முல்லைத்தீவு பலப்பரீட்டையில் வெற்றி பெறப் போவது யார்?

இதுவரையில் கிளிநொச்சியில் மையம் கொண்டிருந்த போர் இப்போது முல்லைத்தீவில் மூர்க்கம் பெறத் தொடங்கியிருக்கிறது.மணலாறின் கொக்குக் தொடுவாய் முதல் எத்தாவெட்டுனுவௌ வரையான 12 கி.மீ பிரதேசத்தினூடாக முன்னேறத் தொடங்கிய பிரிகேடியர் நந்தன துடுவத்தவைத் தளபதியாகக் கொண்ட 59 ஆவது டிவிசன் - இப்போது முல்லைத்தீவு நகரில் இருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தொலைவில் வந்து நிற்கிறது.

சிலாவத்தைக்குத் தெற்காக நிலைகொண்டிருக்கும் 59-1 பிரிகேட்டுக்கு மேற்காக இன்னொரு புறத்தில் 59-3 பிரிகேட் தண்ணீரூற்று மற்றும் முள்ளியவளையின் ஒரு பகுதியைக் கைப்பற்றியிருக்கிறது. அதற்கு மேற்காக 59-2 பிரிகேட் குளமுறிப்பு, கற்சிலைமடுப் பகுதிவரை முன்னகர்ந்திருப்பதாகப் பிந்திய தகவல்.சிலாவத்தை வழியாக முல்லைத்தீவை நோக்கி முன்னேற முற்பட்ட 59-1 பிரிகேட்டின் 14 ஆவது விஜயபா படைப்பிரிவு புலிகளிடம் வசமாக மாட்டிக் கொண்டு பெரும் இழப்புக்களைச் சந்தித்திருந்தது.


கடந்த மாதம் 27 ஆம் திகதி நடந்த இந்தச் சண்டையில் 50 படையினர் கொல்லப்பட்டு 90 பேர் காயமுற்றதாகப் புலிகள் கூறியிருந்தனர்.
17 படையினரின் சடலங்களைப் புலிகள் கைப்பற்றி ஒப்படைத்தனர். மேலும் பல படையினரைக் காணவில்லை என்றிருக்கிறது படைத்தரப்பு.இதற்குப் பின்னர் இந்தக் களமுனையில் நகர்வுகள் சற்று மந்தம் அடைந்திருக்கின்றன.

முல்லைத்தீவு நோக்கிய இந்த நகர்வு தடைப்பட்டுப் போயிருக்கின்;ற நிலையில் 59-3 பிரிகேட் வற்றாப்பளை, கேப்பாப்புலவு நோக்கிய முன்னேற்ற முயற்சி ஒன்றை மேற்கொண்டிருக்கிறது.15 ஆவது இலகு காலாற்படை, 9 ஆவது சிங்க றெஜிமென்ட், 4 ஆவது விஜயபா படைப்பிரிவு ஆகிய மூன்று பற்றாலியன்களுமே இந்த நகர்வில் இறக்கிவிடப் பட்டிருக்கின்றன.காடுகள் வழியாக முள்ளியவளையில் இருந்து வடக்கே புதுக்குடியிருப்பு நோக்கி இறங்க முற்படும் படையினருக்கு எதிராகப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் நடக்கின்ற காட்டுச்சண்டை இருதரப்புக்கும் பலத்த சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இது புலிகளுக்கு வாழ்வா - சாவா என்ற பிரச்சனையுள்ள களம்.

