அன்புள்ள தமிழ்ச் சகோதர சகோதரிகளுக்கு,சாவு நிழலாகக் காலடியில் வளரும் மண்ணைச் சேர்ந்தவள் எழுதும் மடல்.
எல்லோரும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருப்பீர்கள். ஆனால், அங்கே எங்கள் வன்னியில் பால்சோறு பொங்காது; மாவிலை ஆடாது; மாக்கோலம் வாசல் காணாது; எங்களளவில் அன்றைக்கும் கிழக்குத்திசை இருண்டுதான் கிடக்கும்.
உண்ணாவிரதப் போராட்டங்கள், மனிதச்சங்கிலி கைகோர்ப்புகள், எழுச்சிப் பேரணிகள், உள்ளம் உருக்கும் உரைகள் என பதினெட்டு ஆண்டுகளாக விதையுறைத் தூக்கமாக இருந்த உங்கள் உணர்வுகள் விழித்தெழ பூக்களாய்ப் பொழிந்தீர்கள் உங்கள் நேசத்தை. மகிழ்ந்தோம்; நாங்கள் தனியாக இல்லை என்று நெகிழ்ந்தோம். ஈழத்தில் வழி பிறக்கப்போகிறது என்று எத்தனை நம்பிக்கையோடிருந்தோம். நம்பிக்கைத் திரியில் சுடர் மங்கிக்கொண்டே போகிறது. இன்றோ நாளையோ இச்சுடர் அணைந்துவிடுமோ... நாங்கள் இருட்டுக்குள் தனித்து விடப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் மறுபடியும் மேலிட ஆரம்பித்திருக்கிறது.
மண்ணிலிருந்து வரும் செய்திகள் மகிழ்ச்சி தருவனவாக இல்லை. இராஜதந்திரப் பின்னகர்வாகவே வைத்துக்கொண்டாலும், கிளிநொச்சியில் ஆக்கிரமிப்பாளரது காலடிகள் பதிந்தன என்ற செய்தி உலகெங்கிலும் வாழும் ஒட்டுமொத்த எங்கள் உறவுகளின் மனசில் விழுந்த பேரிடி. பேரினவாத இராணுவம் அடித்து விரட்டும்போது போய் ஆறுவதற்கென்று இருந்த ஒரு நிலப்பரப்பையும் சிறுகச் சிறுக இழக்கவேண்டி நேரிட்டால் இனி எமது மக்கள் எங்கேதான் செல்வது என்ற கலவரம், நம்பிக்கைகளையும் தாண்டி இதயத்தில் பரவுகிறது.
ஒரு சிறிய நிலப்பரப்பிற்குள் இலட்சக்கணக்கான மக்களைக் கொண்டுபோய்ச் செருகியிருக்கிறது சிறிலங்கா இராணுவம். பாதைகள் அடைபட்டிருக்கும் நிலையில், அத்தனை பேருக்குமான உணவை எங்கிருந்து பெற்றுக்கொள்வது? மருந்துக்கும் மருந்தில்லாத மண்ணாகி விட்டிருக்கிறது வன்னி. உயிர்காக்கும் ஆக்சிஜன் உருளைகளைக்கூட அனுப்புவதை நிறுத்தி உயிர்க்காற்றையே மறுத்திருக்கிறார்கள் இதயமற்றவர்கள். காடுகளில் தஞ்சமடைந்திருக்கும் மக்களுக்கு தலைக்கு மேல் கூரைக்குப் பதிலாக பாம்புகள் தொங்குகின்றன. விஷம் கடித்து குழந்தை துடிக்கும்போது கொடுக்க மருந்தில்லாமல் சிறுகச் சிறுக அதன் உயிர்பிரிவதைப் பக்கத்திலிருந்து பார்க்கும் தாய்தந்தையரின் நெஞ்சம் வெடித்துச் சிதறாதா? `பசி... பசி... என்ற சொல்லையே தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தால் புத்தி பேதலித்துப் போகாதா? விக்கித்து வெறித்த பார்வையுடன் மர நிழல்களின் கீழும் வயல்வெளிகளுள்ளும் காடுகரம்பைகளிலும் செய்வதறியாது ஏங்கிக் காத்திருக்கிறார்கள் ஈழத்தமிழர்கள்.
எங்கள் குழந்தைகளின் பெயரால் கேட்டோம், `சகோதரர்களே காப்பாற்றுங்கள்' என்று. `தொப்பூள் கொடி உறவுகளே' என்று விளிக்கும் உங்கள் வாஞ்சையின் மீது நம்பிக்கை வைத்துக் கேட்டோம்... `எங்கள் பெண்களைச் சிதைத்துக் கொல்கிறார்கள். கைவிட்டுவிடாதீர்கள்' என்று. உங்கள் முன் இறைஞ்சினோம். கடைசியில் என்ன? வழக்கம்போலவே நாங்கள் கைவிடப்பட்டுவிட்டோமோ என்று ஐயுறுகிறோம். குரல்கொடுத்தால் ஓடிவரும் தூரத்தில் இத்தனை கோடி சகோதரர்கள் இருந்தும், நாங்கள் நிராதரவாக, யாருமற்றவர்களாக தனித்துத் துயரப்பட விதிக்கப்பட்டோம்.
கண்ணெதிரே சகோதரனின் நெஞ்சில் கத்தியால் குத்தும்போது கண்களை மூடிக்கொண்டு அவ்விடத்திலிருந்து நீங்குவதைப் போலிருக்கிறது இந்தியாவின் நிலைப்பாடு. இல்லை... அதனைக் காட்டிலும் மோசமாக, கத்தி முனை முறிந்தால், உபயோகப்படுத்திக்கொள்ள கொடுப்பதற்காய் கையில் மாற்று உபகரணங்களோடு அருகிலேயே காத்து நிற்கிறது.
தட்டிக் கேட்கும் தகுதி தமிழகத்திடம் இருந்தும் இன்னமும் தயங்கிக்கொண்டிருக்கிறது. இந்தப் பூவுலகில் இலட்சக்கணக்கான உயிர்களைக் காட்டிலும் உயர்ந்தனவா நாற்காலிகள்? ஒரு இனத்தை அழித்தவர்களைப் பற்றி மட்டும் வரலாறு பதிவுசெய்யப் போவதில்லை. அழியவிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தவர்களின் மீதான பழியையுந்தான் அது எழுதி வைக்க இருக்கிறது.
வாழும் கனவுகளை விழிகளில் சுமக்காமல் வலிகளைச் சுமக்கும் எங்கள் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள். பள்ளிக்கூடங்களுக்குச் செல்லவேண்டிய பருவத்தில் பதுங்கு குழிகளுள் பாய்ந்தோடி ஒளியும் அவலத்திலிருந்து அவர்களை விடுவியுங்கள். இந்தப் பொங்கல் திருநாளில் ஏற்றக்கூடாதா சகோதரர்களே எங்களை நினைத்தும் ஒரு சுடரை? எஞ்சியிருக்கும் காலத்தையாவது நாங்கள் வாழ்ந்துவிட்டுப் போகிறோமே..!
- தமிழ்நதி
Comments