ஏன் இன்னும் கோபம் வரவில்லை


ண்மையில் ஒரு பரபரப்பூட்டிய சர்வதேசச் செய்தி. அமெரிக்க சனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஸ்; ஈராக்குக்கு வருகை தந்தார். அங்கு அவர் நிகழ்ந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஒரு பத்திரிகையாளர் தனது காலணியை அவர் மீது வீசினார் என்பது தான். அந்தச் செருப்பானது ஏலம் விடப்பட்டு நாற்பத்தெட்டாயிரம் டொலர் விலைபோனது. இன்னுமொரு பத்திரிகையின் ஆசிரியர் செருப்பாலடித்த ஈராக்கியருக்கு நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி மதிப்பளிக்க வேண்டும் என்றெழுதினார்.

இப்படியாகத்தான் பலஸ்தீனத்தில் அமெரிக்கப் படையினன் ஒருவன் மீது கல்லை விட்டெறிந்த பதினொரு வயதுச் சிறுவனும் வியட்நாமில் அமெரிக்கப் படையினனைக் கட்டி இழுத்த கிராமப் படையினரும், அமெரிக்க மக்களின் அனுதாபத்தைப் பெற்றனர். தமது உயர்வான இராணுவம் ஒரு மூன்றாம் உலக நாட்டில் அவமானப்படுவதா? அவர்களைத் திருப்பி அழையுங்கள் என்ற மக்கள் போராட்டம் வெடித்தது. இதன் விளைவாக அங்கிருந்து அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டது.

சிறிலங்கா மீது கரிசனைகொண்டு அவர்களுக்கு அபயமளிக்க வந்த ராஜீவ்காந்திக்கு அணிவகுப்பு மரியாதை செய்யப் பணிக்கப்பட்டிருந்த சிங்களத்துச் சிப்பாய் ராஜீவ்காந்தியைப் பின்புறமாகத் தாக்கிய பெருமையான செய்தியையும் இத்துடன் சேர்த்துக் கொண்டால் இந்த நடவடிக்கையும் சிங்களச் சிப்பாயின் தேசபக்தியாகவே கொள்ளப்பட்டு அவனுக்கு பௌத்த சிங்களப் பேரினவாதத்திடம் தேசிய வீரன் என்ற பாராட்டுதலும் கிட்டியது. உலகின் எந்த மூலையிலும், அது வளமான நாடோ, வளமற்றதோ? அதை ஆள்பவன் நல்லவனோ, கொடுங்கோலனோ, அவன் நம்மவனாக இருக்கவேண்டும்.

அந்நியன் வந்து நின்று எமக்கான சட்டங்களை வகுப்பதும் நடத்துவதும் யாருக்கும் பிடிப்பதில்லை, பிடிக்காது. ஆயிரமுண்டிங்கு ஸாதி - எனினும் அந்நியர் வந்து புகல் என்ன நீதி என்று பாரதி பாடியதும் இதைத்தான் எமக்கென்றொரு நாடு இல்லாதவரை எமக்கும் எமது சந்ததிக்கும் துயர்தான். கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக, தமிழர்கள் ஓரிடத்தில் நிலையாக வாழ முடியாத நிலை காணப்படுகிறது. இந் நிலைக்காக நாம் வருந்தினாலும் இதற்காகப் போராடும் வல்லமையைப் பெற்றுள்ளதற்காகப் பெருமைப்படலாம். பொறுமை, சகிப்புத்தன்மை என்பதெல்லாம் கை விட்டுப்போகும்போது தப்பித்தல் ஒரு வழியல்ல.

எதிர்த்து நிற்பதே சரியான வழியாகும். இன்னல்களிலிருந்து தப்பி எங்கே போகிறோம் என்ற சிந்தனையின்றி எதிரி காலில் போய் விழலாமா? வவுனியா நெளுக்குளம் இடைத்தங்கல் முகாமில் அடைக்கப்பட்டு அங்கிருந்து இளைஞர்கள் வடிகட்டப்பட்டு, மீதமுள்ளோர் செட்டிகுளம் மெனிக் பண்ணைக்குக் கொண்டு சென்று அடைக்கப்படுகின்றனர் என்று சிறிலங்காவின் அமைச்சரே கூறியுள்ளார்.