இரண்டு தரப்பும் இனிமேல் ஒளித்துப் பிடித்து விளையாடப் போகின்றனர். இது எப்படிப்பட்ட யுத்தமாக அமையப் போகிறதென்பது பலரதும் கேள்வியாக இருக்கிறது


சற்று அயர்ந்து கொண்டாலும் படையினர் புதுக்குடியிருப்பின் வாயிலை அடைந்து விடுவார்கள். எனவே, அவர்கள் பலவிதமான தந்திரோபாயங்களையும் கையாண்டு படைமுயற்சிகளைத் தடுக்க எத்தனிக்கின்றனர்.அதேவேளை, கற்சிலைமடு வரை நகர்ந்திருக்கி;ன்ற 59-2 பிரிகேட் தற்போது ஒட்டுசுட்டான் - புதுக்குடியிருப்பு வீதியில் உள்ள கெருடாமடு நோக்கி நகர எத்தனிக்கிறது.புலிகளின் கடும் எதிர்த் தாக்குதல்கள் தொடர்கின்றன.

இதன் பின்னர் மாங்குளத்தில் இருந்து முன்னேறி வந்த 63 ஆவது டிவிசன் படையினர், ஒட்டுசுட்டான் வரை முன்னகர்ந்த 64 ஆவது டிவிசனுடன் இணைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.இதையடுத்து தண்ணீரூற்று வரை நிலைகொண்டிருக்கின்ற 59 ஆவது டிவிசனுடன் இந்த இரு டிவிசன்களும் இணைப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.தண்ணீரூற்றுக்கும் மாங்குளத்துக்கும் இடைப்பட்ட 43 கி.மீ நீளமான களமுனையில் 3 டிவிசன் துருப்புகள் இப்போது நிலைகொண்டிருக்கின்றன.

அதேவேளை, பரந்தன் பகுதியில் 58 ஆவது டிவிசனும் கிளிநொச்சிப் பகுதியில் 57 ஆவது டிவிசனும் நிலைகொண்டிருக்கின்றன.
இப்போது முல்லைத்தீவைச் சுற்றி வளைத்துக் கைப்பற்றும் நோக்கில் படைத்தலைமை களம் இறக்கியிருப்பது மொத்தம் 5 டிவிசன்களையேயாகும்.பரந்தனில் இருந்து கிழக்கே 2 ஆம் கட்டை நோக்கி தற்போது படையினர் முன்னேற முயன்று வருகின்றனர்.
கடந்தவாரம் அங்கு நிகழ்ந்த மோதல் ஒன்றில் 60 படையினர் கொல்லப்பட்டு 100 பேர் வரை காயமுற்றதாகப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.

அதேவேளை, இராணுவ வட்டாரங்களோ 10 படையினர் கொல்லப்பட்டு 35 பேர் காயமுற்றதை ஒப்புக் கொண்டிருக்கின்றன.
ஆனால், அரசாங்கம் இப்போது படையினருக்கு ஏற்படும் இழப்புக்களை வெளியிடுவதேயில்லை.

இப்போது பரந்தனில் இருந்து முரசுமோட்டை நோக்கியும் அடுத்து கிளிநொச்சியில் இருந்து வட்டக்கச்சி நோக்கியும் முன்னேறும் திட்டம் படைத்தரப்புக்கு இருக்கிறது.இந்த இரண்டு முனைகளிலும் இருந்து முன்னேறும் படையினருக்கு இன்னொரு திசையில் இருந்து ஒத்துழைப்புக் கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ஒலுமடுவில் இருந்து அம்பகாமம் நோக்கி நகர்ந்த 63 ஆவது டிவிசன் படையினர் இப்போது இரணைமடுக் குளத்தின் கிழக்குப் பக்க வால் பகுதியில் நிற்கின்றனர்.முதலியார்குளம் பகுதியில் நிற்கின்ற படையினர் இரணைமடுக் குளத்துக்கு கிழக்காக தொடர்ந்து வடக்கே முன்னேறி வந்தால் பழைய கொக்காவில் வழியாக இராமநாதபுரம், வட்டக்கச்சி அகிய இடங்களைக் கைப்பற்ற முடியும்.
அப்படியான கட்டத்தில் வட்டக்கச்சி நோக்கி நகர்வில் இறங்கும் 57 ஆவது டிவிசன் படையினருடன் 63 ஆவது டிவிசன் படையினர் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் இருக்கின்றன.

