இலங்கை விஷயத்தில் தி.மு.க என்னதான் விரும்புகிறது?




இலங்கையில் சிங்கள ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியைக் கைப்பற்றியதால், புலிகள் வலுவிழந்துவிட்டதாக வரும் தகவல்கள் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போதாக்குறைக்கு காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் வீரப்பமொய்லியும், மகிந்த ராஜபக்ஷே அரசுக்குப் பாராட்டுத் தெரிவித்துப் பேசியபேச்சும் தமிழகத்தில் தகிப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், சி.பி.ஐ. கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா மீடியாக்களிடம் பேசும்போது, `போர் நிறுத்தத்தை வலிறுத்தி பிரணாப் முகர்ஜி இதுவரை இலங்கை செல்லவில்லை. இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இந்திய அரசு துரோகம் செய்துவிட்டது' என்று கூறி காங்கிரஸுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியிருக்கிறார். அவரிடம் தனியாகப் பேசினோம்.

`இலங்கை அரசிடம் போர் நிறுத்தத்தை வலியுறுத்தாமல் இந்திய அரசு துரோகம் செய்துவிட்டது' என்கிறீர்கள். எந்தெந்த வழிகளில் இந்திய அரசு துரோகம் செய்துவிட்டதாகக் கருதுகிறீர்கள்?

"இலங்கையில் தற்போது யுத்தம் தீவிரமடைந்துள்ளது. சுமார் எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் வசிக்கின்றனர். இந்தப் பிரச்னையை இலங்கைக்கு உட்பட்ட பிரச்னையாகப் பார்க்கக் கூடாது. இதற்கு நிரந்தர அரசியல் தீர்வு காணாமல், அண்டை நாடான இந்தியா வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. எங்கோ இருக்கின்ற நார்வே நாட்டினர் வந்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கின்றனர்.

அதேபோல், இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்கு இந்தியா ஆயுதம் தருவது தார்மீக ரீதியாக எப்படிச் சரியாகும்? அரசியல் தீர்வு வேண்டும் என்று கூறும் இந்தியா, இதுவரை அதற்காக என்ன முயற்சிகளை மேற்கொண்டது, அந்நாட்டு அரசிடம் என்ன மாதிரியான பேச்சுவார்த்தைகளை நடத்தியது? அப்படிப் பேச்சுவார்த்தை நடத்தினாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் போர் நடத்துவதன் மூலம் இந்தியாவின் பேச்சை இலங்கை அரசு உதாசீனப்படுத்துகிறதா? இதைப் பற்றியெல்லாம் மக்களுக்கு பிரதமர் விளக்க வேண்டும். நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆயுத சப்ளை செய்வது பற்றி இதுவரை பிரதமர் எந்தவிதக் கருத்தையும் கூறவில்லையே? இதெல்லாம் துரோகம்தானே?''.

பிரணாப் முகர்ஜி எதற்காகக் காத்திருக்கிறார்?

"அவர் ஏன் காத்திருக்கிறார் என்பதை அவர்தான் விளக்க வேண்டும். `போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வார்' என முதல்வர் கலைஞரிடம் காங்கிரஸ் அரசு வாக்குறுதி கொடுத்து ஒரு மாதம் ஆகிறது. அந்த வாக்குறுதி என்னவானது? அப்படியானால், காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு கொடுக்கும் தி.மு.க. அரசு இலங்கையில் யுத்தம் தீவிரமடைவதை விரும்புகிறதா? இதைப் பற்றியெல்லாம் அவர்கள் மக்களுக்கு விளக்க வேண்டும்''.

ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமை குறித்து. உங்களின் கருத்து என்ன?

" சுயநிர்ணய உரிமை வழங்குவதைப் பற்றி இலங்கை அரசுக்குட்பட்டுப் பேச வேண்டிய விஷயம். வெளியிலிருந்து யாரும் திணிக்கக் கூடாது. அமைதியான வழியில் அவர்கள் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். அது இலங்கை அரசின் நெறிமுறைகளுக்கு உட்பட்ட ஒன்றுதான். அங்கே மக்கள் செத்துக் கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. அந்த மக்களின் நீண்டகால கோரிக்கைகள் பற்றியெல்லாம் பேசி சுமுகத் தீர்வு காண வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்''.

