இலங்கை இராணுவத்துக்கு உதவுவதற்கு 81 இந்திய விமானப்படை அதிகாரிகள் பயணம் - வைகோ குற்றச்சாட்டு

தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களின் சாவுக்கும் இந்திய மத்திய அரசாங்கமே காரணமாகும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் இரா.செழியன் எழுதிய சமூதாய நதியில் அரசியல் அடிப்படை என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ புதிய நூலை வெளியிட முதல் பிரதியை வ.கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு பெற்றுக் கொண்டார்.

விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது, இலங்கையில் இராணுவத்துக்கு உதவ 81 இந்திய விமானப்படை அதிகாரிகள் அண்மையில் சென்னை விமான நிலையத்திலிருந்து சென்றுள்ளனர்.

மேலும், 3 கப்பல்களில் ஆயுதங்களை இந்தியாவும் பாகிஸ்தானும் வழங்கியுள்ளன. அங்கு நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் காயமடைந்துள்ளதாக செய்தியும் வந்துள்ளது. போர் தொடங்குவதாக அச்சுறுத்திக் கொண்டே இலங்கையில் தமிழர்களை ஒழிக்க இரு நாட்டு அரசும் கைகோர்த்து செயல்படுகின்றன.

இதில் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் இணைந்து ஒரு விடுதலை போராட்டத்துக்கு எதிராக ஆயுதங்களை வழங்கி இடைவிடாத தாக்குதல்களை நடத்தி வருவது உலக வரலாற்றில் இதுதான் முதல் முறையாகும். முதல்வர் கருணாநிதி நீலிக் கண்ணீர் விட்டு நாடகம் ஆடுகிறார்.

கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக் கண்ணு பேசுகையில், இரா. செழியன் 1983 இல் இலங்கையில் ரத்தக் கண்ணீர் என்று எழுதினார். தற்போது 25 ஆண்டுகள் ஆவதால் ரத்தக் கடலாக பெருக்கெடுத்துள்ளது. சனி பகவான் கோவிலில் ரணில் விக்ரமசிங்கவும் ராஜபக்ஷவும் வந்து நமது சாமியை கும்பிட்டு நமது மக்களையே அங்கு கொன்று குவிக்கிறார்கள் என்றார்.

இந்நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் தமிழ் மாநில செயலாளர் டி. லட்சுமணன், ஜார்க்கண்ட் பல்கலைக்கழக வேந்தர் ராகவன், ஆழிப்பதிப்பக உரிமையாளர் செந்தில்நாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

Comments