வன்னியில் இருந்து வெளியேறிய இளைஞர்களும், பெண்களும் தனித்தனியான இரகசிய முகாம்களில் சித்திரவதை; படுகொலை

வன்னிபெரு நிலப்பரப்பில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து வவுனியா நலன்புரி நிலையத்தில் அடைக்கலம் புகுந்திருந்த பொதுமக்களில் பலர் குற்றப் புலனாய்வுத்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றப் புலனாய்வுத்துறை தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வவுனியா தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

20 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்கள், பெண்கள் குடும்பஸ்தர்கள் அனைவரும் வவுனியாவில் குற்றப்புலனாய்வு காவல்துறையினரால் விசாரிக்கப்படுகின்றனர்.

அவ்வாறு விசாரைணைக்கு உட்படுத்தப்படவர்களில் பெண்கள் உட்பட இளைஞர்கள் பலர் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அவ்வாறு கொண்டுவரப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் எதுவும் அறிந்து கொள்ள முடியவில்லை.

பெண்கள் தனியாக தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்றும் உள்ளக தகவல்கள் கூறுகின்றன.

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் சட்டத்தரணிகள் மூலமாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கொழும்பு தலைமை அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை, வவுனியாவில் உள்ள இரகசிய முகாம் ஒன்றிலும் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுகின்றனர் என்றும் வேறு சிலர் உடனடியாகவே கொலை செய்யப்பட்டு புதைக்கப்படுவதாகவும் உள்ளக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


Comments