இவ்வாண்டை (2009) தரைப்படையின் ஆண்டாகச் சிறிலங்காவின் சனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரகடனம் செய்துள்ளார். இவ்வாண்டு இராணுவத்தினரின் வெற்றி ஆண்டாக இருக்கும் என்ற மதிப்பீட்டின் அடிப்படையி லேயே இப்பிரகடனத்தை அவர் மேற்கொண்டி ருப்பார் என்பதற்கு எந்தவித ஆய்வுகளும் தேவையில்லை.
வன்னிக்கான சிறிலங்கா இராணுவத்தினரின் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் இக் காலப்பகுதியில், மகிந்த ராஜபக்சவின் இவ் அறிவிப்பு வெளிவந்துள்ளது. அவரின் இவ் அறிவிப்புக்கு இராணுவம் கிளிநொச்சியை நெருங்கியுள்ளமையும், முல்லைத்தீவிற்குச் சற்றுத் தொலைவு வரையிலும் முன்னேறியுள்ளமையும் காரணமாக இருக்கலாம். ஏனெனில், கிளிநொச்சியும், முல்லைத்தீவும் ஆக்கிரமிக் கப்படுமானால், யுத்தத்தில் வெற்றிபெற்று விட்டதான அறிவிப்பிற்கும், பிரச்சாரத்திற்கும் ஏதுவானதொரு சூழ்நிலை உருவாக்கப் பட்டுவிடும்.
2007 இன் முற்பகுதியில் வன்னிக்கான படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டபோது முதலில் மடுவும், பின்னர் மேற்குக் கரையோர மாகப் பூநகரியும் என்ற ரீதியில் சிறிலங்கா அரச தரப்பாலும், இராணுவத் தரப்பாலும் பேசப் பட்டது. ஆனால், மடுவை இராணுவம் ஆக்கிரமிக்க சுமார் ஓராண்டு வரையில் போரிட வேண்டியதாக இருந்தது.ஆனால், கடந்த ஆண்டின் (2008 இன்) முற்பகுதியில் மடுவைக்கைப்பற்றிய பின்னர், ஆண்டின் மத்திய பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் முன்னேற்றம் சற்று வேகமானதாகவே இருந்தது.
அதாவது பெரியமடு, விடத்தல்தீவு, இலுப்பைக்கடவை, மல்லாவி, துணுக்காய், நாச்சிக்குடா என இராணுவம் வேகமாக முன்னேறியிருந்தது.ஆனால், ஆண்டின் பிற்பகுதியில் - இராணு வம் குறிப்பிடத்தக்கதான அதாவது தாக்கம் விளைவிக்கத்தக்கதான இழப்பைச் சந்திக்கத் தொடங்கியதோடு - நகர்வு முயற்சிகளும் தடைப்பட்டவையாகவும், தாமதமடைந்த வையாகவும் இருந்தன. குறிப்பாக நாச்சிக்குடா, வன்னேரி, அக்கராயன், கொக்காவில், முறிகண்டி, கோணாவில், செம்மங்குன்று, பூநகரிப் பகுதிகளில் இராணுவம் அதிகவிலை கொடுக்க வேண்டியதாயிற்று. இருப்பினும், இராணுவம் பூநகரியை ஆக்கிரமித்துக்கொண்டமையும், கிளிநொச்சிக்கு அண்மையாக நிலைகொண்டுள்ளமையும், கிழக்கில் முல்லைத்தீவிற்குச் சற்றுத் தொலைதூரம் வரையில் முன்னேறி நிலைகொண்டுள்ளமையும் சிறிலங்கா சனாதிபதிக்கு அடுத்த ஆண்டில் இராணுவத்தின் வெற்றி ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
ஆனால், தற்பொழுது இங்கு ஒரு சில விடயங்கள் குறிப்பிடப்பட வேண்டியவையாகவும், சில விடயங்கள் ஆய்விற்குட்படுத்தப்பட வேண்டியவையாகவும் உள்ளன. இதில், முதலாவதாக அடுத்த ஆண்டு வெற்றி ஆண்டாக அமையும் என்பது பற்றியதாகும். அதாவது அடுத்த ஆண்டு யுத்தம் முடிவிற்கு வருமா? அன்றி இராணுவம் யுத்தத்தில் வெற்றி பெற்றுவிட்டதாகக் கொள்ள முடியுமா? என்பது பற்றியதாகும்.சிறிலங்கா இராணுவம் கிளிநொச்சிக்கு அருகில் நிற்பதும், முல்லைத்தீவிற்கு அண்மையாக நிற்பதனையும் கொண்டு - அவை கைப்பற்றப்பட்டதும்- கைப்பற்றப்படுமா என்பது ஒருபுறம் இருக்க - யுத்தத்தில் இராணுவம் வெற்றிபெற்றதாக அர்த்தம் ஆகிவிடுமா? அதாவது அதற்கு அப்பால் யுத்தம் நீடித்துச் செல்லப்படமாட்டாதா? ஆனால், இதில் எவருக்குமே சந்தேகம் இருக்கத் தேவையில்லை.
