வன்னி நிலம் வளையாது எனில்,
கிளிநொச்சி நகரின் வீழ்ச்சி புலிகளுக்கு தோல்வியா?
பிரபாகரன் படை வெல்லும் - அவன் பெரும் வெற்றிச் செய்தியை வரலாறு சொல்லும்
மேற்சொன்ன வரிகள் உங்களை ஆறுதல் படுத்துவதற்காய் சொன்ன வரிகளல்ல மாறாக வரலாற்றுச் சேதி சொன்ன வரிகள் என்பதை உள்வாங்கிக் கொண்டு …..
அவலங்களைத் தந்த 2008 ஆம் ஆண்டு தொலைந்து போய், புதிய நம்பிக்கையோடு 2009 ஆம் ஆண்டு பிறக்கும் என்று எதிர்பார்த்திருந்த தமிழ் மக்களுக்கு கிளிநொச்சி நகரின் வீழ்ச்சி பேரிடியாக அமைந்தது. போருக்குள் வாழும் வன்னி மக்களை இது எந்தளவுக்குப் பாதித்ததோ தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக இலங்கையின் பிறபாகங்களில் வாழும் தமிழ் மக்களை- புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை- ஏன் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை இது அதிர்ச்சியடைய வைத்தது.
கிளிநொச்சியின் வீழ்ச்சியை அடுத்து தென்னிலங்கை பெரும் வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்துகிறது. வெடி கொளுத்தி ஆரவாரங்கள் செய்யப்படுகின்றன. இனிப்புகள் பரிமாறப்படுகின்றன. இவையெல்லாம் தமிழ் மக்களின் இதயங்களில் ரணத்தை ஏற்படுத்துகின்றமை உண்மை. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிகழ்வுகளாகவே அமைந்துள்ளன. மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் நடத்துகின்ற ‘மனிதாபிமானப் போரின்’ உச்சக் கட்டம் இது.
தமிழ் மக்களைப் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து விடுவிக்கவே போரை நடத்துவதாகக் கூறிக் கொண்டு - வன்னியில் 3 நாட்களில் 18 அப்பாவிப் பொதுமக்களை குண்டு போட்டுக் கொன்றும் 75 இற்கும் மேற்பட்டோரை காயப்படுத்தியும் இந்த ‘மனிதாபிமானப் போர்’ நடத்தப்படுகிறது.
உண்மையில் அரசாங்கம் சொல்வது போன்று தமிழ் மக்களை விடுவிப்பதற்கான போராக இது இருக்குமெயானால் - கிளிநொச்சியின் வீழ்ச்சியை தமிழ் மக்கள்தான் கொண்டாடியிருப்பார்கள்.
அது தமிழ் மக்களின் பாரம்பரிய பூமி. அதனை அரசபடைகள் கைப்பற்றியதை தென்னிங்கைச் சிங்களவர்கள் கொண்டாடுகிறார்கள் என்றால், அது எப்படி தமிழ் மக்களை விடுவிப்பதற்கான போராக இருக்க முடியும்?
தமிழ் மக்களுக்கு நியாயமாக அரசியல் தீர்வை, உரிமையை வழங்க விருப்பம் இல்லாத சிங்களவர்களுக்கு, தமிழ் மக்களுக்காக, அவர்களின் நகரத்தை கைப்பற்றியதற்காக மகிழ்ச்சிக் கொண்டாட்டம் நடத்தும் மனம் தான் வருமா?
சிங்கள மக்களும் சரி- அரசாங்கமும் சரி இப்போது நடத்துவது மகிழ்ச்சிக் கொண்டாட்டம் அல்ல. இனவெறிக் கொக்கரிப்பு. இது அவர்கள் மாறவில்லை என்பதற்கு எடுத்துக் காட்டு.
