இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி எவ்விதப் பயனும் ஏற்படாததால் திடீரென சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். அவரது உடல்நிலையைக் கருதி பல்வேறு கட்சித் தலைவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடக் கோரினர். அவர்கள் கோரிக்கையை ஏற்று நான்கு நாட்களுடன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார் திருமா.
உண்ணாவிரதத்தினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.
`அத்துமீறுவோம், அடங்க மறுப்போம்' என்ற கொள்கைக்குப் பிறகு அம்பேத்கரின் மூன்று கொள்கையை அடிப்படையாகக் கொண்டு காங்கிரஸ் கட்சியை அழிப்பதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் லட்சியம் என்று கூறியுள்ளீர்களே..அம்பேத்கரின் அந்தக் கொள்கை என்ன?
"தாழ்த்தப்பட்ட மக்களின் எதிரிகளாக அம்பேத்கரால் அடையாளப்படுத்தப்பட்டவை இந்து மதம், காந்தியடிகள், காங்கிரஸ் கட்சி. ஏனென்றால், இந்து மதத்தில்தான் பிறப்பால் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற இழிவான கொள்கை உள்ளது. அந்தக் கொள்கையை நியாயப்படுத்தி பாதுகாவலராக இருந்தவர் காந்தியடிகள். காந்தியடிகள் விருப்பத்தினால் இந்து மதத்தின் கருத்தை அரசியல்ரீதியாக கட்டிக் காப்பாற்றுகின்ற அமைப்பாகத்தான் காங்கிரஸ் கட்சி விளங்குகிறது. காங்கிரஸ் கட்சி உள்ளவரை காந்தியமும், இந்துத்துவமும் காப்பாற்றப்படும். காந்தியமும், இந்துத்துவமும் ஜாதியைக் காப்பாற்றக் கூடியவை. காந்தி ஓரிடத்தில்கூட `ஜாதியை ஒழிப்போம்' என்று சொல்லவில்லை. `தீண்டாமையை ஒழிப்போம்' என்றுதான் கூறியுள்ளார். ஜாதி இருந்தால் தீண்டாமை இருக்கும். ஜாதியைக் காப்பாற்றுவதற்காக `தீண்டாமையை ஒழிப்போம்' என்று நாடகமாடியவர் காந்தியடிகள் என்று அவரை அம்பேத்கர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
`நாட்டைக் காப்பாற்ற வேண்டுமானால், ஒவ்வொரு ஒடுக்கப்பட்டவரும் காந்தியின் குடிலில் நாட்டு வெடிகுண்டை வீச வேண்டும்' என்று அம்பேத்கர் கூறியுள்ளார். `உதட்டில் சிரிப்பும், அக்குளில் கத்தியும் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வஞ்சகன் மகாத்மா என்றால், காந்தியும் மகாத்மாதான்' என்றும் விமர்சனம் செய்துள்ளார் அம்பேத்கர். 1932-ல் காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்தார். அது வெள்ளையனை வெளியேற்றுவதற்காகவோ, இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காகவோ அல்ல. தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித் தொகுதி கொடுத்தது தவறு என்றும்; அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் உண்ணாநோன்பு இருந்தார். அம்பேத்கர் இதைக் கடுமையாக எதிர்த்தார். `கதர்ச்சட்டை போட்டவர்கள் எல்லாம் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்று சொன்ன நீங்கள், தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர்கள்தான் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்று ஏன் சொல்லவில்லை? நீங்களும், உங்கள் காங்கிரஸும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன செய்துள்ளீர்கள்?' என்று காந்தியடிகளை நேருக்கு நேர் சந்தித்து அம்பேத்கர் கேட்டதற்கு, அவர் பதில் சொல்ல முடியாமல் திணறினார். இது உண்மையான வரலாறு.
ஆகவே, அம்பேத்கர் தனது மூச்சுள்ளவரை இந்து மதத்தையும், காந்தியடிகளையும், காங்கிரஸ் கட்சியையும் எதிரியாகக் கருதி எதிர்த்துப் போராடி வந்துள்ளார். அந்த அடிப்படையில்தான் அந்தக் கருத்தை மக்களுக்கு நினைவுபடுத்தினேன். ராஜீவ் என்ற ஒற்றை உயிரை வைத்துக் கொண்டு அரசியல் ஆதாயத்தைத் தேடுகின்றனர் காங்கிரஸ் கட்சியினர். எனவே, இன்றைய சூழ்நிலையில் தலித் மக்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் எதிரான இயக்கமாகத்தான் காங்கிரஸ் உள்ளது.''
இலங்கைப் பிரச்னையை சொந்த லாபத்திற்காகத்தான் சில அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளாரே?