அதேவேளை 58 ஆவது டிவிசன் பரந்தன் -முல்லைத்தீவு வீதி ஊடாக முன்னேறும் முயற்சிகளில் இறங்கியிருப்பினும், அதன் நோக்கம் ஆனையிறவை மையப்படுத்தியிருப்பதையே காணமுடிகிறது.ஆனையிறவின் சுற்றுப்புறத்தில் 58 ஆவது டிவிசனின் கவனம் அதிகளவில் இருப்பதால் முரசுமோட்டை நோக்கி பலமுனைத் தாக்குதல் ஒன்றைத் தொடுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.ஊரியான் வீதி மற்றும் தட்டுவன்கொட்டி வீதி வழியாக கண்டாவளை நோக்கி நகர்வில் இறங்கி, முரசுமோட்டையிலோ அல்லது அதற்கும் அப்பால் தருமபுரம் பக்கமாகமோ முல்லைத்தீவு வீதியில் மேவ 58 ஆவது டிவிசன் எத்தனிக்கலாம்.

தற்போதைய வன்னிப் படைநகர்வுகள் அனைத்திலுமே படையினர் புலிகளை நேரே முட்டி மோதி அழித்துக் கொண்டு முன்னேறியதான சந்தர்ப்பங்கள் மிகக்குறைவே.ஒன்றில் புலிகளுக்கு சாதகமில்லாத, அவர்கள் நிலைகொள்ளாத பகுதிகளின் ஊடாகவே முன்னேறி இருக்கின்றனர். அல்லது அவர்கள் பலம் குறைவாக இருந்த பகுதி ஊடாக முன்னேறி இருக்கின்றனர்.அதிலும் எந்தவொரு கேந்திர நிலையையும் நேரடியான தாக்குதலை நடத்திப் பிடிக்கவில்லை. எல்லாமே சுற்றி வளைத்து தலையைச் சுற்றி மூக்கைத் தொட்ட முயற்சியாகவே முடிந்திருக்கின்றன.

ஏன் இப்போது பரந்தன் களமுனையில் கூட புலிகளுக்கு சாதகமற்ற பரந்தனுக்கு வடமேற்காகவுள்ள தரவை வெளியைப் பயன்படுத்தியே படையினர் உள்நுழைந்தனர்.அதன் மூலமே அவர்களால் கிளிநொச்சியை வீழ்த்த முடிந்ததே தவிர கிளிநொச்சியின் பாதுகாப்பு அரண்களை உடைக்க முடியாத நிலை கடைசி வரை இருந்ததை மறந்துவிடக் கூடாது.எனவே, தற்போது முரசுமோட்டை நோக்கி படையினர் பரந்தனில் இருந்து முன்னேற எடுக்கின்ற முயற்சிகள் வெறும் தந்திரோபாயத்துக்கு உட்பட்டதாக இருக்குமே தவிர, அதன் பிரதான நகர்வுகள் பரந்தனுக்கும் ஆனையிறவுக்கும் இடைப்பட்ட பகுதியால் கிழக்குப் புறமாக முன்னேறுவதாகவே இருக்கக் கூடும்.


இப்படிப்பட்ட கட்டத்தில் அம்பகாமத்தில் இருந்து முன்னேறும் துருப்புகளும், கிளிநொச்சியில் இருந்து முன்னேறும் துருப்புகளும் வட்டக்கச்சிப் பகுதியில் இணைப்பை ஏற்படுத்த முனைந்தால், அதற்கடுத்து முரசுமோட்டையின் வீழ்ச்சியை தடுத்துநிறுத்த முடியாது போய்விடும்.