கிளிநொச்சி வீழ்ச்சியை அடுத்து தென்னிலங்கையின் இனவாதப் பிரசாரங்கள்; மோசமான கட்டத்தை அடைந்திருக்கின்றன. இவையெல்லாம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை, கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
கிளிநொச்சியின் வீழ்ச்சியை மையமாகக் கொண்டு அரசாங்கம் பெரும் பிரசாரத்தில் இறங்கியிருக்கிறது. புலிகளை இன்னும் சில வாரங்களுக்குள் அதாவது பெப்ரவரி 7 ஆம் திகதிக்குள் அழித்து விடப்போவதாக கால எல்லை வகுத்திருக்கிறது. அடுத்து கிளிநொச்சியில் நடந்ததே சமர்களுக்கெல்லாம் தாய்ச்சமர் என்று இராணுவத் தரப்பு கூறியிருக்கிறது.
கிளிநொச்சி என்பது விடுதலைப் புலிகளின் நிர்வாக தலைநகராக இருந்த நிலையில் அதன் வீழ்ச்சியை புலிகளின் வீழ்ச்சியாக பார்க்க முற்படுகின்றனர். இதன் காரணமாகவே அந்த அதிர்ச்சியும் கவலையும் பலரையும் தொற்றிக் கொண்டிருக்கிறது.
உண்மையில் கிளிநொச்சியின் வீழ்ச்சி என்பது விடுதலைப் புலிகளின் போர்த்திட்டத்துக்கு அப்பாற்பட்டதொன்றா?,
இதன் எதிர்கால விளைவுகள் எப்படியிருக்கும்?,
இந்தச் சமரில் வெற்றி யாருக்குக் கிடைத்தது என்கின்ற நோக்குடன், கிளிநொச்சி நகரின் வரலாற்றையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றையும் எடுத்துப் பார்த்தால் ஒரு சகட ஓட்டத்தை அவதானிக்கலாம். கிளிநொச்சி எப்போதுமே ஒருவரின் கையில் இருந்ததில்லை.
யாழ்ப்பாணத்தை இணைக்கின்ற தேசிய நெடுஞ்சாலையின் மைய நகராக இருப்பதால் எப்போதுமே கிளிநொச்சியின் மீது அனைத்து தரப்புக்கும் ஒரு கண் இருப்பது வழமை.
கிளிநொச்சி நகரம் அவ்வப்போது படையினரிடம் இருப்பதும் விடுதலைப் புலிகளின் கைக்கு மாறுவதும் வழக்கம். ஆனால், இப்போது விடுதலைப் புலிகளின் நிர்வாக தலைநகராக மாறிய பின்னர் இது வீழ்ச்சி கண்டிருப்பது தான் முக்கிய வேறுபாடு.
ஆனால்
அரசபடைகள் சொல்வது போன்று கிளிநொச்சி புலிகளின் பிரதான கோட்டை அல்ல. அதற்காக நடந்திருக்கின்ற சண்டையும் சமர்களுக்கெல்லாம் தாய்ச்சமரும் அல்ல.
மூன்றாம் கட்ட ஈழப்போரில் விடுதலைப் புலிகளின் பிரதானமான கோட்டையாக இருந்த யாழ்ப்பாணத்தையே அரச படைகள் கைப்பற்றியிருந்தன. இப்போது கிளிநொச்சியில் இருந்த கட்டமைப்புகளை விடவும் விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் 1990 களில் ஏற்படுத்தியிருந்த நிர்வாகக் கட்டமைப்புகள் வலுவானவை. ஆனால், ஒரு இராணுவ நெருக்குதல் வந்தபோது அந்தக் கோட்டையையே விடுதலைப் புலிகள் இழந்து வன்னிக்கு தமது தளத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
