5-வது நாள் உண்ணாவிரதம்
இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், விடுதலைப்புலிகளுடன் நடக்கும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் கோரியும் செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு இருக்கிறார்கள்.
நேற்று 5-வது நாளாக இந்த உண்ணாவிரதம் நீடித்தது. 5 நாட்களாக உணவு சாப்பிடாததால், உண்ணாவிரதம் இருக்கும் 14 மாணவர்களும் மிகவும் சோர்வாக படுத்து இருந்தனர். அவர்களை டாக்டர் குழுவினர், உண்ணாவிரத பந்தலில் பரிசோதித்து வருகிறார்கள்.
வைகோ
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டு இருக்கும் மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினார். அவருடன் மாநில துணை பொது செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் க.சோமு, ஜீவன், மாவட்ட துணை செயலாளர்கள் ஆனந்தன், கருணாகரன், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் சதீஷ் பாபு, நகர செயலாளர் ராமலிங்கம் ஆகியோரும் சென்றனர்.
பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
பச்சை துரோகம்
இலங்கையில் தமிழர்கள் மீது ராஜபக்சே அரசு நடத்தி வரும் தாக்குதலுக்கு, இந்திய அரசு துணை போகிறது. ராடர்கள், பணம், நிபுணர் குழுக்களையும் இந்திய அரசு அங்கு அனுப்பி இருக்கிறது. இது பச்சை துரோகம். மன்னிக்க முடியாத செயல்.
சிங்கள ராணுவத்தின் கொடுமைகளை, ஜப்பான், ஜெர்மன் போன்ற நாடுகள் கண்டித்து உள்ளன. ஆனால் இந்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது.
தமிழக முதல்வர், 40 எம்.பி.க்களும் ராஜினாமா செய்வார்கள் என்றும், டெல்லி சென்று பேச்சு நடத்துகிறேன் என்றும், பிரதமரை சந்திக்கிறேன் என்றும், நம்மை ஏமாற்றிக்கொண்டே வாய்தா கொடுத்து வருகிறார்.
இவ்வாறு வைகோ கூறினார்.
ரூ.10 ஆயிரம் நிதி
உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு, வைகோ ரூ.10 ஆயிரம் நிதி வழங்கினார். அதை மாணவர்கள், துண்டு ஏந்தி பெற்றுக்கொண்டனர். 5-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் 14 மாணவர்களுக்கும் வைகோ பொன்னாடை போர்த்தினார்.
உண்ணாவிரதம் இருந்து மயங்கி விழுந்து, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் கெம்பு குமார், ஆறுமுக நயினார் ஆகியோரை ஆஸ்பத்திரிக்கு சென்று வைகோ பார்த்தார்.
Comments