திருமாவளவனின் உண்ணாநிலை போராட்டத்துக்கு பிரான்ஸ் தமிழர்கள் நன்றி தெரிவிப்பு

சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வரும் இனப்படுகொலைத் திட்டத்தினால் பேரவலத்தில் சிக்குண்டிருக்கும் தமிழ் மக்கள் மீது உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் நிகழ்வுகள் பிரான்சிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படும் திருமாவளவனின் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று வியாழக்கிழமை (15.01.09) பிற்பகல் 3:30 நிமிடமளவில் பாரிசில் தமிழர்கள் எழுச்சி ஒன்றுகூடலை நடத்தினர்.

பாரிசில் தமிழர்கள் கூடும் லாசப்பெல் பகுதியில் நிகழ்ந்த இந்த ஒன்றுகூடலில் பெருமளவான மக்கள் கலந்து தொல். திருமாவளவனின் உருவப்படம் தாங்கிய பதாகைளை தாங்கி தமது ஆதரவையும் நன்றியையும் உணர்வுடன் வெளிப்படுத்தினர்.





பாரிஸ் நகரில் அமைந்துள்ள பிரான்சின் நாடாளுமன்றத்திற்கு முன்பாக பிரான்ஸ் தமிழ் இளையோர் அமைப்பு கடந்த புதன்கிழமை ஒரு கவனயீர்ப்பு நிகழ்வினை முன்னெடுத்திருந்தனர்.

அன்றைய நாள் பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் இஸ்ரேலிய அரசாங்கம் பலஸ்தீன அப்பாவி மக்கள் மீது நடத்தும் மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பான விவாதமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளையில், பிரான்சில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவிருந்த தமிழர் திருநாள் - 2009 இன் நிகழ்வரங்குகள் தவிர்க்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அதன் ஏற்பாட்டாளர்கள் ஓர் ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Comments