உங்கள் பெயர்களை இங்கே குறிப்பிடும் அளவுக்கு நீங்கள் யோக்கியமானவர் அல்ல. அதனால் நீங்கள் நடத்தும் கட்சியின் பெயராலும் அமைப்பு மற்றும் ஆயுதக் குழுக்கள் பெயராலும் நீங்கள் தமிழ் ஈழ மக்களுக்கும் ஒட்டு மொத்தத் தமிழினத்துக்கு செய்த, செய்து வருகிற துரோகங்களை மனித குலம் ஒரு போதும் மன்னிக்காது என்பதை மட்டும் நினைவு படுத்த விரும்புகிறோம்.
கிளிநொச்சிக்குள் சிங்கள இனவெறி அரசின் இராணுவம் புகுந்த செய்தியைக் கேட்டுப் பரவசப்படும் உங்களின் மனதில் உள்ள கீழ்த்தரமான உணர்வுகள் பளிச்சிடுவது தெரிகிறது. ~தலைவனைப் பிடித்துத் தாருங்கள் ராஜீவ் காந்தி கொலை பற்றி விசாரிக்க வேண்டும் என்று சிங்கள அரசிடம் கெஞ்சும் கேவலத்தைச் செய்கிறீர்கள். வெட்கம் கெட்டு ஒரு பிராந்நிய வல்லரசு எனப் பெருமை பேசும் உங்களுக்கு என்ன சிறப்பு இதனால்? உங்கள் படையால் செய்ய முடியாமல் போன ஆற்றாமை உங்கள் கோரிக்கையில் வெளிப்படுகிறது.
ஈராக்கில் அப்பன் புஷ் செய்ய முடியாமல் போன வருத்தத்தில் மகன் புஷ் படையெடுத்து சதாமைக் கொன்றது போன்ற செயலில் நீங்கள் இறங்கி இருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், ஈழத்தில் எந்த இந்திய அரசு தோல்வி கண்டு போனதோ அதே இந்திய அரசு படை நடத்தி வெற்றி கண்டிருந்தால் அதுவே உண்மை வெற்றி.
ஈழத் தமிழனை இரண்டாம் பட்சமாக நீங்கள் நினைத்து வஞ்சம் தீர்ப்பதை நியாயமாகக் கொண்டாலும், தமிழனாகப் பிறந்து தமிழனாக வாழ்ந்து கொண்டே தமிழ் நாட்டில் அரசியல் நடத்தும் தமிழகக் காங்கிரஸ்காரருக்கு தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்படுவது கூடத் தெரியாமலா போனது? தமிழகத் தமிழனுக்கே துரோகம் செய்வதை விட வேறு நல்ல குணமே இல்லையா?
உலகமறிய இடம் பெற்ற அமைதிப் பேச்சுக்களை, இனவெறிச் சிங்கள அரசுடன் இணைந்து இடைநடுவிலே குழப்பி ஒரு போர்ச் சூழலை உருவாக்கியும், அந்தப் போரை மறைமுகமாக நடத்தியும் ஈழத் தமிழரைக் கொன்றொழிக்க இந்தியக் காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசு மேற்கொண்ட கபடத்தனம் நிறைந்த செயற்பாடுகளை உங்களின் கோரிக்கை இன்று வெளிப்படுத்தி விட்டது.
தமிழகக் காங்கிரஸ் கட்சியினர் உண்மையிலேயே தமிழர்களையும் தமிழகத்தையும் நேசிப்பவர்களாக இருந்தால், நேர்மையான மனித குணம் படைத்திருந்தால், ராஜீவ் காந்தி கொலை விசாரணையை நடுநிலை கொண்ட கமிஷன் மூலம் நடத்தி அதன் மூலம் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிவதை முன்னெடுக்க வேண்டும். ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணைகள் சந்தேகத்துககு இடமளிக்கும் வகையில் நடைபெற்று உள்ளதாகப் பலராலும் கண்டிக்கப் பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.
