"இந்தப் போரில் நாங்கள் வெல்லுவோம். சிங்களப்படைகளுக்கு எமது மண்ணிலேயே சமாதி கட்டப்படும்" இவ்வாறு மணலாறு கட்டளைப பணியக ஆளுகைப் பொறுப்பாளர் சிவதேவன் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்து விசுவமடுவில் இயங்கும் முரளி முன்பள்ளி சிறார்கள், பெற்றோர்கள் சார்பாக ஆயிரம் உலர்உணவுப்பொதிகளை மணலாறுப் போராளிகளுக்கு வழங்கும் நிகழ்விலும், முன்பள்ளிக் கல்வியை முடித்துப் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளை வழியனுப்பும் நிகழ்விலும் நேற்றுக்காலை கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
முன்பள்ளி வளாகத்தில் ஆசிரியர் எஸ்.பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மைச்சுடரினை தமிழர்புனர்வாழ்வுக்கழக துணைநிறைவேற்றுப்பணிப்பாளர் நரேன் ஏற்றிவைக்க, தேசியக்கொடியை பிரமந்தனாறு வட்டப்பொறுப்பாளர் விடுதலை ஏற்றினார்.
இந்நிகழ்வில் மணலாறு கட்டளைப்பணியக ஆளுகைப்பொறுப்பாளர் உட்பட பல போராளிகளும் கலந்துகொண்டனர். களமுனைப்போராளிகளுக்கு வழங்குவதற்கான ஆயிரம் உலருணவுப்பொதிகளை முன்பள்ளிச் சிறார்களிடம் இருந்து ஆளுகைப் பொறுப்பாளர் பெற்றுக்கொண்டார். அந்தப் பொதிகளில் உங்களுக்கு என்றும் பக்கபலமாக இருக்கும் முரளி முன்பள்ளி சிறார்கள் என எழுதப்பட்ட வாசகங்களும் இணைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து ஆளுகைப் பொறுப்பாளர் உரையாற்றுகையில் இந்தக் குழந்தைகள் என்னைப் பார்த்து இந்த கொடிய போரை எங்களிடம் விட்டுவிடுவீர்களா? என்று கேட்பது போல் இருக்கிறது. எமது போராளிகள் மணலாற்றில் சேற்றிலும் சகதியிலும் வெள்ளத்திலும் நின்று பகைவனை எதிர்த்து அர்ப்பணிப்போடு போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்போரில் நாங்கள் வெல்வது உறுதி. சிங்களப்படைகளுக்கு எமது மண்ணிலேயே சமாதிகட்டப்படும் என்றார்.
களமுனைப்போராளிகளுக்கான வாழ்த்துரையை முன்பள்ளி மாணவி அருட்குமரன் ஆதித்தியா வாசித்துக் கையளித்தார். பாடசாலைக் கல்வியில் காலடிவைக்கப்போகும் சிறார்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டதுடன் வாழ்த்துரைகளும் இடம்பெற்றன. கருத்துரைகளை விசுவமடுப்பிரதேச தமிழர்புனர்வாழ்வுக்கழக பணிப்பாளர் க.ஜெயசசிங்கம், கிளிநொச்சி வலய ஓய்வுபெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளர்களான சி.சிவநாதன், பொல் தில்லைநாதன் ஆகியோர் நிகழ்த்தினர். முன்பள்ளி ஆசிரியை நன்றியுரை வழங்கினார் இந்நிகழ்வில் பெருமளவிலான பெற்றோர்கள் முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.
Comments