இனவெறிப்போரை நிறுத்து! அமைதிப் பேச்சுவார்த்தை நடத்து!
- என்கிற முழக்கத்துடன் சாகும்வரை உண்ணாவிரதம் என்கிற அதிரடியான அறிவிப்போடு சென்னை மறைமலை நகரில் போராட்டக்களம் இறங்கினார் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்!
சாகும்வரை உண்ணாவிரதம் என்கிற அளவிற்கு சீரியசான முடிவை எடுத்த சூழலை விளக்கினார்கள் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் மாநில நிர்வாகிகள் சிலர்...
""முல்லைத்தீவில் 5 லட்சம் தமிழர்களையும் இலங்கை ராணுவம் சுற்றி வளைத்து தாக்கப் போகிறது என்கிற தகவல் வெளியான டிசம்பர் 31-ம் தேதியே போர் நிறுத்தம் கொண்டுவர தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என தீர்மானித்தார் அண்ணன் திருமா. எங்கள் கட்சியின் நிர்வாகக் குழுவிலும் ஈழப்பிரச்சனை பற்றி தீவிரமாக பேசப்பட்டது. நிர்வாகிகள் கூட்டத்தில் ஈழப்பிரச்சனைக்கு பெரிய அளவில் குரல் கொடுக்க வேண்டும் என மன்சூர்அலிகான் தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து பலரும் இதே கருத்தை அழுத்தமாக பேசி, லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
மாநில துணைப் பொதுச்செயலாளர் சோழன் நம்பியார் உள்ளிட்ட சில தலைவர்கள், மக்களைத் திரட்டி உண்ணாவிரதம் என்பதைவிட நீங்களோ அல்லது நீங்கள் குறிப்பிடும் 5 நபர்களோ சாகும்வரை உண்ணாவிரதம் என்கிற நிலையை எடுப்பதுதான் சரியாக இருக்கும் என வலியுறுத்தினார்கள். அப்படி அமையும் போராட் டம் ஈழப்பிரச்சனைக்காக நாம் எடுக்கும் இறுதிப் போராட்டமாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். அப்போது வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை தலைவர். ஆழ்ந்த யோசனைக்கு பிறகே இந்த முடிவை எடுத்தார்'''என திருமா எடுத்த தீவிர முடிவைப்பற்றி விளக்கினார்கள் வி.சி.தலைவர்கள்.
பொங்கல் தினத்தில் உண்ணாவிரதம் இருக்க சென்னை மாநகர போலீசிடம் அனுமதி கேட்டு மனு அளித்திருந்தது வி.சி.கட்சி. தைத் திருநாளை முதல் நாளாக கொண்டு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் முதல்வருடத்தின் முதல்நாளில் இப்படி ஒரு உண்ணாவிரதம் நடத்துவது சரியாக இருக்காது என்று திருமா தரப்புக்கு எடுத்து சொல்லப்பட்டதுடன் உண்ணாவிரதத்தை ஒருநாள் தள்ளி 15-ம் தேதி சேப்பாக்கத்தில் நடத்த அனுமதி தருவதாக சொல்லப்பட்டது.
ஆனால் ஒருநாள் உண்ணாவிரதம் என அனுமதி பெற்று சாகும்வரை உண்ணா விரதம் நடத்த வி.சி.க்கள் திட்டமிட்டிருக்கிறார்கள் என்ற தகவலைத் தொடர்ந்து சேப்பாக்கம் உண்ணாவிரதத்துக்கும் நெருக்கடி கொடுத்தது போலீஸ். இதை எப்படி எதிர்கொள்வது என்று யோசித்த திருமா, வடபழனியில் உள்ள தங்கள் அலுவலகம் உள்ளிட்ட இடங்களை பரீசிலித்து, இறுதியில் மறைமலை நகரைத் தேர்ந்தெடுத்தார்.
இங்கேதான் ஈழத்தமிழர்களுக்காக தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தது பா.ம.க. உண்ணாவிரத தினத்துக்கு முந்தைய இரவில்தான் இடம் இறுதி செய்யப்பட்டதால் இரவோடு இரவாக சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளுக்கு தகவல் சொல்லப்பட்டது.
15-ம் தேதி காலை 8.30 மணியளவில் தன் கே.கே.நகர் வீட்டிலிருந்து புறப்பட்ட திருமா 9.30 மணிக்கு உண்ணாவிரதத்தை தொடங்கிவிட்டார். திருமா வருவதற்குள் சுமார் 500 பேர் திரண்டுவிட்டனர். திருமா உண்ணாவிரதம் துவக்கிவிட்டார் என்கிற செய்தி அறிந்து வி.சி.க்களும், ஈழ ஆதரவாளர்களும் உண்ணாவிரத மேடை அருகில் குவியத் தொடங்கினர்.
