அன்புள்ளங்களே ஏக்கம் கலக்கம் ஏனோ!

புலம்பெயர்ந்து வாழும் என்னருமைத் தமிழ் மக்களே! உங்களில் நானும் ஒருவன் என்பதால் உங்கள் உள்ளங்களை வாட்டும் கலக்கத்தை நான் அறிவேன். ஆனால் உங்களுக்கு அந்தக் கலக்கம் ஏன்? கலக்கம் வேண்டவே வேண்டாம்.

அண்மைய நாட்களில் தமிழீழத் தாயகம் தாங்கொணாச் சதிவலைக்குள்ளும் சொல்லொணாக் குண்டுப் பொழிவிற்குள்ளும் சிக்கித் தத்தளிக்கிறது. அதனால் உங்களது அச்ச உணர்வுகளையும் சோர்வுகளையும் நான் உணர்கிறேன். உலகத் தமிழர் தலைவர்கள் எல்லாம், இது தோல்வியல்ல,

விடுதலைப்போரில் தோல்வி என்பது கிடையாது. அதிலும் புலிகள் தோற்கவே மாட்டார்கள் என்று தமிழர்களுக்கு உரமூட்டிக்கொண்டிருக்க, கவிஞர் வைரமுத்து கிளிநொச்சி வீழ்ந்தது. என்நெஞ்சில் பேரிடி வீழ்ந்தது என்று தன் ஆற்றாமையை வெளியிட்டார். உங்களது சோர்வை இத்தகைய ஆற்றாமைச் சொற்கள் கூட்டக்கூடும். அதெல்லாம் பொதுவான இயல்பு உணர்ச்சி தான்;

ஆனால், தமிழீழமக்கள் இப்படியெல்லாம் மனமுடைந்துவிடக்கூடாது. எங்கள் தலைவனுடைய செயற்றிறத்தில் திட்டமிடலில் நம்பிக்கை கொள்ளுங்கள்.

கடந் 32 ஆண்டுகளின் முன்னர் பொன்னாலையில் தொடங்கிய விடுதலைப்போர் எத்தனையெத்தனை சவால்களை எதிர்கொண்டு வெற்றிகண்டு வளர்ந்திருக்கிறது. இதையெண்ணிப் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.

எனவே, அன்புத் தமிழ்மக்களே கூடவேகூடாது நீங்கள் சோர்ந்துவிடக்கூடாது. இப்போதுதான் நாங்கள் மிக்க ஊக்கத்துடன் அணிசேர்ந்து நிற்கவேண்டும். எங்களுடைய தலைவன் எண்ணித் தெளிபவன். வள்ளுவனைத் தன் வழிகாட்டியாகக் கொண்டவன். அவனுக்குத் தெரியும் எப்போது எது செய்யவேண்டும் என்பது.

ஐயன் வள்ளுவன் கூறுவான்

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்


செயலின் கடுமை எனது ஆற்றல்; பகைவனின் ஆற்றல், எனக்குள்ள துணை எதிரிக்குள்ள துணை எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்த செயற்படு
வலியறிதலில் இப்படிக் கூறிய வள்ளுவன் செயல்வகையில்

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யாலம் கெடும். என்று சொன்னான்

இந்த இடத்திலே தான் எங்களுடைய தலைவன் சரியாக எண்ணித் தெளிந்து கிளிநொச்சியை விட்டான். மாற்றான் மாபெரும் வல்லரசுகளது பின்கதவுத் துணையுடன் ஆயுதவலிவுடன் நிற்கிறான்.

களமுனையிலேயே இந்திய அமெரிக்க பாகித்தானிய சீன படைவல்லுனர்கள் நின்று வழி காட்டுகின்றனர். செய்தக்க செய்யாது இழப்புகளை ஏற்க விரும்பாது புலிகள் பின் வாங்கினர்.

