'பாய்வதற்கே பதுங்கல்...'

'ரு கண்துடைப்பு நாடகம் சிறப்பாக அரங்கேற்றப்பட்டிருக்கிறது. இலங்கைத் தமிழர் நலனில் அக்கறை காட்டுவதாக இந்திய வெளியுறவுத்துறை செயலர் சிவசங்கர் மேனனும், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவும் மிக அற்புதமான நடிப்பை வெளிக்காட்டியிருக்கின்றனர்!' - இந்திய வெளியுறவுத்துறை செயலர் சிவசங்கர் மேனன் கடந்த 16-ம் தேதி இலங்கைக்குப் போனது குறித்து இப்படி ஆத்திரமும், ஆதங்கமுமாகச் சொல்கின்றன இலங்கைத் தமிழர் கட்சிகள்.

இந்த விஜயம் பற்றி இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள் வட்டாரத்தில் பேசினோம். ''அதிபர் மகிந்தாவின் சகோதரர்கள் பசிலும், கோத்தபயவும்தான் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தற்போது வேகமாக முடுக்கிவிடுபவர்கள். மேனன், இலங்கையில் இறங்கியதுமே இவர்களைத் தான் முதலில் சந்தித்தார்.

முதல்நாள் பசிலை சந்தித்து, இரண்டாம் தவணையாக 1,800 டன் நிவாரணப் பொருட்களும், 1.40 கோடி ரூபாய் நிவாரண உதவிகளும் வழங்குவதாகத் தெரிவித்தவர், போர்நிறுத்தம் தொடர்பான எந்த விஷயத்தையும் வலியுறுத்தவில்லை. அன்று மாலையே கோத்தபயவை சந்தித்து, அவரிடம் தமிழர்களின் நலன் குறித்து வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். தமிழர்களின் அழிவு ஒன்றையே குறிக்கோளாக வைத்திருக்கும் அவரிடம் தமிழர் நலன் பற்றிப் பேசுவதால் என்ன பலன்? அதோடு, 'உடனடியாகப் போரை நிறுத்தும்படி எந்தவித அழுத்தத்தையும் இந்தியா தராது!' என்று தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார்.

இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல இருக்கிறது. அடுத்த தினம் கண்டியில் மகிந்தாவை சந்தித்தார். அப்போது மேனனை வைத்துக்கொண்டே, 'ராணுவ நடவடிக்கைகள் முடிந்த பிறகே... அமைதித் தீர்வை இலங்கை அரசு கையிலெடுக்கும்!' என மகிந்தா மீடியாக்களிடம் சொல்லியிருக்கிறார். அதற்கும் மேனன் எந்த ரியாக்ஷனையும் காட்டவில்லை. மொத்தத்தில் போர்நிறுத்தம் பற்றிப் பேச வந்ததாகச் சொல்லப்பட்ட மேனன், இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்காக அவர்களை ஊக்குவிப்பதுபோலவே பேசிவிட்டுப் போயிருக்கிறார்!'' என்று வேதனைப்பட்டார்கள்.

இதற்கிடையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி-க்கள் மேனனை சந்திக்க விரும்பி அனுமதி கேட்டபோது, ரொம்ப யோசித்துத் தாமதமாக அனுமதி கொடுத்திருக்கிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர்த்து, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, தமிழீழ விடுதலைக் கழகத்தின் (பிளாட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி செயலாளர் நாயகம் ஸ்ரீதரன் ஆகியோரும் மேனனை சந்தித்திருக்கிறார்கள்.

''இலங்கைப் பிரச்னைக்கு நிரந்தர அரசியல் தீர்வே முடிவு. ஒற்றையாட்சியின் கீழ் இனப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியாது. சமஷ்டி முறையிலான தீர்வே நிரந்தரத் தீர்வாக இருக்கும்!'' என்று இவர்கள் மேனனிடம் வலியுறுத்தி இருக்கிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி-யான சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் பேசினோம். ''இலங்கைப் பிரச்னையில் அரசியல் தீர்வு குறித்துப் பல தரப்பட் டோரிடம் அபிப்பிராயங்களைப் பெறுவதே மேனனின் நோக்கமாக இருந்திருக்கிறது.

அவருடைய வருகையால் இந்திய நிலைப்பாட்டில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத்தான் கருதுகிறோம். இலங்கையைப் போன்று இந்தியாவிலும் காஷ்மீர், நாகலாந்து போன்ற பல மாநிலங்களில் இனப்பிரச்னைகள் உள்ளன. அந்தப் பகுதிகளில் எல்லாம் இலங்கை அரசைப் போன்று கொடூரமான அணுகுமுறையை இந்தியா கடைப்பிடிக்கிறதா என வினவினோம். முடிவில் மேனன் தமிழ் தேசியக் கூட்டமைப்பை டெல்லிக்கு அழைத்திருக்கிறார். விரைவில் இந்திய பிரதமரை சந்திப்போம்...'' என்றார்.

