உலகத் தமிழினமே! எழு!
குரல்கொடு! போராடு!
தமிழ் இன அழிப்பை விரைந்து தடு!
வெறும் பேச்சல்ல..
செயல் வீரமே இனத்தைக் காக்கும்!
மூச்சடங்குகின்ற இறுதித் தருணங்களில், உயிர்க்காற்றுக்காக ஏங்கும் ஒரு உயிரின் தவிப்புப்போல..
வெம்மை தாளாமல் நீர்வற்றிப்போன உடலில், அசுரதாகத்தால் தவிக்கின்ற நா துளி நீருக்கு போராடுவதுபோல..
ஈழத் தமிழரின் நிலை..
இன்று இக்கணத்தில் வன்னி மண்ணில். துன்பமும் துயரமும் வாட்டிவதைக்க, சிங்கள இனவெறிப் பெரும் பூதத்தின் கொலைக் கரங்களில் இருந்து தப்ப, காடு கரம்பை, வெள்ளம் தண்ணி என குச்சுகளும், குழந்தைகளும், ஆணும் பெண்ணும், முதிசும் இளசும், தவிப்போடு ஓட்டமும் நடையுமாக விழுந்தும் எழுந்தும் அலையும் கொடுமை வன்னி மண்ணில்.
கைபிடித்து வந்த உறவுகளை, பிணமாக வீதியோரத்தில் கைவிட்டுச் செல்லும் கொடுமை. ஓடியாடித் திரிந்த, சின்னஞ்சிறுசுகள், கையின்றியும் காலின்றியும், சிங்கள இனவெறியின் அடையாள சாட்சியங்களால், எங்கள் மண்ணில், மலிந்துபோய்விட்டனர்.
இந்தக் கொடுமையை யாரிடம் சொல்வோம்? இதனைத் தடுக்கமுனைவோர் யாருமிலையா? வெறிகொண்டு ஏகும் சிங்கள இராணுவச் சிப்பாயின் கனத்த சப்பாத்து மிதிப்பில் சிக்கி, எங்கள் குழந்தைகள் எழும்பும் அவலக் குரல் கேட்கிறதா?
இதயமுள்ளோருக்கு நிட்சயம் கேட்கும். உணவில்லை. மருந்தில்லை. குந்தியிருக்கக் கூடாரம் இல்லை. எல்லாவற்றிலும் மேலாய், அடுத்த கணம் உயிரோடு இருப்பதற்கான உத்தரவாதமே இல்லை.
இறுதிக் கணங்கள் எண்ணப்படுவதாக நம்பிக்கைப் பிடிதளர்ந்த ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளியைக் காட்டவேண்டியது, கைபிடித்து அவர்களைத் தூக்கி நிறுத்தவேண்டியது, அணைத்து ஆசுவாசப்படுத்த வேண்டியது உலகத்தமிழினத்தின் குறிப்பாய் தாய் உறவென நம்பிக்கை வைத்திருக்கும் தமிழகத்தின் வரலாற்றுக் கடமையாகும்.
அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால், தமிழினம் என்ற ஒரு உணர்வின் தளத்தில் இருந்து அவர்களுக்கு காப்பரணாய் நிமிரவேண்டியது தமிழகத்தின் இன்றைய தலையாய கடமையாகும் என்பதே, உலகத்தமிழ் இனத்தின் எதிர்பார்ப்பு.
உலகெங்கும் எட்டுக்கோடி தமிழர்கள் இருக்கின்றார்கள். தமிழகத்தில் மட்டும் சுமார் ஆறரைக்கோடி தமிழர்கள். தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர், தமிழினத்தின் தலைமகன், தமிழர் தலைவர் கலைஞர் கருணாநிதி. இந்திய மத்திய அரசோ தமிழகத்தின் மடிப்பிச்சையில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
ஆனால், மத்திய அரசு, ஈழத்தமிழர் விடயத்தில் அசையவில்லை. அல்லது, தமிழக அரசால் அசைக்கமுடியவில்லை. தமிழகம் குறித்தும், தமிழக மக்களின் பேரெழுச்சி குறித்தும் அலட்சிய மனோபாவத்துடன், நாட்கள் கடத்தப்படுகின்றன. சிங்களத்தின் போர்வெறிக்கு, தமிழின அழிப்பிற்கு மௌன சாட்சியாய் கலைஞர் இருக்கின்றார் என்பது பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் எமக்கெல்லாம் கவலையளிக்கிறது.