தமிழகத் திலே வாழக்கூடிய ஏழு கோடித் தமிழர் களையே, அவர்களது உணர்வெழுச் சியையே தூக்கியெறிந்து விட்டு எமக்கும் உள்வீட்டுக்காரன் போல் இருந்து கொண்டு வடவாரியப் பார்ப்பனீயம் கீழறுப்புச் செய்ய, தமிழினத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன் சொன்னதுபோல் பிறந்ததுகள் எதிரிக்குத் துணைநிற்க, இத்தனையையும் எதிர்த்து நிற்கிறானே எம்தலைவன்:

எத்தகு ஆற்றல்? எத்துணை மதிநுட்பம்? எண்ணித் தெளிகிற செப்பம்:

அந்தத் தலைவனுக்குத் தெரியும் எது எப்போது எங்கே செய்வதென்று. எனவே தான் கிளிநொச்சி விடப்பட்டது: மேற் கூறிய வள்ளுவனது வழிகாட்டல் அதுதான்.

எப்போதும் பொய்யே பேசுகிற சரத்பொன்சேகா கிளிநொச்சிச் சமரிலே 12.000 படையினர் படுகாயம் அடைந்தனர் என்ற கூறினார் என்றால், இன்னும் எத்தனையாயிரம் படைவீரர் படுகாயம் அடைந்திருப்பர் என்பது உங்களுக்கு விளங்கும். இப்படியொரு நிலையிலும்

புலிகள் கிளிநொச்சியை விட்டனர் எனின் அதற்கான போரியல், அரசியல் கரணியம் இருக்கும். நாம் அதை அறியாது, ஐயோ! மட்டக்களப்பை விட்டனர், மன்னாரை விட்டனர், மடுவை விட்டனர், ப+நகரியை விட்டனர், இப்போது கிளிநொச்சியையும் விட்டனர், இனியெங்கே போவது? எம் வன்னி மக்களின் நிலையென்ன? என்று பதறாதீர்கள்.

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல். – என்கிறான் வள்ளுவன்

செய்யத்துணிதலும் துணிந்த பின் செயலில் எழக்கூடிய இடையூறும் செயலை மேற்கொண்டு முடித்த பின் அச்செயலால் கிடைக்கக்கூடிய பயனையும் அளவிட்டுச் செய்க. பயன் சிறிதாகிப் பாடு பெரிதானால் செய்யாதே என்பது வள்ளுவனின் அறிவுரை இதைத்தான் இன்று வரை எமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் செய்கிறார்.

வாகரை தொடங்கி கிளிநொச்சி வரை தற்காப்பு யுத்தம் மட்டுமே தான் விடுதலைப் புலிகள் செய்தனர். செய்கின்றனர். போரிடுவதில் உள்ள பயனிலும் விட்டுவிலகுவது பயன் அதிகம் என்றே விலகினர். ஒவ்வொரு விடுகையிலும் அடுத்த கட்டத்துக்கு எதிரிக்குப் பொறி வைத்து விட்டனர். அதனால், எதிரி அடைந்த இழப்புகள் எண்ணிலடங்காதவை. இந்தக் கிளிநொச்சி விடுகையில் எதிர்பார்த்து பயனுக்கு மேலாக எதிர்பாராத பயன் ஒன்று கிடைத்துள்ளதே.

அதுதான், சமாதானப் பேச்சுக் காலத்தில் புலிகளைத் தான் வலுவிழக்கச் செய்ததால் தான் படையினர் கிளிநொச்சியைப் பிடித்தனர் என்று திருவாய் மலர்ந்திருக்கிறாரே ரனில். இவர்களது சமாதானப் பேச்சு எத்தகையது என்பதை உலகிற்குக் காட்டிவிட்டாரே.

எனவே, நாங்கள் கலங்கவேண்டிய தேவை இல்லை.

தமிழர் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு “புலம்பெயர்; நாடுகளில் வாழும் தமிழ்மக்கள் அத்தனை பேரும் ஒன்றிணைந்து விடுதலைப் போரை முன்னெடுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த வேண்டுகோளை ஏற்று வெளிநாட்டுத் தமிழர் அனைவரும் ஒன்றுபட்டு ஈகத்தடன் விடுதலைப் போருக்குத் தோள்கொடுப்போம்.


