அரசியற் போரட்டத்தின் நீட்சியே ஆயுதப் போராட்டம்

சிங்களப் பேரினவாதத்திற்கும் அதற்கு எதிர்வினையாக எழுந்த தமிழ்த் தேசிய வாத்திற்க்கும் இடையேயான அரசியல் முரண்பாடு ஆயுதப்போராக நீட்சி அடைந்த வரலாற்றில் இருந்து பிறந்ததே விடுதலைப்புலிகள் இயக்கம்.விடுதலைப் புலிகள் பிறப்பதற்குக் காரணமான முரண்பாடு தீர்க்கப்படாமால் புலிகள் அழியப் போவதில்லை.வரலாறு எவ்வாறு முரண்பாடுகளில் இருந்து பிறக்கிறது என்பதை கடந்த கால மனித வரலாற்றை , வரலாற்று இயங்கியலின் அடிப்படையில் அணுகுவதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

இனக் குழுக்களுக்கு இடையேயான வளப்பங்கீடு பற்றிய முரண்பாடே தேசிய இனப் போராட்டங்களாக பரிணமிக்கின்றன.இலங்கைத் தீவின் வரலாற்றை நுணுகி ஆராய்ந்தால் சிங்கள இனமும் தமிழ் இனமும் இலங்கைத் தீவின் வளங்களைப் பங்கிடுவதற்காக மற்றைய சிறு குழுக்களில் இருந்து உருப்பெற்று இரு பேரினங்களாக இரு வேறு புவியியற் பிரதேசங்களில் இருந்து உருவானதைக் காணலாம்.
இனத்துவ அடையாளம் என்பது வளப் பங்கீடு சார்ந்தே பிறக்கிறது.இனத்துவ அடையாளம் என்பது பரிணாமம் பெறுவது.

இனத்துவ அடையாளம் என்பது பாரம் பரியமான கதைகள், இலக்கியம், கலை கலாச்சாரம் ,மொழி என்பனவற்றினூடாக வளர்வது.சிங்களப் பேரினவாதம் என்பது வளர்வதற்கான கதையாடால் மகாவம்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது.இதன் மையக் கருத்து இந்தத் தீவு சிங்கள இனத்துக்கு மட்டுமே சொந்தமானது என்பதே.தீவின் வளங்களை தனது ஏகபோகம் ஆக்கிக் கொள்ள, தன்னை பலமான குழுமமாக ஆக்கிக் கொள்ள அது தனது குழும அடையளாங்களை ஒரு வரையறுக்கப்பட்ட பேரின அடையாளத்தின் கீழ் மற்றைய சிறு குழுக்களை தன்னகத்தே உள் வாங்கிக் கொள்கிறது.தமிழ் இனக்குழுமமும் பல்வேறு இனக் குழுக்களை உள் வாங்கிய போதும், அது முழுத் தீவையும் தனது ஏகபோகமாக்கும் முயற்சியில் இறங்கவில்லை.உலகில் வேறு எங்குமே சிங்கள இனம் பரவாது இருந்தது, முழுத் தீவையும் தனதாக்கிக் கொள்ளும் எண்ணத்தை வலுப் படுத்தி இருக்கலாம்.

இன்றைய காலக்கட்டத்தில் சிங்களப் பேரின வாதத்தை கையில் எடுக்கும் குறிப்பிட்ட செல்வாக்கு மிக்க சிங்கள தரகு முதலாளிய குடும்பங்கள் இலகுவில் ஆட்சியைக் கைப் பற்றி எந்த பொருளாதார நெருக்கடிக்குள்ளும் மக்களை வைத்துக் கொண்டு ஆட்சி செலுத்தக் கூடிய வசதியை இந்த பேரினவாத மாயை வழங்கி இருக்கின்றது.

அண்மையில் சிறிலங்கா ரூபவாகினியில் (அரச தொலைக் காட்சியில்) ஒதியமலைப் பகுதியை இராணுவம் கைப்பற்றிய காட்சியில் வர்ணனையாளர் சொல்கிறார், இங்கு பழம் பெரும் பவுத்த மடாலயம் இருந்தது, இப்போது எமது இராணுவத்தினர் அதனை 'விடுவித்து' விட்டனர் என்று.அதாவது முழு தீவையும் சிங்களவருடையதாக ஆக்குவதன் ஒரு அங்கமாக தமிழரிடம் இருந்து இந்த இராணுவ நடவடிக்கை மூலம் இந்த சிங்களப் பவுத்த ஆலாயத்தை விடுவித்திருக்கிறோம் என்று நம்ப வைக்கிறது.ஆனால் உண்மையில் அந்த பவுத்த மடாலாயம் பண்டைய தமிழ் பவுத்த துறவிகளினுடையது.அங்கு பழம் தமிழ் கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.இவ்வாறு பொய்மையான வரலாற்றின் மூலம் சிங்களப் பேரினவாதம் தன்னை வளர்த்துக் கொண்டுள்ளது.அப்பாவிச் சிங்கள இளைஞர்களைப் பலியெடுத்து பேரினவாதா மாயயை வளர்த்து சிங்கள மக்களை ஏமாற்றி வருகிறது.

