மாறுமா அரசியல் காட்சிகள்? வீரப்புலி... விரத சிறுத்தை

ருவாகும் ஈழக் கூட்டணி' என்று சில இதழ்களுக்கு முன்பு ஜூ.வி. சொன்னது பலிக்கத் தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் என்று ஏற்கெனவே சுருங்கிக் கிடந்த தனது கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் வெளியேறினாலும் பரவாயில்லை என்ற லெவலுக்கு இப்போது கருணாநிதி போய்விட்டார். ''என் ஆட்சியைக் கவிழ்க்க சதி'' என்று திருமாவளவனையும் டாக்டர் ராமதாஸையும் ஒருசேரச் சேர்த்து சாடித் தள்ளி அறிக்கை விட்டிருக்கிறார் கருணாநிதி.

காரணம், இலங்கைப் பிரச்னைக்காக திருமாவளவன் நடத்திய உண்ணாவிரதம். அந்த மேடையில் அவரும் டாக்டர் ராமதாஸம் வெளிப்படுத்திய அதி தீவிர காங்கிரஸ் எதிர்ப்பு கோஷம்... அதே மேடையில் ஏறி ஆச்சர்யப்படுத்திய பி.ஜே.பி!

முல்லைத்தீவு மடல்...

தற்போது முல்லைத் தீவில் முக்கியமான படையணியின் தளபதியாக இருக்கும் செல்வாவிடமிருந்து உண்ணாவிரதம் இருந்த திருமாவுக்கு ஒரு கடிதம் வந்தது. சிறுத்தைகளின் தலைமை நிலையச் செயலாளர் வன்னிஅரசுக்கு வந்து சேர்ந்த அந்தக் கடிதத்தில்... 'என் உணர்வோடும் உயிரோடும் கலந்துவிட்ட அன்புத்தம்பி திருமாவுக்கு, அண்ணன் செல்வா விடுக்கும் வேண்டுகோள்.

'யாரிந்த செல்வா?' என்று நீர் கேட்பது எனக்குப் புரிகிறது. எனக்கும் உமக்கும் இடையில் தொடர் தொடர்புகள் இல்லாவிட்டாலும், இன்று நீர் எடுத்த முடிவை 1987-ம் ஆண்டு எமது தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் எடுத்தது உமக்கு ஞாபகம் இருக்கும். அன்று அடையாறு இந்திரா நகர் 21-ம் நம்பர் வீட்டின் மேல்மாடியில் நீரும் நானும், மேதகு பிரபாகரன் அவர்களோடு உரிமையோடு பேசிக்கொண்டிருந்ததை நீர் மறந்திருக்க மாட்டீர்.

அதன் பிறகு நடந்த ஊர்வலத்தில் எமது தேசியத் தலைவர் அவர்களின் கோரிக்கையின் பேரில் நான் உம் தோளோடு தோள் நின்று கலந்து கொண்டதையும் நீர் மறந்திருக்க மாட்டீர். அந்தப் பசுமையான நினைவுகளோடு நான் இருக்கும் சமயம், ஒரு சேதி வந்தது. 'இலங்கையில் யுத்தத்தை நிறுத்தவும் ஈழத் தமிழ் உறவுகளை இன அழிப்பிலிருந்து காப்பாற்றவும் திருமாவளவன் உண்ணாவிரதம் இருக்கிறார்' என்பது அந்த சேதி.

