இடம்பெயரும் பொதுமக்கள் மீது தொடரும் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல்: 6 பொதுமக்கள் படுகொலை: 15 பேர் படுகாயம்

இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீதும் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீதும் சிறிலங்கா படையினர் நேற்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 6 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சிறிலங்கா படையினரின் படை நடவடிக்கைகள் காரணமாக சுண்டிக்குளம் பகுதியில் தங்கியிருந்த மீண்டும் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது படையினர் நேற்று வியாழக்கிழமை காலை கண்மூடித்தனமாக எறிகணைத் தாக்குதல் நடத்தினர்.

இதில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இராசரத்தினம் பாக்கியம் (வயது 37)

கிருஸ்ணமூர்த்தி நிதர்சனா (வயது 19)

இராமசாமி கிருசாமி (வயது 65)

மகேஸ்வரி (வயது 18)

வினோத் அஜித்தா (வயது 08)

ஜெயராசா ரஞ்சினி (வயது 20)

தமிழ்நாதன் அன்ரனி

கலையரசன் கீதா (வயது 28)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களின் பெயர் விவரம் கிடைக்கப்பெறவில்லை.

சிறிலங்கா படையினரின் தாக்குதல்களினால் கல்லாறு, தர்மபுரம் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் பொதுமக்களை இலக்கு வைத்து படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

விசுவமடு நகர்ப்பகுதியிலும் நேற்று சிறிலங்கா படையினரின் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன.

புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது நேற்று மாலை 5:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் ஜோன் மேரி சம்மாட்டி (வயது 58) மற்றும் சண்முகம் செல்வராஜா ஆகிய இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களான

சியாந்தன் (வயது 10)

சுதர்சன் (வயது 12)

சுலக்சன் (வயது 15)

ஓரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களான

ஜேர்ஜ் சுஜீவன் (வயது 17)

ஜோஜ் சுகந்தன் (வயது 29)

மற்றும்

ஜெகன் (வயது 26)

இராமஜெயம் (வயது 50)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

சிறிலங்கா படையினரின் தொடர் எறிகணைத் தாக்குதல்களினால் தர்மபுரம் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த பொதுமக்கள் பேரவலப்படுகின்றனர்.

பொதுமக்களை படுகொலை செய்யும் வகையில் சிறிலங்கா படையினரின் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற வண்ணம் உள்ளன.

கல்லாறு, சுண்டிக்குளம் மற்றும் பிரம்மந்தனாறு வடக்குப் பகுதி மீதும் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை, சிறிலங்கா படையினரின் தொடர் தாக்குதல் காரணமாகவும் வல்வளைப்பு காரணமாகவும் ஒரு லட்சம் மக்கள் குறுகிய பாதை வழியாக மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர்.

சிறிலங்கா படையினரின் தாக்குதல்களினால் படுகாயமடையும் பொதுமக்கள் விசுவமடு மகா வித்தியாலயத்தில் இயக்கும் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாதளவுக்கு அதற்கு அண்மையாகவும் படையினர் எறிகணைத் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.

அதேவேளை, புதுக்குடியிருப்பு பகுதி மீதும் நேற்று மாலை 5:00 மணியளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.



Comments