தமிழீழத்தை தமிழ் நாட்டரசு அங்கீகரிக்கத் துணிய வேண்டும்



சிங்களப் பேரினவாதிகள் ஈழத் தமிழர்களை நெடுங்காலமாக அழித்து வருகின்றனர். 1948 ஆம் ஆண்டு இலங்கைத் தீவிற்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டதென்று பதியப்பட்டிருக்கும் வரலாற்றில் தமிழரின் தனியரசாட்சிகளை பறித்தெடுத்து ஆண்ட அந்நிய சக்திகள் மீண்டும் தமிழரை இன்னொரு அந்நிய சக்தியிடம் தாரைவார்த்து விட்டன.

04.02.1948 ஆம் ஆண்டு தமிழரின் சுதந்திரம் பறிக்கப்பட்ட நாள். இந்த நாளிற்குப் பின்னர் (முன்னரும் சிங்களப் பேரினவாதிகள் தமிழின அழிப்பில் அக்கறை காட்டிய வரலாறுள்ளது.) மிகவும் தீவிரமாகத் தமிழரை அழிப்பதில் இறங்கினார்கள். சிங்களப் பேரினவாதிகளின் தமிழின அழிப்பு நடவடிக்கையினால் ஒரு லட்சத்தையும் தாண்டிய உயிரிழப்புக்கள், தமிழரின் தாயக மண்ணில் சிங்களப் படைகள் நிலைகொண்டிருக்கின்ற பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயங்கள், மதிப்பிட முடியாத சொத்தழிவுகள், அவயவங்களை இழந்தவர்கள், இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்வோர் என ஈழத் தமிழருக்குப் பல துன்பங்களை ஏற்படுத்திய வன்முறையாளர்களாகவும் அரச பயங்கரவாதிகளாகவும் சிங்களப் பேரினவாதிகள் இருக்கின்றனர்.

வன்முறையாளர்களை அமைதிவழியில் எதிர்த்த போதும் பதிலுக்கு சிங்களப் பேரினவாதிகள் வன்முறையைப் பாய்ச்சினர். வேறு வழியின்றித் தான் தமிழர் வன்முறையை வன்முறையால் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இப்படியான வரலாற்று உண்மைகளை உணர்ந்து தான் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு பயிற்சி தரப்பட்டதாகவே இந்தியாவை போராளிகள் நம்பினர்.

ஆனால், 1987 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்தியாவின் போக்குகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த மாற்றங்களின் பின்னான வரலாற்றில் தமிழீழ விடுதலைப் போராளிகளை நம்பாதது போன்ற இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு அமைவாகவே போராளிகளும் இந்தியாவை ஐயங்கொண்டு பார்த்தனர். இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைப் பிடிப்பு தனிநாடொன்ற குறிக்கோளை விட்டகலாதவொன்று என்பதை இந்தியாவும் நன்குணர்ந்திருந்தது.

அத்தகைய தெளிவிருந்தும் இந்தியா தமிழீழ விடுதலைப் போராளிகளுக்குப் பயிற்சி கொடுத்தது, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்ததென்ற நிலையிலிருந்து மாறியது. சிங்களப் பேரினவாதிகள் ஈழத்தமிழரை இன அழிப்புச் செய்கின்றனர் என்பதை நன்கறிந்தும் சிறிலங்காவிற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவியது. உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடென காட்டிக்கொள்ளும் இந்தியா ஈழத் தமிழரின் விவகாரத்தில் தவறிழைத்ததைச் சீர்செய்ய வேண்டும் என்றால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும்.

ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னர் தான் இந்த நிலையை இந்தியா எடுத்ததென்பது சிலரின் வெளிப்படுத்துகை, இதில் உண்மை இல்லையென்பதைப் புலனாய்வு செய்து எழுத வேண்டும் என்பதில்லை. இந்தியப்படை தமிழீழத்தில் விடுதலைப் புலிகளுடன் போர் புரிந்து கொண்டு ஏககாலத்தில் மக்களையும் கொன்றழித்தது. இதனால் சுமார் ஆறாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். இது ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு பின்னரா முன்னரா நடந்தது?.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இப்படி ஆயிரம் இருக்கின்றது. இந்தியா ஒன்றை நினைவு மீட்டிப் பார்க்க வேண்டும். இந்தியப் படையுடன் போர் என்ற நிலைக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் வஞ்சகமாகச் சிந்தித்திருந்தால் இந்தியாவின் எதிரி நாடுகளுடன் இரகசியமாகக் கைகோர்த்திருக்க முடியும்.

