பிரித்தானியாவில் இருந்து நூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் நாடு கடத்தல்

பிரித்தானியாவில் அகதி புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சுமார் நூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் அந்நாட்டு அரசாங்கத்தினால் இலங்கைக்கு நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

பிரித்தானிய உள்துறை அமைச்சின் ஏற்பாட்டில் சிறப்பு வானூர்தியில் நேற்று வெள்ளிக்கிழமை இவர்கள் ஏற்றப்பட்டு துபாய் வழியாக இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் இளைஞர்கள், பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் சிறுவர்களும் உள்ளடங்குவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சிறப்பு வானூர்தி குறிப்பிட்ட நேரத்துக்கு பயணமாகும் என சட்டத்தரணிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதும் சுமார் ஒரு மணிநேரத்துக்கு முன்னதாகவே அந்த வானூர்தி புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், ஜேர்மனி- பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் அகதி புகலிடம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் பலர் துபாய் வழியாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு வருவதாக ஐரோப்பிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் உள்நாட்டு மோதல் தீவிரமடைந்துள்ள நிலையிலும் அகதி புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர்கள் நாடு கடத்தப்படுவது லண்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நாடு கடத்தல் சம்பவத்தினால் பிரித்தானியாவில் உள்ள அகதி புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஏனைய இலங்கையர்கள் பெரும் அச்ச நிலையில் வாழ்ந்து வருவதாக லண்டனில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன


Comments