இன்றைய வன்னி வாழ்க்கையின் வகைமாதிரியாகத் திகழும் புன்னைநீராவி பாடசாலை வளாகம்.


கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதாரத் திணைக்களம், கல்வித்திணைக்களம் இரண்டு வைத்தியசாலைகள் பத்துப்பாடசாலைகள் ஆகியன கிளி.புன்னைநீராவி அ.த.க.பாடசாலை வளாகத்துள் இயங்குகின்றன. அத்தோடு இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களும் இப் பாடசாலையின் கொட்டகைகளில் தங்கியிருக்கின்றன.

11ம் திகதி தருமபுரம் புளியம்பொக்கணைப் பகுதிகள் சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சுக்கு இலக்காகியதால் தருமபுரம் மகாவித்தியாலயத்தில் இயங்கிய கிளிநொச்சி வலயக்கல்விப்பணிமனையும், புளியம்பொக்கணைச் சந்தியில் இயங்கிய கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையும் இடம்பெயர்ந்து புன்னை நீராவிப்பாடசாலை வளாகத்திற்கு வந்துசேர்ந்துள்ளன.

அத்தோடு வட்டக்கச்சி மருத்துவமனையும் அதிலே இடம்பெயர்ந்து இயங்கிய முழங்காவில் வைத்தியசாலையும் இப்பாடசாலையின் கட்டடம் ஒன்றில் இயங்குகின்றன. கிளிநொச்சி மலேரியா தடை இயக்கம் புளியம்பொக்கணைச் சந்தியிலிருந்த தனது பணிமனையினை இப்பாடசாலை வளாகத்திற்குள் நகர்த்தியுள்ளது.

வெறுமனே ஒரு கூடாரத்திற்குள் அப்பணிமனை சுருங்கியுள்ளது. என்ன நெருக்கடி வந்தபோதும் தத்தமது திணைக்களங்களின் சேவையினை மக்களுக்கு வழங்குவதில் தாங்கள் பின்னிற்கப்போவதில்லையென சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்களும் பாடசாலை அதிபர்களும் சங்கதிக்கு தெரிவித்தனர்.


























Comments