கிளிநொச்சி ஆக்கிரமிக்கப்பட்டால் என்ன? முல்லைத்தீவு கைப்பற்றப்பட்டாலென்ன? யுத்தம் தொடர்ந்தும் நீடிக்கும் என்பதே அதுவாகும். ஆகையினால், சிறிலங்காத் தரைப்படை தொடர்ந்தும் போரிட்டுக்கொண்டே இருக்க வேண்டி இருக்கும். இதனால், இராணுவத்தின் வெற்றி என்பது எவ்வேளையிலும் உறுதி செய்யப்பட்ட தொன்றாக இருக்கமாட்டாது.இது பொதுவில் குறிப்பிடவேண்டியதான விடயமாக இருக்கையில், சிறிலங்கா இராணு வம், வன்னி படைநடவடிக்கைகளில், இராணுவ ரீதியில் அனுகூலங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதா? அதாவது அது தனது மூலோபாயத்தில் வெற்றிகண்டுள்ளதா? எதிர்கால நடவடிக்கையை இராணுவ மேலாண்மையுடன் முன்னெடுக்கத்தக்கதான வாய்ப்பைக் கொண்டுள்ளதா? என்பது ஆராயப்பட வேண்டிய விடயங்கள் ஆகியுள்ளன.
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா, வன்னிப்படை நடவடிக்கை குறித்துச் சில திட்டமிடலைச் செய்திருந்தார் என்பது வெளிப்படையானது. இதில், யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான கால எல்லை, யுத்தத்தில் எட்டக்கூடியதான இலக்கு என்பன முக்கியமான விடயங்களாக இருந்தன.அதாவது, வன்னியை எவ்வாறு ஆக்கிரமித்தல் அதற்கான காலவரையறை, விடுதலைப் புலிகளை எவ்வாறு பலமிழக்கச் செய்தல் என்பன இதில் முக்கியமானவையாகும். அவற்றில் யுத்தத்தில் வெற்றி என்பது புலிகளைப் பலவீனப்படுத்தல் என்பதே இறுதியான வெற்றியைத் தேடித்தரும் என்பது அவரது வெளிப்படுத்தலாகும்.இதில், காலவரையறைக்குள் யுத்தத்தை முடித்தல் என்பது ஏற்கெனவே கைவிடப்பட்டதொன்றாகிவிட்டது. சிறிலங்கா இராணுவத் தளபதியினாலேயே இன்று அவ்விடயம் பேசப்படுவதில்லை. யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவருவதற்கு காலநிர்ணயம் செய்யமுடியாது என்பதை அவரே தற்பொழுது வெளிப்படையாகப் பேசிவருகின்றார்.
அடுத்ததாக, ஓர் இலக்கு நோக்கி - முன்னேறுவதிலும் எதிர்பார்த்த வெற்றியை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் - ஏற்றுக்கொள்ளத்தக்கதான இழப்புக்களுடன் -முன்னேறியதாகவும் இல்லை- குறிப்பாக கிளிநொச்சி நோக்கியதான படை நடவடிக்கையை குறிப்பிட முடியும்.கடந்த செப்ரெம்பர் மாதத்தில் வன்னேரி - அக்கராயன் பகுதியில் படைநடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோதே கிளிநொச்சிக்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகச் சிறிலங்காப் படைத்தரப்பால் தெரிவிக்கப்பட்டது. ஒக்ரோபர் மாத ஆரம்பத்தில் சில தினங்களில் கிளிநொச்சிநகர் இராணுவத்திடம் வீழ்ச்சியுறும்ஃகைப்பற்றப்படும் என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவினால் தெரிவிக்கப்பட்டது.ஆனால், சுமார் நான்குமாதங்கள் நிறைவுறும் நிலையிலும் கிளிநொச்சிநகர் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிற்குள் உட்படவில்லை.
