மாபெரும் கையெழுத்து வேட்டையில் 'ஒபாமாவுக்கான தமிழர்கள்': ஒன்றுதிரண்டு ஆதவளிக்குமாறு உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்

அமெரிக்காவில் இயங்கும் "ஒபாமாவுக்கான தமிழர்கள்" (Tamils for Obama) என்ற அமைப்பு, அமெரிக்க அரச தலைவராகத் தேர்வாகியுள்ள பராக் ஓபாமாவுக்கும் அமெரிக்க வெளியுறவுச் செயலராக நியமனம் பெறுகின்ற திருமதி ஹில்லாறி கிளிண்டன் அம்மையாருக்கும் அனுப்புவதற்கான ஒரு மனுவிற்காக கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளது.

தமிழர்களின் சார்பில் அனுப்பப்படவுள்ள இந்த மனுவில் ஒரு வாரத்திற்குள்ளாகவே 50 ஆயிரம் பேர் வரை கையெழுத்திட்டிருப்பதாக அந்த அமைப்பின் ஊடகத் தொடர்பாளர் "புதினம்" செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

இணையம் ஊடாக கையெழுத்துக்கள் சேகரிக்கப்படும் இக்கடிதம்

- தமிழர் தேசிய இனப் போராட்டத்தையும், ஈழத் தமிழர்கள் இன்று எதிர்நோக்கியிருக்கும் இனப் படுகொலை அபாயத்தையும் எடுத்து விளக்குவதுடன்

- இலங்கைப் பிரச்சினையில் தாமதமின்றி தலையிட்டு, தமிழினப் படுகொலையை நிறுத்தி

தமிழர்களுக்கு நீதி கிடைக்க உடனடியாக வழி செய்யுமாறும் அமெரிக்காவின் புதிய அரச தலைவரையும், வெளியுறவுச் செயலரையும் கேட்டுக்கொள்கின்றது.

"உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரையும் இதில் கையெழுத்து இடுமாறு நாம் வேண்டுகின்றோம். ஒரே குடும்பத்தில் இருந்தாலும் தனித்தனியான ஒவ்வொருவரது கையெழுத்தும் மிகவும் பெறுமதி வாய்ந்தது. அது அவர் அவரது கருத்தைப் பிரதிபலிப்பதாக அமையும். அதனால் ஒவ்வொரு தமிழரும் இதில் கையெழுத்திடல் வேண்டும்." என்று 'ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பின்' ஊடகத் தொடர்பாளர் புதினத்திடம் தெரிவித்தார்.

"தமிழர்கள் தாம் கையெழுத்திடுவதுடன் மட்டும் நின்றுவிடாமல், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், வேலைத் தளங்களில் உள்ள, தமிழர்கள் அல்லாத தமது நண்பர்களுக்கும் தமிழர் நிலைமையை எடுத்து விளக்கி, அவர்களையும் இதில் கையெழுத்திட வைக்க வேண்டும்" எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

"காலத்தின் மிக அவசரமான தேவை கருதி எல்லோரும் இதனை உடனடியாகச் செய்ய வேண்டும்" என்று அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

அந்தக் கடிதத்தின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது. இதில் கையெழுத்திட விரும்புவோர் கீழே உள்ள இணைப்பு (link) ஊடாக கையெழுத்திடும் பக்கத்திற்குச் சென்று கையெழுத்திடுமாறும் 'ஒபாமாவுக்கான தமிழர்கள்' கேட்டுக்கொள்கின்றனர்.

கையெழுத்திடும் இணைப்பு:

http://www.tamilsforobama.com/sign/usersign.html

கடிதத்தின் தமிழாக்கம்:

மாண்புமிகு அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா அவர்களுக்கும் மற்றும் மரியாதைக்குரிய அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஹில்லாறி கிளிண்டன் அவர்களுக்கும்!

இக்கடிதத்தில் கையொப்பம் இட்டிருக்கும் நாங்கள், இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர உடனடியாக தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிவாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

ஏனெனில் -

1. இந்தப் போரானது தமிழர்களின் பூர்வீக நிலமான இலங்கையின் வட-கிழக்கு பகுதி மீது சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படுகின்றது. பெரும் அழிப்வை ஏற்படுத்தி, தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தில் இருந்து அவர்களை அகற்றி இனச்சுத்திகரிப்பச் செய்வதே இந்தப் போரின் நோக்கமாகும். முதலாம் நூற்றாண்டு காலத்தில், றோமன் இராச்சியத்தில் பலஸ்தீனத்திலிருந்து யூதர்களைத் துரத்தியது போன்ற பெரும் மக்கள் இடப் பெயர்வு அங்கு இப்போது நிகழ்கின்றது.

2. ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரமடைந்த 1948 இலேயே இந்த தமிழின அழிப்பு ஆரம்பித்து விட்டது. தமிழர் நிலங்களைப் பறித்து, அவற்றுக்கு சிங்களப் பெயர்களைச் சூட்டி, அவற்றில் சிங்களக் குற்றவாளிகளைக் குடியேற்றி, அவற்றில் இராணுவ முகாம்களை நிறுவுதல் என இந்த இனச் சுத்திகரிப்பு ஆரம்பித்தது. தொடர்ந்து, தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு, வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு தமிழர்களது பொருளாதார வாழ்வு சீரழிக்கப்பட்டது. மேலும், கடந்த 25 வருட காலமாக தமிழர் படுகொலைகளும், கைதுகளும், காணாமல் போதலும், மட்டுமன்றி தமிழர் வாழ்விடங்கள் மீது வான், தரை, மற்றும் கடல் வழியான தொடர்ச்சியான குண்டு வீச்சுக்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

3. சிறிலங்கா அரசாங்கமானது புத்த மதத்தை நாட்டின் அரச மதமாக்கி, இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களை குண்டு வீசி அழித்து விட்டு, பின்னர் அந்த இடங்களில் புத்த விகாரைகளைக் கட்டுகின்றது.

4. அனைத்து சமாதான முயற்சிகளையும் நிராகரித்து, சமரச உடன்பாடுகளையும் கிழித்தெறிந்த சிறிலங்கா அரசாங்கங்கள், இப்படியான முயற்சிகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டைகளையும் போடுகின்றன.

5. தமிழ் மக்களுக்கு அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் வழங்கி வந்த அனைத்து உதவிகளையும் நிறுத்தியதோடு, சிறிலங்கா அரசாங்கமானது, அந்த நிறுவனங்களை நாட்டை விட்டும் துரத்தியது. சில சந்தர்ப்பங்களில், அவர்களைக் கொலைகளும் செய்துள்ளது.

இந்த இனப்படுகொலைப் போரை நிறுத்துவதற்கு, புதிய ஒபாமா அரசாங்கம் உடனடியாக காத்திரமான நடவடிக்கையை எடுக்குமென்றும், தமிழர்களுக்கு நல்ல வழி ஏற்படுத்தும் என்றும் நாங்கள் நம்புகின்றோம்.

எங்களது இந்த விண்ணப்பத்திற்கு மதிப்பளித்தமைக்கு எமது நன்றிகளும் உங்களுக்கு உரித்தாகட்டும்.

நன்றி.

http://www.tamilsforobama.com/sign/usersign.html

தமிழருக்காக ஒபாமா ' மின்னியல் கையெழுத்து ' உங்கள் குரலும் ஒலிக்க



Comments