சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு நேற்று வெளியிட்டிருந்த தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது பேட்டி, உண்மையில் தன்னாலேயே வழங்கப்பட்டது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் “புதினம்” செய்திப் பிரிவிடம் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஞாயிறு ஏடான "லக்பிம" தனது நேற்றைய (28.12.2008) வெளியீட்டில் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் தமக்கு வழங்கப்பட்ட பிரத்தியேக பேட்டி என ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.
இது தொடர்பாக, விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனை "புதினம்" தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் அதனை மறுத்தார்.
"லக்பிம" வார ஏட்டுக்கான இந்தப் பேட்டி தன்னால் வழங்கப்பட்ட ஒன்று என்றும், அதனை அவர்கள் தலைவர் பிரபாகரன் அவர்களின் பேட்டியாக வெளியிட்டு விட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேபோன்று, சில மாதங்களுக்கு முன்னர் கூட தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "நக்கீரன்" இதழும், நடேசனால் வழங்கப்பட்ட பேட்டியை, தலைவர் பிரபாகரன் அவர்களின் பேட்டி என வெளியிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
Comments