கடந்த ஆண்டின் இறுதியில், பற்றி எரிந்த, பேரெழுச்சி, தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் எழுந்த இனஉணர்வு அலை, ஈழத்தமிழர்கள் மத்தியில், ஒரு விதமான நம்பிக்கையை, பெருமிதமான எண்ணங்களைத் தோற்றிவித்திருந்தது. மனித சங்கிலிப் போராட்டங்கள், வீதி மறியல் போராட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள், சட்டமன்றத் தீர்மானங்கள், சர்வகட்சி மாநாடுகள், சந்திப்புக்கள், வாக்குறுதிகள், போராட்டங்கள்...
இப்பெரும் மனித ஆற்றலுக்கும், உணர்விற்கும், எதுவிதமான பிரயோசனமும் இல்லாமல் போனது வருத்தத்திற்குரியதே. ஏன் தாமதிக்கின்றார்கள்? சிங்களத்தின் திட்டம் தடங்கல் இல்லாமல் முன்னேறி, குறித்த இலக்கை அடைவதற்கான கால அவகாசம் வழங்கப்படுகின்றதா? தமிழ் மக்களைத் தாக்க அவர்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க, சிங்கள அரசின் கோரிக்கைக்கு இசைவாகச் செயற்பட்ட இந்திய அரசு, தமிழர்களைக் காக்க தமிழகத்தின் கோரிக்கைக்கு, இசைய மறுப்பது ஏன்?
இந்தியாவின் ஒரு அங்கமான தமிழகத்தின் பாத்திரம் என்ன? அதன் பெறுமதி என்ன?ஆறரைக் கோடி தமிழர்களின், சனநாயக் குரலின் வலிமையின் தாக்கம் எவ்வளவு?
யுத்தத்தை நிறுத்து! சமாதானம் பேசு! என்ற யாருக்கும் கெடுதல் இல்லாத மனிதநேயம் தோய்ந்த கோரிக்கைக்கு ஏன் இந்த அவமானம்? அலட்சியம்? சிங்களம் ஏவும் ஒவ்வொரு குண்டும், தமிழர்களை நாளும் பலிவாங்கிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், விமானப் பேரிரைச்சலுடன், பீரங்கி வெடிப்புச் சத்தத்துடன், தமிழர்களின் மரண ஓலங்களும் கலந்தே வன்னியில் எதிரொலிக்கிறது.
கந்தகக் காத்துடன், பிணத்தின் வாடையும், பச்சை இரத்தத்தின் வாடையும், கலந்தே, வன்னியின் காற்று மண்டலம் கனத்துக் கிடக்கிறது. விடப்படும் ஒவ்வொரு மூச்சுக்கும் பின்னால் மறு மூச்சு உண்டா என்ற சந்தேகத்துடனேயே இருளாகக் காலம் கழிகிறது. மன்னாரில், வவுனியாவில் இருந்து தொடங்கி, மணலாற்றில் இருந்து முன்னேறி, இடங்களை அபகரித்து, தமிழன் வாழ்விடங்களை விழுங்கியபடி, தமிழன் வாழ்வை அழித்தபடி, வகைதொகையின்றி, தமிழன் உயிர்களைக் குடித்தபடி, சிங்கள இனவெறி இராணுவம், இன்று கிளிநொச்சி, ஆனையிறவு, பரந்தன், நெடுங்கேணி, ஒட்டிசுட்டான், அலம்பில் என, விரிந்து ஆக்கிரமித்து நிற்கிறது.
