தமிழகத்தில் சிறிலங்காவின் சுதந்திர நாளன்று முழு அடைப்பு: ஒரே மேடையில் அனைத்து கட்சி தலைவர்களும் கூடி முடிவு
இலங்கைத் தமிழர் நலன் காக்கும் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை தியாகராய அரங்கில் இன்று சனிக்கிழமை இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்றது.
ஒரே மேடையில் அனைத்து கட்சித் தலைவர்கள்
பழ.நெடுமாறன் உரையாற்றுகின்றார்
பழ.நெடுமாறன் உரையாற்றுகின்றார்
இக்கூட்டத்தில்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாஸ்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநில செயலாளர் தா.பாண்டியன்
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திண்டிவனம் இராமமூர்த்தி
உட்பட தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த பல்வேறு தரப்பினரின் நூற்றுக்கும் அதிகமான அமைப்புக்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தொல். திருமாவளவன் உரையாற்றுகின்றார்
ஒரே மேடையில் இராமதாஸ், பழ.நெடுமாறன், வைகோ
ஒரே மேடையில் திருநாவுக்கரசு இராமதாஸ்
பா.ம.க. தலைவர் கோ.க.மணி வரவேற்று உரையாற்றினார். கூட்டம் தொடங்கும் முன்பு ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த இளைஞர் "வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாருக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. மேடையில் அவரது திருவுருவப்படம் மலர் மாலை அணிவித்து வைக்கப்பட்டிருந்தது.
கூட்டத்திற்கு தலைமை ஏற்ற இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் உரையாற்றியதாவது:
ஆறரை கோடி தமிழர்களின் பிரதிநிதிகள் இங்கு கூடியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்புக்களும் ஈழத் தமிழர்களுக்காக தனித்தனியாக போராடி வந்துள்ளோம்.
இலங்கைத் தமிழர்கள் சம உரிமையுடன் அமைதியாக வாழ்வதற்கு அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்கவில்லையே என்ற கவலை இதுவரை இருந்தது. இன்று முதன் முறையாக தமிழர்களுக்காக அனைவரும் ஒன்றுபட்டிருக்கிறோம். இது சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அச்சத்தையும், உலகத் தமிழர்களுக்கு உற்சாகத்தையும் நெகிழ்ச்சியையும் அளித்துள்ளது.
இந்த இயக்கம் என்பது அரசியல், சாதி, மத, இன, மொழி ஆகிய எல்லாவற்றையும் கடந்து அவரவர்களுக்கு தனித்தனியாக கொள்கைகள் இருந்தாலும் தமிழர்களுக்காக ஒன்றுபட்டிருக்கிறோம்.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ள தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.
தா.பாண்டியன் உரையாற்றுகின்றார்
இராமதாஸ் உரையாற்றுகின்றார்
நூற்றுக்கும் அதிகமான அமைப்புக்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான பிரதிநிதிகள்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை பொறுத்தவரை எந்தவித வன்முறைகளுக்கும் இடம் தராமல் யாரையும் இழிவுபடுத்துவதோ, அல்லது எந்தத் தலைவர்களின் படங்கள் மற்றும் சிலைகளை அவமதிப்பதோ அல்லது உருவப் பொம்மைகளை எரிப்பதோ கூடாது என்பதுதான் கொள்கை.
இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு பிறக்க நாம் ஒன்றுபட்டு உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். மாற்றுக்கருத்து கொண்டவர்களையும் அவர்களின் மனதை மாற்றி நம்முடன் இணைந்து செயற்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்வோம் என்றார் பழ.நெடுமாறன்.
அதன் பின்னர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஊடகவியலாளர்களிடம் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளதாவது:
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழகம் தழுவிய அளவில் பெப்ரவரி 4 ஆம் நாள் பொது வேலை நிறுத்தம் நடத்துவது என்றும், 7 ஆம் நாள் மாலை 4:00 மணிக்கு நகரம், கிராமம் என்று எல்லா இடங்களிலும் தமிழர்கள் ஒன்று கூடி கறுப்புக்கொடி ஊர்வலங்கள் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெப்ரவரி 5 ஆம் நாள் இந்த பாதுகாப்பு இயக்கம் மீண்டும் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்து அறிவிக்கும் என்றார் அவர்.
கூட்டத்தில் பேசிய பல்வேறு கட்சிகள், அமைப்புக்களின் தலைவர்களும், பிரதிநிதிகளும் இந்த இரு போராட்டங்களையும் வெற்றிகரமாக நடத்த முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
Comments