''இலங்கையில் தமிழர்கள் மீது போரை நடத்திக் கொண்டிருப்பது இந்திய அரசுதான்'' என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ. தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வைகோ இவ்வாறு தெரிவித்தார்.
இத்தொடக்க விழாவில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலர் சி. மகேந்திரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு ஆகியோரும் உரையாற்றினர்.
இவ்விழாவில் வைகோ தொடர்ந்து உரையாற்றுகையில்,
''இலங்கை அதிபராக ராஜபக்ஷ பதவியேற்ற நாள் முதல் இதுவரை 4 தமிழ் எம்.பி.க்களும், பத்திரிகை ஆசிரியர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். பள்ளிகள் மீதும் குண்டுகளை வீசி ஏராளமானக் குழந்தைகளை இலங்கை இராணுவம் கொன்று வருகிறது. இலங்கைக்கு முழு இராணுவ உதவிகளையும் இந்திய அரசுதான் செய்து வருவதாக இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு இந்திய அரசுதான் காரணம். இலங்கை இராணுவத்துக்கு விமானத் தளங்களை அமைத்துக் கொடுத்ததும், ஆயுதம் வாங்க வட்டியில்லாக் கடனாக ரூ. 1000 கோடியையும் இந்தியா கொடுத்துள்ளது'' என்றார்.
பழ.நெடுமாறன் பேசுகையில்,
''முதல்வர் கருணாநிதி நினைத்திருந்தால் இலங்கை தமிழர் மீதான போரை நிறுத்தியிருக்கலாம். இலங்கைப் பிரச்சினை கடந்த 50 ஆண்டுகளாகத் தீர்க்க முடியாத பிரச்சினையாக உள்ளது. மத்திய அரசின் அங்கமாக இருக்கும் தமிழக முதல்வர், இப்பிரச்சினையில் உண்மையான அக்கறை எடுத்திருந்தால் இப்போது நடைபெறும் போரை நிறுத்தியிருக்கலாம்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இலங்கைகு 2 போர்க் கப்பல்களை இந்திய அரசு அனுப்ப இருப்பதாகக் கேள்விப்பட்டோம். அது குறித்து நானும், வைகோவும் அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸை சந்தித்து முறையிட்டோம். அவர், ''இது முந்தைய குஜ்ரால் அரசு எடுத்த முடிவு. எனினும் நாங்கள் இலங்கைக்குப் போர்க் கப்பலை அனுப்பமாட்டோம்'' என்று கூறினார்.
இப்போது மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் இடம்பெற்றுள்ளனர். மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி அவ்வப்போது ஆலோசனை வேறு கூறிவருகிறார். அவரால் இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பதைத் தடுக்க முடியாதா? மத்திய அரசை நிர்ப்பந்திக்க முடியாதா?'' என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலர் சி. மகேந்திரன் பேசுகையில்,
''விடுதலைக்காக இந்தியா போராடிக் கொண்டிருந்த காலத்தில், எந்த விடுதலைப் போராட்டமும் நடத்தாமலேயே இலங்கை விடுதலை பெற்றது.
1948இல் இலங்கை விடுதலை அடைந்த போது அங்கு 75 லட்சம் சிங்களவர்களும், 37 லட்சம் தமிழர்களும் இருந்தனர். ஆனால், இன்று அரசு புள்ளிவிபரப்படி சிங்களவர்கள் எண்ணிக்கை 1.40 கோடியாக அதிகரித்தும், தமிழர்கள் எண்ணிக்கை 35 லட்சமாக குறைந்தும் உள்ளது. திட்டமிட்டே தமிழினம் அழிக்கப்பட்டுள்ளது.
c இலங்கை விமானங்களின் குண்டு வீச்சுகளுக்கிடையே அழிவின் விளிம்பில் உள்ள 5 லட்சம் தமிழர்களைப் பாதுகாக்கத் தவறினால், உலகம் நம்மை மன்னிக்காது'' என்றார்.
தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு பேசுகையில்,
''வேறு நாட்டின் விடுதலை இயக்கத்தை இங்கு தடை செய்ய சட்டத்தில் இடமில்லை. எனவே புலிகள் மீதான தடை சட்ட விரோதமானது.
ஒரு இயக்கத்தின் மீது தடை விதிக்க அரசுக்கு உரிமை இருந்தால் அதை நீக்கக் கோரவும் உரிமை உண்டு'' என்றார்
Comments