வவுனியா நோக்கி நோயாளர்களுடன் சென்ற வாகனத் தொடரணி மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்

வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் வவுனியா நோக்கி நோயாளர்களுடன் சென்ற வாகனத் தொடரணி மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் இன்று வெள்ளிக்கிழமை காலை அவசர சிகிச்சை பெற வேண்டிய நோயாளர்கள் மற்றும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்களின் வாகனத் தொடரணி ஆகியவை வவுனியா செல்வதற்காக புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் வீதியில் உள்ள மன்னர்கண்டலில் ஆயத்தமாக இருந்த வேளை சிறிலங்கா படையினர் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதலில் அரசாங்க அதிபர்களின் வாகனத் தொடரணியில் சென்ற வவுனியா, மன்னார் வீதியைச் சேர்ந்த செல்வரத்தினம் ஜெமினிக்காந்த் (வயது 32) மற்றும் புதுக்குடியிருப்பு, கைவேலியைச் சேர்ந்த கந்தையா வசந்தகுமார் (வயது 29) ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு நோயாளர் காவூர்திகளில் வவுனியாவுக்கு நோயார்கள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

நேற்றும் இன்றும் பாதைகள் தடைப்பட்டுள்ளதால் அவசர சிகிச்சை பெறவேண்டிய நோயாளர்கள் ஆபத்தான நிலையில் புதுக்குடியிருப்பில் உள்ள தருமபுரம் மருத்துவமனையில் உள்ளனர்.

Comments