ஈழக் கொலைகளை நிகழ்த்தும் இரண்டு அமெரிக்கர்கள்!

''விடுதலைப் புலிகளை அடக்குகிறோம் என்ற போர்வையில் இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களைக் கொல்வது இரண்டு அமெரிக்கர்கள்!'' என்று திடுக்கிடவைக்கிறார் ஒரு வழக்கறிஞர்.

''ஒருவர், கோத்தபய ராஜபக்ஷே. இன்னொருவர், சரத் ஃபொன்சேகா. முன்னவர், ஜனாதிபதியின் சகோதரர். பாதுகாப்புத் துறைச் செயலாளராக இருக்கிறார். சரத் ஃபொன்சேகா, ராணுவத் தளபதியாக இருக்கிறார். எங்கள் கணக்கின்படி இவர்கள் இருவரும் சேர்ந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் அமெரிக்கப் பிரஜைகள் என்பதுதான் அதிர்ச்சியான தகவல். கோத்தபய ராஜபக்ஷே, அமெரிக் கக் குடியுரிமை பெற்றவர். சரத் ஃபொன்சேகா, அமெரிக் காவின் நிரந்த வாழ்வுரிமை வாங்கியவர். அதாவது கிரீன் கார்டு வைத்திருப்பவர். இப்படி இரண்டுஅமெரிக் கப் பிரஜைகள் இன்னொரு நாட்டில், மிக முக்கியமான பதவிகளில் உட்கார்ந்துகொண்டு கொடுமைகளைச் செய்துவருவது அமெரிக்க நாட்டுச் சட்டப்படி குற்றம். அவர்கள் இருவரையும் சட்டத்தின் முன் நிறுத்தும் வேலைகளில் இறங்கியிருக்கிறேன்'' என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் ப்ரூஸ் ஃபெயின், ஓர் அமெரிக்க வழக்கறிஞர்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் காலத்தில் துணை அட்டர்னி ஜெனரலாக இருந்தவர். உலகில் மனித உரிமை மீறல்கள் எங்கு நடந்தாலும், அங்கு ப்ரூஸ் ஃபெயின் குரல் ஒலிக்கும். 'இனப் படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு' தங்களுக்கான வழக்கறிஞராக இவரை அமர்த்தியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக இலங்கையில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலை சம்பந்தமான தகவல்களைத் திரட்டிய ப்ரூஸ் ஃபெயின், 400 பக்கங்களுக்கு ஒரு குற்றப்பத்திரிகையைத் தயாரித்துள்ளார். இதில்தான் கோத்தபய ராஜபக்ஷே மற்றும் சரத் ஃபொன்சேகா ஆகிய இருவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன.

''ஒபாமா தலைமையில் அமெரிக்காவில் புதிய அரசாங்கம் அமைந்துள்ளது. அந்த அரசு நீங்கள் கையில் எடுத்திருக்கும் இலங்கை விவகாரத்தில் என்ன மாதிரியான நடவடிக்கையை எடுக்கும்?''

''புதிய அதிபர் ஒபாமா எந்த அளவு முக்கியத்துவம் கொடுப்பார் என்று எனக்குத் தெரியாது. இதுவரை இருந்த ஜார்ஜ் புஷ் நிர்வாகத்தின் கவனம் முழுக்க இராக், ஆப்கானிஸ்தான், இரான், இஸ்ரேல், பாலஸ்தீனம், பாகிஸ்தான் என்றுதான் இருந்தது. இலங்கையை அவர்கள் ஒரு பிரதேசமாக மதிக்கவில்லை. காரணம், வெளிப்படையானது. இலங்கையில் பெட்ரோல் கிடையாது. அணு ஆயுதங்களும் கிடையாது. அதனால் அமெரிக்காவுக்கு இலங்கை மீது அக்கறை கிடையாது.

ஆனால், இனிமேல் இப்படிக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. ஏனென்றால், அங்கே அழிவு வேலைகளைச் செய்வது இரண்டு அமெரிக்கப் பிரஜைகள். அதை அமெரிக்க அரசாங்கம் தானே தடுக்க வேண்டும்? எனவே, நான் தயாரித்திருக்கும் அறிக்கையை அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முயற்சி எடுத்து வருகிறேன். இரண்டு அமெரிக்கர்களையும் தண்டிக்க அத்தனை முயற்சிகளையும் எடுப்பேன்.''