`இலங்கைத் தமிழர்களைக் காக்க வேண்டும்' என தொடர்ந்து பேசி வருகிறீர்கள். ஆனால், களத்தில் முன்னணியில் இருந்து போராடுவது புலிகள்தான். புலிகள் இல்லாமல் ஈழப் பிரச்னையை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. எனவே, புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்து உங்கள் கருத்தென்ன?

" நாங்கள் இலங்கையில் உள்ள தமிழ் மக்களைப் பற்றி மட்டும்தான் கவலைப்படுகிறோம். அந்த மக்களின் துயரங்கள் தீர்க்கப்படுவதற்கு அரசியல் தீர்வு வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகிறோம். வேறு எதுவும் சொல்வதற்கில்லை''.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவ சக்திகள் `திடீரென்று' பேச ஆரம்பித்திருக்கின்றன. இது `காங்கிரஸின் கையாலாகாத்தனத்தின் விளைவு' என்கிறார்களே?

" தமிழக பா.ஜ.க. ஆதரவுக் குரல் கொடுப்பது பற்றி நான் என்ன சொல்ல முடியும்?''.

அணுசக்தி ஒப்பந்தம், காங்கிரஸின் பொருளாதாரக் கொள்கையை விமர்சிப்பது, தமிழகத்தின் கூட்டணி எனப் பல விஷயங்களில் இடதுசாரிகள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆனால், ஈழ விவகாரத்தில் மட்டும் ஏன் உங்களால் சி.பி.எம். கட்சியின் ஆதரவைப் பெற முடியவில்லை?

"நான் சி.பி.ஐ கட்சியில் இருக்கிறேன். நியாயம் என்ற அடிப்படையில் இலங்கைப் பிரச்னை குறித்து கருத்துச் சொல்கிறோம். யுத்தம் மூலம் பிரச்னையைத் தீர்க்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். இந்த விவகாரத்தில் சி.பி.எம்.கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி அவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்''.

பாலஸ்தீனத்தின் மீது குண்டுவீசும் இஸ்ரேலைக் கண்டித்து ஒருமித்த குரலில் இரண்டு கம்யூனிஸ்ட்டுகளும் போராட்டம் நடத்துகிறீர்கள். அதுவே, முல்லைத்தீவில் சிங்கள ராணுவத்தின் குண்டுவீச்சைப் பற்றி சி.பி.ஐ. கட்சியின் குரல் மட்டும்தானே தனியாக ஒலிக்கிறது?

"நாங்கள் கம்யூனிஸ்ட் என்ற அடிப்படையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறோம். இலங்கைத் தமிழ் மக்களுக்காகவும் குரல் கொடுக்கிறோம். மற்றவர்களைப் பற்றி நான் எதுவும் கூற முடியாது''.

`இலங்கையில் போரை நடத்துவதே இந்தியாதான். கிளிநொச்சியைக் கைப்பற்றியது இந்திய அரசின் வழிகாட்டுதலில்தான்' என்றெல்லாம் தமிழ் உணர்வாளர்கள் குற்றம் சாட்டுகிறார்களே?

"இவ்வளவு தூரம் யுத்தம் நடந்த பிறகும் இந்திய அரசு மவுனம் சாதிப்பதுதான் இதுபோன்ற பலவிதமான சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. இலங்கைத் தமிழ் மக்கள் மீது மத்திய அரசுக்கு இருக்கும் அக்கறையின்மையையே இது காட்டுகிறது''.

இலங்கையில் யுத்தம் தீவிரமடைந்து வரும் நிலையில், உங்கள் கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் என்ன?

"எங்கள் கட்சியில் இதுபற்றித் தொடர்ந்து பேசி வருகிறோம். யுத்தத்தை நிறுத்துவது பற்றியும், இலங்கைத் தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வருகிறோம். தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகிறோம். இரண்டு நாடுகளின் அரசியல் பிரச்னை இது. இதற்கு மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்'' என்றதோடு பேட்டியை முடித்துக் கொண்டார் டி.ராஜா.

படம் : ஞானமணி



Comments