ஈழத் தமிழனையும் அவர் உரிமைகளையும் வென்றெடுக்கும் முயற்சிக்கு நீங்களும் உங்கள் பின்னால் நிற்கக் கூடிய உடன்பிறப்புகளும் உயிரையும் தியாகம் செய்ய எடுத்த முடிவை நினைத்து உலகெல்லாம் வாழும் ஈழத் தமிழர்கள் அனைவரும் உங்களை நெஞ்சிலே வைத்து பூஜிக்கிறார்கள். ஆனால், மறு பக்கம் திலீபனை கைவிட்ட இந்த மண்... அன்னை பூபதி தாயைக் கைவிட்ட இந்த மண்... உங்களையும் கைவிட்டுவிடும் என்றே நம்புகிறோம். இலங்கை அரசே இந்திய அரசை மிரட்டி, உங்களை கைவிடச் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஈழத்திலே பிரபாகரனுக்கு நாள் குறிக்கும் இலங்கை அரசு, தமிழகத்து பிரபாகரனுக்கு ஒரு முடிவு ஏற்படுத்தலாம் என்று யோசித்து ஒரு கல்லில் இரு மாங்காய்களை வீழ்த்த எப்படிப்பட்ட நரித் தந்திரத்தையும் செய்யும் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது. எங்களுக்கு நீங்கள் வேண்டும்; உயிரோடு வேண்டும், உடல் உரத்தோடு வேண்டும், மன உறுதியோடு வேண்டும். இந்தப் போராட்டம் அவற்றைக் கலைத்துவிடும் என்ற பயம் எம்மை வாட்டுகிறது.

அடுத்து நடக்க இருக்கும் நாலாம் கட்ட ஈழப் போரிலே எங்கள் தளபதியாகப் படை நடத்த தமிழகத்தில் தாங்கள் வேண்டும். இந்த அரசு எத்தனை அகிம்சைப் போராட்டங்களைக் கருத்தில்கொண்டது என்கிற வரலாற்றோடும் எம் தளபதி திருமாவளவன் எமக்கு வேண்டுமென்ற உரிமையோடும் உன் அண்ணன் என்ற உரிமையோடும் கேட்கிறேன்.

உன் உயிரை எங்களிடம் தா, உன் உயிரைப் போக்கும் உரிமை இந்த நிமிடத்திலிருந்து உன்னிடம் இல்லை. அது உலகெல்லாம் பரந்து வாழும் எட்டுக் கோடி தமிழர்களிடம் உள்ளது. அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாக வேறு முடிவு எடுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறோம். எழுந்து வா... வீர மறவனே, வரும் ஈழப்போரில் எதிரிகளின் தலையைப் பந்தாட உன் சேனைகளைத் தயார்ப்படுத்து...

இப்படிக்கு அண்ணன் செல்வா.'

காங்கிரஸ் ஒழிப்பு கோஷம்!

ஈழக் கடிதமும், டாக்டர் ராமதாஸின் கட்டளையுமாக திருமாவின் உண்ணாவிரதம் முடிந்தது. பழச்சாறு பருகிய கையோடு திருமா மேடையில் செய்த சபதம், 'தமிழக காங்கிரஸைவிட எட்டு மடங்கு பலம்கொண்ட கட்சி, எங்கள் கட்சி. தமிழகத்தில் காங்கிரஸ் என்ற ஒரு இயக்கமே இனி இருக்கக்கூடாது!' என்பதுதான்.

இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் டாக்டர் ராமதாஸிடமிருந்து எதிர்ப்போ, வேறு விளக்கமோ அங்கே வரவில்லை! ஈழத் தமிழர் நலனுக்காக டாக்டர் ராமதாஸ் எடுக்கும் முடிவுக்கு சிறுத்தைகள் கட்டுப்படும் என்று தன் லகானை டாக்டரிடம் ஒப்படைத்தார். அவரும், தமிழர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு இலங்கை அரசுக்கு எதிராக நிற்க வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தினார்.

கூடவே, ''தமிழன் என்றால் மத்திய அரசு கிள்ளுக்கீரையாக நினைக்கிறது. பா.ம.க-வும், சிறுத்தைகளும் இல்லையென்றால் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் சமாதி கட்டியிருப்பார்கள். இந்தக் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்தால், அவர்களுடன் சென்னையில் பொது மேடையில் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்!'' என்று யாருக்கோ சவால் விட்டார்.

சோனியா மீது கோபம்...