''இருவரை மட்டும் குறி வைத்துக் காரியத்தில் குதித்திருப்பதை வைத்துப் பார்த்தால், நீங்கள் புலிகள் ஆதரவாளரா?''

''இல்லை. எந்த இயக்கத்தின் குரலாகவும் நான் இருக்க மாட்டேன். நான் இனப் படுகொலைக்கு எதிரானவன். ராணுவத்துக்கும் புலிகளுக்கும் நடக்கும் போர்க் களத்தில் சிக்குண்டு தவிக்கும் நிராயுதபாணிகளான தமிழர்கள் மீது அனுதாபம் கொண்டவன். எத்தனையோ நாடுகளில் போர் நடந்திருக்கிறது. ஆனால், இலங்கை அளவுக்கு வேறு எந்த நாட்டிலும் அப்பாவி மக்கள் இவ்வளவு சித்ரவதைக்கும் கொலைக்கும் ஆளானதில்லை. உலக வரலாற்று அனுபவங்களை வைத்துச் சொல்கிறேன். மனித உரிமைகளை மொத்தமாகக் கொன்ற பூமி அது!''

''இவ்வளவு அழுத்தமான முடிவுக்கு நீங்கள் வர என்ன காரணம்?''

''மகிந்தா ராஜபக்ஷே நவம்பர் 2005-ல் ஆட்சிக்கு வந்தார். அன்று முதல் இனப் படுகொலைகள் அதிகரிக்க ஆரம்பித்தன. அங்கே எந்த லட்சணத்தில் ஜனநாயகம் தழைத்தோங்குகிறது என்றால், ராணுவத்துக்கு எதிராக யாருமே, அங்கே எந்தப் புகாரும் கொடுக்க முடியாது. ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டிருந்தும், அத்துமீறிச் செயல்படும் ராணுவத்தினர் மீது வழக்கு விசாரணை என்று எதுவுமே நடைபெற்றதில்லை.

ராஜபக்ஷேவின் ஆட்சியில் தமிழ் மக்கள் மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தப்படுகிறார்கள். ராணுவத்தினர், மக்களைப் பீதிக்குள்ளாக்கும் நோக்கத்திலும், தகவல்களைப் பெறும் எண்ணத்திலும் கொடூரமாகத் தாக்குகிறார்கள். சித்ரவதை செய்கிறார்கள். போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் தமிழர்களுக்கு உணவு, மருந்து, மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்கள்கூடக் கிடைக்காத அளவுக்குப் பொருளாதாரத் தடை. வெளிநாடுகளில் இருந்து வரும் நிவாரணப் பொருட்களையும், பட்டினியிலும் குளிரிலும் வாடும் தமிழர்களுக்குக் கிடைக்கவிடாமல் தடுக்கிறார்கள். அவர்கள் பட்டினி கிடந்தே சாக வேண்டும் என்பதுதான் ராணுவத்தின் போர்த் தந்திரம். எனக்குக் கிடைத்த திடுக்கிடும் தகவல் என்னவென்றால், கொடிய நோய்களைப் பரப்பக்கூடிய கிருமிகளைத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் ராணுவத்தினர் ஸ்ப்ரே செய்து வருகின்றனராம்.

இன்று முல்லைத் தீவைச் சுற்றி வேட்டையாடும் சிங்கள ராணுவத்தில் ஒரே ஒரு தமிழர்கூட இல்லை. இலங்கை ராணுவத்துக்கும் ஹிட்லரின் நாஜிப் படைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இன்று ராணுவ நடவடிக்கை நடந்து வரும் பகுதிகளுக்கு நிருபர்கள், தன்னார்வத் தொண்டு அமைப்பினர் என்று எவரையும் இலங்கை அரசு அனுமதிப்பதில்லை. அப்படியானால், உலகின் கண்களில் இருந்து அவர்கள் எதை மறைக்க முயற்சிக்கிறார்கள்?''

''இது பற்றி இலங்கை அரசாங்கத்தின் பதில் என்ன?''

''நான் பதிலை எதிர்பார்ப்பது இலங்கை அரசாங்கத்திடம் அல்ல. அமெரிக்க அரசு தனது பிரஜைகளான கோத்தபய ராஜபக்ஷே மற்றும் சரத் பொன்சேகா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதுதான். அந்த பதில் மூலமாகத்தான் இலங்கையில் நடப்பது அத்தனையும் அடங்கும்!''

நிகேத்தனா, படம்: கே.ராஜசேகரன்

விகடன்



Comments