1347 - 1351 காலப்பகுதியில் ஐரோப்பாவைப் பீடித்த ‘பிளேக்' தொற்றுநோயின் மிகமோசமான விளைவுகளுக்கும், தங்களுக்கு மத்தியில் யூதர்கள் வாழ்வதினால் ஏற்பட்ட பாவத்திற்காகக் கடவுளால் வழங்கப்பட்ட தண்டனையே அது எனக் கருதிக்கொண்டு, மனதுக்கு வந்தவாறு முழுமூச்சாக அப்பாவி யூதர்களைக் கொன்று குவித்தனர்.

மத ரீதியானது தவிர யூத எதிர்ப்புணர்வுக்கு வேறொரு காரணமும் இருந்தது. மத்திய காலப்பகுதியிலே வட்டி அறவிடுவது வேதாகமத்துக்கு முரணானது என்பதனால் அதைக் கிறிஸ்தவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டியிருந்த நிர்ப்பந்தம் காரணமாக, வட்டிக்குக் கடன் வழங்குவது போன்றவற்றை யூதர்களே கவனித்துவந்தனர். இந்நிலையில் கூட்டுறவையும் கடும் உழைப்பையும் சிக்கனத்தையும் கடைப்பிடிக்கும் யூதர்களிடம் கடனாளிகளான காரணத்தினாலும் இயல்பாகவே ஓர் எதிர்ப்புணர்வு அனைவரிடத்தி லும் தோற்றம் பெற்றிருந்தது. ஆகவே "கடவுளைக் காட்டிக்கொடுத்த எதிரிகள்" என்பது அவர்தம் பொறாமையை நியாயப்படுத்துவதற்கு ஏற்ற "வாதக்கற்பிதமாக' ஆக அமைந்தது.

ஜேர்மனிய இறையியலாளரும் புரட்டஸ்தாந்து மதச்சீர்திருத்தவாதியுமான மார்ட்டின் லூதர், யூதர்கள் தொடர்பிலே சற்றே நெகிழ்வுப் போக்கினை ஆரம்பத்தில் காட்டியபோதிலும், அவர்களை மதமாற்றம் செய்யலாம் என்ற தன் எதிர்பார்ப்பு கைகூடாதென்பதைப் புரிந்துகொண்டதை அடுத்து, மரணத்துக்கு முந்திய தனது எழுத்துக்களில் "யூதர்கள் மற்றும் அவர்களின் பொய்கள்" (1543) என்ற தலைப்பில் எழுத்துக்களை வெளியிட்டிருந்தார். அதிலே யூத வழிபாட்டுத்தலங்களைத் தீயிடுமாறும், குடியிருப்புகளை அழிக்குமாறும், ‘றபீனியர்' எனப்படும் மதகுருமார்கள் யூதத்தைப் போதிப்பதைத் தடைசெய்யுமாறும், ஒட்டுமொத்தத்தில் யூதர்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தி நெருக்கு மாறும் வலியுறுத்தியிருந்தார்.

இவ்வாறு காலத்துக்குக்காலம் எழுந்த யூத எதிர்ப்புணர்வானது 1900 ஆண்டுகளாக அணையாமல் மீண்டும் மீண்டும் கிளர்ந்தெழுந்து யூத இனத்தைப் பலிகொண்டு வந்தது. அழிபவர்கள்போக எஞ்சியவர்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தார்களே தவிர தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போராடவேண்டும் என்பதை உணர்ந்து அதற்கு அவர்கள் தயாராயிருக்கவில்லை. இதுவே அவர்கள் தொடர்ந்தும் கிள்ளுக் கீரையாக எண்ணப்பட்டுப் பலி கொள்ளப்பட்டதற்கும் காரணமாக இருந்து வந்தது.

எனினும் 18ம் நூற்றாண்டில் மீண்டும் கிளர்ந்த யூத எதிர்ப்புணர்வு முன்னைய காலங்களைப்போல மதம் மற்றும் பொருளாதாரம் சார்ந்ததாக இல்லாமல் தேசியம் மற்றும் இன மயப்பட்டதாகக் காணப்பட்டது. அதிலும் குறிப்பாக 1933இல் அதிகாரத்திற்கு வந்த ஹிட்லரின் ஆட்சியிலே "தங்களைப் பீடித்த பாவம||என்று முத்திரை குத்தப்பட்ட யூதர்கள், பெரும்பான்மை ஜேர்மனியச் சமூகத்தினரால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டார்கள்.

தொழில், கல்வி, வணிகம், ஊடகத்துறை எனச் சகல மட்டங்களிடம் யூதர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது. இவற்றுக்கு மேலாக யூதக்கொடியை ஏற்றுவது மற்றும் அதைப் பிரதிபலிக்கும் நிறங்களை அணிதல் சட்டவிரோதமானது என்பது உட்பட மேலும் பல தீர்மானங்கள் 1935 இல் நாசிக்கட்சியான NSDAP இன் ஒன்றுகூடலிலே நிறைவேற்றபபட்டன.