கழகங்கள் இல்லாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் பா.ம.க. இருக்கும் என்று கூட்டணி பற்றி டாக்டர் சொல்லிவந்த நிலையில், கடந்த வாரம் ஈழப் பிரச்னைக்காக சோனியாவை சந்திக்க டெல்லி சென்ற பா.ம.க. எம்.பி-க்களை அவர் சந்திக்காதது, பா.ம.க-வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டாக்டருக்கும் இது வருத்தம்தான். கிட்டத்தட்ட இதையே காரணம் காட்டி, இலங்கைத் தமிழர்களை முன்னிறுத்தி தமிழகத்தில் தமிழ் உணர்வாளர்களின் கூட்டணிக்கு அஸ்திவாரம் போடும் முயற்சியில் டாக்டர் இருப்பதாக பா.ம.க. வட்டாரங்கள் சொல்கின்றன.

மனசு மாறும் தோழர்கள்!

இலங்கை விவகாரம் தொடர்பாக ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், 'சிங்கள ராணுவத்துக்குத் தமிழர்களைக் கொல்லும் எண்ணம் இல்லை. அப்படி அவர்கள் செய்ய மாட்டார்கள். ஆனால், அப்பாவித் தமிழர்களை கேடயமாக்கி புலிகள்தான் தங்களைத் தற்காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் தமிழர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது!' என்று தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கையே தமிழக கூட்டணிகளை மாற்றும் என்பது ஈழ உணர்வாளர்களின் கருத்து. ஜெயலலிதாவின் இந்த அறிக்கை கம்யூனிஸ்ட்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்த தா.பாண்டியன்,

''ஜெயலலிதா சொல்வது தவறு. சிங்கள ராணுவம்தான் தமிழர்களைக் கொன்று குவிக்கிறது. இது தொடர்பாக ஜெயலலிதாவை நேரில் சந்தித்து விளக்குவோம்!'' என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும், இலங்கை விவகாரத்தில் ஜெயலலிதாவோடு தா.பாண்டியனுக்கு நாளுக்கு நாள் மோதல் வலுக்கும் என்றே கூறும் அரசியல் பார்வையாளர்கள், அநேகமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அ.தி.மு.க. கூட்டணியோடு பொருந்தாமல் அங்கிருந்து வெளியேறவும் வாய்ப்பு உண்டு என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

கவிஞர் கோபம்!

உண்ணாவிரத மேடையில் புதுத் தகவல் ஒன்றை சொல்லிக் கூட்டத்தைக் கொந்தளிக்க வைத்தார் கவிஞர் காசி ஆனந்தன். ''ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார். இலங்கைக்குப் போன படை இந்தியா திரும்பியவுடன், யோணன் சிங்குக்கு வீர சர்க்கார் விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது.

இந்த செய்தியை தன் அப்பாவிடம் தெரிவித்த யோணன், விருது விழாவுக்கு அவரையும் அழைத்திருக்கிறார். ஆனால் ரன்பீர் சிங்கோ, 'இன விடுதலையை அடக்குவதற்காகக் கொடுக்கப்படும் விருதை நான் வீர விருதாகவே கருத மாட்டேன். அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம். அந்த விருதை நீ வாங்கினால், நமக்குள் எந்த உறவும் இருக்காது' என்று சொல்ல... யோணன் அந்த விருதையே புறக்கணித்தார்!'' என்று காசி ஆனந்தன் சொல்லவும், திருமா ஆதரவாளர்கள் கரகோஷம் எழுப்பினர்.

எச்சரித்த உளவுத் துறை...

இதற்கிடையில் உண்ணாவிரதம் அடுத்தடுத்த நாட்களிலும் தொடர... பஸ் உடைப்பு, பஸ் எரிப்பு என விழுப்புரம் கடலூர் மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் தமிழ்நாட்டு சொத்துகளை நாசம் செய்யும் வேலையில் இறங்கியது ஒரு கூட்டம்! இதையட்டி மத்திய உளவுத் துறை, தமிழக அரசை நேரடியாகவே கடிந்துகொண்டது.