புலிகளின் பலத்தை எவ்வளவுக்கு எவ்வளவு பரவலாக்கலாம் என்பதே படைத்தரப்பின் முதன்மையான நோக்கமாக இருக்கிறது.
அதனால் புலிகளுக்குச் சாதகமற்ற களமுனைகளை அரசபடைகள் தெரிவு செய்கின்றன.ஆனால் இதுவரையில் படையினர் கைப்பற்றியிருக்கின்ற பகுதிகள் முன்னர் இராணுவத்துக்குப் பழக்கப்பட்ட பிரதேசங்கள் தான்.ஏதோ ஒரு காலத்தில் படையினர் கைப்பற்றி வைத்திருந்த பகுதிகள் தான் இவை.ஜெயசிக்குறு காலத்தில் அம்பகாமம், ஒட்டுசுட்டான், மாங்குளம், பகுதிகளில் படையினர் நிலைகொண்டிருந்தனர். அதேவேளை பூநகரி, கிளிநொச்சி, ஆனையிறவு என்பனவும் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களே.

ஆனால், இப்போது படையினர் சுற்றிவளைத்துப் பிடிக்க நினைக்கின்ற பிரதேசம் அப்படியானதல்ல. முல்லைத்தீவு நகரம் மட்டும்; தான் படையினருக்குத் தெரிந்த பகுதி.

அதற்கு அப்பாலுள்ள புதுக்குடியிருப்பு, விசுவமடு, வட்டக்கச்சி, உடையார்கட்டு அடங்கலான அடர்ந்த காட்டுப் பகுதியும், மக்களின் வசிப்பிடங்களும் முன்னெப்போதுமே இராணுவத்துக்குப் பரிச்சயமான ஒன்றல்ல. ஆனால் புலிகளுக்கு அவை அத்துப்படியானது.இங்கே தான் இரண்டு தரப்பும் இனிமேல் ஒளித்துப் பிடித்து விளையாடப் போகின்றனர். இது எப்படிப்பட்ட யுத்தமாக அமையப் போகிறதென்பது பலரதும் கேள்வியாக இருக்கிறது.

புலிகள் இன்னமும் தமது மரபுப் போர்ப்பலத்தை, அதற்கான படையணிகளை, ஆயுதங்களை இழந்து விடவில்லை.
ஆனால், ஆயுத விநியோகமே அவர்களுக்குப் பிரச்சினைக்குரியதாக இருந்தாலும் அதையும் அவர்கள் கடல் வழியாகப் பெறுவது தற்போது உறுதியாகி இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் புலிகள் தொடர்ந்து தமது மரபுவழிப் போர்த்திறனைக் கொண்டு படையினரோடு முட்டிமோதப் போகிறார்கள்.

முல்லைத்தீவு நோக்கி இப்போது இரண்டு பக்கங்களில் தான் நேரடியான படை அச்சுறுத்தல் உருவாகியிருக்கிறது.
தெற்குப் புறத்தால் 59 ஆவது டிவிசனின் 3 பிரிகேட்களும், 64 ஆவது டிவிசனின் 2 பிரிகேட்களும் புலிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன.
அதேவேளை மேற்குப் பகுதிகளில் 63 ஆவது, 57 ஆவது 58 ஆவது டிவிசன்களின் தலா 3 பிரிகேட்கள் என்று மொத்தம் 9 பிரிகேட்களின் அச்சுறுத்தலை புலிகள் எதிர்கொள்கின்றனர்.இரண்டையும் சேர்த்;தால் மொத்தம் 14 பிரிகேட் படையினர். இவற்றில் மொத்தம் 42 பற்றாலியன்கள் இருக்கின்றன. துணைச் சேவைப்படை பற்றாலியன்களையும் சேர்த்தால் இது 45 பற்றாலியன்கள் ஆகிறது.