``பதவி பவுசுக்காக அலைபவர்களால்தான் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வீச முடியும். எங்களைப் பொறுத்தவரை ஈழப் பிரச்னையை மனிதநேய அடிப்படையில்தான் பாவித்து வருகிறோம். சொந்த நலனைக் கருதியிருந்தால் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள நாங்கள் தி.மு.க.விற்கு சங்கடம் ஏற்படுத்தும் ஒரு முடிவை எடுப்போமா? காங்கிரஸ் உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பியிருப்போமா? தங்கபாலுதான் சுயநலமாகப் பேசியுள்ளார்.''
போர் என்றால் அப்பாவிகள் சாவது சகஜம்தான் என்று ஜெயலலிதா கூறியுள்ளது பற்றி?
``இஸ்ரேலில் நடந்து வரும் போரில் அப்பாவிகள் கொல்லப்படுவது சகஜம்தானே? பாலஸ்தீனத்தின் மீது மட்டும் மனிதாபிமானம் காட்டும் ஜெயலலிதா, ஏன் ஈழப் பிரச்னையில் காட்டவில்லை?''
`காங்கிரஸுடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை' என்று கூறியுள்ளீர்கள். அப்படியென்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் இடம்பெறும் கூட்டணியில் நீங்கள் பங்கேற்க மாட்டீர்களா?
``நாங்கள் இப்போது தி.மு.க கூட்டணியில்தான் இருக்கிறோம். அந்தக் கூட்டணியில் தொடரவும் விரும்புகிறோம். அதே கூட்டணியில் காங்கிரஸ் இருந்தால் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் எக்காரணத்தைக் கொண்டும் அவர்களுக்கு ஆதரவாக ஓட்டுப் போட மாட்டோம். அவர்களோடு எங்களுக்கு ஒட்டுமில்லை. உறவுமில்லை.''
காங்கிரஸைவிட விடுதலைச் சிறுத்தைகள் எட்டு மடங்கு பலம் வாய்ந்தது என்று கூறியிருக்கிறீர்கள். அப்படி எந்த விதத்தில் பலம் வாய்ந்தது?
``தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி, தலைவர்கள் மட்டுமே உள்ள கட்சியாக உள்ளது. வாக்கு வங்கி இல்லாத கட்சி. அவர்களைவிட பலமடங்கு வலிமையான கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தகுதிக்குக் கூடுதலாகவே அதிகாரத்தை மத்தியிலும், மாநிலத்திலும் பெற்றுள்ளார்கள். அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் போட்டி போட்டுக் கொண்டு அதிக இடங்களைக் கொடுக்கிறார்கள். ஏனென்றால், தேசியக் கட்சி என்ற முறையில் பா.ஜ.க.வைவிட காங்கிரஸ் பரவாயில்லை என்று கருதுகிறார்கள். காரணம், பா.ஜ.க. இருக்கும் கூட்டணியில்தான் சிறுபான்மை மக்களின் வாக்கினைப் பெற முடியாது என்பதும் தமிழகத்தில் பா.ஜ.க. வலிமையில்லை என்பதும். எனவே, காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க. பக்கம் போய்விடக் கூடாது என தி.மு.க.வும், தி.மு.க. பக்கம் போய்விடக் கூடாது என அ.தி.மு.க.வும் நினைப்பதால்தான் காங்கிரஸுக்கு இந்த பம்பர் லாட்டரி அடிக்கிறது. காங்கிரஸ் தனித்து நின்றால் ஒரே ஒரு எம்.பி. சீட் கூடப் பெற முடியாது. காங்கிரஸை தனிமைப்படுத்திவிட்டால் தமிழீழத்திற்கு எதிராக அவர்களால் வாய் திறக்க இயலாது. எத்தனை முறை கலைஞர் வலியுறுத்தியும் தான் அனுப்புவதாகச் சொன்ன பிரணாப் முகர்ஜியை இதுவரை இலங்கைக்கு அனுப்பவில்லை. ஆகவேதான், நாங்கள் இதை வெளிப்படையாக அறிவிக்கின்றோம்.
கலைஞர், காங்கிரஸ் கட்சிக்கு ஏன் இந்தளவு மரியாதை அளிக்கிறார் என்று விளங்கவில்லை. ஒருவேளை காங்கிரஸினால் ஆட்சி இழக்க நேரிட்டால், ஈழத் தமிழர்களுக்காக மூன்றாவது முறை ஆட்சியிழந்த பெருமை உலகத் தமிழர்கள் மத்தியிலும், வரலாற்றிலும் பதிவாகும். நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தலும் வந்தால் தனிப் பெரும் செல்வாக்குடன் தி.மு.க. வெற்றிபெறுமே தவிர, வேறெந்த பாதிப்பும் நேராது. காங்கிரஸ் கட்சியை அம்பலப்படுத்தவும், தனிமைப்படுத்தவும் இதுதான் சரியான நேரம்.
தமிழீழ துரோக அமைப்பான காங்கிரஸை தனிமைப்படுத்துங்கள். தமிழ் இனம் மீண்டும் உங்களை உச்சிமோந்து பாராட்டும் வரலாறு பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும்.''
படம்: ஞானமணி
Comments