சிறிலங்கா அரசானாது பேரினவாதத்தின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அரசு.அது தன்னையே அழித்துக்கொண்டு ஒரு நாளும் தன்னை மீள் நிர்மாணம் செய்யப் போவதில்லை.மானிட வரலாற்றில் எங்கும் அவ்வாறு நடந்தது இல்லை.இவ்வாறு உருப்பெற்றுள்ள பேரினவாத அரசை வீழ்த்துவதன் மூலமே சிங்கள மக்களும் தங்களுக்கான உண்மையான பொருளாதார சமூக விடுதலையை அடைய முடியும்.இரு வேறு அரசுகளாக இரு இனக்களும் இருந்த காலக்கட்டதிலையே இலங்கைத் தீவில் பல நீர் அபிவிரித்தித் திட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டு இரு இனங்களும் சமாந்தரமாக வளர்ந்தன.சிங்கள பேரினவாதம் ஒழிந்து போவதற்கு தமிழர்களுக்கு உரித்தான தேசம் ஒன்று அவசியம் ஆகிறது.அது சிங்கள மக்களின் விடுதலைக்கும் முன் நிபந்தனையாக இருக்கிறது.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் பலம் பெற்றதாக அமைவதற்கு, தமிழ் அடையாளம் என்பது சாதிய சமய பிரதேச வேறுபாடுகளைக் கடந்ததாக இருக்க வேண்டி இருக்கிறது.குறுத் தேசிய வாதமாக இருக்கும் தமிழ்த் தேசியம் என்றும் பலம் பெற்றதாக இருக்கப் போவதில்லை.தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட அரசியல் தந்த பாடமாக இது இருக்கிறது.குறுந் தேசிய பிரதேச,சாதிய வாதத்தைத் தூக்கிப் பிடிக்கும் சக்திகள் பின் தள்ளப்பட்டு ஆயுதப் போராட்டமானாது சமூகத்தின் அடித்தளத்தில் இருந்தவர்களை போராட்டத்தின் முன்னணிச் சக்திகளாக மாற்றி உள்ளது.குறுந் தேசியவாதம் போராட்டத்தைப் பலவீனமாக்கும் என்னும் வரலாற்றுக் கட்டாயாம் ,தமிழ்த் தேசிய அடையாளத்தை முற்போக்கானதாக மாற்றி அமைத்துள்ளது.இதனைப் பாதுகாப்பதுவும், சிங்களப் பேரினவாதம் விரிக்கும் பிரதேச, சாதிய வாத வலைகளில் விழாமலும் ,பழமை பேண விரும்பும்
ஆதிக்க சக்திகளிடம் மீண்டும் அரசியல் அதிகாராம் கைமாறாமல் பாதுகாத்தலும் ,தமிழ்த் தேசிய விடுதலையினூடாக தமிழச் சமூகத்தில் இருக்கும் அடிமைத் தழைகளை உடைக்க விரும்பும் அனைத்துச் சக்திகளினதும் கடமையாக இருக்கிறது.


புலிகளின் இன்றைய நிலப் பின் வாங்கல்களை மேற் போக்காகப் பார்ப்பவர்களுக்கு , புலிகள் தமது பலம் ,பலவீனம் என்பதன் அடிப்படையில் பிரயோக்கிக்கும் தற்போதைய அரசியல்,இராணுவ மூலோபாயாம் புரியப் போவதில்லை. ஒரு அரசியற் போரட்டத்தின் நீட்சியே ஆயுதப்போராட்டம் என்பதையோ அரசியல் ரீதியான தேசிய எழுச்சியில் இருந்தே இராணுவ எழுச்சி பிறக்கிறது என்பதையோ பல கணனிப் புரட்சியாளர் புரிந்து கொள்வதில்லை.

புலிகளின் தற்போதைய மூலோபாயத்தின் விழைவுகள் வெளித் தெரியும் காலம் வரை , புலிகளின் தோல்வி பற்றியும் தமது தீர்வுகள் பற்றியும் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் புலம் பெயர் ''அறிவு'' ''சீவி''களின் கட்டுரைகளைப் படித்துச் சிரித்துக் கொண்டிருக்க வேண்டி இருக்கிறது.

வரலாற்றின் போக்கைப் புரிந்து கொண்டோராலேயே வரலாறு எழுதப்படுகிறது என்பது உலகின் பல விடுதலைப் போரட்டங்களின் எழுதப்படாத விதியாக இருக்கிறது.

அற்புதன்


Comments