புதுவருட நாளில் சிறிலங்கா வான்படையின் குண்டுத் தாக்குதலில் 5 அப்பாவி பொதுமக்கள் படுகொலை; 28 பேர் காயம்



கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசுமோட்டையில் ஆங்கில புதுவருடத்தின் முதல் நாளான இன்று சிறிலங்கா வான்படை மூன்று தடவைகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்களில் பெண் ஒருவர் உட்பட 5 போ் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

முரசுமோட்டை வெளிக்கண்டல் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று வியாழக்கிழமை காலை 8:30 நிமிடத்துக்கும் பின்னர் முற்பகல் 11:30 நிமிடத்துக்கும் மீண்டும் பிற்பகல் 4:30 நிமிடத்துக்கும் என மூன்று தடவைகள் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.



நிரந்தரமாகவும் இடம்பெயர்ந்தும் வாழ்ந்து வந்த பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை இக்குண்டுத் தாக்குதலை நடத்தின.

இதில் பெண் ஒருவர் உட்பட 5 அப்பாவி பொதுமக்கள் உடல் சிதறி படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலினால் குழந்தைகளும் சிறுவர்களும் பேரவலத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

பொதுமக்களின் 17 வீடுகள் முற்றாக அழிந்துள்ளதுடன் 9 கடைகள் சேதமடைந்துள்ளன. பயணிகள் பேருந்து ஒன்றும் சேதமாகியுள்ளது.



வெள்ளத்தினால் காப்பழிகளில் நீர் நிரம்பியதனால் பொதுமக்கள் பெரும் அவலத்துக்கு உள்ளாகினர்.

முரசுமோட்டையில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நேற்று நடத்திய தாக்குதலில் 4 பொதுமக்களை படுகொலை செய்துள்ளதுடன் மேலும் 15 பேரை படுகாயப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று மீண்டும் அதே பகுதியில் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதலை நடத்தி 5 பொதுமக்களை படுகொலை செய்துள்ளதுடன் மேலும் 28 பேரை காயப்படுத்தியுள்ளது.

நேற்றும் இன்றும் சிறிலங்கா அரசாங்கம் நடத்திய தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்களின் மூலம் தமிழின அழிப்பினை திட்டமிட்டு மேற்கொண்டு வருவதனையே அதன் இலக்காகக் கொண்டுள்ளதாக வன்னி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.





துரைசாமி பிரசாந்தன் (வயது 48)

முத்துலிங்கம் செல்வராசா (வயது 28)

சரவணமுத்து இராசையா (வயது 67)

வேலுப்பிள்ளை அன்ரனி ஜோர்ஜ் (வயது 36)

இராசையாக வாசுகி (வயது 28)

ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.



செல்வரட்ணம் (வயது 28)

அற்புதராசா (வயது 66)

நிர்மலதீபன் (வயது 20)

தங்கம்மா (வயது 68)

கருநேசன் (வயது 32)

தம்பிப்பிள்ளை (வயது 60)

ஜெயலட்சுமி (வயது 45)

புஸ்பலதா (வயது 55)

விஜயகுமார் (வயது 28)

நாகேஸ்வரன் (வயது 45)

மைக்கல் தீபன் (வயது 17)

மைக்கல் (வயது 36)

அரிதாஸ் (வயது 28)

றஜிந்தன் (வயது 08)

சின்னவன் (வயது 16)

மகாலிங்கம் (வயது 50)

இரதன் (வயது 18)

அ.நாகம்மா (வயது 62)

சு.ரதி (வயது 30)

ஜெயறஞ்சினி (வயது 42)

யோகலிங்கம் (வயது 48)

விக்கினேஸ்வரன் (வயது 36)

ரங்கன் (வயது 26)

புஸ்பராசா (வயது 36)

விதுரன் (வயது 32)

ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

பெருமளவில் மக்கள் காயமடைந்த நிலையில் அவசரமாக உயிர் காக்க குருதி தேவைப்படுவதாக தருமபுரத்தில் இயங்கும் கிளிநொச்சி பொதுமருத்துவமனை வேண்டுகோள் விடுத்துள்ளது.





Comments