3ம் இணைப்பு)இலங்கையில் போரை நிறுத்துமாறு வலியுறுத்தி திருமாவளவன் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம்

ஈழத் தமிழர் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும், சிறிலங்கா அரசாங்கத்துடன் இந்திய மத்திய அரசாங்கம் பேச்சு நடத்தி போர் நிறுத்தம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தினை இன்று தொடங்கியுள்ளார்.

[3 ஆம் இணைப்பு: மேலதிக படங்கள், திருமாவளவன், நெடுமாறன் உரைகள்]

முன்னதாக சேப்பாக்கம் சென்னை விருந்தினர் மாளிகைக்கு முன்பாக உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறவிருந்தது. அப்பகுதியில் மாலை 5:00 மணிவரையே காவல்துறை அனுமதி வழங்கியது.

இதனையடுத்து சென்னையில் இருந்து 60 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மறைமலை நகரில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 4:00 மணிக்கு திருமாவளவன் உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கினார்.

உண்ணாநிலைப் போராட்டத்தினை கவிஞர் காசி ஆனந்தன் தொடங்கி வைத்தார்.



இப்போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களான மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன், திராவிட இயக்க தமிழக பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன், நடிகர் மன்சூர் அலிகான், கவிஞர் காசி ஆனந்தன், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்களான திருக்கச்சூர் ஆறுமுகம், மூர்த்தி மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.

உண்ணாநிலைப் போராட்டத்தினை வாழ்த்தி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என தொடர்ந்து போராடியும் எந்தவித பயனும் இல்லை. அதற்காக தம்பி திருமாவளவன் இத்தகைய போராட்டத்தை கையில் எடுத்துள்ளார். அவருக்குப் பின்னால் ஆறரைக் கோடி தமிழ் மக்கள் இருக்கின்றனர் என்றும் அவருக்குத் துணையாக நாங்களும் நிற்போம் என்றும் வாழ்த்துகிறேன் என்றார் அவர்.



உண்ணாநிலைப் போராட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் திருமாவளவன் பேசியதாவது:

ஈழத்தில் ஐந்து லட்சம் தமிழர்கள் அழிக்கப்பட்டு வருகின்றனர். தமிழர்களை சிங்களப் போர்ப் படையினர் கடல் வழியாகவும், தரை வழியாகவும் சுற்றிவளைத்து தாக்கி வருகின்றனர்.

அனைத்துலக நாடுகள் தடை விதித்துள்ள கொத்துக் குண்டுகளை போட்டு இலங்கைத் தமிழர்களை அழித்து வருகின்றனர். பல்வேறு நாடுகளின் துணையுடன் இந்தத் தாக்குதல் நடத்தப்படுகிறது.

ஒரு இனத்தை அழிக்க திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மனிதநேய அடிப்படையில் அதனைத் தடுத்து நிறுத்த இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது. அதனைவிட இந்திய அரசாங்கம் அதனை முன்னின்று நடத்தி வருகிறது என்பது கொடுமையிலும் கொடுமை.

இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற தமிழகத்தில் அடுக்கடுக்கான போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது.



தமிழக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுவினர் புதுடில்லிக்குச் சென்று இந்தியப் பிரதமரைச் சந்தித்து முறையிட்டோம்.

சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரையில் நீண்ட மிகப்பெரிய மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு அரசியல் கட்சியினரும், தமிழ் அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இவ்வளவையும் தாண்டி சிங்கள ஆட்சியாளர்களுக்கு போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று சொல்லும் மனம் இந்திய அரசுக்கு இல்லையா? இது மிகவும் வேதனை அளிக்கிறது.

தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்படுகின்றது.

"இந்திய அரசே இனவெறிப் போரை நிறுத்து"

"அமைதி பேச்சுவார்த்தை நடத்து"

என வலியுறுத்தி ஆறரைக் கோடி தமிழ் மக்களின் சார்பில் இந்தப் போராட்டம் நடத்தப்படுகின்றது. இதையும் பொருட்படுத்தவில்லை என்றால் தமிழக மக்கள் தக்க நேரத்தில் பதிலடி கொடுப்பார்கள்.



இந்த ஆறு மாத காலமாக சிங்களப் படையினர் உக்கிரத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். ஆறு மாதமாக தமிழ் மக்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

தமிழகத்தின் முதல் குடிமகன் என்ற தகுதியுடைய முதல்வர், தனது தள்ளாத 86 வயதிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் புதுடில்லிக்குச் சென்று பிரதமரை வலியுறுத்திய போது, பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்பப் போவதாக பிரதமர் உறுதியளித்தார்.

ஒரு மாத காலமாகியும் இதுவரை அவரை அனுப்ப எந்தவித முயற்சியும் செய்யப்படவில்லை. இப்போது மருத்துவர் ஐயா இராமதஸ், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, நானும் சென்று முதலமைச்சரிடம் மனு அளித்தோம்.

அம்மனுவில், இந்திய அரசாங்கம் குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் கூறப்பட்டிருப்பதன் படி அமைதி பேச்சு முயற்சியில் ஈடுபட வேண்டும். குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டோம்.

முதல்வரும், பிரதமரிடம் வலியுறுத்துவதாக உறுதியளித்தார். ஆனாலும் கூட ஓய்வில்லாமல் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. சின்னஞ்சிறு பிள்ளைகளைக் கூட கொத்துக்குண்டுகளை வீசி கொல்கின்றனர்.

இந்நிலையில் இந்திய அரசாங்கம் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனனை கொழும்புக்கு அனுப்பப் போவதாக தெரிவித்துள்ளது. அவர்கூட கொழும்புக்குப் போவது ஈழத் தமிழர் சிக்கலுக்காக அல்ல என்றும், வேறு அரசியல் காரணங்களுக்காக செல்வதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிங்கள நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஒருவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். சிவ்சங்கர் மேனன் வந்தாலும் வந்தாலும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த மாட்டார் என்றும், எங்களின் போர்ப்படைத் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கம் கொடுக்க முடியாது என்று தெரிகிறது. முதலமைச்சர் அவரின் சக்திக்கு இயன்றதை செய்துவிட்டார். மத்திய அரசாங்கம் அவரையும் அவமதித்து ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் அவமதித்துள்ளது என்ற இறுதிக் கட்டத்தில்தான் இப்போராட்டம் நடத்தப்படுகின்றது என்றார் அவர்.

புதினம்



Comments