ஆனால், விடுதலைப் புலிகள் அப்படி நிதானம் கெட்டுவிடவில்லை வேறு எந்த நாட்டுடனும் கைகோர்க்கவில்லை. ஆனால் சிறிலங்கா இந்தியாவிடம் பெறக்கூடிய உதவிகளையெல்லாம் பெற்றுவிட்டு பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிடமும் எந்தவித கூச்சமும் இல்லாது கைநீட்டும். எதிர்காலத்தில் இந்தியா உதவினால் என்ன உதவாவிட்டால் என்ன தமிழீழம் இந்தியாவிற்கு எதிராகச் செயற்படப் போவதில்லை என்பதற்கு கடந்தகால நிகழ்கால வரலாறு தான் சாட்சி.

ஆனால், இதற்கு மாறாக குறிப்பிட்ட காலங்களை நோக்குங்கள். சிறிலங்காவிற்கு இந்தியா மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவுவதற்கு மாறாக சிறிலங்கா மறைமுகமாகவும், நேரடியாகவும் இந்தியாவிற்கு எதிராக நடக்கின்றது. இலங்கைத் தீவின் அயல்நாடான இந்தியா பிராந்திய வல்லாதிக்கம், இந்து மா கடலின் ஆட்சி பற்றி நிறையவே சிந்திக்கின்றது. சிறிலங்கா என்ன செய்கின்றது? பிராந்திய வல்லரசோடு தந்திரமாக நடந்து கொண்டு தெற்காசிய வல்லரசு, உலக வல்லரசு என்பவற்றுடான உறவைப் பேணி இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்க எண்ணத்தில் மண் போடுகின்றது. அம்பாந்தோட்டையில் சீனாவையும் புத்தளத்தில் அமெரிக்காவையும் குடியமர்த்தியுள்ளதா, இல்லையா? இதுபற்றி இந்தியாவிற்குத் தெரியாதென்றல்ல.

அப்படி நன்கறிந்திருந்தும் ஏன் தமிழரை அழிக்கும் சிங்களப் பேரினவாதிகளிற்கு இந்தியா உதவுகின்றது? இந்தியா தனிநாட்டுக் கொள்கையினை எதிர்க்கின்றதா? அப்படியெனின் பாகிஸ்தானிடம் இருந்து பங்களாதேசை எப்படி தனிநாடாக்க உதவியது? இந்திய சீனப் போரில் சீனாவுடன் தோற்றுப் போனதால் அதனைச் சீர்செய்வதற்காக பாகிஸ்தானுடன் போர் புரிந்து படைவலுச் சீர்திருத்தம் செய்வதற்காகவா? எதனைச் செய்தாலும் தலையிடி என்றெண்ணுகின்றதா?

அதாவது, பங்களாதேசைப் பிரித்துக் கொடுத்தபின் பாகிஸ்தான் நேரெதிர் பகை நாடாகிவிட்டது. அதேபோன்று, இன்னுமொரு அயல்நாட்டை உருவாக்க விரும்பவில்லையா இது போன்ற கேள்விகள் ஏன் எழுகின்றதென்றால் இந்தியா என்ற ஓர் பெரும் நாடு தன்னுடைய நாட்டு மக்களின் ஒரு பகுதியினரின் உறவுகளாயிருக்கின்ற நிலையுடைய ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமை உயிர் இந்தியாவின் நலனிற்குப் பலியிடப்பட வேண்டியதா? ஒன்று மட்டும் உண்மை இந்தியா உதவினாலும் உதவாவிட்டாலும் தமிழீழம் இந்தியாவிற்கு எதிரான நாடாக இருக்கப் போவதில்லை.

ஆனால், ஈழத்தமிழரின் கண்களைப் பிடிங்கியெடுக்கும் சிறிலங்கா சீனாவிற்கு கண் தானம் செய்கின்றது. புனித மதமான பௌத்தத்தை அரசியல் வியாபாரம் செய்வதற்கும் துணிகின்றது. அரசியல் உறவிற்கான பயணங்களின் போது சீனாவிற்கு பௌத்த பிக்குகளையும் மகிந்த ராஜபக்ச அழைத்துச் செல்கின்றார் என்றால் அவர் எவ்வளவு உச்சமான பிழைப்புவாத அரசியலைச் செய்கின்றார் என்பதை இன்னும் சொல்லித் தான் அறிய வேண்டுமென்றில்லையென எண்ணுகின்றேன்.