எனவே, அத்தகைய ஊழல் நிறைந்த விசாரணை முடிவுகளின் அடிப்படையில் இந்திய அரசால் விதிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் மீதான தடையும் கூட நீதிமன்றத்தில் எதுவித எதிர்வாதமும் இல்லாமலே, ஆதாரப்படுத்தப்படாத சாட்சியங்களின் அடிப்படையில் நீடிக்கப்பட்டு வருவதும் கடந்த 17 வருடங்களாக இடம்பெறும் அநீதியாகும். இத்தகைய அநீதியை முக்கியமாகத் தமிழக மக்களுக்கு மறைத்தும், அவர்களின் ஈழத் தமிழர் மீதான உணர்வுகளை மழுங்கடிப்பதற்காகவே பலரைப் பல ஆண்டுகள் சிறைகளில் போட்டும், அல்லது போடுவதாகப் பயமுறுத்தியும் கீழ்த்தர அரசியலை நடத்துவதே காங்கிரசின் சிறப்பாக இருக்க வேண்டுமா?
சிங்கள அரசுகள் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழரின் நிலத்தை, மொழியை, அரசியல், தொழில் மற்றும் கல்வித்துறைகளில் தமிழரின் வாய்ப்புகளைப் பறித்ததால் அவற்றிற்கு எதிராகப் நாம் போராடுவது குற்றமா? அதைத் தடுக்க உங்களின் ராஜீவ் காந்திக்கு யார் கொடுத்தார் அதிகாரம்? ஏம்மைக் காக்க என்று வந்து பின்னர் எமது உயிர் உடமைகளை அழித்துச் சிங்களத்தின் இனவெறி அரசியலுக்கு துணைபோகவா வேண்டும்?
மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழரின் வாக்குரிமையும் குடியுரிமையும் பறிக்கப்பட்டதும் தனிச் சிங்கள அரச மொழிச் சட்டம், உயர் கல்வி வாய்ப்பில் தமிழருக்கு எதிரான தரப்படுத்தல் முறை என்பனவற்றால் தமிழ் இனத்தின் அரசியல் மற்றும் சமூக பொருளாதார வளங்கள் சீரழிக்கப்பட்டதே. இவற்றுக்கு எதிரான உண்ணாவிரதம், மக்களின் சத்தியாக் கிரகம், தேர்தல் புறக்கணிப்பு என எல்லா வகையான அமைதி வழி அரசியல் நடவடிக்கைகளையும் தந்தை செல்வாவின் தலைமையில் கடைப்பிடித்தும் கிடைத்த பலன் என்ன?
30 வருடங்களுக்கு மேலாக மேற்கொண்ட தமிழரின் அரசியல் நடவடிக்கைகளை சிங்கள அரசு தனது தனிச் சிங்களப் பாதுகாப்புப் படைக் கட்டமைப்புகளாலும், சிறப்புச் சட்டங்கள், நீதிமன்றத் தீர்ப்பாயங்கள் மூலமாக எதிர்கொண்டதே அது ஜனநாயகப் பண்பா? நேர்மையான நியாயமான நீதி மறுக்கப்பட்டுச் சிறப்புத் தடுப்பு முகாம்களில் சித்திரவதையும் சிறையும் தமிழினத்தின் மீது தொடராகத் திணிக்கப்பட்டபோது அடைக்கலமும் ஆறுதலும் தந்த இந்தியாவும் இந்திரா காந்தியின் கொலையுடன் போனதா?
அன்றே எம்மை அண்ட விடாது விரட்டியிருந்தால் இன்று எமக்கு இந்த இழிநிலையும் உங்களின் எக்காளச் சிரிப்பும் கிடைக்காதே. இலங்கை அரசின் வன்முறைக்கு எதிராக முகங்கொடுக்க முடியாது தத்தளித்த தமிழர் தலைவர்கள் தமிழகத்தையும் இந்திய மத்திய அரசையும் நாடியதும் எதற்கு? தாய்-சேய் உறவு, தமிழ் என்ற தொப்புள் கொடித் தொடர்பு என்ற துணிவில்தானே நாடி ஓடி வந்தோம். இந்த வகையில் இன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி 1960 களில் இருந்தே முக்கிய தமிழகப் பிரமுகராகத் திகழ்ந்தவர்தானே.