தமிழ் உணர்வுள்ள தலைவர்களும் திருமாவின் உண்ணாவிரதத்தை வாழ்த்த வந்தனர். வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பழ.நெடுமாறன் உள்ளிட்டவர்கள் வாழ்த்திய நிலையில் உண்ணாவிரத இடத்துக்கு வந்தார் இந்திய கம்யூ. மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லக்கண்ணு.
""திருமாவளவனின் உண்ணாவிரதம் என்பது பெரிய ஆயுதமாக உருவெடுக்கும் என எங்கள் கட்சியின் மத்திய தலைவர்களும் கருதுகிறார்கள். திருமாவளவனை கைது செய்யக்கூடாது'' என்றவர், ""சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், எங்கள் கட்சியின் சார்பில் உண்ணாவிரதம் நடத்தியும், மனித சங்கிலிப் போராட்டம் நடத்தியும், அனைத்துக்கட்சித் தலைவர்களுடன் சென்று முதல்வர் தலைமையில் மனு கொடுத்தும் எந்த முயற்சியும் எடுக்க வில்லை மத்திய சர்க்கார். இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு செத்த பிணமாக உள்ளது'' என கடுமையாகவே தன் அதிருப்தியை பதிவுசெய்தார் அமைதியான இயல்பு கொண்ட தோழர் நல்லக்கண்ணு.
உண்ணாவிரதத்தில் பலரும் உணர்ச்சிவசப்பட்டு பேசிய நிலையில் மாலை 6 மணியளவில் மேடைக்கு வந்தார் தி.க.தலைவர் வீரமணி. அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த கவிஞர் இன்குலாப், ""திருமாவளவனை உண்ணாவிரதத்தை நிறுத்த சொல்லி கேட்பதைவிட இலங்கையில் போரை நிறுத்தச் சொல்வதுதான் சரியாக இருக்கும். இதை ஆட்சியாளர்களிடம் அய்யா வீரமணி கொண்டு செல்ல வேண்டும்'' என தன் கருத்தை பதிவு செய்தார்.
ஆசிரியர் வீரமணியைப் பேச அழைப்பதற்கு முன்பாக சிறு முன்னுரை போல பேசிய திருமா, ""அய்யாவுக்கு உண்ணாநிலை போராட்டத்தில் உடன்பாடு இருக்காது. பெரியார் திடலில் ஆலோசனை நடத்தியபோதே உண்ணாநிலை என்ற உடனேயே அதை தவிர்க்கச் சொன்னார். தலைவர் கலைஞரை சந்திக்க சென்றபோது, எல்லா வகையான முயற்சிகளையும் எடுத்துவிட்டோம். இதற்கு பிறகு, நானே உண்ணாவிரதம் இருப்பது ஒன்றுதான் வழி என்று சொன்னார் முதல்வர். அப்போதும் முதல் ஆளாக அதை மறுத்தவர் அய்யா வீரமணிதான். பெரியார் திடலில் அய்யா வீரமணியின் பேச்சைக் கேட்டு பெரியார் கொள்கைகளைக் கற்றுக்கொண்டவன் நான். நம்முடைய உண்ணாவிரதத்தை வாழ்த்தவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று சொல்லி வீரமணியை பேச அழைத்தார்.
கூட்டத்தில் பேசிய ஆசிரியர் வீரமணி, ""உண்ணா நிலை என்பது பகுத்தறிவுக்கொள்கைக்கு முரணானது. நான் எப்போதுமே உண்ணாவிரதத்தை பழச்சாறு கொடுத்து முடித்து வைப்பவன். இன்றும் அப்படி முடித்துவைக்க வேண்டும் என்றுதான் வந்திருக்கிறேன். களத்தில் போர் வாளாக இருக்க வேண்டியவர்கள் இப்படி உண்ணாவிரதம் இருந்து சாகிறேன் என்பதை ஏற்க முடியாது. உண்ணா விரதத்துக்கு பதில் வேறு வகையான அறப்போராட்டங்களில் ஈடுபடுவதுதான் சரியாக இருக்கும்.
திருமாவளவன் சாகிறேன் எனச் சொல்வதால் எதிரிகள்தான் மகிழ்ச்சி அடைவார்கள். ஈழத்தமிழர்களுக்கான போராட்டத்தில் முதல்வரை முன்னிறுத்தி செல்வதுதான் விவேகமாக இருக்கும். இந்த ஆட்சி நடப்பதால்தான் இந்த உண்ணாவிரத போராட்டத்தையே நடத்த முடிகிறது என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்'' என்றவர் திருமாவளவன் உண்ணாவிரதத்தை முடிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
ஆனால் ஆசிரியர் வீரமணி பேசி முடித்ததும் மைக் பிடித்த வி.சி.பொதுச் செயலாளர்களில் ஒருவரான சிந்தனைச்செல்வன், ""அய்யா ஒரு தாயின் உரிமையோடு உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளச் சொல்கிறார் என்றே எடுத்துக் கொள்கிறோம். ஆனாலும் உண்ணாவிரதத்தை முடிக்க முடியாத நிலையில் இருப்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்'' என அழுத்தமாக சொல்லிவிட்டார். முதல்நாள் உண்ணாவிரதத்தில் இலங்கை எம்.பி.க்கள் சிவாஜிலிங்கமும், ஸ்ரீகாந்தாவும் ஈழத்தமிழர்கள் சந்திக்கும் இன்னல்களை விவரித்தார்கள்.