கிளிநொச்சியில் இப்போது விடுதலைப் புலிகள் வெறும் நிர்வாக ஒழுங்கமைப்புகளை மட்டுமே வைத்திருந்தனரே தவிர, வன்னிப் பெருநிலப்பரப்பின் பல பகுதிகள் தான் விடுதலைப் புலிகளின் முக்கிய கோட்டையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியின் வீழ்ச்சியானது விடுதலைப் புலிகளுக்கு போரியல் ரீதியான எதிர்வினைகளை விட, அரசியல் ரீதியான பின்னடைவை ஏற்படுத்தியதே தவிர, இராணுவத் தோல்வி எனக் கூறமுடியாது. இந்தப் பின்னடைவு கூட அரசியல் பிரசார ரீதியில் தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதை ஓர் மரபு நிலைக் கோட்பாட்டில் நின்று பார்ப்போமேயானால், அரசினது பிரச்சார வெற்றிகளுக்கு அப்பால் இருக்கின்ற - இராணுவ ரீதியாகப் பார்க்கப் போனால் கிளிநொச்சி நகரை விட்டுப் விடுதலைப் புலிகள் பின்வாங்கும் போது, பெரியளவிலான இழப்புக்களை சந்திக்கவோ அல்லது படைக்கலங்களை இழக்கவோ இல்லை என்பது முக்கியமானது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றை ஒரு தடவை புரட்டிப் பார்ப்பவர்களுக்கு, தலைவர் அவர்களின் இராணுவ மதினுட்பவங்களை அவதானித்து வருபவர்களுக்கு எமது விடுதலை இயக்கத்தின் கடந்த காலப் போரியல் உத்திகளைப் புரிந்து கொள்ள முடியும். எந்தவொரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்கென விடுதலைப் புலிகள் ஒரு குறிப்பிட்ட படைவளத்தை மட்டுமே ஒதுக்கிக் கொள்வார்கள்.
அதற்கு அப்பால் படை வளங்கள் செலவழிக்கப்படும் நிலையோ, படைபலச் சிதைவு ஏற்படக் கூடிய நிலையோ ஏற்பட இடமளிக்க மாட்டார்கள். இது இன்று நேற்றல்ல. ஒருகுழல் துப்பாக்கியோடு போராட்டத்தை தலைவர் தொடக்கிய காலம் முதல் விடுதலைப் புலிகள் கையாளும் இராணுவ உத்தி இது
இருப்பதையெல்லாம் அடித்துச் செலவழித்து அழிந்து போகும் தந்திரத்தை விடுதலைப் புலிகள் ஒருபோதும் பயன்படுத்தியது கிடையாது. யாழ்ப்பாணத்தில் ‘ரிவிரெச’வின் போதாகட்டும், ஆனையிறவில் ‘பலவேகய’வின் போதாகட்டும், கிளிநொச்சியில் ‘சத்ஜய’வின் போதாகட்டும் வன்னியில் ‘ஜெயசிக்குறு’வின் போதாகட்டும், ஏன் இப்போது கிளிநொச்சி அடங்கலான வன்னியிலாகட்டும் எல்லா இடங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது இலட்சியம் நோக்கிய பயனத்தின் இலக்குத் தவறாத போர் நிகழ்ச்சி ஒழுங்கமைப்புக்குள் தான் சண்டையிட்டிருக்கிறார்கள். அதற்கு வேளியே செல்ல விடுதலைப் புலிகள் இடமளிப்பதில்லை. இப்போதும் அது தான் நடந்திருக்கிறது.
காரணம் ஒரு கெரில்லா இராணுவமாகவும், மரபுப் படையணியாகவும் வளர்ச்சிகண்ட தமிழர்களின் தேசிய விடுதலை இயக்கம் ஒரு அரசு எப்படி இருக்கும் அதில் தனது படையணிகள் எப்படி செயல்படும் என்பதை அவர்கள் நடத்திவரும் நடைமுறை அரசினூடாக வெளிப்படுத்தியதன் விளைவாக இன்று தமிழர்களின் தேசிய இராணுவமான விடுதலைப் புலிகள் எதிர்கொள்வது சண்டைக்களத்தையல்ல மாறாக போர்களத்தை. இன்று தமிழர் தாயகத்தில் நடப்பது சண்டையல்ல போர் என்பதை தமிழ் மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ளுதல் மிக மிக அவசியமாகின்றது
விடுதலைப் புலிகள் அடம்பனில் இருந்து எப்போது பின்வாங்கி பின்வாங்கி சண்டையிடும் உத்தியை கையாள ஆரம்பித்தார்களோ அப்போதே கிளிநொச்சியின் வீழ்ச்சி உறுதியாகி விட்டது.