மேலும் இதெல்லாம் (அகதிகளின்) பாதுகாப்புக் காரணங்களுக்காகத்தான் செய்யப்படுகிறதாம். யாருடைய பாதுகாப்பு? எட்ட இருந்து பொழியும் எறிகணை வீச்சும், விமானக்குண்டு வீச்சும் அச்சம் தருவதாக எண்ணி, அதை ஏவிக்கொண்டிருப்பவனின் காலில் விழுந்த கொடுமையை என்னென்பது அன்றாடம் சுற்றிவளைப்புக்கள், கைதுகள், காணாமற்போதல்கள் என்பவை மட்டுமல்ல தெருக்களில் நாய்கள் போலச் சுடப்பட்டும் இறந்து போகிறவர்கள் யார்? விறகு வெட்டி முதல், வித்தியாலய அதிபர் வரை, அறியாத சிறார்கள் முதல் அமைதிக்காகக் குரல் கொடுக்கும் மத போதகர்கள் வரை, பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என இந்தப் பட்டியல் நீளுகிறதே.

இந்தக் கொலைகளில் எதற்காகவேனும் யாரேனும் தண்டிக்கப்பட்ட துண்டா? அல்லது ஒழுங்கான விசாரணை களாவது நடந்ததா? ஆனானப்பட்டவர்களுக்கே இந்தக் கதியென்றால் நாம் சாதாரண மக்கள் எமக்கு என்ன நடக்கும்? விரும்பியோ விரும்பாமலோ இந்த மண்ணில் பிறந்துவிட்டோம். தமிழர் எனப் பெயரும் பெற்றோம். இதுதானே எமது சொந்த நிலம். அந்நியன் எப்படி எம்மை அரவணைப்பான். பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றவன், பல்லாயிரக்கணக்கான தமிழரைக் கேள்வி முறையின்றி சிறையில் வைத்திருப்பவன், தமிழர் என்ற ஒரே காரணத்துக்காகச் சுற்றி வளைத்துக் கைது செய்து கொல்பவன் இந்தச் சிங்கள அரசு ஒரு எறிகணையை ஏவும் போது அது எங்கு விழும் என்பது அவனுக்குத் தெரியும்.

தமிழர் தம் தலை, அவர்களது வாழிடம், அவர்களது விளைநிலம், அவர்களது பயன்தரு மரங்கள் எதுவானாலும் தமிழனுடையதுதான். இப்படிப் பாசமுள்ள சிங்களத் தலைவன் வா வா என அழைத்தால்... தமிழன் செம்மறி யாடா போவதற்கு. ஒரு இனத்தின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு உரிமையைத்தர மறுப்பவன் உண்ணத்தரும் உணவு நஞ்சு தான். பருகத்தரும் நீரும் பாசாணம் தான். என்றாவது ஒரு நாள் தமிழினத்தின் வேரை அறுத்தே தீருவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு எமது மண்ணில் நாச வேலை செய்து வரும் சிறிலங்கா அரசின் மீது நியாயமான கோபம் வரவேண்டும்.

அடிப்படை மனித உரிமையாக நாம் வாழ ஓரிடம் இருக்கிறதா, கிடையாது. கடந்த பதினெட்டு இருபது வருடங்களாக நாம் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் வாழவில்லை. எமக்கு வீடுகட்டி வாழும் உரிமையை மறுத்தவன் மீது ஏன் கோபம் வரவில்லை? உலகம் முழுதும் அறிவியலில் தளைத் தோங்க அது எமக்கு மட்டும் மறுக்கப்படுகிறதே ஏன் கோபம் வரவில்லை? உண்ணும் உணவுக்கும் உடுத்தும் உடைக்கும் கூடத் தடைபோட்டானே ஏன் கோபம் வரவில்லை. கல்விக் கூடங்களைத் தகர்த்துக் குண்டு வீசுகிறானே, ஏன் கோபம் வரவில்லை? சாதாரண விளையாட்டுப் போட்டிகளில் கூடப் பாடசாலை விழுந்து விடாமல் தூக்கி நிமிர்த்திய பெற்றோர் மாணவர்கள் பாடசாலையே நொருங்கக் குண்டு வீசினானே எதிரி ஏன் பொங்கி எழவில்லை கோபம்?

