இனவழிப்பு செயற்பாடு குறித்து சர்வதேசத்தின் பதில்தான் என்ன?


கிளிநொச்சியை அரசுப் படைகள் கைப்பற்றியமையை ஒட்டி தென்னிலங்கைச் சிங்களவர்கள் வெடி கொளுத்தி, இனிப்புப் பரிமாறி, பால்சோறு பொங்கிக் கொண்டாட, மறுபுறத்தில் தலைநகரிலும் மேல்மாகாணத்தின் ஏனைய இடங்களிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழர்கள் வரிசையாகக் காத்து நின்றனர் - தம்மைப் பொலிஸில் மீண்டும் மூன்றாவது தடவையாகப் பதிவு செய்வதற்காக.

தமிழர் தேசம் கைப்பற்றப்பட்டமையை ஒட்டி, சிங்கள தேசம் ஆரவாரித்துக் கொண்டாடி மகிழ்கையில் - அந்த நேரம் பார்த்து - இந்தப் பதிவுக்கான அழைப்பைத் திடீரென விடுத்து, அதை முன்னெடுத்தமை ஈழத் தமிழரின் நெஞ்சத்தில் ஆழப் பதியும் விதத்தில் ஆப்பு இறக்கிய ஒரு வேலைதான் என்பதில் சந்தேகமில்லை.

இதுவரை புலிகளின் அரசியல் தலைநகராக இருந்த கிளிநொச்சியை இலங்கை அரசுப் படைகள் கைப்பற்றிய ஆரவாரத்தை ஊன்றி அவதானித்த சர்வதேச சமூகம், அந்த நடவடிக்கையின் பெயரால் அரங்கேறிய சில அனர்த்தங்களைக் கவனியாமலேயே அசட்டையாக இருக்கின்றமையை மன வேதனையுடன் சுட்டிக்காட்டியிருக்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

புலிகளின் தேசத்தைக் கைப்பற்றுதல் என்ற பெயரில் ஜெனிவாப் பிரகடனங்களுக்கு முரணான வகையில் தமிழர் தேசத்துக்கு எதிராகப் பெரும் போர்க் குற்றங்கள் இழைக்கப்படுவது மாத்திரமன்றி, தமிழ் மக்களுக்கு எதிராக இனவழிப்புப் படுகொலைக் கொடூரமும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றமையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அம்பலப்படுத்தி வெளிப்படுத்தியிருக்கின்றது.

தமிழர்களின் வாழ்வியல் கட்டுமானங்கள் - குறிப்பாக மருத்துவமனைகள், நிர்வாகக் கட்டமைப்புகள் போன்றவை - வேண்டுமென்றே திட்டமிட்ட முறையில் இலக்கு வைக்கப்பட்டு இலங்கைப் படைகளால் தாக்கி அழிக்கப்படுகின்றன என்பதை வேதனையுடனும், விசனத்துடனும் வெளிப்படுத்தியிருக்கின்றது தமிழ்க் கூட்டமைப்பு.

கிறிஸ்மஸ், புதுவருடம், தைப்பொங்கல் என்று இந்தப் பண்டிகைக் காலத்தில் தமிழர்களின் கட்டமைப்புகள் எவ்வாறு இலக்கு வைக்கப்பட்டன, அதனால் பொதுமக்களுக்கு - தமிழ் மக்களுக்கு - ஏற்பட்ட உயிரிழப்புகள், படுகாயங்கள், சொத்து மற்றும் உடைமை நாசங்கள் போன்றவற்றை விவரமாகத் தொகுத்து கூட்டமைப்பு அம்பலப்படுத்தியிருக்கின்றது.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள பொதுமக்களின் குடியிருப்புகள், வைத்தியசாலைகள் போன்றவற்றின் மீது கண்மூடித்தனமான குண்டு வீச்சுகள், ஷெல் தாக்குதல்களை நடத்தி, அப்பாவிச் சிவிலியன்களுக்குப் பேரிழப்புகளை ஏற்படுத்தும் அரச படைகள், அவற்றை மூடி மறைத்துப் புலிகளுக்கு இழப்புகளை ஏற்படுத்தியதாகத் தம்பட்டம் அடிப்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்தியிருக்கின்றது.

பண்டிகைக் காலத்தில் - கடந்த 19 ஆம் திகதி முதல் ஜனவரி 2 ஆம் திகதிவரை - அரசுப் படைகள் மேற்கொண்ட அட்டூழியத் தாக்குதல்களில் அப்பாவித் தமிழ் பொதுமக்களுக்கு ஏற்பட்ட நாசங்களையும், இழப்புகளையும் பட்டியலிட்டு விவரங்களுடன் வரிசைப்படுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது திட்டமிட்ட இனவழிப்பு என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

வன்னியில் சுமார் மூன்று லட்சத்து 30 ஆயிரம் மக்கள் உள்நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்து அந்தரிக்கும் போது - புலி அழிப்பு என்ற பெயரில் - இப்படி அந்த அகதிகள் தங்கியிருக்கும் பிரதேசங்கள் மீது கண்மூடித்தனமாகக் குண்டு வீச்சுகளையும், ஷெல், பீரங்கித் தாக்குதல்களையும் நடத்துவது திட்டமிட்ட இனவழிப்பன்றி வேறில்லை.

அத்துடன் இவ்வாறு இடம்பெயர்ந்த அகதிகள் உணவின்றி, உடையின்றி, சுகாதார வசதிகளின்றி, உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய வக்கின்றி அல்லல்படும்போது, அந்த மக்களுக்கான விநியோகங்களைக் கட்டுப்படுத்தி, பொருளாதார மற்றும் மருத்துவ வசதித் தடைகளை ஏற்படுத்துவது மனித குலத்துக்கு எதிரான போர்க்குற்றமாகக் கருதப்படவேண்டும் என்பதையும் தமிழ்க் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தகைய இனப்படுகொலை அல்லது இனவழிப்புச் செயற்பாடு குறித்து சர்வதேசம் மௌனம் சாதிப்பது மட்டுமல்லாமல், அத்தகைய இன அழிப்புக் கொடூரத்துக்கு ஒத்தாசை புரிவது போல இலங்கைத் தரப்புக்கு இராணுவ உதவிகளையும் தாராளமாக வழங்கிவருவது பேரதிர்ச்சிக்கும் பெரு விசனத்துக்கும் உரியது என்பதை ஈழத் தமிழர்களின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துக் காட்டியிருக்கின்றது.

அரசுப் படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டிருக்கின்றமையால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் குறுகியுள்ளது. அந்தப் பிரதேசத்துக்குள்ளேயே நான்கு, ஐந்து லட்சம் தமிழர்கள் இன்று வசிக்கின்றார்கள்.

அரசுப் படைகளின் இராணுவ நடவடிக்கை மேலும் விஸ்தரிக்கப்படும்போது, இந்த மக்கள் மேலும் பேராபத்துக்குள் சிக்கும் மோச நிலைமை ஏற்படும்.

இந்த இனவழிப்பு நடவடிக்கையை இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் இனியும் பார்த்துக்கொண்டு வாளாவிருக்கப் போகின்றதா?


Comments