வன்னிப் பெரு நிலப்பரப்பெங்கும் பரந்தும் விரிந்தும், செழிப்புடன் வாழ்ந்த மக்கள், இன்று முல்லைத்தீவில் ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் விரட்டி முடக்கப்பட்டுள்ளனர். காட்டையும், காட்டை அண்டிய கிராமங்களிலும், ஓரிரு நகரங்களிலும், நான்கு இலட்சம் மக்கள், மிகவும் நெரிசலான கடுiமான நெருக்கடிமிக்க, ஆபத்தான வாழ்க்கைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளனர். இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்ற மக்கள், வவுனியாவில், இடைத்தங்கல் முகாம் என்ற பெயரில், முட்கம்பிகளால் சூழப்பட்ட நவீன சிறைக்கூடத்தில், சுதந்திரமான நடமாட்டங்கள் முற்றாக நிராகரிக்கப்பட்ட, கொடுப்பதைத் தின்றுவிட்டு, ஏக்கத்துடன் குற்றமற்ற சிறைக் கைதிகளாக காலம் கழிக்கின்றனர்.
புதிய ஆண்டில், இன்னும் வேகமாக, இன அழிப்பு நடக்கிறது. தினமும், சாவும் அழிவுமாக, புதிய ஆண்டு, தமிழனுக்கு சோக ஆண்டாக விடிந்திருக்கின்றது. முல்லலைத்தீவை நோக்கிய படையெடுப்புக்கு, ஐம்பதினாயிரம் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என, சிங்கள இனவெறி இராணுவத்திற்கு தலைமையேற்று இனவேட்டையாடிக்கொண்டிருக்கும் சரத்பொன்சேகா தெரிவித்திருக்கின்றார்.
இனஅழிப்ப யுத்தம் மிக மோசமான கட்டத்தை அடைந்துகொண்டிருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. சிறீலங்காவின் வரலாற்றில் என்று மில்லாதவாறு, கடந்த ஆண்டு இருபதினாயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்கி தமிழின அழிப்பை நடத்தியிருக்கும், மகிந்த ராஜபக்ஸ்ச, இந்த ஆண்டு, கடந்த ஆண்டை விட போருக்கு மேலும் அதிக தொகையை ஒதுக்கியுள்ளார்.
ராஜபக்ஸ்சவைப் பொறுத்தளவில், இது அவரின் அரசியல் சூதாட்டகளம். பெரும் தொகை முதலை இட்டு நடத்தபடுகின்ற ஆட்டம். தமிழர்களை அடிமை கொள்வதென்பதே, அரசியல் இருப்பிற்கான மூலதனம். ஆனால், தமிழர்களைப் பொறுத்தவரை, இது உயிர்வாழ்தல் பிரச்சினை. உரிமைப் பிரச்சினை. மானப்பிரச்சினை.
சந்தேகமில்லாமல், சிங்களம் ஏவும் ஒவ்வொரு எறிகணையும், போடும் ஒவ்வொரு விமானக்குண்டும், பெருமளவில் தமிழர்களைப் பலிகொள்ளப் போகின்றதென்பது அச்சம் தருகின்ற உண்மை. தட்டிக் கேட்பாரின்றி, தடுத்து நிறுத்துவார் இன்றி, சிங்கள இனவெறி அரசு, தனது இராணுவ பலம்கொண்டு, தனது நட்பு நாடுகளின் துணைகொண்டு, நடத்துகின்ற இந்த இன அழிப்புப்போரை, உலகத் தமிழ்மக்கள் குறிப்பாக தமிழக தமிழ்மக்கள், தமது பலம் கொண்டு, தடுத்து நிறுத்தாவிட்டால், மிகப் பேரவலத்தையும், பேரழிவையும் வன்னியில் தமிழ் இனம் சந்திக்கும் என்பது, சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மை.
