வன்னிக் கொடூரம் எல்லை தாண்டிவிட்டது. மனிதநேய அடிப்படைகளை எல்லாம் மீறி மோசமான குரூர நிகழ்வுணகள் அப்பாவி வன்னி மக்கள் மீது கொடூரமாகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. மிருகத்தனமான காட்டுமிராண்டித்தனமான போக்கு ஓர் இனம் மீது ஏவி விடப்பட்டிருக்கின்றது.
விடுதலைப் புலிகள் மீதான தென்னிலங்கை அரசின் இராணுவ வெற்றியைக் குதூகலித்துக் கொண்டாடும் தென்னிலங்கை, அந்த யுத்தத்தின் பேரால் நடத்தப்படும் மிகக் கொடூரமான நரவேட்டை குறித்து அலட்டிக் கொள்ளாமல் கவனத்தில் எடுக்காமல் சட்டை செய்யாமல் பொருட்படுத்தாமல் விட்டேத்தியாக நடந்துகொள்வதைப் பார்த்தால் மனிதாபிமானம் மிக்க ஒவ்வொருவருக்கும் பேரதிர்ச்சியாக இருக்கின்றது.
அருகில் சகோதர இனம் இவ்வாறு கொடூரமாகக் கொன்றொழிக்கப்பட்டு வேட்டையாடப்படும்போது, எமக்கென்ன என்று பார்த்திருப்பதோ அல்லது தனிநாடு கேட்ட மக்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்று மனதுக்குள் கறுவியபடி வெடிகொளுத்தி மகிழ்வதோ சாதாரண மனிதநேய உள்ளங்களில் சாத்தியப்படக்கூடியதேயல்ல.
ஆனால், "தீர்வுக்கு வழி யுத்தம் அல்ல. சமரச உடன் பாடே" என்பதை இலங்கைத் தீவு மக்களுக்கும் சேர்த்தே எடுத்துரைத்த கௌதம புத்தரின் காருண்யம் நிலைநாட்டப்பட்ட பூமி என்று கூறப்படுகின்ற இந்தத் தேசத்தி லேயே இந்த அவலத்தை சர்வசாதாரணமாக நோக்கும் அருவருக்கத்தக்க அசிங்கம் அரங்கேறுகின்றது.
வன்னியில் கொத்துக் கொத்தாகத் தமிழர் கொன்றொழிக்கப்படுவதும், கூட்டம் கூட்டமாகப் படுகாயப்படுத்தப்படுவதும் தென்னிலங்கையில் மூடி மறைக்கப் படுகின்றன. தெற்கு ஊடகங்கள் இந்தப் பெரும் கொடூரம் குறித்து அலட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கு பிரதான காரணங்கள் இரண்டு.
ஒன்று இந்த வன்னி மக்கள் இத்துணை துயரை கோரத்தை சந்திப்பது தவிர்க்கப்பட முடியாதது, ஒரு வகையில் நியாயப்படுத்தப்படக் கூடியது, ஆகவே, அவற்றை முக்கியத்துவப்படுத்துவதன் மூலம் இலங்கை அரசுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தவே கூடாது என்ற பேரினவாதச் சிந்தனை ஒருபுறம்.
அடுத்தது இவற்றை அம்பலப்படுத்தப்போய் ஆளும் தரப்பின் அதிருப்திக்கு ஆளாகி, அதன் விளைவை சந்திக்கும் துரதிஷ்டம் நேரலாம் என்ற அச்சம்.
அல்லது வன்னியில் பொதுமக்களின் பேரவல நிலையை அம்பலப்படுத்த முயல்வது, அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான பிரசாரமாகச் சித்திரிக்கப்பட்டு, அதன் காரணமாகக் கம்பி எண்ண வேண்டி நேரலாம் என்ற பயம்.
இப்படிப்பல காரணங்கள் இருந்தாலும் கூட, மாவிலாறில் அணைக்கட்டு மூடப்பட்டதால் அப்பாவி மக்களுக்கு ஏற்பட்ட மனித நேயப் பாதிப்புகளை வெளிப்படுத்துவதில் காட்டப்பட்ட கரிசனையில் "கொஞ்சூண்டும்" கூட, வன்னியில் கூட்டம் கூட்டமாக வேட்டையாடப்படும் அப்பாவித் தமிழர்கள் குறித்து தென்னிலங்கையில் காட்டப்படவே இல்லை என்பதுதான் உண்மை.
ஆனால் உலகம் சும்மா இருக்குமா? பூனை தன் கண்ணை மூடிவிட்டு உலகம் இருண்டு விட்டது என்று எண்ணுவது போல நெருப்புக் கோழி தன் தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டு முழு உடலையும் மண்ணுக்குள் ஒளித்து, மறைத்துவிட்டதாகக் கருதுவதுபோல இந்த விடயத்திலும் தென்னிலங்கையில் செய்திகளையும், தகவல்களையும் மூடி மறைக்க முயன்றாலும் அது பயனளிக்கப் போவதில்லை; பயனளிக்கவில்லை. அது உலகுக்குத் தெரிந்தேயாகும்.
அப்பாவி மக்களைக் கொன்றொழிக்கும் வேட்டைக்குத் தான் இடமளிக்கப் போவதில்லை என்பதில் புது டில்லி கரிசனையாக இருந்ததால்தான் தனது வெளிவிவகார அமைச்சரை அதுவும் அவர் பதில் பிரதமராகப் பணியாற்றும் சமயத்தில் இரவோடு இரவாக முடிவு செய்து இலங்கைக்கு அனுப்புகின்றது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை வேறு; பொதுமக்களைக் கொன்றொழிப்பது வேறு. ஒன்றின் பெயரால் மற்றதைச் செய்ய முடியாது.
தன்னுடைய தேசம் என்று தான் உரிமை கோரும் தன்னுடைய பிரதேசம் மீதே வான் வழியாகக் குண்டு வீசும் ஒரேயொரு அரசு கொழும்பு நிர்வாகம்தான். அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்களின் பாதுகாப்புக் குறித்து அதிகம் சிரத்தை காட்ட அது கடமைப்பட்டுள்ளது என்பது மறக்கற்பாலதல்ல.
"மக்களைப் புலிகள் மனித கேடயங்களாகப் பயன்படுத்துகின்றனர். மக்களுக்கு மத்தியில் இருந்து புலிகள் பீரங்கித் தாக்குதல் நடத்துவதால்தான் மக்கள் சிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. புலிகளே அந்த மக்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டுப் பழியைப் படைத்தரப்பு மீது போடுகின்றார்கள்." என்ற தொனியில் அமைந்த விளக்கம் எல்லாம் டசின், டசினாகவும், அதையும் தாண்டி நூற்றுக்கணக்கிலும் சிவிலியன்கள் தினசரி கொன்றொழிக்கப்படுவதை சமாளித்து, நியாயப்படுத்தி, பொறுப்பிலிருந்து தப்புவதற்குப் போதுமான காரணங்கள் அல்ல.
இப்படி அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களைப் பலி யெடுத்துத்தான் புலிகளை அழித்தொழிக்க முயலவேண்டுமா என்பதை சம்பந்தப்பட்டோர் ஒரு தடவை சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
Comments