ஈழத் தமிழர்கள் மீது இந்திய அரசுக்கு அக்கறையில்லை


தமிழகத்திலிருந்து தமிழன் ஈழத் தமிழர்கள் மீது இந்திய அரசுக்கு அக்கறை இல்லை என்றும், தனக்கு தமிழினத் துரோகி என்ற பட்டம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஈழத் தமிழர்கள் மீது அக்கறை உள்ளவர் போல் கலைஞர் தன்னைக் காட்டிக் கொள்வதாகவும் ம.தி.மு.க பொதுச் செயலா ளர் வைகோ கூறினார். தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அப்பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது; வாஜ்பாய் அரசு தமிழர்களுக்கு எதிராக எப்போதுமே செயற்பட்டதில்லை. சரியாகச் சொன்னால், ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதில்லை. இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் செயற்பட்டதில்லை. இதற்காக வாஜ்பாய்க்கு தமிழ் இனம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. ஆனால் இன்று காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தமிழர்களுக்கு எதிராக மட்டுமே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

நான் எப்போதுமே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தான் குரல் கொடுத்து வந்திருக்கிறேன். ஈழத் தமிழர் விவகாரத்தைப் பொறுத்தவரையில் என் நிலைப்பாட்டில் என்றுமே மாற்றம் ஏற்பட்டதில்லை. ஆனால் இடையில் நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது மட்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு என் தயவு தேவைப்பட்டது. அதனால் ஒவ்வொருவரும் என்னைத் தேடி வந்தும், வேறு வகைகளிலும் தொடர்பு கொண்டும், அவர்களுடைய தொகுதியில் அரை நாளாவது பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

அப்போது மட்டும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான இந்த வைகோவின் பிரசார பலம் அவர்களுக்கு தேவைப்பட்டதா? கலைஞர் கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக தினந்தோறும் கண்ணீர் வடிப்பதாகக் கூறுகிறார். தினமும் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதி, தமிழன் ஈழத்தில் சாகிறானே என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்திய எல்லையில் பாகிஸ்தான் படையினர் நெருங்கி வந்தால் நாம் எச்சரிக்கை விடுக்கிறோம். ஆனால் அதே பாகிஸ்தான் இராணுவத்திடமிருந்து கடந்த வாரம் மூன்று கப்பல்களில் இலங்கை இராணுவத்துக்கு ஆயுதங்கள் கொண்டு போகப்பட்டிருக்கின்றன.

இதை மட்டும் இந்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கோடி தமிழர்களும் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறோம். ஆனால் டில்லிக்கு வந்த ஜனாதிபதி ராஜபக்ஷ புலிகளை அழித்து விட்டுதான் மற்ற வேலை என்று கூறுகிறார். ஆனால் கலைஞரோ மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு கெட்டபெயர் வந்துவிடக் கூடாது என்கிற எண்ணத்திலும், தனக்கு தமிழினத் துரோகி என்று பட்டம் வந்துவிடக் கூடாது என்கிற கவலையிலும், தினமும் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதி ஈழத் தமிழர்கள் மீது அக்கறை உள்ளவர் போல தன்னைக் காட்டிக் கொள்கிறார்.

இப்போது சர்வதேச சமுதாயம் மெல்ல விழித்துக் கொண்டு வருகிறது. மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நினைத்து கவலைப்படுகிறோம். அத்தகைய செயலில் ஈடுபட்டவர்கள் இந்த மனித சமுதாயத்தில் வாழத் தகுதியற்றவர்கள். ஆனால் ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டும் காணாமல் இருப்பது மட்டும் நியாயமா? டில்லிக்கு ராஜபக்ஷ வந்திருக்கும் சமயத்தில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் இலங்கை இராணுவத் தாக்குதல்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "இலங்கையில் இருதரப்புக்கும் இடையே நடப்பது அவர்களது சொந்தப் பிரச்சினை. அதில் நாம் எப்படித் தலையிட முடியும்?" என்று கேட்டார்.

இதிலிருந்தே மத்திய அரசின் நிலைப்பாடு தெளிவாகத் தெரிந்துவிட்டது. ஈழத் தமிழர்கள் மீது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. தமிழகத்தில் உள்ள பத்திரிகைகள் சில நடுநிலைமையுடன் செயல்படுவதில்லை. நான் பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பொதுக் கூட்டங்களில் பேசுகிறேன். ஒரு மணி நேரம் பேசும்போது, பத்து நிமிடங்கள் ஈழப்பிரச்சி னைக்காக ஒதுக்குகிறேன். ஆனால் அந்தப் பத்திரிகைகளோ, நான் ஈழப் பிரச்சினை குறித்து பேசியதிலிருந்து மட்டும் சில வரிகளை வெளியிடுகிறார்கள்.

இந்திய அரசு தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தால் நிச்சயமாக சர்வதேச சமூகத்தின் ஆதரவு கிடைக்கும். இதை நோர்வே, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டபோது நேரடியாக உணர்ந்து கொண்டேன். பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசியபோது, தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர், "இது எங்களது நாடாளுமன்ற வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய அற்புதமான பேச்சு" என்றார். அதுமட்டுமல்ல, அங்கிருந்தவர்களில் பலர், "இந்திய அரசு ஏன் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது? உங்கள் அரசு தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் நிச்சயம் சர்வதேச சமூகத்தின் ஆதரவு கிடைக்கும்" என்று உறுதியாகக் கூறினர்.

என்னைப் பொறுத்தவரையில் இந்திய அரசு இலங்கைக்கான உதவிகளை நிறுத்திக் கொண்டாலே போதும், இலங்கை இராணுவத்துக்கு ஆயுதங்களை தராமல் இருந்தாலே போதும். ஈழப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும். பாகிஸ்தான் இராணுவத் தளபதிகளுடன் சேர்ந்து இந்திய இராணுவ அதிகாரிகளும் இலங்கைக்குச் சென்று ஆலோசனைகளை வழங்குகிறார்கள். இலங்கையில் சிங்களவர்களின் எண்ணிக்கை ஒன்னே முக்கால் கோடியாக உயர்ந்திருக்கிறது. ஆனால் தமிழ் மக்கள் தொகை மட்டும் அப்படியே இருக்கிறது, ஏன்?

காரணம் பலர் கொல்லப்பட்டுவிட்டனர். இலட்சக்கணக்கானோர் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழுகிறார்கள். பிள்ளைகள் கொல்லப்படுகிறார்கள், பலருக்குத் திருமணமாகவில்லை. தமிழர்களை அடியோடு ஒழித்துவிட வேண்டும், தமிழினமே இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே அங்குள்ளோரின் நிலைப்பாடு. அதனால் ஈழப்பிரச்சினைக்கு அந்த அரசால் தீர்வு காண முடியாது. இவ்வாறு வைகோ கூறினார்.

தமிழகத்திலிருந்து தமிழன்



Comments