1937 இல் யூத இனத்தைச்சேர்ந்த தொழிலதிபர்கள் தங்களுடைய நிறுவனங்கள் யாவற்றையும் மிகக்குறைந்த விலைக்கு ஜேர்மனியர்களுக்கு விற்றுவிடவேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இவை மட்டுமன்றி சகலரும் தத்தம் பெயர்களுக்கு முன்பு தாம் யூதர் என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஆண்கள் ஷஇஸ்ரேல|; எனவும், பெண்கள் ஷசாறர்' எனவும் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

இவ்வளவையும் சகித்துக் கொண்டும்கூட வாழ்ந்துவிடலாமென பிரயாசைப்பட்டபோதிலும், அதைப் பேரினவாதம் அனுமதிக்கவில்லை. ஷயூதர்கள் அழிக்கப்பட வேண்டிய இனம்' என்ற தமது தீர்மானத்தில் மேலும் உறுதிபெற்ற நாசி அரச படைகளால் 60,00,000 (60 ?லட்சம்) யூத மக்கள் படுகொலைசெய்யப்பட்டனர். இருந்துங்கூட தங்களைக் காப்பாற்றுவதற்காக எதிர்த்துப் போராடக்கூடிய வலுவினை யூதர்கள் தேடிக்கொள்ளத் தலைப்படவில்லை. அப்படியொன்றை அவர்கள் உருவாக்கியிருந்தாலும் நாசி அரசு அதனை "பயங்கரவாத அமைப்பு" என்றே அழைத்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படியான சூழலில் இரண்டாம் உலகயுத் தம் முடிவுக்கு வந்ததையடுத்து, உலகெங்கும் தம்மினம் முகங்கொடுத்துவந்த படுகொலைப் படலங்களை மேலும் அனுமதிக்கலாகாதென முடிவெடுத்த யூத இனம், இறைவனால் வாக்களிப்பட்டதாகத் தாம் காலங்காலமாகவே கருதிவந்த இஸ்ரேலை ஸ்தாபித்துக்கொள்வதில் முழுமூச்சுடன் இறங்கினர். எரிபொருள் வளம்படைத்த அரபுநாடுகளுடன் நெருங்கிய உறவைப் பேணிக்கொள்ள விரும்பிய பிரித்தானியா உட்பட்ட மேற்கு நாடுகளின் ஆதரவைத் தமக்குச் சார்பாகப் பெற்றுக் கொள்வதென்பது யூதர்களுக்கு எளிமையான காரியமாக இருக்கவில்லை.

அதிலும் குறிப்பாக பிரித்தானியாவினால் தாம் நம்பவைக்கப்பட்டு நட்டாற்றில் விடப்பட்ட நயவஞ்சகம், யூதர்களை அதிகம் கொதிப்படைய வைத்தது. இதனால் தம்முடைய வலிமையைத் தாமே திரட்டி சுதந்திர தேசத்தை ஸ்தாபிப்பதனூடாகவே தள்ளிச்சென்றவர்களையும், தள்ளிவிட்டுச் சென்றவர்களையும்கூடத் தமக்குச் சார்பாக வென்றெடுக்க முடியும் என்பதில் மேலும் தெளிவடைந்தனர்.

இதன்படி நாற்புறமும் நடுவிலுமென சூழ்ந்திருந்த எதிரிகளை எதிர்கொள்வதற்கான ஆளணி மற்றும் படைத்தள வசதிகளைத் திரட்டத் தொடங்கினர். 1947 இல் பலஸ்தீனத்திலே யூதர்களின் எண்ணிக்கை வெறும் 600,000 ஆக இருக்க சுற்றிவரவும் உள்ளூரிலும் இருந்த அரேபியர்களின் எண்ணிக்கையோ அதன் பல மடங்காகக் காணப்பட்டது. முழு உலகிலுமிருந்து விரட்டப்பட்டும் கௌரவத்துடனான வாழ்வை விரும்பியும் பலஸ்தீனத்திற்கு யூதர்கள் இவ்வாறு சென்றிருந்த காலத்தில் அது வெட்டைவெளியான பாலைவனமாகவே இருந்தது.

உயிர்வாழ்வதற்குத் தேவையான அடிப்படைக் கட்டுமானங்கள் எதுவுமே உறுதிப்படுத்தப்படாத சூழலிலேயே பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளையும் முகங்கொடுப்பது மட்டுமன்றி, வெற்றிகொள்ள வேண்டிய தேவையும் அவர்களுக்கிருந்தது. அவர்களின் ஆரம்பகட்ட வான்படைகூட இரண்டு குட்டிவிமானங்களை மட்டுமே கொண்டிருந்தது. ஆனாலும், அவர்கள் சளைக்கவில்லை. கற்றுக்கொள்வதற்கு முன்மாதிரியாக வரலாறேதும் இல்லாதபோதிலுங்கூட முழு நம்பிக்கையுடன் புதிய வரலாற்றை அவர்கள் எழுதினார்கள்.