இராணுவம் கிளிநொச்சியைச் சூழ அரைவட்ட வடிவில் நிலைகொண்டிருப்பினும் கிளிநொச்சிக்குள் பிரவேசிக்கவில்லை. இதனை ஒரு இலக்கை நோக்கியதான இராணுவத்தின் முன்னேற்றம் - தடைப்படுத்தப்பட்டதாக, தாமதப்படுத்தப்பட்டதாகக் கூறுதல் மிகையானதொன்றாக இருக்க மாட்டாது.ஆனால், இவை யாவற்றிற்கும் மேம்பட்டதாக - சிறிலங்கா இராணுவத்தின் நோக்கத்திற்கு மாறானதாகவும், சிறிலங்கா இராணுவத்திற்கு நெருக்கடியைக் கொடுக்கத்தக்கதானதாகவும், சிறிலங்கா இராணுவத் தளபதியின் மூலோபாயத்தையே கேள்விக் குள்ளாக்கும் விடயமாகவும் மாறியிருக்கும் விடயமானது படைத்தரப்புச் சந்தித்துவரும் இழப்புக்களாகும். ஏனெனில் இது மூலோபாயத்திற்கு மாறானவரையில் யுத்தம் செய்வதாகக் கொள்ளத்தக்கதாகும்.
சிறிலங்கா இராணுவத்தின் மூலோபாயம் என்று கொண்டாலும்சரி, விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கான மார்க்கமாகக் கொண்டாலும்சரி விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தல் - குறிப்பாக ஆளணி ரீதியில் பலவீனப்படுத்தலே அவர்களைத் தோற்கடிப்பதற்கான வழியாகவும், இறுதி வெற்றியைத் தேடித்தரும் என்பது இராணுவத் தலைமையின் உறுதியான நம்பிக்கையும் ஆகும்.இதன் வெளிப்பாடே பிரதேசங்களை ஆக்கிரமித்தல் அல்ல. விடுதலைப் புலிகளை அழித்தல் என்பதே தமது இலக்கு என்ற இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவின் பேச்சாகும். ஆனால் தற்பொழுது இராணுவத் தளபதியின் மூலோபாயம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.அதாவது, வன்னியிலுள்ள பல அடர்ந்த காட்டுப்பகுதிகளும், வெளிகளும், மணல்பாங்கான பகுதிகளும் பெருமளவிலான நிலப்பரப்பும் இராணுவத்தின் ஆக்கிரமிப்பிற்குள் உட்பட்டுள்ளன. ஆனால், சிறிலங்காப் படைத்தரப்பு எதிர்பார்த்தது போன்று விடுதலைப் புலிகள் பலமிழக்கவில்லை. தொடர்ச்சியான இரண்டாண்டு வரையிலான போராட்டத்தின் பின்பும் புலிகள் தமது வலுவை இழக்காத, தீவிரமாகப் போரிடும் சக்தியாகவே உள்ளனர். ஆனால், இராணுவத் தரப்பு இரண்டு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியதாகவுள்ளது.இதில், ஒன்று மக்கள்அற்ற காடுகள், சதுப்பு நிலங்கள் உட்பட்ட பெரும் நிலப்பரப்பைப் பாதுகாக்க வேண்டியதான நிலை.
இரண்டாவதாக இரண்டாண்டுப் போரில் எதிர்பார்ப்பிற்கு மாறாக இராணுவத்திற்கு ஏற்பட்டுவிட்டதான அதிகப்படியான ஆளணி இழப்பு.இதில் மக்கள்அற்ற பெரும் நிலப்பரப்பைப் பாதுகாத்தல் என்பது மிகவும் கடினமானதொரு காரியம் என்பது மட்டுமல்ல, பெருமளவு துருப்புக்கள் - அதாவது ஆளணி தேவைப்படும் விடயம் ஒன்றாகும். அவ்வாறு இல்லாதுவிடில், இப்பிரதேசங்களே இராணுவத்தினருக்குப் பெரும் அபாயங்களைத் தோற்றிவிக்கும் பகுதிகள் ஆகிவிடக்கூடும் அதாவது புதைகுழிகள் ஆகிவிடக் கூடும்.அடுத்ததாக, இரண்டாண்டுப் போரில் இராணுவத்தினருக்கு ஏற்பட்ட இழப்புக்கள். இது குறித்த கணிப்பீடுகளும், மதிப்பீடுகளும் அண்மையில் வெளிவரத் தொடங்கியுள்ளன. அரச தரப்பால் இதனை மூடிமறைப்பதற்கான முயற்சிகள் பெரியளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதும் - அவை வெளிவருவது தவிர்க்கமுடியாததொன்றாகியுள்ளது.