தமிழ்நாட்டில் ஈழத் தமிழ் மக்களுக்கான எழுச்சி புத்தெழுச்சி பெற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானாவர்கள் சிலர் ஒரு காலத்தில் சொன்னார்கள். நேர்மையாகவும் துணிச்சலாகவும் தொடர்ச்சியாகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்த தமிழ் தேசிய உணர்வாளர்கள் செல்லாக்காசுகள் என்று கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் பேரறிஞர்கள் அவர்கள் ஆதரிக்கவில்லையே எனவும் பொது எதிரிகளின் எலும்புக்கு தவமிருக்கும் சிலரின் கூற்று அப்படியிருந்தது.

இன்று கலைஞர் கருணாநிதியும் குரல்கொடுக்கின்றனர். இப்பொழுதும் எலும்புத்துண்டிற்கு ஏங்குபவர்கள். எதையாவது சொல்ல வேண்டுமென்று எண்ணியிருக்க வேண்டும். அரசியல் லாபத்திற்காகப் பேசுகின்றார் என்று அறிக்கை விடுகின்றனர். தமிழகப் புத்தெழுச்சி என்பது கட்சி அரசியலைத் தாண்டி தமிழ்நாட்டவர் எழுச்சியாகவும் குரலாகவும் மாறியுள்ளது. இந்த மாற்றம் உணர்வுபூர்வமான மாற்றம். இதில் அரசியல் சித்து விளையாட்டிற்கு இடமில்லை.

சேலம் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கின்றனர் என்றால் அவர்களுக்கு என்ன அரசியல் லாபம் தேவைப்பட்டுள்ளது? தமிழக மாணவர்கள் அணிதிரண்டு குரல் கொடுக்கின்றனர் என்றால் அவர்கள் எந்தக் கட்சிக்காரர்? ஒரு சில அரசியல் கட்சிக்காரர்தான் பேசா மடந்தைகளாகவும் உண்மைக்குப் புறம்பாகவும் பேசிக் கொள்கின்றனரே தவிர அவர்களிற்கும் உண்மை தெரியும். தெரியாவிட்டால் ஈவிரக்கமின்றி ஈழத்தமிழரை கொன்றொழிக்கின்றனரே அந்தச் சிங்களப் பேரினவாதிகளின் கொடூர முகம் ஏன் உங்கள் கண்களுக்கு தெரியாமல் போகின்றது என்ற கேள்வியைத் தான் புரியாத சிலரிடம் கேட்டு வைக்க வேண்டும்.

திரைப்பட இயக்குநர் சீமான் போன்றவர்கள் தமிழ் தேசிய உணர்வோடு குரல் கொடுக்கின்றனர். சீமான் கூறிய விடயங்கள் உலக தமிழரே சிந்திக்க வேண்டியவையாகும். 'தமிழரை உலகத்தில் பலரும் அடிக்கின்றனர். ஆனால் ஈழத் தமிழன் மட்டும்தான் திருப்பி அடிக்கின்றான். "ஒரு காலத்தில் நாடுகளை ஆண்ட தமிழன் ஆட்சிகளை இழந்து போயிருக்கும் வேளையில் தனிநாட்டைக் கேட்டுப் போராடும் தமிழன் தமிழீழத்தில் உள்ளான். அவனுக்கு ஆதரவு கொடுங்கள் எனச் சீமான் சுட்டிக்காட்டும் விடயத்தை உலகத் தமிழ்ச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