அதன்பிறகு இரவு முழுக்க உண்ணாவிரதம் நீடித்தது. இரவோடு இரவாக வி.சி.க்களின் சார்பில் வட மாவட்டங்களில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. இரண்டாம் நாளில் அருகில் இருக்கும் மாவட்டத்தை சேர்ந்த ஆதரவாளர்களும் திரண்டனர்.
இரண்டாம் நாளில் பரபரப்பை உண்டாக்கியது இயக்குனர் ஆர்.கே.செல்வமணியின் பேச்சுதான். பாரதிராஜாவுடன் மேடைக்கு வந்த செல்வமணி, ""பிரதமரைப் பார்க்க சென்ற அனைத்துக்கட்சித் தலைவர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த திருமாவை அனுமதிக்கக் கூடாது என தங்கபாலு, இளங்கோவன் போன்றவர்கள் தடுத்திருக்கிறார்கள். சேரி மக்களின் ஓட்டு மட்டும் வேண்டும் என்பார்கள். தீண்டாமை இன்னமும் இருப்பதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம்.
திருமாவுக்கு ஏற்பட்ட நிலை டாக்டர் ராமதாசுக்கோ, வைகோவுக்கோ ஏற்பட்டிருந்தால் தமிழகம் கொந்தளித்திருக்காதா?'' என்றெல்லாம் கடுமையாக பேசியவர், ""ஆட்டுக்கார அலமேலு படத்தில் ஆடு ஜெயித்தால் கை தட்டுகிறோம், பாம்பு ஜெயித்தால் கை தட்டுகிறோம். அது போலதான் புலி ஜெயித்தாலும் கைத் தட்டுகிறோம். இதில் என்ன தவறு?'' என்று கேள்வி எழுப்பினார்.
அவரைத் தொடர்ந்து பேசவந்த திருச்சி வேலுச்சாமியும், பொறி கிளப்பியபடி பேசினார். ""பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி, பாதுகாப்பு ஆலோசகர், எம்.கே.நாராயணன், வெளியுறவுச்செயலாளர் சிவசங்கர் மேனன், சோனியாவைச் சுற்றி இருக்கும் பிள்ளை, ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் என அனைவரும் மலையாளிகளாக இருப்பதால்தான் ஈழப்பிரச்சனையில் மத்திய அரசு இப்படி செயல்படுகிறது என்பதை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்றதோடு நிற்காமல், ""சுப்ரமணியசாமி எழுதிய புத்தகத்திலேயே ராஜீவ் கொலை பற்றி சோனியாவையும் அவரது அம்மாவையும் விசாரிக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார். சுப்ரமணியசாமி புத்தகம் எழுதி 10 வருடம் ஆகிவிட்டது. அவரும் இங்கேதான் இருக்கிறார். அவரிடம் இது பற்றி எந்த காங்கிரஸ்காரனும் கேட்பதில்லையே ஏன்?'' என்று வெடித்தார் வேலுச்சாமி.
லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர், கவிஞர் தாமரை, வி.ஐ.டி.பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், இயக்குநர் ஜனநாதன் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்களும் திருமாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும்படி டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டதாகவும், தன்னுடைய கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடி வெடுப்பதாக அவரிடம் சொன்னதாகவும் இரண்டாம்நாள் உண்ணாவிரதத்தின்போது அறிவித்தார் திருமாவளவன்.
எனினும், இரண்டாம் நாள் இரவில் அவருக்கு "சுகர்' அதிகமானதால் லேசான மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உடல்நலன் காரணமாக எந்த நேரமும் கைது செய்யப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படலாம் என்பதால் பதற்றம் அதிகமானது. இந்தப் பதற்றம் பல மாவட்டங்களுக்கும் பரவ, 12 அரசு பேருந்துகள் சேதமடைந்தன. தமிழகத்தில் 30 மாவட்டங்களிலும் விடுதலை சிறுத்தைகளின் மகளிர் பிரிவு உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவானது. நள்ளிரவு கடந்தும், இலங்கையைப் போலவே பதற்றம் தணியாமல் இருந்தது மறைமலை நகர்.
நன்றி: நக்கீரன்
Comments