தமிழக அரசியல் தலைவர்கள் கோமாளிகள், அவர்கள் சொல்வதையெல்லாம் டெல்லி அரசு கேட்காது என்று சிறிலங்க இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியபோது அதனை எதிர்த்து அறிக்கை வெளியிடாத (ஜெயலலிதா தவிர) தலைவர்களே தமிழ்நாட்டில் இல்லை.
ஆனால், ஈழத் தமிழர்களைக் காக்க போர் நிறுத்தம் செய் என்று சிறிலங்க அரசிற்கு நெருக்குதல் தருமாறு கடந்த நூறு நாட்களாக தமிழக அரசும், அனைத்துக் கட்சிகளும் விடுத்த கோரிக்கையை கண்டு கொள்ளாதது மட்டுமின்றி, கொழும்பு சென்ற இந்திய அயலுறவுச் செயலர் சிவ் சங்கர் மேனன் போர் நிறுத்தம் குறித்து எதுவும் பேசவில்லை. மாறாக, “சிறிலங்காவுடன் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போதுதான் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நெருக்கமாவும், ஆழமாகவும், இதமாகவும் இருக்கிறது என்று கூறியபோதுதான் நமக்கு புரிந்தது. நம்மை - தமிழக மக்களையும், தமிழகத் தலைவர்களையும் மத்திய அரசு மதிக்கவில்லை என்று.
சரி போகட்டும், இதற்கு மேலாவது நமது தலைவர்கள், ஈழத் தமிழர்களைக் காக்க மாற்று வழி காண்பார்கள், சட்டப் பேரவை கூடுகிறது, மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இன்று ஆளுநர் உரையில் தமிழக அரசு விடுத்துள்ள வேண்டுகோள், தமிழக அரசு ஏன் இப்படி வெற்றுத்தனமாக சிந்திக்கிறது என்ற கேள்வியைத்தான் எழுப்புகிறது.
“இலங்கையில், உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு பசி பட்டினியால் வாடுகின்ற தமிழ் மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்களை அனுப்பிட, மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று, இலங்கைத் தமிழர் நிவாரணத்திற்கென ரூபாய் 48 கோடி அளவிற்கு நிதியைத் திரட்டி, உணவு, உடை போன்ற அத்தியாவசியப் பொருள்களை சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.
இலங்கையில் உள்ள தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ்வதற்கு சுதந்திரமின்றி, உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்றி அல்லற்படுவதை அகற்றி; பேச்சுவார்த்தை போன்ற உரிய வழிமுறை வாயிலாக, அந்த நாட்டில் அமைதி தவழ்வதற்கான முயற்சிகளை இனியும் காலந்தாழ்த்தாமல் மேற்கொண்டு நாளும் வதைபடும் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டுமென்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானித்தவாறு மத்திய அரசை இந்த அரசு கேட்டுக்கொள்கிறது” என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டு, கடைசியில் அயலுறவுச் செயலர் சிவ் சங்கர் மேனன் சென்று திரும்பினார்.
அவருடைய பயணத்தில் நிகழ்ந்த அனைத்தையும் அறிந்த எவரும், ஈழத் தமிழர்களைக் காக்க இதற்கு மேலும் மத்திய அரசை நம்பிப் பயனில்லை என்ற முடிவிற்குத்தான் வருவார்கள்.
|
பதவியைக் காக்கத்தானே இத்தனை அச்சம்?
போரை நிறுத்துமாறு கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வை சித்தரிக்கும் அந்தப் போராட்டத்தை ஆதரிக்க மறுத்தது மட்டுமின்றி, அந்த உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்துப் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ், “ஈழத் தமிழரைக் காக்க தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடத்த வேண்டும்” என்று கூறியதைக் கேட்டவுடன், இது தனது ஆட்சியைக் கவிழ்க்க திட்டமிடும் போராட்ட அறிவிப்பு என்று தமிழக முதல்வர் அறிக்கை விட்டார். அந்த அறிக்கையை படித்த தமிழர் அனைவரும் தமிழக முதல்வரின் தமிழனப் பற்றை விட அவருடைய ஆட்சிப் பற்று எத்தனை நெருக்கமானது, ஆழமானது, இதமானது என்பதைப் புரிந்து கொண்டிருப்பார்கள். அந்த அளவிற்கு கேலிக்குறியதாக இருந்தது அந்த அறிக்கை.