"சிறிலங்காவிற்குச் சுதந்திரம்|| என்ற பெயரில் தனது பேரினவாதத்துக்கான முழு அங்கீகாரத்தையும் பிரித்தானியாவிடமிருந்து சிங்களம் பெற்றுக்கொண்ட அதே ஆண்டில், யூதர்கள் சுதந்திர இஸ்ரேல் தேசத்தினை ஸ்தாபித்துக்கொண்டார்கள். இன்று சுமார் ஆறு மில்லியன் (60 இலட்சம் மட்டும்) சனத்தொகையைக் கொண்டுள்ள இஸ்ரேல் தேசம், அமெரிக்கா உட்பட உலகின் எந்தவொரு வல்லரசுக்கும் சவால் விடக்கூடிய வலிமையுடன் கூடியதாகத் திகழ்கின்றது.

சுமார் ஒரு பில்லியன் (1000 000 000) வரையான முஸ்லிம்கள் உலகெங்கிலுமுள்ள 40ற்கும் குறையாத நாடுகளில் பெரும் பான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். இவற்றில் சில அணுவாயுத வல்லமை கொண்ட மிகவும் மூர்க்கத்தனமான யூத எதிர்ப்பு நாடுகளாக இருப்பது மட்டுமன்றி, அமெரிக்காவினாலேயே வெற்றிகொள்ள முடியாத அல் ஹைதா அமைப்புக்களினால் எதிரியென வெளிப்படையாகவே இஸ்ரேல் அறிவிக்கப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.

இப்படியான ஓயாத நெருக்கு வாரங்களுக்கு முகங்கொடுத்த நிலையிலும் இஸ்ரேலினால் தன்னை வளங்கொழிக்கும் முன்னணி நாடாக இன்று நிலைநிறுத்த முடிந்திருக்கிற தெனில் அது எப்படி என்பதை நாம் அறிந்து கற்றுக் கொள்ளவேண்டாமா? ஆறு மில்லியன் சனத் தொகையைக் கொண்ட இஸ்ரேல் கிட்டத்தட்ட 170 000 நிரந்தரமான போர்வீரர்களையும், அவசியம் கருதி இணைத்துக்கொள்ளப் படக்கூடிய 450 000 சேமப் படைவீரர்களையும் கொண்டிருக்கின்றது. 18 வயது நிரம்பிய ஒவ்வொருவரு யூதனும் ஆணாயின் 3 வருடங்களும், பெண்ணாயின் 21 மாதங்களும் படைத்துறைச் சேவை ஆற்றிய பின்னரே மேற்படிப்பு, தொழில், திருமணம் எதுவாயினும். இது நிறைவு பெற்றதற்குப் பின்னருங்கூட 55 வயதுக்குட்பட்ட அனைவரும் ஒவ்வொரு வருடமும் 45 நாட்களுக்குக் குறையாத (நாட்டு நிலைமை கருதி இது நீடிக்கப்படும்) படைத் துறைச்சேவை ஆற்றுவதற்கு அழைக்கப்படுவார்கள்.

1900 ஆண்டுகளாகத் தாம் சுமந்த வலிகளினால், சுதந்திர தாயகமே தீர்வெனத் தெளிந்து அதை நிறுவிக்கொண்ட யூதர்கள் இன்றுங்கூட அதை அனுபவிப்பதற்காகப் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. ஆனாலும், அவர்கள் அழுது கிடக்கவில்லை. எழுவதும் நிமிர்வதுமே வழியென்றானபின் புலம்பிக்கிடப்பது புயல்களைக் கருத்தரித்த இனத்திற்கு அழகல்ல!

பூநகரியும், மாங்குளமும் இன்னும் வேறெதுவும் போகட்டும் இப்போதைக்கு! ஆக்கிரமிப்பு வெறியைவிட, அடிமைத்தனத்திற்கு எதிரான நம்மினத்தின் விடியலின் மீதான இலட்சிய வேட்கைக்கு அதிக வலுவிருக்கும் என்பதை அவனுக்குப் புரியவைப்போம்! ஓடிமுடித்த பின் ஒன்றுமே ஆகாதென்று ஒப்பாரி வைத்துக்கிடப்பதற்கு இது ஒன்றும் பந்தயக்குதிரை அல்ல. மாறாக விடுதலைப் போராட்டம்! அதிலும் எத்தனை தேசங்களின் ஆதரவுடன் எதிரியினால் எத்தனிக்கப்படும் ஆக்கிரமிப்பு யுத்தம் இது! ஆகவே காலமும் நேரமும் கருதி கையாளப்படும் காரணிகளையிட்டு இடிந்துபோய் இருந்துவிடாமல், எங்களின் சூரியப் பிரவாகத்தின் நேரிய பாதையில் பூரண பங்களிப்பை நல்கி, உறுதியுடன் முழு இனமும் உழைக்கட்டும். வெற்றி தமிழனுக்கு நிச்சயம்!!

சு.ஞாலவன்


Comments