அவருடைய முக்கிய சகாவான திரு. அப்பாப்பில்ளை அமிர்தலிங்கம் கொலையுண்டமை அவருக்கு மன்னிக்கப்பட முடியாத குற்றமாகப்படலாம். அதே போன்றே அவரின் கையாள் போன்று நடந்துகொண்ட பத்மநாபாவின் கொலையும் அவருக்குத் தென்படுவதில் ஆச்சரியமே இல்லை. ஆனால், ஈழத் தமிழரின் நியாயமான உரிமைகளை வென்றெடுக்கப் முன்னின்று விட்டுப் பின்னர் எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கும் துரோகத்தைச் செய்தவர்களில் மேற்குறிப்பிட்ட இருவரும் முக்கிமானவர்கள். எனவே, இவர்களின் மரணம் ஈழத் தமிழரைப் பொறுத்தவரை கவலைக்குரியதல்ல என்பதே உண்மை நிலை.
அதற்காக இவர்களின் கொலைகளைக் காரணம் காட்டிச் சிங்களத்தின் தமிழின அழிப்புக்கு இன்று கலைஞர் துணைபோவது ஒரு இனப்பற்று மிக்க மனிதருக்கு எப்படிப் பொருந்தும்? எனவே கலைஞரும் அவரது மகள் கனிமொழியும் எவ்வளவுதான் ஆறுதல் மொழியோ அடுக்கு மொழியோ பேசினாலும், ஈழத் தமிழர் மீதான சிங்களத்தின் இன அழிப்புப் போருக்கு முடிவு காண்பதும், அவர்களுக்கான தாயக மீட்புக்கு உதவதும் போன்ற வேறு ஒரு சிறந்த பணி இருக்க முடியுமா? இவற்றை இவர்கள் முழுமூச்சாகச் செய்து முடிக்காமல் என்னதான் பேசினாலும் அவை எல்லாம் வெத்து வேட்டுக்களாகவே இருக்கும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மன்னார் மற்றும் வன்னிப் பிரதேசங்களின் மீது 1700 தடவைகளுக்கு மேலாக விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாக இலங்கை விமானப்படை கூறியிருக்கிறது. தொடர்ந்தும் இவற்றை நடத்திக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு தடவையும் குறைந்தது நான்கு குண்டுகளை வீசுவதாகக் கணக்கிட்டாலும் மொத்தம் 6,800 குண்டுகள் வீசப்பட்டுள்ளமை புலனாகும். இவை ஒவ்வொன்றும் சராசரியாக 500 கிலோ வெடிப்பொருளைக் கொண்டுள்ளன. இவற்றைவிடப் பல்குழல் பீரங்கிகள், இரவு பகலாக வீசப்படும் எறிகணைகள் என்பவற்றின் எண்ணிக்கையோ 2 இலட்சத்தையும் கடந்து இன்னும் தொடருகின்றன. இத்தனைக்கும் இப்பிரதேசத்தின் பரப்பளவோ வெறும் 50 சதுர மைல் விஸ்தீரணம் கூட இல்லை.
இவை அழித்து வரும் மனிதர் மற்றும் கால் நடை உட்பட்ட பல்வேறு உயிரினங்கள், வன வளம் மற்றும் தாவர வளங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. வெளியேற்றும் நச்சுப் புகைகளும் வாயுக்களும் எத்தகைய உயிராபத்தை விளைவிப்பவை என்பதை வெளி உலகத்துக்குத் தெரிய விடாது ஐ.நா. தொண்டர் அமைப்புக்கள் உட்பட எவருமே அங்கு போக முடியாதவாறு அரசு தடை செய்து உள்ளது. மரங்கள் முறிந்தும் எரிந்தும் அனைத்து இயற்கை வளங்களும் அழிக்கப் பட்டு விட்டன. அமைதிக் காலத்தில் புலிகளினால் நடைமுறைப் படுத்தப் பட்டு வளர்த்த பனை மரங்கள் அரச படைகளின் காவல் அரண்களில் மரணித்துக் கிடக்கின்றன. கரையோர மண்ணரிப்புக்கு எதிராக வளர்க்கப்பட்ட பல இலட்சம் சவுக்கு மரங்கள் பாதுகாப்புக் காரணங்கள் எனக் கூறி இராணுவத்தால் அழிக்கப்பட்டு விட்டன.
மூன்று இலட்சம் வரையான மக்கள் தொடர் இடப்பெயர்வுகளால் அகதிகளாகி அல்லல் பட்டு வருகின்றனர். உணவு, உடை, உறையுள் என்ற அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டவர்களாய் இரவு பகல் குண்டு மற்றும் எறிகணை வீச்சுக்களுக்கு முகம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர��
�. உழைப்பும் ஊதியமும் மறுக்கப்பட்டு உளவுரண் சிதைக்கப்பட்டு உயிர்ப் பறிப்புக்கும் ஊனப்படுத்தலுக்கும் இரத்தமும் சதையும் நித்தமும் சிந்தும்: வாழ்வுக்கும் தள்ளப்பட்டு பாம்புக்கடிகளாலும் வதைபடும் சோகம் எவருக்குமே புரியாதவை.