வரலாற்றின் பழிபாவத்திற்கும், எதிரிகளின் பல்லிளிப்பிற்கும் ஆளாகாமல் விரைந்து, அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இனஅழிப்பை தடுத்துநிறுத்த முன்வாருங்கள். தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களே, உங்கள் அரசியல் வாழ்வில், பல போராட்டங்களை நடத்தியவர், போராட்டங்களை தலைமையேற்று நடத்தி, பல வரலாறுகளைப் படைத்தவர் நீங்கள். இன்று நிகழ்காலம் உங்களை அழைக்கிறது. உங்கள் இறுதிக் காலத்தில், உலகத் தமிழினத்தில் மனங்களில் நீங்கா இடத்தில் வீற்றிருக்கச் செய்யும், ஒரு போராட்டக் களம் உங்கள் முன்னால் விரிந்து கிடக்கிறது.
போராட்டத்திற்கு தலைமையேற்று வெற்றிவாகை சூடுங்கள். தமிழ் இனத்தைக் காப்பாற்றுங்கள். ஒரு சந்தர்ப்பத்தில், நா தளதளக்க நீங்கள் கூறிய வார்த்தை, ஈழத்தமிழனைக் காப்பாற்ற முடியாவிட்டால் இந்த ஆட்சி எதற்கு என்று? பின்பு உங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கி, மத்திய அரசு மீது நம்பிக்கை தெரிவித்தீர்கள். ஆட்சியில் இருந்து உங்கள் கட்சி, இல்லாமல் போனால், எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை எனவும் காரணம் தெரிவித்தீர்கள்.
ஆனால், உங்கள் ஆட்சி அதாவது, தமிழினத் தலைவரின் ஆட்சி தமிழகத்தில் இருக்கின்றபோது, உங்கள் ஆதரவுடன் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கையில், இலங்கை அரசுக்கு இனஅழிப்பிற்கு உதவியதோடல்லாமல், இனஅழிப்பை கைகட்டி வேடிக்கை பார்த்த, பெரும் பாவமும், அவமானமும், உங்களைச் சூழும்.இருந்த பலம் கொண்ட ஆட்சியால் என்ன பலன் ஏற்பட்டது என்ற கேள்விக்கும் இடம் உண்டல்லவா?
ஆட்சியை வைத்து ஏதும் செய்ய முடியாத பட்சத்தில், ஆட்சியைப் பிணை வைத்து, ஒரு வரலாற்றைப் படைக்க ஏன் முயலக்கூடாது? ஆட்சி என்பது தோளில் போடும் துண்டு என்று வேண்டுமானால், மேடைகளில் சொல்லிவிட்டுச் செல்லலாம், ஆனால், நிஜம் இடிக்கிறது.
ஒரு குடும்பத்தின் நலனுக்காக. ஒருவரை இழக்கலாம். ஒரு ஊரின் நலனுக்காக ஒரு குடும்பத்தை இழக்கலாம். ஒரு நாட்டின் நன்மைக்காக ஒரு ஊரையே இழக்கலாம் என்பது, ஏற்றுக்கொள்ளப்படுகின்ற பொதுக்கருத்தாக முன்வைக்கப்படுகின்றபோது, தமிழ் இனத்தின் வாழ்வுக்காக, சுய கௌரவத்திற்காக, இன மானத்திற்காக, ஒரு ஆட்சியை.. கேடயமாக ஏன் முன்னிறுத்தக்கூடாது.
இனநலன் கருதி இந்த ஆட்சிவீழ்ந்தால், அடுத்துவரும் தேர்தலில், இனத்தின் தலைவனாய் எழுவீர்கள் உறுதி. உலகத் தமிழ் இனம் நன்றியுடன் உங்களைத் தலைமேல் வைத்துப் போற்றும். ஈழதமிழனின் உள்ளத்து உணர்வு!
புலம்பெயர்ந்த ஈழத்துத்தமிழன்
Comments