விடுதலைப் புலிகள் அக்கராயனில் உறுதியான தற்காப்பு நிலையை வெளிப்படுத்திய போதும்- கிளிநொச்சி நகரைச் சுற்றி நடத்திய இறுக்கமான தற்காப்புச் சண்டைகளின் போதும் - படையினருக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தி நடத்திய வழிமறிப்புச் சண்டைகளை பலரும் தவறான கருதுகோள்களுடன் பார்த்து விட்டனர். விடுதலைப் புலிகள் கிளிநொச்சியை கைவிடவே மாட்டார்கள் என்பது போன்று செய்திகள் வெளியிடப்பட்டன.
விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து வெளியான சில பேட்டிகள் கூட, அப்படிதான் ஊடகங்களில் திரிபுபடுத்தப்பட்டன. தவறான புரிதல்களால் சில ஊடகங்கள் அப்படி தகவல்களை வெளியிட்டன
ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் கிளிநொச்சியை கைவிடவே மாட்டோம் என்று எந்தவொரு கட்டத்திலும் சொல்லவில்லை. மாறாக அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசனின் செவ்விகள் அவ்வாறானதொரு செய்தியைச் சொன்னதாக ஆய்வாளர்கள், பத்தி எழுத்தாளர்கள் உட்பட பலர் விசனமடைகின்றார்கள் உண்மையில் இவர்கள் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசனின் செவ்விகளை மீண்டும் படித்தறிதலே இவர்களின் விசனத்தை தீர்க்க வல்லது
தமிழீழ விடுதலைப் புலிகள் கிளிநொச்சி இழக்கப்படும் என்ற முடிவுக்கு வந்து பல மாதங்களாகி விட்டன. கிளிநொச்சியை கைவிடும் முடிவை அவர்கள் எடுத்ததால் தான் அதற்கு மாற்றாக, வளையா வன்னியின் போரரங்குக்குகளுக்கு பொருத்தமான பிரதேசங்களை அண்டியதாக தமது நிர்வாக - படைத்துறை கட்டமைப்புகளை வலுப்படுத்திக் கொண்டனர். இல்லையேல் கிளிநொச்சிக்குள் தான் அவற்றைத் தொடர்ந்தும் வைத்திருந்திருப்பார்கள்.
இராணுவத்தின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப கிளிநொச்சியின் வீழ்ச்சி இடம்பெறக் கூடதாதென்பதற்காகவே தான் விடுதலைப் புலிகள் கடந்த நவம்பர் மாதத்தில் கடுமையான வழிமறிப்புச் சண்டைகளைச் செய்திருந்தனர்.
நவம்பர் மாதத்தில் இருந்து டிசம்பர் 25ம் திகதி வரையிலும் புலிகளின் வழிமறிப்புச் சண்டைகளை எடுத்துப் பார்த்தால் மிக உக்கிரமான பதில் தாக்குதல்களை அவர்கள் படையினர் மீது தொடுத்திருந்தனர்.
ஆனால், கிளிநொச்சியைக் கைப்பற்றும் தாக்குதல்களை இராணுவம் நத்தாருக்குப் பின்னர் ஆரம்பித்த போது புலிகளின் எதிர்ப்பு வெறும் சம்பிரதாயத்துக்காகவே இருந்தது. அவர்களின் பிரதான படையணிகள் பின்நகர்த்தப்பட்டிருந்தன. தற்காப்பு அணிகளே சண்டையிட்டவாறு பின்நகர்ந்தன. அத்தோடு கிளிநொச்சி நகரில் இராணுவத்துக்கு பயன்படக் கூடிய முக்கிய நிலைகளை விடுதலைப் புலிகள் தகர்த்திருக்கின்றனர்.