கிளிநொச்சி பிடிக்கப் படும் வரை ஊமையாய் இருந்துவிட்டுக் கிளிநொச்சி பறிபோனதும் பிரபாகரனையும் பிடித்துத் தாருங்கள். எங்கள் தலைவர் ராஜீவ் காந்தியின் உயிரைப் புலிகளே பறித்தனர் அதனால் புலிகளின் தலைவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் வீரப்ப மௌலி அறிக்கை விட்டுள்ளார். இத்தனை காலமும் அரசியல் தீர்வு என அறிக்கை விட்டு இந்திய மத்திய அரசும் காங்கிரசும் ஆடிய நாடகம் இப்போது எங்கே போனது? அப்படியானால் வழக்கு எனக் கூறி 26 பேருக்கு மரண தண்டனை விதித்தீர்களே அந்த வழக்கு யாருக்காக ஏன் நடத்தப்பட்டது?
இத்தனை வருடங்கள் கண்ணை மூடிப் பாசாங்கு காட்டிய மர்மம் என்ன? இந்தியக் காங்கிரஸ் கட்சி உண்மையான நீதி விசாரணையை விரும்புவதாக இருந்தால் ஒரு சர்வதேச விசாரணைக்கு இந்த வழக்கை எடுத்துப் போயிருந்தால் அதன் உண்மை நோக்கம் தெளிவாகத் தெரியும். ராஜீவ் காந்தி கொலையில் பல வெளிநாட்டு அரசுகளும் உள்நாட்டு அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்டிருப்பதும் அதன் விசாரணையில் பல மோசடிகள் இடம்பெற்றிருப்பதும் பலராலும் வெளிப்படுத்தப்பட்டும் அவை பற்றி எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாதது ஏன்?
தற்கொலைதாரி ஒரு ஈழத் தமிழர் என்பதாலும் அதனைப் புலிகளே செய்திருப்பர் என்ற கோணத்தில் வழக்கின் திசை திருப்பப்பட்டதற்கான ஆதாரங்கள் இப்போதும் வெளியாகும் நிலையில் எப்படிப் பழியைப் புலிகள் மீது சுமத்தலாம்? புலிகளை இந்திய நீதி மன்றத்தில் சமூகம் அளிக்கவோ அவர்கள் சார்பாக எவரும் வாதிடவோ முடியாதபடி தடைசெய்து விட்டு அந்தத் தடையை இரண்டு வருடத்துக்கு ஒரு தடவை புதுப்பித்து அதுவே நீதி எனக் கொக்கரிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
ஈழத் தமிழர் அழிவையும் இந்தியத் தமிழ் மீனவர் அழிவையும் செய்து வரும் இலங்கையின் சிங்கள அரசின் கைக் கூலிகளாக இருந்து சொந்த நாட்டையும் சொந்த இனத்தையும் காட்டிக் கொடுக்கும் தமிழ் நாட்டுக் காங்கிரசுக்கும் கட்ட பொம்மன் ஊமைத்துரையைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? இத்தோடு புலிகள் இயக்கமும் ஈழத் தமிழினமும் அழிந்து போகலாம், ஆனால் உங்களின் ஈனப் புத்தியால் உங்களின் இந்தியத் தாய்த் திருநாடும் அழிந்து போவது உறுதியாகத் தெரிகிறது. வடக்கிலும் மேற்கிலும் கிழக்கிலும் ஆபத்தான எதிரிகளையும், தெற்கிலே ஒரு ஆபத்தான நண்பனாகச் சிங்களவனையும் தேடிக்கொண்டு விட்ட பின் தென் இந்தியாவுக்கும் எந்த அளவுக்குப் பாதுகாப்பும் அமைதியும் கிடைக்கும் என்பதை உணரும் அறிவு இருந்தால், தமிழக மற்றும் இந்திய வாக்காளரும் சிந்திக்க வேண்டிய காலம் இது.
-ம.எதிர்மனசிங்கம்-
தமிழ்நாதம்
Comments