இந்தச் சூழ்நிலையில் இலங்கையிலுள்ள நடுநிலையான அரசியல்வாதிகள் சொல்லும் சில விஷயங்கள் இந்தியாவுக்கு சாதகமானதாக இல்லை. ''நான்காம் கட்ட ஈழப்போரில் புலிகளுக்கு எதிராக சிங்கள ராணுவம் இந்தளவுக்கு மேலோங்கக்காரணமே இந்தியாவின் மறைமுக உதவிகள்தான். ஆனால், கடந்த வாரம் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பான நேர்காணல் நிகழ்ச்சியன்றில், 'பாகிஸ்தான் மற்றும் சீன அதிபர்களுடன் அதிபர் மகிந்தா பலமுறை தொடர்புகொண்டு பேசி உதவி, ஒத்தாசைகளைப் பெற்றதன் மூலமாகவே புலிகளுக்கு எதிராக இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற முடிந்தது!' என்றும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் கோத்தபய ராஜபக்ஷே.

ஒரு பக்கம் இந்தியாவைப் பயன்படுத்தி புலிகளை அழித்த பின்னர் சீனா, பாகிஸ்தானுடன் நிரந்தர நட்புப் பேணுவதையே தங்களுடைய ராஜதந்திரமாக இலங்கை கருதுகிறது. இந்த சமயத்தில் திருமலைதுறைமுகத்தில் ஜப்பான் அரசு பெருமளவு முதலீடு செய்வதற்கு அனுமதித்திருக்கிறது அரசு. இதற்காக ஜப்பானின் விசேஷ பிரதிநிதி யசூகி அகாசி, பிப்ரவரி முதல் வாரத்தில் இலங்கைக்கு வரவிருக்கிறார்.

முதலில் இந்தத் துறைமுகத்தில் சீனா முதலீடு செய்வதாக இருந்தது. அந்த சமயத்தில் புலிகளுக்கு எதிராக இந்தியா பல உதவிகளை அரசுக்கு அளித்து வந்தது. சீனா கால்பதிப்பதைக் கண்டு 'ஒருவேளை இந்தியா புலிகளுடனான போருக்கு முட்டுக்கட்டை போட்டுவிடுமோ?' என்கிற பயத்தில்தான் சீனாவுக்கு பதிலாக ஜப்பானை அனுமதித்திருக்கிறது இலங்கை. ஆசிய சமூகத்தில் அமெரிக்கா ஆதிக்கத்துக்கு எதிரான கூட்டமைப்பில் சீனா தலைமையில் ஜப்பான், தென்கொரியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுடன் இணைவதற்குத்தான் இலங்கை விரும்புகிறது.

புலிகளின் அழிப்புக்குப் பிறகு முல்லைத்தீவு பகுதியில் சீனா முதலீடு செய்வதற்கு வேறொரு திட்டத்தையும் இலங்கை வைத்திருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகமிக மோசமான அபாயக்காரணிகள் இவை. இதெல்லாம் தெரிந்திருந்தும் இந்தியா, இலங்கைக்கு உதவுவதை என்ன விதமான ராஜதந்திரமாக எடுத்துக்கொள்வது என்பதுதான் புரியவில்லை!'' என்கிறார்கள்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தற்காப்புப் பாணி தாக்குதல்களையே மேற்கொண்டு வந்த புலிகள் இயக்கம், சிவசங்கர் மேனன் இலங்கையில் இருந்தபோதுதான் முதன் முறையாக எதிர்த்தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதுபற்றி புலிகள் தரப்பில் சிலரிடம் பேசியபோது, ''இலங்கைக்கு இந்தியா பல்வேறு வகையில் ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. இன்னொரு புறம் இந்திய உளவு அமைப்பான 'ரா'வும் எங்களைப் பற்றி புரளிகளைக் கிளப்பிவிடுகிறது.

இந்த சமயத்தில் சிவசங்கர் மேனன் இலங்கையில் இருக்கும்போது... ஒரு எதிர்த்தாக்குதலை நடத்தி எங்களை ஒருக்காலும் அழிக்க முடியாது என இந்தியாவுக்கு உணர்த்த விரும்பினோம். அதனால்தான் தருமபுரம் பகுதியில் மும்முனையில் ராணுவம் தாக்குதல் நடத்தியபோதும் எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டோம். அதுவுமில்லாமல் முதன்முறையாகத் தற்போது நடைபெறும் போரில் கவச பீரங்கியையும் பயன்படுத்தினோம்.


[படம்: விடுதலைப் புலிகள்]


[படம்: விடுதலைப் புலிகள்]

இதில் 51 ராணுவ வீரர்கள் பலியானதோடு, 150 பேருக்கு படுகாயமும் ஏற்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து வரும் நாட்களில் இது மாதிரியான எதிர்த்தாக்குதலை இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம். இப்போது நாங்கள் அழிந்துவிடவில்லை என்பது மேனன் மூலமாக இந்தியாவுக்குத் தெரிந்திருக்கும். பாய்வதற்கு ஏதுவாகத்தான் பதுங்கியிருக்கிறோம் என்பதை இன்னும் சில தினங்களில் வெளிக்காட்டுவோம்!'' என்கிறார்கள்.

நன்றி: ஜீனியர் விகடன்



Comments