சீமான் கூறிய ஒரு விடயத்தைத் திருத்திக் கூறுவது பொருத்தமாக இருக்குமென நினைக்கின்றேன். புராணக் கதைகளின் ஊடாக தமிழரை அரக்கன், அசுரன் என்றனர் இப்பொழுது தமிழன் அகதி என்ற பொருட்பட அவர் கூறினார். ஒரு காலத்தில் அரக்கன் என்றவர்கள் இன்று பயங்கரவாதிகள் என்கின்றனர். அன்று தமிழரை அழித்து அரக்கன் என்றார்கள். இன்று தமிழரை அழித்துப் பயங்கரவாதி என்கின்றனர். உலகத் தமிழரின் சிந்தனைக்கே படையல் தமிழனை அழித்த நாளை வெட்கம் கெட்டவர்கள் போல் தீபாவளி என்று நாமே கொண்டாடுகின்றோமே அதேபோல் தான் இன்றைய நவீன உலகிலும் அறிவு கெட்டவர்களாக வாழப் போகின்றோமா என்று எம்மை நாமே கேட்டுக்கொண்டு உலக தமிழ் சமூகமே தமிழீழ அங்கீகரிப்பிற்காகக் குரல் கொடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டு உறவுகள் இந்தியாவின் முக்கியமான சக்திகள். நீங்கள் நினைத்தால் தமிழீழ அங்கீகாரம் கிடைக்க தொடர்ச்சியாக அமைதி வழியில் குரல் கொடுக்கலாம். எந்தச்சந்தர்ப்பத்திலும் கைவிடாது தொடர்ச்சியாகக் குரல் கொடுத்தால் நிச்சயமாக பலன் கிட்டும். தமிழகத்தின் வலுமிக்க திரட்சி சிதைவுபடாமல் தமிழீழத்திற்கான குரல் கொடுக்கப்படுமெனின் அதன் மூலம் உலகம் மேலும் தமிழருக்கான நாடு பற்றி கவனிக்கும். உலகப்பரப்பில் எட்டு கோடிக்கும் அதிகமாக வாழும் தமிழனுக்கு நாடொன்றில்லை. ஆகவே, தமிழீழம் சாத்தியப்படக்கூடிய ஒன்றெனச் சிந்திக்கும்.

அப்படியான சிந்தனை வளர்ந்து பயனடைந்து விடுவான் எனத்தான் சிறிலங்கா அச்சப்படுகின்றது. தமிழகம் நிதானமாகச் செயற்பட்டால் இந்திய மத்திய அரசும் கவனிக்கும் என்பதை சிங்களப் பேரினவாதிகள் நன்கே உணர்கின்றனர். எனவே தான் சிறி ங்கா இந்தியாவை நேரடியாகவும், முற்றுமுழுதாகவும் உதறித் தள்ளிவிடாமல் இந்தியாவின் சொல்கேட்டு நடக்கும் பிள்ளை போல நாடகமாடிக் கொண்டுள்ளது.

17 நவம்பர் 2005 சிறிலங்காவின் அரச தலைவருக்கான தேர்தலில் வெற்றியடைந்த மகிந்த ராஜபக்ச 27 டிசம்பர் 2005 இந்தியாவிற்கு அவரது (நக்குண்டார் நாவிழக்கார் என்பதற்கமைவான தன்மையை வெளிப்படுத்தினார்) பயணத்தை செய்தார். இந்தியா அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்கின்றது. சீனாவுடன் வர்த்தக உறவுகளில் மேம்பாட்டை ஏற்படுத்துகின்றது. ஆசியான் நாடுகளுடன் உறவை வளர்க்கின்றது. அண்டை நாடுகளுடன் கைகோர்க்கின்றது. இந்த வரிசையில் தமிழீத்துடனும் நல்லுறவினைப் பேணி அதனை அங்கீகரிப்பதற்கு ஏன் பின் நிற்க வேண்டும்?.

சிங்கள பேரினவாதிகளின் வஞ்சகமான செயற்பாடுகளில் ஒன்றாக இருக்கக்கூடிய இந்திய மத்திய அரசுடனான உறவை இந்தியா முறிக்க வேண்டுமென்றல்ல. அது என்றைக்கும் பேணப்படக்கூடிய வகையில் இலங்கையில் மலையகத் தமிழ் உறவுகள் உள்ளனர். இன்னும் உள்ளுறைந்திருக்கும் சில விடயங்களை வைத்து சிறிலங்காவுடன் இந்தியா உறவைப் பேணலாம்.உயிர்களை ஈகம் செய்து போராடும் ஈழத் தமிழரின் உயிர்களை இந்தியா எண்ணிப்பார்க்க வேண்டும். இந்தியா தனது வரலாற்றில் சுதந்திரத்திற்காகப் போராடியதையும் அதற்காக உயிர்களையே விலையாக்கியதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ராஜீவ் காந்தியின் பின் மண்டையில் சிறிலங்காவின் அடித்ததை மறந்தது போல, இந்தியா தமிழீழத்துடனான கசப்பான சம்பவங்களையும் மறக்க வேண்டும். தமிழீழமும் ஆறாயிரத்திற்கும் அதிகமான உயிர்களை இந்தியாவின் பிழையான செயலிற்கு பலியிட வேண்டி வந்ததை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் புத்தெழுச்சி பெற்றுள்ள தமிழ் தேசிய உணர்வோடு கைகோர்க்க வேண்டும். எல்லாம் ஒன்றையொன்று சாத்தியப்படுவதற்கு விலை மதித்திட முடியாத விடுதலைப் போரில் வித்தாகும் உயிர்களை உலக தமிழரே எண்ணிப் பார்த்து தமிழீழ அங்கீகாரத்திற்கு செயலாற்றுவது இன்றவசியமானது.

