இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என்றும், தி.மு.க. பொதுக் குழுவை கூட்டி முடிவை அறிவிக்கலாம் என்றும் கூறியிருப்பது பெரிதும் ஏமாற்றம் அளிக்கிறது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
|
அந்தத் தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய முதலமைச்சர் கருணாநிதி, தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி முடிவை அறிவிக்கலாம் என்று கூறியுள்ளார். இந்தத் தீர்மானம், பெரிதும் ஏமாற்றம் அளிக்கிறது.
ஏதோ ஒரு முக்கியத் தீர்மானம் வரப் போகிறது என்று உலகத் தமிழர்கள் அனைவரும் ஆர்வத்துடன் இருந்தனர். இந்தத் தீர்மானம் சரியானது அல்ல. உலகத் தமிழர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
ஏனெனில் ஈழத் தமிழர்கள் பிரச்சனை என்பது தி.மு.க.வுக்கு மட்டும் உரிய பிரச்சனை அல்ல. ஒட்டு மொத்தத் தமிழர்களின் பிரச்சனை. இதில் தி.மு.க. செயற்குழுவைக் கூட்டி முடிவு எடுக்கப்படும் என்பது ஏற்புடையது அல்ல.
இந்த பிரச்சனையில் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பங்கு உள்ளது. எனவே இந்த பிரச்சினையில் தீர்வுகாண தமிழ்நாட்டில் போராடி வரும் அனைவரையும் அழைத்து கலந்து ஆலோசிக்க வேண்டும். அதில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்துத் தீர்மானிக்க வேண்டும்.
ஐ.நா. வழிகாட்டுதலின்பேரில்தான் தேசிய இனங்கள் அடையாளம் காணப்படுகின்றன. அதன்படிதான் ஈழத் தமிழ் இனம் செயல்பட்டு வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் பல தேசிய இனங்கள் தங்களுக்கு என்று சொந்த நாடுகளை உருவாக்கி உள்ளன. உதாரணமாக பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் உருவானதைச் சொல்லலாம்.
அதுபோல செக் குடியரசு, சோனமலியா, கோபினா, செர்பியா, குரோஷியா, மாண்டே நெக்ரோ, மாசிடோனியா, கொசோவா ஆகிய நாடுகள் உருவாக்கப்பட்டதையும் சொல்லலாம். இவை எல்லாம் இனம், மொழி, மதம் அடிப்படையில் தனி நாடுகளாக உருவாகின.
உலகில் பல நாடுகளில் பல இனங்கள் இப்படிப் போராடி வெற்றி பெற்றுள்ளன. இந்த நாடுகளுக்கு எல்லாம் இந்தியா ஆதரவு கொடுத்துள்ளது.
இலங்கையிலும் தமிழ் இனம் தனி இனமாக உள்ளது. அவர்கள் தங்கள் அரசியல் சுயாட்சி உரிமைகளுக்காக கடந்த 50 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். பாலஸ்தீன மக்கள் சுயாட்சி பெற ஒத்துழைத்து ஆதரவு கொடுத்த இந்தியா, ஈழத் தமிழர்களின் சுயாட்சி போராட்டத்தை ஆதரிக்க மறுக்கிறது. விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? ஈழத் தமிழ் இனப் போராட்டத்தை அடக்க முயல்கிறது.
ஈழத்தில் நடந்து வரும் இனப் படுகொலைகள் உலகில் எங்கும் நடக்கவில்லை. இதை உலக அளவில் கொண்டு செல்லத் தாய்த் தமிழகம் தவறிவிட்டது. தமிழக அரசியல்வாதிகள் இதில் ஒற்றுமையுடன் இல்லாமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணம்" என்றார்.
Comments