கிளிநொச்சியை படையினர் கைப்பற்றியபோது விடுதலைப் புலிகளுக்கு சிறியளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதை விட படைக்கல ரீதியாகவோ, ஆளணி வள ரீதியாகவோ பாரிய இழப்புகள் ஏற்படவில்லை. அதேவேளை படைதரப்பு கிளிநொச்சியைப் பிடிப்பதற்கான இறுதி நடவடிக்கைக்கு செலவிட்ட செல்கள், விமானக் குண்டுகளின் தொகை- இராணுவம் அதுவரையான சமர்களில் பயன்படுத்தாத ஒன்றாகும்.
கிளிநொச்சிக்காக நடந்திருக்கின்ற சண்டை நிச்சயமாகப் படையினரின் போரிடும் திறனை வெளிப்படுத்தவில்லை. இரண்டு டிவிசன் துருப்புகள் தமது முழுவளத்தையும் ஒன்று குவித்து நடத்திய தாக்குதல் அது. விமானப்படை எவ்வளவுக்கு எவ்வளவு குண்டுகளை கொட்ட முடியுமோ அந்தளவுக்கு தமது உச்சகட்ட பலத்தை பிரயோகித்த சண்டை இது.
பாகிஸ்தான், இந்தியா என்று உலகின் முக்கிய நாடுகள் பலவற்றின் ஆயுத, பொருளாதார வளங்களோடு விடுதலைப் புலிகளைப் பின்தள்ள படையினருக்கு இந்தளவுக்கு காலம் எடுத்திருக்கிறது. உண்மையில் இதை ஒரு பெரும் வெற்றியாகக் கருதமுடியாது. காரணம் இதற்கான உழைப்பு என்பது தனியே இலங்கை இராணுவத்துக்கோ அரசாங்கத்துக்கோ உரியதன்று.
ஆனால், புலிகளைப் பொறுத்தவரையில் அப்படியில்லை. அவர்கள் தமது சொந்தப் பலத்தில் சொந்த மக்களின் பலத்தில் நடத்திய சண்டைதான் இது.
உலக வல்லரசுகளின் இராணுவங்களையே எதிர்கொண்டு போர்புரியும் பெருமையையும் தனதாக்கிக் கொண்ட தமிழினம் கால ஓட்டத்தின் நீட்சியாக காலம் இட்ட கட்டளைப்படி உக்கிரமான மனிதப் பேரவலத்தை எதிர்கொண்டு தனது தேச விடுதலைக்காக தொடரப்போகும் எதிர்காலப் போரரங்குகளை எதிர்கொள்வதற்க்கும் அதை சுமப்பதற்குமான வரலாற்றுக் காலகட்டத்துக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்பதையும் உணர்ந்து பணிபுரிதலும் கடமையாகின்றது . காரணம் கிளிநொச்சியின் வீழ்ச்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் அதிர்ச்சியோடு பார்க்கவில்லை. அவர்கள் அடுத்த கட்டத்துக்காக தயாராகிறார்கள்.
இப்போது சிலர் விடுதலைப் புலிகள் அடுத்து கெரில்லா போர்முறைக்கு மாறப்போவதாக சொல்லத் தொடங்கியுள்ளனர். ஆனால் அது நடக்கப் போவதில்லை. தொடர்ந்து நீடிக்கப் போவதும் மரபுவழிச் சண்டையாகவே இருக்கும். காரணம் விடுதலைப் புலிகள் இப்போது சுமார் 800 ச.கி.மீ பரப்பளவுடைய பிரதேசத்துக்குள் நிலைகொண்டிருக்கின்றனர். ஆனால் இராணுவத் தரப்போ புதிதாக 3000 ச.கி.மீ இற்கும் அதிகமான பெரும் பிரதேசத்தை கைப்பற்றியிருக்கிறது.
இங்கே இராணுவம் தனது 100 பற்றாலியன் படைகளை ஒன்று குவித்து முல்லைத்தீவு மீது தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரித்தாலும் அது சாத்தியமானதாக இருக்காது.