தன்னம்பிக்கை மிளிர்ந்ந தமிழினம் நாடொன்று இல்லாது ஏதிலி மனப்பான்மையோடு திரிகின்றதல்லவா? எனினும் ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பது தவறா? என்ற கவிஞர் காசி ஆனந்தனின் வரிகளுக்கு ஒப்பாக முப்பதாண்டுகளுக்கு மேலாக ஆயுதப் போராட்டம் செய்கின்றதே அதில் உள்ள உறுதி மனங்களில் படிந்திருந்த உணர்வை தட்டிவிடவல்லது தானே?. எனவே, பன்முகத்தன்மையோடு உருட்டி உருட்டிப் பார்க்கும் எவரும் ஒத்துக்கொள்வார்கள் தமிழருக்கென்றே நாடொன்று தேவையென்று. 'வேண்டும் போது பிரிந்து போகும் உரிமை பெற்ற தமிழகம் வேண்டும்" என்று குரல் கொடுத்த ம.பொ. சிவஞானம் சென்னை மாநிலத்தை தமிழ்நாடாக்க உழைத்தவர் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது திருத்தணியைத் தமிழ்நாட்டுடன் இணைத்தவர்களில் முன்னோடி அவர் உட்பட பலரின் போராட்டங்கள் தான் சில உரிமைகளை தமிழ்நாடு என்ற பொருளுக்குள் கொண்டு வந்து உள்ளுடனாக்கியது.

எனவே, போராடினால் தான் உரிமைகளைப் பெறலாம். சலுகைகளுக்காக வாழ்பவர்கள் தங்களையும் ஏமாற்றி தாம் சார்ந்த சமூகத்தையும் ஏமாற்ற வல்லவர்கள் என்பது உலகிற்கு தெரியாத விடயமல்ல. எனவே, சலுகைகளுக்காக இனத்திற்கு துரோகம் செய்ய முடியாது என்றெண்ணும் ஒவ்வொரு தமிழனும் வரலாற்றை உணர்ந்து தன்னினத்தின் துயரில் பங்கு கொள்கின்றான். விடுதலைப்போருக்கு பங்காளியாகின்றான். இன்று உலகம் வளர்ந்துள்ளது. இன்னும் வளர உழைக்கின்றது.

தமிழர் மட்டும் ஏன் அழிவுபட வேண்டும்? சிங்களப் பேரினவாதிகளினால் அழிக்கப்படும் இனமாகத் தமிழினம் தொடர்ந்தும் இருக்கக் கூடாதென்றால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழிரின் விடுதலைப் போர் அங்கீகாரம் பெற வேண்டும். இதற்கு, இன்று உலகப்பரப்பில் மாநில அரசை வைத்திருக்கும் தமிழ் நாட்டரசு துணிய வேண்டும். உலகத்திலேயே தமிழர் அதிகமாக வாழும் நாடு இந்தியா. அங்கு தமிழ்நாடென்ற மாநில அரசுள்ளதே இது தான் தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த அரசியல் சிந்தனையை வெளிப்படுத்தும் இடம்.

எங்களுடைய உறவுகளைப் பாதுகாக்க அவர்களின் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தமிழ்நாட்டு மாநில அரசு அங்கீகரிக்கின்றது என்று துணிந்து விட்டால் அது உலகத்தின் பார்வையில் புதிய சிந்தனையை பரப்பிவிடும்.

-கனகரவி

Comments