'இந்தியா- இலங்கை நாடுகளின் உறவுக்கு குண்டு வைக்கும் எந்தவொரு காரியமும் தமிழகத்தில் நடைபெறுவதை அனுமதிக்க முடியாது' என்றது. இதையடுத்து தமிழக முதல்வர் கருணாநிதியே திருமாவளவனைத் தொடர்புகொண்டு, 'உண்ணாவிரத்தைக் கைவிடுங்கள். உங்கள் தோழர்களைக் கட்டுப்படுத்துங்கள். இல்லையென்றால், சட்டம் தன் கடமையைச் செய்ய ஆரம்பிக்கும்!' என்று சொன்னார்.

அதையடுத்துதான் திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், 'தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டத்தை நடத்தி எனது ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது. இலங்கையின் தமிழர் பிரச்னையின் உயிரோட்டத்தை எப்படிப் போராளிகளுக்குள் நடந்த சகோதர யுத்தம் பலவீனப்படுத்தியதோ, அதைப் போலவே இலங்கைத் தமிழர்களுக்காக நமக்குள்ளேயும் சகோதர யுத்தங்கள் புரிந்து மொத்தப் பிரச்னையை மூளியாக்கி விடும்' என்று கொந்தளித்திருக்கிறார் கருணாநிதி.

அறிக்கை வெளியான அதே தினம், தி.மு.க. தரப்பிலிருந்தே, ''திருமாவையும் டாக்டரையும் குறிப்பிடவில்லை எங்கள் தலைவர்'' என்று இன்னொரு அறிக்கை வெளியானபோதும்... உரசல் உரசல்தான் என்றே சிறுத்தை வட்டாரங்கள் சொல்கின்றன!

ஈழக் கூட்டணி!

உண்ணாவிரத மேடையில் பேசிய சில பா.ம.க. எம்.எல்.ஏ-க்கள், காங்கிரஸை கடுமையாக விமர்சித் தார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னணி தலைவர்களோ, ''பி.ஜே.பி., பா.ம.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள், சிறுத்தைகள் என புதிய கூட்டணிக்கான முயற்சிகளை அய்யா ராமதாஸ் தொடங்கிவிட்டார். பி.ஜே.பி-யின் மதவெறி பற்றிப் பிறகு பார்த்துக்கொள்வோம். முதலில் காங்கிரஸின் தமிழர் விரோதப் போக்கைத் தடுத்தாக வேண்டும்.

ஒரு இனத்தையே அழிக்கும் சிங்களர்களுக்குப் பல்லக்குத் தூக்கும் இந்திய அரசுக்குத் தக்க பாடம் புகட்டுவோம். அய்யா சொன்னது போல் பால், மருந்து தவிர்த்து தமிழகத்தில் எந்த வாகனமும் ஓடக்கூடாது. தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்து தமிழனின் உணர்வைக் காட்டுவோம். பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் சிங்கள அரசைத் தட்டிவைப்போம் என்று ஏற்கெனவே சொல்லிவிட்டார்கள்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தவரையில் இலங்கையில் தமிழர்கள் அமைதியாக வாழ்ந்தார்கள். தென் பிராந்தியத்தின் சிறந்த படைத்தளபதி பொன்சேகாதான் என்று சிங்களனுக்கு சாமரம் வீசுகிறார் மலையாளி எம்.கே.நாராயணன். அப்படியென்றால், இந்திய ராணுவ அதிகாரிகளுக்குத் திறமையே இல்லையா? நாராயணன் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகரா அல்லது இலங்கைக்கான இந்திய தூதரா?'' என்று ஏகத்துக்கும் பொரிந்தார்கள்.

இந்தப் பேச்சுக்குப் பிறகு பி.ஜே.பி-யின் இல.கணேசன், திருநாவுக்கரசர் ஆகியோர் ஓடோடி வந்து திருமாவுக்கு சால்வை அணிவித்து, உண்ணாவிரத மேடையில் அமர்ந்துகொண்டதும் கவனிக்கத்தக்கது.

நன்றி: ஜீனியர் விகடன்



Comments