வியட்நாமின் மக்களைப் போல வீறு கொண்டு போர்க்கலங்கள் சுமக்க மக்கள் படை தயார்தான். களமுனைக்குச் செல்ல எல்லைப் படை வீரர்கள் தயாராகத்தான் உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் எமது மக்கள் சோர்ந்து போய்விடவில்லை. முகங்களில் மலர்ச்சி மறைந்து போய்விடவில்லை. களங்களிலிருந்து நற்செய்திகள் வர ஆரம்பித்து விட்டன. எதிரி புட்பக விமானத்தைக் கொண்டு வந்து நிறுத்தினாலும் நாங்கள் ஏறமாட்டோம் எமது போராட்டத்தினைச் சிதைக்க நினைத்த சக்திகள் ஒரு போதும் வென்ற தில்லை. எம்முள்ளே எரியும் நெருப்பு பாலஸ்தீனத்திலே பற்றிய நெருப்புக்குச் சற்றும் குறைந்ததல்ல. வியட்நாமில் எழுந்த விடி வெள்ளி இங்கும் எழும்.

மக்களை மதிக்காத எந்த அரசும் வென்றதில்லை. உலக விடுதலைப் போராட்ட வரலாறுகளையும் உன்னத வீரத்தையும் கற்கும் போது வியப்பும் பெருமிதமும் அடைகிறோமே. நமது வரலாறு தெரிகிறதா? அண்மையில் ஒரு படைத்துறை நூலில் கையெறிகுண்டின் மீது பாய்ந்து தனது நண்பர்களைக் காப்பாற்றிய "சீல்" வீரன் என்றொரு தகவல் வந்திருந்தது. வியப்பு 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் இது நடந்திருக்கிறது. அடப்பாவிகளா 1989 இல் தமிழீழ விடுதலைப் புலிவீரன் அன்பு என்பான் இதே வகையில் தன் நண்பர்களை எறி குண்டின் மீது பாய்ந்து காப்பாற்றி மடிந்தான் என்பது ஏன் மறந்தோம். எத்தனை வகையான வீரச்சாவுகளை எமது வீரர்கள் சந்தித்துள்ளார்கள் எனப் பட்டியலிட்டால் உலகில் புதிய வரலாறுகள் இல்லாது போய்விடலாம்.

இப்படிப்பட்ட சாதனையின் பின்னணியே தமிழ் மக்களுடைய சுதந்திரமான வாழ்வுதான் கோழிகளுக்கு குறுனி போட்டுப் பிடிப்பது போல சிங்களவன் கூட்டைக் காட்டிக் கூப்பிடுகிறான். நாங்களென்ன கோழிகளா அவன் குழம்பு வைக்க, எமக்குக் கோபம் வரவேண்டும். உண்மையான எதிரி மீது கோபம் வரவேண்டும். செல்லெறியும் சிங்களப் படைக்கு ஒரு கல்லெறியும் கோபம் வரவேண்டும். எமது ஊரில், எமது பள்ளிக்கூடங்களில், உங்கள் கோவில்களில் எதிரியின் கால் படுமெனில் எமக்கெதற்குக் கால்கள், வீரம் செறிந்த மக்களாக இன்று களத்தில் நிற்போரைப் பாருங்கள்.

கைகாட்டி நிற்கும் தலைவனைப் பாருங்கள். வெற்றிமுரசு கேட்கும் நேரம் அதில் எனக்கும் பங்குண்டு என்று எமது சந்ததிக்குச் சொல்ல வாருங்கள். உங்களது ஆன்ம பலமே எங்கள் தலைவனது சக்தி. உங்கள் கோபம் எதிரி மீதெழுந்து சொரியட்டும். எங்கள் மண் எங்களுக்கு வேண்டும் என்று கோபத்தோடு புறப்படுங்கள். நெற்றிக் கண்கள் கனலெழ எதிரி எரிவான். அவனை வீழ்த்தாத வரை கோபத்தைக் குறைக்காதீர். அது நியாயமான கோபம்.

- மாயா



Comments