இறுதியாக வெளியாகியுள்ள தகவல் ஒன்றின்படி வன்னிக்கான படை நடவடிக்கைகளில் படைத்தரப்பு 10,000 இற்கு மேற்பட்டோரை இழந்துள்ளது. அத்தோடு 25,000 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இதேசமயம் 25,000 பேர் இராணுவத்தைவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.இத்தகவல்கள் மகிந்த அரசிற்கோ அன்றி சிறிலங்கா இராணுவத் தலைமைக்கோ எதிரான தகவல்களோ புள்ளிவிபரங்களோ அல்ல. மகிந்த அரசாங்கமும், இராணுவத் தலைமையும் மறைத்துவந்த தகவல்களின் திரட்சியே இவையாகும். இதனை ஊர்ஜிதம் செய்வதற்கான தகவல்களும் தற்பொழுது ஒன்றின்பின் ஒன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன.இதில், குறிப்பிடத்தக்கதானது சிறிலங்காப் படைத்தரப்பு சிறுவர்களையும் பெண்களையும் படையணிகளில் சேர்க்கத் தொடங்கியுள்ளமையும், தப்பியோடிய இராணுவத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கமுற்பட்டுள்ளமையும் ஆகும். அதாவது இராணுவம் சந்தித்துள்ள இழப்பின் வெளிப்பாடுகளே இவையாகும்.
ஒரு இராணுவ வெற்றியென்பது ஒரு பிரதேசத்தை ஆக்கிரமித்தலே அன்றிக் கைப்பற்றுதலோ என்பது மட்டுமல்ல. அதற்காகக் கொடுக்கப்பட்ட விலைக்கு அது பெறுமதியானதா? என்ற கேள்விகளையும் எழவைக்கத்தக்கதாகும். ஆனால், சிறிலங்கா இராணுவத்தின் இன்றைய நிலை அவ்வாறானதாக இருப்பதாக இல்லை. அது பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளதோடு, அதன் மூலோபாயமும் கேள்விக்குரியதொன்றாக மாறியுள்ளது.
இத்தகையதொரு நிலையில் இவ்வாண்டை இராணுவத்தின் ஆண்டாகச் சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரகடனப்படுத்தியுள்ளமையானது களநிலை குறித்து அவர் சரியான மதிப்பீட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதையே வெளிப்படுத்துவதாய் உள்ளது.அதிலும் குறிப்பாக வருட இறுதியில் சிறிலங்கா இராணுவம் சந்தித்த பெரும் இழப்புக்கள் அது கொடுத்த, கொடுக்கப்போகும் விலையை வெளிப்படுத்தப் போதுமானவையாகும்.அதிலும் டிசம்பர் மாதத்தின் மத்தியின் பின்னரான முதல் வாரத்தில் சிறிலங்கா இராணுவம் கிளிநொச்சியில் சந்தித்த இழப்பும், இறுதி வாரத்தில் அளம்பில், உடுப்புக் குளத்தில் சந்தித்த இழப்பும் யுத்தத்தின் கடுமையை மட்டுமல்ல, புலிகளின் ஆற்றலையும் மதிப்பீடு செய்யப் போதுமானதாகும்.
இதில், டிசம்பர் பிற்பகுதியில் முதல் வாரத்தில் கிளிநொச்சி மீது இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 400 வரையிலான படையினர் கொல்லப்பட்டதாகவும், கடைசி வாரத்தில் உடுப்புக்குளம் உட்பட வன்னியில் இடம்பெற்ற மோதல்களில் 500 படையினர் கொல்லப்பட்டதாகவும் சிறிலங்காவின் எதிர்க்கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகையதொரு நிலையில் இவ்வாண்டு எவ்வாறு சிறிலங்கா இராணுவத்தின் ஆண்டாக அமைய முடியும் என்பதே இராணுவஆய்வாளரின் முன்புள்ள கேள்வியாகவும் உள்ளது.
பொதுவில் இராணுவ ஆய்வாளர்களின் நோக்கில் இவ்வாண்டானது பெரும் களங்களையும், திருப்பங்களையும் கொண்ட ஆண்டாகவே இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-ஜெயராஜ்-
Comments