ஈழத் தமிழரைக் காக்க வற்புறுத்தி மத்திய அரசிற்கு நிர்பந்தம் கொடுக்க அப்படிப்பட்ட போராட்டம் நடத்துவதில் என்ன தயக்கம்? அப்படிப்பட்ட போராட்டம் வேண்டாம், வேறு வழி காண்போம் என்று கூறியிருந்தால் அதில் அர்த்தமிருக்கும். தனது பேச்சு குறித்து இராமதாஸ் விளக்கமளித்தவுடன் அப்படியே பல்டியடித்து, தான் ஜெயலலிதாவைத் தான் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டதாக முதலமைச்சர் மற்றொரு அறிக்கை கொடுத்தார்.
அக்டோபர் 6ஆம் தேதி மயிலை மாங்கொல்லையில் நடந்த தி.மு.க. பொதுக் கூட்டத்தில், “எங்களது கோரிக்கையை ஏற்று உடனடியாக போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்தட்டும். அது நிறைவேறாவிட்டால், அதன் பிறகு எங்கள் தமிழனத்தைக் காக்க நாங்கள் என்ன
|
மற்ற எந்த ஒரு பிரச்சனையிலும் மாறிப் பேசலாம், அரசியலிற்கு அது அவசியம் என்று கூட நியாயப்படுத்தலாம். ஆனால் இது ஈழத் தமிழர்களின் உயிர் பிரச்சனை. இதில் தமிழக முதலமைச்சரின் பேச்சும், செயலும் சந்தேகத்திற்கிடமற்ற கேலிக் கூத்தாக உள்ளது.
|
இந்த இரண்டுத் தலைவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ள கட்சிகளின் தலைவர்கள் நிலையோ, நேர் எதிரானது. தனது கூட்டணித் தலைமையின் மதிப்பைக் காக்க அவர்கள் அளிக்கும் அறிக்கைகள் மக்களைக் குழப்ப மேற்கொள்ளும் முயற்சிகளாவே இருக்கிறதே தவிர, ஒன்றுபட வைக்கும் நோக்கு இல்லை. ஈழ விடுதலையையும், விடுதலைப் புலிகளையும் தொடர்ந்து ஆதரித்துவரும் ம.தி.மு.க., அதற்கு நேர் எதிர் நிலைகொண்ட அ.இ.அ.தி.மு.க.வுடன் உறவு கொண்டுள்ளது.
ஈழத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியும், அதன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும்தான் தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கைக்கு எதிராகவும், சிறிலங்க அரசிற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றன என்று சாதாரண மக்களுக்குக் கூட தெளிவாகத் தெரிந்த பின்னரும், கடந்த வாரம் வரை ‘காங்கிரஸ் தலைமையில்தான் தமிழ்நாட்டில் கூட்டணி அமைய வேண்டும்’ என்று அரசியல் பேசி வந்தார் மருத்துவர் இராமதாஸ். திருமாவளவன் உண்ணாவிரதத்திற்குப் பிறகுதான் சற்றுத் தெளிவாக அணுகுமுறை தெரிகிறது.
இப்படி அரசியலிற்கு (தேர்தலிற்கு) ஒரு நிலை, கொண்ட கொள்கைக்கு ஒரு நிலை, டெல்லிக்கு ஒரு நிலை, தமிழ் இனத்திற்கு ஒரு நிலை என்று தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் இருப்பதனால்தான், தெளிவான ஒருமித்த நிலையை நம்மால் எடுக்க முடியவில்லை. தமிழ்நாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு இடையே உள்ள முரண்பாட்டை தனது ரகசியமான, எதிர் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள மத்திய அரசு பயன்படுத்திக் கொள்கிறது.