இந்தக் கட்டத்தில் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா சொல்வது போன்று 100 பற்றாலியன்களையோ, 50 ஆயிரம் படையினரையோ இராணுவத்தால் முல்லைத்தீவுக்குள் அனுப்ப முடியாது.அதெல்லாம் வெறும் பிரசாரமே தவிர நடைமுறைச் சாத்தியமானதல்ல.இலங்கை இராணுவத்தின் 57, 58, 59 ஆவது டிவிசன்களின் பெரும்பாலான பற்றாலியன்கள் அடி வாங்கிக் களைத்துப் போனவை. அவற்றின் ஆட்பலம் கணிசமாகக் குறைந்து போயிருக்கிறது.இந்த பற்றாலியன்களில் சராசரியாக 500 படையினர் இருந்தாலே பெரும் காரியம்.இப்படிப் பார்த்தால் தற்போது முல்லைத்தீவுக்கு நேரடியாக நெருக்குதல் கொடுக்கக் கூடிய நிலையில் இருக்கும் 5 டிவிசன்களிலும் மொத்தம் 21 ஆயிரம் படையினருக்கு மேல் இருக்க முடியாது.

இவற்றோடு கிளாலி - முகமாலையில் உள்ள 53, 55 ஆவது டிவிசன்களின் 6 பிரிகேட்களை சேர்ந்த 18 பற்றாலியன்களையும் சேர்த்தால் ஒரு 10 ஆயிரம் படையினர் தேறுவர்.ஆகக்கூடியது எல்லாமாக மொத்தம் 31 ஆயிரம் படையினர் தான் முல்லைத்தீவுக்கு நெருக்கடியைக் கொடுக்க முடியும். 100 பற்றாலியன் 50 ஆயிரம் படையினர் என்பதெல்லாம் சுத்த பம்மாத்து.

இவ்வளவு படையினரையும் கொண்டு தான் தெற்கே மணலாறு, ஒட்டுசுட்டான், மாங்குளம், விடத்தல்தீவு அச்சில் இருந்து வடக்கே கிளாலி –முகமாலை - நாகர்கோவில் அச்சு வரையான பெரும் பிரதேசத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் வேண்;டும்.இது வன்னி;ப் போரின் மிக முக்கியமாக கட்டம். புலிகள் எடுக்கப் போகின்ற ஒவ்வொரு நகர்வும் படைத்தரப்பின் இருப்புக்குச் சவாலாகவே அமையலாம்.

புலிகள் பெரும் பிரதேசத்தில் ஒரே நேரத்தில் 4 டிவிசன் படையினரைத் தடுத்து நிறத்திச் சண்டையிடும் அளவுக்கு தமது பலத்தை காட்டி விட்டு திடீரென்று பின் விலகிக் கொள்வது ஆபத்தானதொரு பொறிக்குள் படையினரை இழுத்துச் செல்வதாகவே தோன்றுகிறது.

அவர்கள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசம் சுருங்கும் போது ஏற்படக் கூடிய ஆபத்தை உணர்ந்திருக்க மாட்டார்கள் என்றோ, முன்யோசனையின்றிச் செயற்படுவதாகவோ அல்லது பலவீனமடைந்து போய் இப்படிச் செய்வதாகவோ முடிவு செய்துவிட முடியாது.

குறுகிய பிரதேசம் ஒன்றுக்குள் அதுவும் - இராணுவத்;துக்கு முன்பின் பரிச்சயமில்லாத களம் ஒன்றுக்குள் அவர்களை இழுத்துச் செல்ல புலிகள் துணிந்திருக்கின்றனர்.

தமது கோட்டையின் வாசலை நெருங்கும் வரை படையினரை அனுமதிக்க புலிகள் எடுத்திருக்கின்ற தீர்மானம் எந்தளவுக்கு இராணுவ தந்திரோபாய ரீதியானதென்றோ அதன் பெறுபேறுகள் எத்தகையதாக இருக்கும் என்றோ தெரிந்து கொள்ள நீண்டகாலம் காத்திருக்கத் தேவையில்லை.

-கபிலன் -



Comments