ஒரு படை எவ்வாறு பகைப் படையை வெல்ல இயலும் என்று இலக்கணம் வகுத்திருக்கிறான் வள்ளுவன்.

பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்

போருக்கு அணியம் செய்யும்போது ஐந்து துறை களை எண்ணித் தொடங்கு. இந்த ஐந்தும் முறையாக அமைந்தால் வெற்றி என்று அறிவுரை கூறு கிறான்.

பொருள் முதல் போரிடும் இடம் வரை ஐந்து போருக் குரிய துறைகளிலே இந்த ஐந்தையும் வள்ளுவன் ஒழுங்கு முறையில் வைக்கும்போது போரிடற்கு ஏற்ற இடத்தைக் கடைசியில் வைத்தும் பொருளை முதலில் வைத்ததும் ஏன்?

போரிடும்போது அனைத்துப் படைவளங்களையும் வழங்குவது பொருள் ஒன்றே. எனவே, போரின் வெற்றிக்கு (பொருள்) பணம் வேண்டும். அது தங்குதடையின்றிக் கிடைக்கிறபோது, தன் உயிரையே ஈயத் தயங்காது களத்தில் நிற்கிற போராளி மேலும் வலுப்பெறுகிறான்.

அந்த வலுவே வெற்றிதரும் அந்த வலுவை வழங்குகிற சக்தி புலம்பெயர்ந்து வாழும் எங்களிடம் இருக்கிறது. நாம் அனைவரும் ஈகத்துடன் ஒன்றுபட்டு பொருள் வழங்கி போராளியை வலுவேற்றுகிறபோது, அடர்ந்து வருகிற எதிரிப்படை சிதறடிக்கப்படும். அந்த வலுவை வழங்குவதோடு உலகமடங்கலும் எமது போராட்டத்தின் அகத்தியத்தை,

சிங்கள அரசின் 50 ஆண்டுகால வன்முறையை, திட்டமிட்டே வன்னி மக்கள் மீது குண்டு பொழிந்துகொண்டிருப்பதை ஓய்வின்றி உலகெங்கும் பரப்புரை செய்யவும், உலகெங்கும் இந்திய அரசைக் கண்டித்துக் குரலெழுப்பவும் அணிதிரளுங்கள். அதுவே இன்று நாங்கள் செய்யவேண்டிய பணி.

ஈழப்போர் நான்காவது தொடங்கி இன்றுவரை புலிகள் தற்காப்புப் போர் மட்டுமே புரிந்து வருகின்றனர். வலிந்து தாக்கிய போர் நடக்கவில்லை. இனிவரும் போர் தற்காப்புப் போராய் இருக்காது. எதிர்த்துத் தாக்கும் போராகவே இருக்கும். முன்னரெழுந்த “ஓயாத அலைகள்” போன்று “அணையாத தீ” ஒன்று எழும் என்று நான் நம்புகிறேன். அதற்குப் புலம்பெயர் தமிழர்கள் பொருள் வளத்தை வழங்கி, விடுதலையை வென்றெடுத்த பெருமையை நாங்கள் பெற, எம் தலைவனுக்கும் புலிகளுக்கும் தோள்கொடுத்து மலையாய் நிற்போம் என்று இன்றே சூளுரைப்போம்.

தமிழீழத் தாயகத்தைத் தரணியில் நிறுத்துவோம்

ஆக்கம் - முனைவன்



Comments

எனக்குத் தெரியும், தலைவர் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பார். கடந்தகாலங்களில் இது பலமுறை நிருபிக்கப்பட்டிருந்தது. ஆனால் எனது ஏக்கம் எல்லாம் சிறிலங்காப் படைகளின் எறிகணை, வான் தாக்குதலினால் கொல்லப்படும் எம்மவர்களைப் பற்றியே.