அவ்வளவு பேரையும் முல்லைத்தீவை நோக்கி களம் இறக்கினால் கைப்பற்றிய பிரதேசங்களை பாதுகாக்க ஆட்கள் எவரும் இருக்க மாட்டார்கள். கிளிநொச்சியைத் தக்க வைக்க விடுதலைப் புலிகள் தொடர்ந்து சண்டையிட்டிருந்தால் ஆட்பல இழப்புகள் அதிகரித்திருக்கும். அது இராணுவத்தின் தந்திரோபாயத்துக்கு பலியானதாகி விடும்.
ஆனால்,
விடுதலைப் புலிகள் இப்போதும் தமது போர் நிகழ்ச்சி ஒழுங்கமைப்புக்குள் செயற்பட விரும்புவதால் ஆட்பல இழப்பை தவிர்த்து, நிலங்களின் மீதான ஆட்சியை இழக்கும் முடிவை எடுத்திருக்கிறார்கள். இப்போது சிறிய பிரதேசத்துக்குள் புலிகளின் வளங்கள் ஒன்று குவிக்கப் பட்டிருக்கின்றன. இது விடுதலைப் புலிகளுக்கு எப்படிச் சாதகமான நிலையை தோற்றுவிக்கும் என்ற கேள்வி எழுகிறது.
விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் நிலங்களைப் பாதுகாப்பதை விட இராணுவத்துக்குப் பெரும் உயிரழிவுகளை ஏற்படுத்த வேண்டியதே இன்றைய நிலையில் முக்கிய தேவையாக மாறியிருக்கிறது. இதுவே போரரங்கின் முக்கிய கோட்பாடு . அதைவிட எதிரியின் போர் முனைக்குள் மக்கள் தொடர்ந்து சிக்காமல் இருப்பதற்காக அவர்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.
ஓன்றை இழந்து இன்னொன்றைப் பெறுவது யதார்த்தமானதே. அப்படியானதொரு இழப்பு தான் கிளிநொச்சியின் இழப்பு. இந்த இழப்பை வைத்துக் கொண்டு விடுதலைப் புலிகள் தமது பெரும் படைவளத்தை முல்லைத்தீவு பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் செலவிட முடியும். அதற்கு அப்பால் படையினரின் ஆட்பலத்தைச் சிதைக்கும் முயற்சிகளையும் முன்னெடுக்க முடியும்.
எனவே விடுதலைப் புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்பது நிலங்களை கைப்பற்றுவதற்கான சண்டைகளாக இருக்காது. மாறாக நிலைகொண்ட இராணுவத்தை அழிக்கும் போர் நடவடிக்கைகளயே அவர்கள் தொடங்குவார்கள் . அதேவேளை இனிமேல் அவர்கள் நிலங்களை இழக்கின்ற நிலைக்கும் இடம்கொடுக்க மாட்டார்கள். விடுதலைப் புலிகளுக்கு படைவளங்களை ஒன்று குவித்து ஆங்காங்கே பாய்ச்சல்களை நடத்துகின்ற வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.
இதன்மூலம் அவர்கள் அடுத்த கட்டமாக படையினருக்கு ஆளணிச் சேதங்களை –முன்னொருபோதும் இல்லாதளவுக்கு ஏற்படுத்தும் திட்டங்களை முன்னெடுக்கக் கூடிய சாத்தியங்களே தென்படுகின்றன. இந்தக் கட்டத்தில் தான் சமர்களுக்கெல்லாம் தாய்ச்சமர் ஆரம்பிக்கப் போகிறது.
காரணம் இன்று போய் நாளைவா என்கின்ற புராண கால குருசேத்திரமல்ல தமிழீழப் போரரங்கு ஒரு இனத்தின் தேசிய விடுதலையின் அறுவடையை தீர்மானிக்கப்போகும் உலக வல்லரசுகளுடனான யுத்தம் எவவேதான் முல்லைத்தீவைச் சுற்றி நடக்கப் போகின்ற இந்தத் தாய்ச்சமர் தான் விடுதலைப் போராட்டத்தின் முக்கிய திருப்புமுனையாக அமையும். இதுவே தலைவனின் மொழியில் சொல்வதானால் காலம் இட்ட கட்டளைப்படி வரலாறு எழுதப்போகும் தீர்ப்பு ….
-துருவாசன்-
Comments