இதுதான் 1987லும் நடந்தது. ஜூலியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனே தலைமையிலான சிங்கள இன வெறி அரசு ஈழத் தமிழர்களை ஒடுக்க இராணுவ காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்துவிட்டபோது அதனைத் தடுக்கக் கோரி தமிழ்நாட்டிலிருந்து ஒருசேர குரல் எழும்பியது. மனிதாபிமான அடிப்படையிலும், தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தருவதாகவும் கூறிக் கொண்டு அங்கே சென்ற இந்திய அமைதி காக்கும் படை (Indian Peace Keeping Force), தமிழர்களுக்கு எதிராகவே திருப்பி விடப்பட்டது. அன்றைக்கும் ஈழத் தமிழினத்தின் பலம் வாய்ந்த பிரதிநிதியாக இருந்த விடுதலைப் புலிகளின் தலைமை இராஜீவ் அரசால் மிரட்டப்பட்டது.
|
ஒன்றாயிருந்து தமிழர்களுக்கு அமைதி அளிக்க வேண்டிய விடுதலைப் புலிகளும், இந்தியப் படைகளும் மோதின. இரு தரப்பிலும் எத்தனைப் பேரிழப்பு ஏற்பட்டது. இங்கும், அங்கும் தமிழர்கள் மனதில் தீராத கசப்புணர்ச்சியை அது ஏற்படுத்திவிட்டது. அதன் விளைவு எங்கு சென்று முடிந்ததோ அதை மட்டுமே காங்கிரஸ் கட்சியினரும், தமிழினப் போராட்டத்தை சிறுமைப்படுத்த முனைவோரும் இன்றும் பேசுகின்றனர்.
|
ஈழத் தமிழர் பிரச்சனையில் தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது என்று கூறும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூட, தங்களது நிலை இராஜீவ் காந்தியின் படுகொலைக்கு முன்னும் பின்னும் என்று மாறிவிட்டதாகக் கூறுகிறார். ஆனால், இந்திய அமைதிப் படை நடவடிக்கைகளை எதிர்த்து, “தமிழர்களைக் கொன்று குவித்த இரத்தக் கையோடு வரும் இந்திய அமைதிப் படையை வரவேற்கச் செல்ல மாட்டேன்” என்று சட்டப் பேரவையிலேயே அறிவித்தவர், அதன் விளைவாக ஏற்பட்ட ஒரு படுகொலையை மட்டும் ஈழப் பிரச்சனை தொடர்பான நிலைப்பாட்டின் மாற்றத்திற்கு காரணம் காட்டுவது, அரசியல் வசதிக்காகத்தானே தவிர, ஈழத் தமிழர் நலனை கருத்தில் கொண்டு அல்ல.
ஈழத் தமிழர் பிரச்சனையில் தங்களைத் தாண்டி தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதும் தெரியாது என்று எந்தத் தலைவரும் நினைத்துக் கொள்ளக் கூடாது. அன்று போல் அல்ல இன்று. எல்லாவற்றையும் அறிந்தவர்களாக, சிந்திப்பவர்களாக தமிழக மக்கள் உள்ளார்கள்.
பிரச்சனைகளை அவர்களால் புரிந்து கொள்ள முடிகிறது. அதனால்தான் ஈழத் தமிழர் பிரச்சனையில் இன்று தமிழக மக்கள் கொதிப்படைந்துள்ளார்கள். அது தொடர்பான நிலைப்பாட்டில் அரசியல் தலைவர்கள் தெளிவான நிலையெடுத்து நிற்க வேண்டும். தங்கள் வசதிக்கேற்றவாறு அவர்களை குழப்ப முற்படக் கூடாது.
|
எனவே அம்மக்களைக் காப்பாற்ற உருப்படியான நடவடிக்கை எது என்று ஆராய்ந்து அதனை செயல்படுத்துவது நன்று. இல்லையெனில் தமிழ்நாட்டின் தலைவர்கள் பற்றி சரத் பொன்சேகா கூறியது மெய்யாகிவிடும்.
Comments